புதன், 30 மார்ச், 2016

12 ஜோதிர் லிங்கங்கள்

12 ஜோதிர் லிங்கங்கள்

அன்பார்ந்த நண்பர்களுக்கு என்  அன்பு வணக்கங்கள் .


சிவ பெருமான் லிங்க வடிவில் நமக்கு காட்சியளித்து ,நம் தேவைகளை ,விருப்பங்களை நிறைவேற்றுகிறார்.சிவராத்திரி காலத்தில் நான்கு ஜாம பூஜைகளில் பிரம்மா,விஷ்ணு,அம்பாள் ,தேவர்களும் ,முனிவர்களும் ,மனிதர்களும் லிங்க வடிவாமான சிவனை வழிபட்டு அவர் அருளை பெற்றனர்.



அதே போன்று பன்னிரு ஜோதி லிங்கங்கள் மிகவும் சிறப்பும்,மகிமையும் உடையவை .





தலத்தின் பெயர்---    அமைந்துள்ள இடம்   ----------      லிங்கத்தின் பெயர்


1)வைத்யநாதம்  ---        மகாராஷ்டிரம்             -----        வைத்யநாதேஸ்வரர் -ராவணன் கொண்டு வந்த லிங்கம் இது .


2)மகாகாளேசம்           உஜ்ஜயினி                        மகாகாளேஸ்வரர் ----கார்த்திகை பவுர்ணமி தரிசனம் விசேஷம் .இங்கு விபூதி அர்ச்சனை நடைபெறும்.தோல் வியாதியை நீக்கும்  கோடி தீர்த்தம் .


3)சோமநாதம்               குஜராத்                              சோமநாதேஸ்வரர் ---இது கடற்கரை தலம்.சந்திரன் சாபம் தீர்த்த தலம் .சிறிய சுயம்பு மூர்த்தி .அமாவாசை திங்கள் கிழமை மிகவும் சிறப்பு.


4)நாகேஸ்வரம்              மகாராஷ்டிரம்                  நாகநாதேஸ்வரர்


5)பீமநாதம்                    மகாராஷ்டிரம்                   பீமநாதேஸ்வரர்  
 

6)மல்லிகார்ச்சுனம்     ஸ்ரீ சைலம்                          மல்லிகார்ச்சுனர்


7)த்ரயம்பகம்               மகாராஷ்டிரம்                     த்ரயம்பகேஸ்வரர்


8)விஸ்வநாதம்             காசி                                விஸ்வநாதேஸ்வரர் -----இங்கு இறந்தவருக்கு ஈசனே தாரக மந்திரம் ஓதுகிறார் .


9)கேதாரம்                   இமயமலை                       கேதாரேஸ்வரர் ----இது சுயம்பு பனி லிங்கம் .அம்மன் ஈசனின் இடப்பாகம் பெற்ற தலம் .


10)ஓங்காரேஸ்வரம்        மத்திய பிரதேசம்             ஓங்காரேஸ்வரர் ----மலை முகட்டில் சுயம்பு லிங்கம்.


11)இராமநாதம்               இராமேஸ்வரம்                  இராமநாதேஸ்வரர்


12)குஸ்மேஸம்                 மகாராஷ்டிரம்                   குஸ்ருநேஸ்வரர்  ---அம்பிகை குங்குமத்தால் வழிபட்ட தலம் .கருவறையின் சுவற்றில் அன்னையின் திருவுருவம் உள்ளது .


நன்றி வணக்கம்


















திங்கள், 28 மார்ச், 2016

எளிய பரிகாரங்களும் ,மிக பெரிய பலன்களும்

எளிய பரிகாரங்களும் ,மிக பெரிய பலன்களும்

என் அன்பு ஆன்மீக நெஞ்சங்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.


நவகிரக பாதிப்புகளிலிருந்து விடுபட சில பரிகாரங்களை தொடர்ந்து செய்தால் நம்முடைய கஷ்டங்களின் தாக்கம் குறையும் என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள்.அவைகள் என்ன என்று பார்க்கலாமா ?

காகத்திற்கு உணவு அளித்தல் .இதை நாம் நிறைய வீடுகளில் பாத்திருப்போம்.

பறவைகளுக்கு தாகம் தீர மாடியில் நீர் வைத்தல்.

பசுவிற்கு அகத்தி கீரை,பச்சரிசி ,வெல்லம் கொடுத்தல்.

