சனி, 23 ஜூலை, 2016

கருட பஞ்சமி

கருட பஞ்சமி 

ஆவணி மாதம் வார்பிறை சதுர்த்தியில் நாக சதுர்த்தியும்,மறுநாள் பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகிறது.

இந்த இரு பண்டிகைகளும் சகோதரர்களின் செளபாக்கியத்திற்காக வேண்டி சகோதரிகள் கொண்டாடும் பண்டிகையாகும். 

பிரம்மதேவன் மகன் கஷ்யபன்.கஷ்யபருக்கு அநேக பத்தினிமார்கள் உண்டு.அவர்களுள் கத்ரு,வினதை என்ற இரு சகோதரிகளும் அவரது பத்தினிகள் ஆவர்.

கத்ரு நாகர்களுக்கு தாயாகவும்,வினதை அருணைக்கும்,கருடனுக்கும் தாயாக விளங்கினார்கள்.

ஒருமுறை,இந்த இரு சகோதரிகளிடையே விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து முடிந்தது.அந்த போட்டியில், இருவரும் ஜெயித்தவர்களுக்கு தோற்றவள் அடிமையாக வேண்டும் என்ற நிபந்தனையை வகுத்து கொண்டனர்.

போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்றாள்.நிபந்தனைப்படி அவள்,கத்ருவிற்கு அடிமையானாள்.கத்ரு அடிமையானதால் அவள் பெற்ற அருணனும்,கருடனும் அடிமையாயினர்.

கருடன்,கத்ருவிற்கும் அவனது பிள்ளைகளுக்கும் வாகனம் போல் ஆனான்.இதனால் கருடன் மனம் வருந்தினான்.எப்படியும் தனது தாயை அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்ற சபதம் கொண்டான்.

அதுசமயம் கத்ரு,கருடனிடம்,தேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டு வந்துகொடுத்தால்,அடிமைத் தளத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை அளிப்பதாகச் சொன்னாள்.

கருடன் மனமகிழ்ச்சிக் கொண்டான்.அடிமைத்தளத்திலிலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே என்று தனக்குள் மகிழ்ச்சி கொண்டான்.அன்னையை நமஸ்கரித்து,தேவலோகம் சென்றான்.

தேவலோகத்தில்,தேவர்களுக்கும்,கருடனுக்கும் கடும்போர் மூண்டது.
இறுதியில் கருடன் வெற்றி பெற்றான்.கருடன் தேவேந்திரனை நமஸ்கரித்து,தோத்திரம் செய்து,தேவேந்திரனிடமிருந்து,அமிர்த கலசத்தைப் பெற்றுக் கொண்டு வந்தான்.

கருடன் அமிர்த கலசத்தை கொண்டு வந்து கத்ருவிடம் கொடுத்தான்.அன்னைக்கும்,தனக்கும்,அருணனுக்கும் ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி ஆனந்த வாழ்வு ஏற்படச் செய்தான் கருடன்.

அந்த கருடன் பிறந்தது பஞ்சமி திதியில்தான்.அதனால் கருட பஞ்சமி என்று பெயர் ஏற்பட்டது.


கருடன் மகா விஷ்ணுவிற்கு வாகனமானது எவ்வாறு? 



யாருக்கும் அஞ்சாதவன் கருடன்.கருடன் தேவேந்திரனிடமிருந்து அமிர்தத்தை எடுத்துவரும் போது தேவர்களால் தடுக்க முடியவில்லை.இவரின் வீரத்தை கண்டு மகிழ்ந்த திருமால்",உனக்கு என்ன வரம் வேண்டும் ?"

என்று கருடனிடம் கேட்டார்.அவரோ பரந்தாமனைப் பார்த்து,நானே உனக்கு வரம் தருகிறேன்;என்ன வரம் வேண்டும்?என்று திருப்பி கேட்டார்.

புன்னகைத்த திருமால்,'நான் எப்போதும் உன் தோளுக்கு மேல் இருக்க வேண்டும் என்று கேட்டார் .அவ்வாறே ஆகட்டும்' என்கிறார் கருடன். பிறகு திருமால் கருடனிடம்,நீ வரம் ஏதும் கேட்கவில்லையே?என்று வினவ,நான் உமது தலைக்கு மேல் இருக்க வேண்டும் என்று கேட்க,திருமாலும் அருளினார்.அதனால்தான், திருமால்  கருடனின் தோளில்  அமர்ந்து,தான் செல்லும் இடங்களுக்கு தம்மை அழைத்து  செல்லும் வாகனமாக ஏற்றுக் கொண்டார்.

கருடனை  தன் கொடியாக ஏற்று, தன் தலைக்குமேல் பறக்கும் கொடியாக கருடனை இருக்க செய்தார்.இதனால்தான் நாம் திருக்கோவில்களில் பார்க்கும் கொடி  மரத்தின் தத்துவம் ஆகும்

கருடன் வானத்தில் வட்டமிடுவதும்,கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.கோவில்களில் கும்பாபிஷேகம்,யாகம்,சிறப்பு வழிபாடு நடக்கும் போது கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை காணலாம்.

கருட தரிசனம் சுப தரிசனம்.

தன் தாயை அடிமைத்தனத்திலிருந்து மீட்ட நாள் நாகபஞ்சமி என்பதால் கருடனை பூஜிப்பது விஷேசம்.கருட பஞ்சமி அன்று வீட்டிற்கு சகோதரரை அழைத்து சாப்பாடு போட்டு பணமோ,துணியோ வைத்து தாம்பூலம் கொடுத்து ஆசி பெற வேண்டும்.




























  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக