சனி, 31 டிசம்பர், 2016

ஐயப்பனின் 18படிகள் கூறும் யோகங்கள்

ஐயப்பனின்  18படிகள் கூறும் யோகங்கள் 

கார்த்திகை மாதத்தில் ஐயப்பனை  தரிசிக்க செல்லும் போது 18படிகளை தாண்டி செல்கிறார்கள்.அந்த 18பதினெட்டுப் படிகளுக்கும் ஒவ்வொரு யோகம் உண்டு அவையாவன


முதல் படி – விஷாத யோகம்
பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம். இதுவே முதல்படி

இரண்டாம் படி – சாக்கிய யோகம்
பரமாத்மாவே என் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய யோகம். 

மூன்றாம் படி – கர்ம யோகம்
கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம், 

நான்காம் படி – ஞானகர்ம சன்னியாச யோகம்
பாவ- புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்றில்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும். 

ஐந்தாம் படி – சன்னியாச யோகம்
நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

ஆறாம் படி – தியான யோகம்
கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம். இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக் கூடாது இதுவே ஆறாவது படி. 

ஏழாம் படி – பிரம்ம ஞானம்
இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான். எல்லாமே இறைவன்தான் என உணர்வது பிரம்ம ஞானம்.

எட்டாம் படி – அட்சர பிரம்ம யோகம்
எந்நேரமும் இறைவனின் திருவடி நினைவுடன் இருப்பது. வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி.

ஒன்பதாம் படி – ஆன்மிக யோகம்
கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை. சமூக தொண்டாற்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி என்று உணர்வது இந்தப்படி.

பத்தாம் படி – விபூதி யோகம்
அழகு, அறிவு, ஆற்றல் போன்று எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது பத்தாம் படி

பதினொன்றாம் படி – விஸ்வரூப தரிசன யோகம்
பார்க்கும் அனைத்திலும் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.
பன்னிரெண்டாம் படி – பக்தி யோகம்
இன்பம்-துன்பம், விருப்பு-வெறுப்பு ஏழை–பணக்காரன், போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைத்திலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.

பதிமூன்றாம் படி – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்
எல்லா உயிர்களிலும் இறைவன் வீற்றிருந்து இறைவனே  அவர்களை இயக்குகின்றான் என்பதை உணர்தல் பதிமூன்றாம் படி
.
பதினான்காம் படி – குணத்ர விபாக யோகம்
யோகம், பிறப்பு, இறப்பு மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம்படி

பதினைந்தாம் படி – தெய்வாசுர விபாக யோகம்
தீய குணங்களை ஒழித்து நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

பதினாறாம் படி – சம்பத் விபாக யோகம்
இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்று உணர்ந்து ஆணவம் கொள்ளாமல் நடப்பது பதினாறாம் படி.

பதினேழாம் படி – சிரித்தாத்ரய விபாக யோகம்
’சர்வம் பிரம்மம்’ என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை அடைவது பதினேழாம் படி.

பதினெட்டாம் படி – மோட்ச சன்னியாச யோகம்
யாரிடமும் எந்த உயிர்களிடத்தும் பேதம் பார்க்காமல்,  உன்னையே சரணாகதி என்று அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில்  அடைக்கலம் அடைந்து, அவன் அருள்புரிவான் என்று அவனையே சரணடைவது பதினெட்டாம் படி . 

சத்தியம் நிறைந்த இந்த பத்தினெட்டுபடிகளை பக்தியோடு கடந்து வந்தால் நம் கண் எதிரே அருள் ஒளியாய் தரிசனம் தந்து அருள் புரிய காத்திருப்பான் ஐயன் ஐயப்பன் என்பதே இந்த பதினெட்டாம் படி  தத்துவம்.  

வியாழன், 29 டிசம்பர், 2016

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி 


மார்கழி மாதம் சுக்லபட்ச வளர்பிறையில் வருவது வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி விரதம் மிக சக்தி வாய்ந்தது என்று புராணங்களில் சொல்லப்படுகிறது.ஸ்