எறும்பு உண்ண பச்சரிசி மாவில் கோலம் போட  வேண்டும்.எறும்பிற்கு உணவு அளித்தால் 108 பிராமிணர்கள் சாப்பிடுவதற்கு சமம்.

மீன்களுக்கு பொரி அளித்தல்.மதுரைக்கு அருகில் உள்ள  திருப்பரங்குன்றம் முருகன் கோவில்களில் அங்கு வரும் பக்தர்கள் பொரி வாங்கி மீன்களுக்கு போடுவார்.


மலை மேல் உள்ள கோவில்களில் குரங்குகள் நிறைய இருக்கும் .அதற்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டும்.

கோவிலில் உள்ள விளக்கிற்கு எண்ணெய்  ஊற்றுதல் சிறந்த பலனை கொடுக்கும்.

ஊனமுற்றவர்களுக்கு உணவு ,உடை அளிக்க வேண்டும்.

அரச மரத்திற்கு நீர் ஊற்றுதல் .

அன்ன தானம் ,நீர் பந்தல் போன்றவைகளை செய்தல் வேண்டும்."நிழலின் அருமை வெயிலில் தெரியும்" என்பது  போல ஒருவனுக்கு வயிறார உணவு கொடுப்பதும் ,தாகம் என்று வருபவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுப்பதும் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது .சித்திரை மாதத்தில் வரும் மதுரை சித்திரை திருவிழா காலத்தில் மக்கள் நீர் மோர் கொடுத்தும் ,நீர் கொடுத்தும் புண்ணியத்தை சேர்ப்பர் .




உங்களுக்கு எவையெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்யுங்க .நம்ம கையாலே பிறருக்கு உணவு அளிப்பது மிக சிறந்தது .அதுவும் பறவைகள்,எறும்புகள் போன்றவை வாய் பேச முடியாத ஜீவராசிகள் .அவர்களுக்கு செய்யும் சேவையே நாம் கடவுளுக்கு செய்யும் சேவையாகும் .

என்  பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ,உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்க .எனக்கு இன்னும் எழுத ஒரு வடிகாலாக அது அமையும் .

நன்றி வணக்கம்.


ஞாயிறு, 27 மார்ச், 2016

யுகாதி பண்டிகை

யுகாதி பண்டிகை இந்த வருடம் ஏப்ரல் 8ம் நாள்  வெள்ளிக் கிழமை அன்று வருகிறது .இதை கர்நாடகா ,ஆந்திரா ,மகாராஷ்ட்ரா போன்ற இடங்களில்  வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.இதை நம் நாட்டில் தெலுங்கு மக்கள் கொண்டாடுகிறார்கள் .இதை தெலுங்கு வருடப் பிறப்பு என்றும்  சொல்லுவர்.


யுகாதி என்றால் "யுகத்தின் ஆதி ஆரம்பம்" என்று பொருள்.அன்று தான் பிரம்மா  உலகத்தை  படைத்ததாக  கூறுகிறார்கள் .

யுவாதி வசந்த காலத்தில்  கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் புதிய வேலை ,கல்வி ,தொழில் தொடங்குவது சிறந்தது .


வாழ்க்கையில் மகிழ்ச்சி ,கவலை ,கோபம்,அச்சம்,சலிப்பு ,ஆச்சரியம்  போன்ற இவைகள் எல்லாம் மாறி மாறி வரக்கூடியவை .இந்த தத்துவத்தை உணர்த்தும் படியாக ,ஆறு சுவைகள் கொண்ட பச்சடிகளை உணவில் சேர்த்து கொள்வர்.


கசப்பு ----வேப்பம்பூ 

துவர்ப்பு ---மாங்காய் 

புளிப்பு ----புளி 

கார்ப்பு ---மிளகாய் 

இனிப்பு ---வெல்லம் 

உவர்ப்பு ---உப்பு 



இதை கொண்டு பச்சடி செய்வர்.

யுவாதி பண்டிகை அன்று அனைவரும் விடியற்காலையில் எழுந்து ,குளித்து விட்டு ,வீட்டின் முன் சாண நீரை தெளித்து ,அழகான ரங்கோலி கோலம் போடுவர் .வீட்டின் தலை வாசலில் மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரிப்பர் .


ஆறு சுவைகள் கொண்ட பச்சடியை  சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவர் .இந்த பச்சடியை ஆந்திர மக்கள் "யுகாதி பச்சடி "என்பர்.கர்நாடகாவில் "தேவு  பெல்லா "என்று அழைப்பர்.


 கோவில்களில் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு  சிறப்பாக பூஜைகள் செய்யப்படுகின்றன.மாலையில் வீட்டு  வாசலில் விளக்கேற்றி ,கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் காண்பர் .





நன்றி வணக்கம் 

வெள்ளி, 25 மார்ச், 2016

ஐவகை நந்திகள்

என் அன்பு இணையத்தள நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள் .நந்தியை பற்றி நான் என்னுடைய பதிவில் எழுதி இருக்கிறேன் .இன்னும் நந்தியின் புகழை சொல்லிக் கொண்டே இருக்கலாம் .

நந்தி தேவர் இந்த உலகத்தையே ஆட்சி செய்யும் எம் பெருமானுடன் இருந்து தனது சேவையை  செய்கிறார்  என்றால் அவர் எந்த அளவு பெருமைக்குரியவர் என்று நான் சொல்ல தேவை இல்லை.உங்களுக்கே அது புரியும்  என்று நினைக்கிறேன் .

அவரைப்பற்றி எழுதுவதே நான் செய்த பாக்கியம் .நமக்கெல்லாம் சிவன் அருகில் இருக்கும் நந்தியை மட்டும் தான் தெரியும் .யார் யார் நந்தியாக மாறி ,எம் பெருமான் சிவனுடன் இருந்தனர் என இனி பார்ப்போம் .







ஐவகை நந்திகள்


போக நந்தி

 கோவிலுக்குள்ளே போனவுடன் இருக்கும்.சிவன் ,பார்வதி உலகத்தை பார்க்க ஆசைப்பட்ட போது, இந்திரன் நந்தியாக வந்து இருவரையும் அழைத்து சென்றது .


பிரதம நந்தி

ஒரு சமயம் ,சிவபெருமானிடம் பிரம்மன் உபதேசம் பெற விரும்பினார்.சிவபெருமானின் யார் அவரை அபயம் என வருகிறார்களோ அவர்களுக்கு ஓடி போய் கை தூக்கி விடுபவர் .அதனால் ஒரு இடத்தில் இருப்பவர் அல்ல சிவபெருமான்.ஆதலால் பிரம்மா  பிரதம நந்தியாக மாறி இறைவனை தோளில் தூக்கி கொண்டு ,இறுதியில் உபதேசம் பெற்றார்.இந்த நந்தி கோவிலில் சிற்பமாக இருக்கும்.சிலையாக இராது .


ஆத்ம நந்தி

ஆத்ம  நந்தி கொடி மரத்திற்கு கீழ் இருக்கும்.பிரதோஷ காலத்தில் செய்யும் பூஜைகள் அனைத்தும் இந்த நந்தியே ஏற்கும்.எல்லா  ஆன்மாவிலும் இறைவன் இருக்கிறார் .அனைவரும் சமம் என்பதை சுட்டி காட்டுகிறது .

மால்விடை நந்தி

கொடி  மரத்திற்கும் ,மகா மண்டபத்திற்கும் இடையில் இந்த நந்தி இருக்கும். சிவபெருமானுக்காக  திருமாளே  நந்தியாக மாறியது .


தரும  நந்தி

கருவறை முன்பு இருப்பது தரும  நந்தி .உலகம் ஒடுங்கும் போது  எல்லா  ஜீவ ராசிகளும் சிவனிடம் ஒடுங்கும் .மீதி இருக்கும் தர்மம் இந்த நந்தியிடம் போய்  சேரும்.சிவனையே தாங்குவது தருமம்.


நந்தி திருமணம் பார்த்தால் முந்தி திருமணம் நடக்கும் என்று பெரியவர்கள் கூறுவர்.அதன்படி ,திருமணம் ஆகாதவர்கள் நந்தியின்  திருமணத்தை பார்த்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும்.


மேலும் மேலும் எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே நான் இறைவனுக்கு செய்யும் பணியாக எண்ணி இந்த பதிவை முடிக்கிறேன்.


நன்றி வணக்கம்

உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி 

திங்கள், 21 மார்ச், 2016

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம்


அன்பார்ந்த என்  அன்பு ஆன்மீக நண்பர்களுக்கு என்  அன்பு வணக்கங்கள் .என்னுடைய வாழ்க்கை ஆன்மீகத்தை அடிப்படையாக கொண்டே செல்கிறது .ஆன்மீகத்தில் இருப்பவர்கள் எது நடந்தாலும் அது இறைவனின் செயல் என்று நினைக்க வேண்டும்.துன்பங்கள் வரும் போது  துவண்டு போகாமல் இதுவும் கடந்து போகும் என நினைத்து ,இறைவனிடம் பிராத்திக்க வேண்டும்.


இறைவன், பல சோதனைகள் கொடுத்துதான் நம்மை ஆட்கொள்கிறார்.இறைவனின் துதியை பாடியும் ,சொல்லியும் அந்த சோதனையை வெல்ல வேண்டும் .எனவே ,அன்றாடம் இறைவனை வீட்டு பூஜைஅறையில்   அல்லது ஆலயங்களுக்கு சென்றும் வழிபடலாம் .




மாதம் தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும் பங்குனி உத்திரம் அதிக மகிமை வாய்ந்தது .


 பார்வதி - பரமேஸ்வரன்,தெய்வானை -முருகன் ,ஆண்டாள்-ரங்க மன்னார் போன்ற பல தெய்வ தம்பதிகளுக்கு திருமணங்கள் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன.


வள்ளி அவதாரம் ,ஸ்ரீ ஐயப்பன் அவதாரம்,அர்ஜுனன் அவதாரம் எடுத்ததும் இந்த நாளில் தான்.


இந்த நன்னாளில் விரதம் இருந்து ,அன்னதானம் செய்வது மிக நன்று.பிரம்மன் தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படி வரத்தை பெற்றரர்.


ஒரு சமயம் சிவபெருமான் காட்டிற்கு சென்று தவமிருக்கத் துவங்கினார்.அவருடைய துணைவியார் உமாதேவியோ காஞ்சிபுரத்திற்கு சென்றார்.அவர்கள் இருவரும் பிரிந்து இருந்ததினால் ,எல்லா  உயிர்களின் ஓட்டமும் நின்று விட்டன.


இந்த நிலை தேவர்களுக்கு அச்சம் மூட்டியது .மன்மதனை கூப்பிட்டு ,அவனுடைய காதல் அன்பை எய்து சிவபெருமானை மயக்க சொன்னார்கள்.மன்மதன் சிவபெருமானை நோக்கி சில அம்புகள் வீசினார்.அவை சிவபெருமானின் தவத்திற்கு இடையூறாக அமைந்தது .அதனால் கோபம் கொண்ட சிவபெருமான் தன் நெற்றி கண்ணால் மன்மதனை எரித்தார்.


மன்மதனின் மனைவி ரதி தேவி , தன்  கணவனைக்  காப்பாற்றும்படி கிருஷ்ணனிடம் பிராத்தித்தார்.


ரதி தேவியிடம் ஒரு சில விரதங்களை இருக்குமாறும்,சிவபெருமானை பிராத்திக்குமாறும் கூறினார்.அதன்படியே,  ரதி தேவியும் சிவபெருமானை பிராத்தித்தாள்.சிவபெருமான் மனமிரங்கி,மன்மதனை உயிருடன் மீட்டுக் கொடுத்தார்.


  இந்த நாளில்,சிவபார்வதி படத்தை அலங்கரித்து, கல்யாண மூர்த்தியாக பாவித்து, சித்ரான்னங்கள் ,சர்க்கரை பொங்கல்  வைத்து, வழிபாடு செய்ய வேண்டும்.முருகனின்  கந்த சஷ்டி கவசம்,கந்த குரு கவசம்  சொல்லி வழிபட வேண்டும்.


திருமணம் வேண்டுவோர் முருகனுக்கு விரதம் இருந்து ,ஏற்ற வாழ்க்கை துணையை அடையலாம்.திருமண வாழ்வில் பிரச்சனை உள்ளவர்கள் முருகனை வேண்டி ,பிரச்சனைக்கு நல்ல தீர்வு காணலாம்.



என் பதிவை பார்க்கும் நண்பர்கள் என்னை ஊக்குவிக்கும்படியாக உங்கள் கமெண்ட்ஸ் கொடுத்தால் நன்றாக இருக்கும் .

மீண்டும் அடுத்த பதிவில் மற்றொரு தலைப்பில் சந்திப்போம்

நன்றி வணக்கம்.














புதன், 16 மார்ச், 2016

மாரியம்மன்

மாரியம்மன்






பல நோய்களை போக்கும் கசப்பு சுவையுள்ள வேம்பு மரம் மாரியம்மனுக்கு தல விருட்சமாக திகழ்கிறது.மாரியம்மனுக்கு 4திருக்கரங்கள் ,பாசம் ,டமருகம் .கத்தி,கபாலம் ,3திருக்கண்கள்,கீரிடம் ,சிவந்த திருமேனி ,சகல ஆபரணங்கள் ,சிகப்பு
நிற ஆடை அணிந்து ,வலது காலை மடக்கி ,இடது காலை தொங்க விட்டு சுகாசனத்தில் வீற்றிருக்கக்கூடியவள்.


அவள்தான் எல்லாம் என்று நினைத்து காலில்   வந்து விழுபவர்க்கு உடனே அருள் தருபவள் மாரியம்மன்.அம்மை நோயை போக்குவதாக ,அன்னையின் அருள் பெற்ற தீர்த்தம் மருந்தாக பயன்படுகிறது .


இறைவனிடம் பல வரங்களையும் ,மகா பலத்தையும் பெற்ற மாராசூரன் ஆணவமும் ,அகங்காரமும் கொண்டு மூன்று  உலகத்தையும் துன்புறுத்தி வந்தான் .அன்னை லோக மாதா பராசக்தியிடம் தேவர்களும் ,முனிவர்க்கும் முறையிட்டனர்.



தேவியும் திருவுளமிரங்கி காத்தருள உறுதி பூண்டாள்.கோப  ஆவேசத்துடன் மாராசுரனின் இரு கால்களையும் பிடித்து மேலே தூக்கி அவனது தலையை பூமியில் அழுத்தினாள் .அவன் பெற்ற வரத்தின்படி மாண்டான் .மாராசுரனை தேவி அளித்தமையால் "மாரியம்மன் "என பெயர் வந்தது .


ஆடி மாதத்தில் மழை  வேண்டி ,அம்மனுக்கு மக்கள்  விழா எடுப்பர்.அன்னையும் மனமிரங்கி ,மழை  பொழிவாள் ..அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தும் ,கூழ்  காய்ச்சியும் மாரியம்மனை வழிபடுகிறார்கள்


நோய்களை அகற்றும் தெய்வமாகவும்,ஊர்காவல்  தெய்வமாகவும் மாரியம்மன் திகழ்கிறாள்.
 



தினமும் குளித்து விளக்கேற்றி அம்மனுக்கு நெய்வேத்தியம் பண்ணி ,108 மாரியம்மன் போற்றியை படித்து வர நம் அன்னை மனம் குளிர்ந்து நமக்கு வேண்டியதை எல்லாம் தருவாள் .



அம்மனுக்கு உரிய எளிமையான மந்திரம்

அரி ஓம்  பகவதி  திரிலோக பகவதி
வசீகரி ஆனந்த கல்யாணி
ஓம்  தேவி  வீரலெக்ஷ்மி
என்  வாக்கிலும் என்  மனதிலும்
நிற்க  நிற்கவே  சுவாகா


அன்னையின் அருள் நமக்கு கிடைக்க அவளை சரணடைந்து வழிபடுவோம் .


என்னுடைய பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க கமெண்ட்ஸ் கொடுங்க .அது எனக்கு மேலும் மேலும் எழுத ஒரு தூண்டுகோலாக இருக்கும் .

நன்றி வணக்கம்












வெள்ளி, 11 மார்ச், 2016

காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு


என் அன்பு நண்பர்களுக்கு என்  இனிய வணக்கங்கள் .காரடையான் நோன்பு திங்கள் கிழமை வரயிருப்பதால் அதைப் பற்றி எழுதினால்,பயனுள்ளதாக இருக்கும் என எண்ணி இந்த பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .


மாசி மாதமும் ,பங்குனியும் சந்திக்கும் வேளை அதாவது மாசியின் முடிவில் பங்குனியின் துவக்கத்தில் கொண்டாடப்படும் பண்டிகை காரடையான் நோம்பு!


என்றென்றும் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க வேண்டும் என்று பெண்கள்  காமாட்சி அம்மனிடம் பிராத்தனை செய்து, விரதம் இருக்கும் விழாதான் காரடையான் நோம்பு ஆகும்.இந்த விரதத்தை சத்தியவானின் மனைவி சாவித்திரி  நெல்லைக்  குத்தி அடை  செய்து அன்னைக்கு படைத்து வழிபட்டு விரதம் இருந்தாள் .

சாவித்திரி கதை

 அஸ்வபதி என்னும் அரசனின் மகள் சாவித்திரி.அழகிலும் ,பண்பிலும்  சிறந்து விளங்கிய அவளுக்கு சாவித்திரி என பெயர் வைத்தனர் .அவள் வளர்ந்து ,பருவம் எய்தினாள் .நாடு இழந்து தவிக்கும் தும்சசேனனின் மகனான சத்தியவானைத்தான் மணம் முடிப்பேன் என்று கூறினாள் சாவித்திரி .நாரதர், அவனின் ஆயுள் ஒரு வருடம்தான் என்று கூறியும்,சாவித்திரி ஒரு நாள் வாழ்ந்தால்கூட அவனோடு தான் தன்  வாழ்க்கை என்றுரைத்து, சத்தியவானையே 1 திருமணம் செய்து கொண்டாள் .தன் கணவனிடம் ,கண் தெரியாத மாமனார் ,மாமியாரிடம் அன்புடனும் ,பரிவுடனும் நடந்து கொண்டாள் .

  தன்  கணவனின் உயிரை காக்க வேண்டி, கடும் விரதம்  மேற்கொண்டு ,அன்னை காமாட்சியை  பூஜித்து வந்தாள் .அவள் இருந்த விரதம் தான் காரடையான் விரதம் ஆகும்.காமாட்சியும் அருள் புரிந்தாள் .


சத்தியவான் ஒரு நாள் காட்டில் விறகு வெட்டிக் கொண்டு இருக்கும் போது மயக்கமுற்று ,சாவித்திரி மடியில் படுக்க ,எமன் உயிர் பறிக்கும் பாசக் கயிற்றுடன் வருவதையறிந்து மருண்டாள் .எமன் தன்  வேலையான  சத்தியவானின் உயிரை பாசக் கயிறு கொண்டு  பறித்தார்.சாவித்திரி எமனை விடுவதாக இல்லை .அவளும் எமனை பின் தொடர்ந்தாள்.

அவள்  "தன்  கணவருடன்  வாழ விரும்புவதாகவும் , என்  கணவரை திருப்பி கொடுங்கள்" என்று எமனிடம் கேட்டாள் ."பெண்ணே !இறந்தவர்கள்  ஒரு நாளும் உயிர் வாழ முடியாது" என்று கூறி ,உனக்கு வேண்டிய வரத்தை கேள் !தருகிறேன் என்றார் எமன்.


சாவித்திரி தன்  மாமனார் ,மாமியாருக்கு கண் பார்வை அடைய வேண்டும் ,இழந்த நாட்டினை மீண்டும் பெற வேண்டும் அத்துடன், எனக்கு என்  கணவர் மூலமாக குழந்தை பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டாள் சாவித்திரி.அவளை திருப்பி அனுப்பி  விட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்ததால் அனைத்தும் தருவதாக எமனும் வாக்கு கொடுத்தார் .

சாவித்திரி பதிபக்தி  மிக்கவளாகவும்,அவளுடைய சாதுரீய பேச்சு திறத்தை எண்ணியும்  ,எமன் அவள் கணவனுக்கு உயிரை கொடுத்து நீண்ட நாள் வாழ வாழ்த்தி விட்டு சென்றான் .
 

காமாட்சி அம்மன்,நதிகரையில் ஆற்று  மணலில் சிவலிங்கம் பிடித்து வைத்து பூஜை செய்கையில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது .மணலில் கட்டிய லிங்கம் கரையாமல் ,லிங்கத்திற்கு ஆபத்து ஏதும் வராமல் காக்கும் பொருட்டு  தேவி காரடையான் நோன்பு இருந்தாள் .சிவபெருமான் பிரத்யட்சமாகி ,காமாட்ஷியை மணந்து கொண்டதாக கதை சொல்லப்படுகிறது.



காமாட்ஷி இந்த விரத்தை இருந்ததால் இந்நாள் அன்று காமாட்சியை பூஜித்து வழிபட வேண்டும்.வெல்ல அடையும் ,வெண்ணையும் நெய்வேதியமாக வைத்து ,காமாட்ஷி சுலோகம் ,மீனாக்ஷி மந்திரம் சொல்ல வேண்டும்.மஞ்சள் சரடை பூஜையில் வைத்து எடுத்து ,"உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் வைத்தேன் ஒரு நாளும் என்  கணவர் என்னைவிட்டு பிரியாமல் இருக்க அருள வேண்டும்" என்று சொல்லி கையில் கட்டி கொள்ள  வேண்டும் .



நன்றி .வணக்கம்

உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி









ஞாயிறு, 6 மார்ச், 2016

சிவராத்திரி

ஹாய் ப்ரண்ட்ஸ் ,வணக்கம் .


இன்னிக்கு சிவராத்திரி  என்பதால் அதைப்பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.


மாசி மாதம் கிருஷ்ணபக்ஷம்  சதுர்த்தசி திதி திருக்கோணம் நட்சத்திரம் கூடிய புண்ணிய தினத்தன்று சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.




அண்ட  சராசரங்களும் எம்பெருமானிடம் ஒடுங்கிய நாள் தான் சிவராத்திரி .எங்கும் சிவமயம் !எதிலும் சிவமயம் .எல்லாம் சிவசொரூபம்.சிவ வழிபாடு மிகச்சிறப்பாக கோவில்களிலும் ,வீடுகளிலும் சிவராத்திரி அன்று செய்யப்படுகிறது .

சிவனுள் சக்தி அடக்கம் என்பதால் சிவன் சக்தியை சேர்ந்து வழிபடுவது சிறப்பு.திருமணமான பெண்கள் தன் கணவனின் ,குழந்தைகளின் நலனுக்காகவும் ,திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் வேண்டியும் விரதம் இருப்பர்.

இந்நாளில் விரதமிருந்தால் புத்தி முக்தி கிடைக்கும் .அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்.தெரிந்தோ ,தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும் . நினைத்த காரியம் நடக்கும் .


ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பது நூறு ஏகாதசி விரதம் அனுஷ்டித்த பலனை கொடுக்கும் என புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.


சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து ,நீராடி திருநீறு அணிந்து ,உருத்திராட்ச மாலைகள் தரித்து ,சிவபூஜை செய்து நம  சிவாய எனும் நாமம் சொல்ல வேண்டும் .மாலை சிவன் ஆலயம் சென்று சிவனுக்கு உரிய  நாமங்களையும்,சிவபுராணம்,தேவாரம்,திருவாசகம் ஓதியும் ,சிவனின் மூலமந்திரம் 108 தடவை சொல்லியும் வழிபடுதல் நன்று.


விரதம் இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம்.இருக்க முடியாதவர்கள் ஒவ்வொரு சாமப்பூஜை முடிந்த பிறகு தண்ணீர் ,பால் ,பழங்களை உண்ணலாம்.


அம்மை,அப்பனை நோக்கி கடுந்தவமிருந்து சிவபெருமானின் இடப்பாகத்தை பெற்றதும் இந்நாளில் தான்.

























அர்ச்சுணன் தவம் புரிந்து பாசுபதம் என்னும் ஆசுகம் (அம்பு ,அஸ்திரம் )பெற்றது .





கண்ணப்ப நாயனார் தன்  கண்களை பறித்து சிவனின் கண்களில் வைத்ததும் ,அதை மேட்சி அவனுக்கு முக்தி கிடைத்ததும் இந்நாளில் தான்.சிவன் காட்சி தந்து அருளிய தலம் திருக்காளத்தி திருதலமாகும்.

மார்க்கண்டேயனுக்காக எம்பெருமான் காலதேவனை தண்டித்த நாள் .




சிவன் கோவில்களில் 4 ஜாம பூஜை சிவராத்திரி அன்று இரவு நடைபெறுகிறது .அதில் கலந்து நற்பலனை அடையலாம்.

முதல் சாமம் என்பது சிவராத்திரி இரவு 6 மணி முதல் 9 மணி வரை  முதல் கால பூஜை செய்யப்படுகிறது .பிரம்மா சிவனுக்கு செய்யும் பூஜை .பசும் பால் ,பசுந் தயிர் ,பசு நெய் ,கோமியம்,கோசாணம் அபிஷேகம் செய்ய  வேண்டும்.நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு ,நற்பலன் அடையலாம் .


இரண்டாம் சாம பூஜை 9மணி முதல் 12மணி வரை நடைபெறும்.இப்பூஜையை காக்கும் கடவுளான விஷ்ணு சிவபெருமானை பூஜை செய்து அருள் பெற்றார்.சிவனுக்கு பால் ,பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்தல் வேண்டும். இந்த கால விரதத்தினால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.



மூன்றாம் கால பூஜை இரவு 12 மணி முதல் 3மணி வரை நடைபெறும்.சக்தியின்  வடிவமான அம்பாள் பூஜித்த காலம் இதுவே ஆகும்.பழச்சாறு அபிஷேகம் சிவனுக்கு செய்தல் வேண்டும்.எந்த வித தீயசக்தியும், நம்மை அண்டாமல் சக்தியின் அருள் கிடைக்க சிவனை வழிபட வேண்டும்.



நான்கு சாம பூஜை அதிகாலை 3 முதல் 6 வரை நடைபெறும்.சந்தன அபிஷேகம் இந்த கால பூஜையில்  நடைபெறும்.முப்பத்து முக்கோடி தேவர்,முனிவர்,ரிஷிகள் ,பூதகணங்கள்,மனிதர்கள்,அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது .


மறுநாள் அதிகாலை நீராடி ,சிவன் கோவிலுக்கு சென்று விரதத்தை முடிக்க வேண்டும்.















வியாழன், 3 மார்ச், 2016

சடாரி




அன்பார்ந்த ஆன்மீக தோழிகளுக்கு என் அன்பு வணக்கங்கள் .நாம் எல்லோரும் பெருமாள் கோவில்களுக்கு சென்று இருக்கிறோம்.பெருமாளை சேவித்து விட்டு,அங்கு அர்ச்சகர் கொடுக்கும் துளசி ,தீர்த்தம் எல்லாம் வாங்கி சாப்பிடுகிறோம் .அதன்பிறகு ,நம் தலையில் வைக்கும் கீரிடத்திற்கு பெயர்தான் சடாரி .



சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் பாதம் பொறிக்கப்பட்ட கீரிடமாகும்.இதனை மணிமுடி என்றும் கூறுவர் .பக்தர்கள் தலை மீது பெருமாள் தங்குவதாக ஐதீகம் .சடாரி யில் பொறிக்கப்பட்ட பாதங்கள் பெருமாளின் பாதங்கள்  அல்ல.பிறக்கும் போதே உலக மாயைகளை வென்றவரான நம்மாழ்வாரின் பாதங்கள்  ஆகும்.


இதை வைப்பதன் மூலம் இவ்வுலகத்தின் பாசப் பிணைப்புகளில் இருந்து விடுபட்டு பரமாத்மாவை அடையலாம் என்பதே சடாரி வைப்பதன் பயன் .வைணவர்கள் நம்மாழ்வாரே திருமாலின் திருவடிகளில் இருப்பதாக நம்புகிறார்கள்.எந்த கோவிலுக்கு சென்றாலும் இறைவனை தரிசிக்கும் போது ,முதலில் திருவடிகளைத்தான் தரிசிக்க வேண்டும்.பக்தர்களின் தலையெழுத்தை மாற்றும் வல்லமை திருவடிக்கு உண்டு .


தன்  தாய் செய்த தவறுக்கு வருந்திய பரதன் ,இராமரை காட்டில் போய் சந்தித்து, மன்னிப்பு கோருகிறான் .மீண்டும் அயோத்திக்கு திரும்பி வந்து ஆட்சி பொறுப்பை ஏற்குமாறு வேண்ட ,இராமர் மறுத்து விடுகிறார்.எனவே இராமனின் பாதுகைகளை கொண்டு போய் அதை சிம்மாசனத்தில் வைத்து அதன் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தான் பரதன் .இறைவனின் பாதுகைகள் சக்தி வாய்ந்தவை .


நம்மாழ்வாரின் சொரூபமாக கருதப்பட்ட  ஸ்ரீ சடாரியை நம் தலையில் தாங்கும் போது ,நம்மாழ்வாரை நினைத்து பெருமானே! இறைவன் பாதத்தில் எம்மையும் சேர்க்க அருள் புரியுங்கள் என  வேண்டிக்  கொள்ள வேண்டும் .


பெருமாள் கோவில்களில் மட்டுமே சடாரி வைக்கும் பழக்கம் இருக்கிறது .சிவன் கோவில்களில் வைப்பது இல்லை .மூன்று சிவன் கோவில்களில் சடாரி வைக்கும் வழக்கம் உள்ளது .காஞ்சிபுரம் ஏகாம்பரரேஸ்வரர் ,காளஹஸ்தி காளத்தீஸ்வரர் ,சுருட்டப்பள்ளி சிவாலயங்களில் பக்தர்களுக்கு சடாரி வைக்கிறார்கள் .


இறைவன் திருவடியே நிரந்தரமானது .இறைவன் திருவடியைப் பற்றி கொண்டு ,முழு மனதுடன் சரண் அடைந்தால் நமக்கு பிறப்பற்ற நிலையான முக்தி கிடைக்கும்.




என் பதிவுக்கு வந்த அனைத்து  நெஞ்சங்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டு ,எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க ஆண்டவனைப்  பிராத்திக்கிறேன் .


ஓம் நமோ நாராயணா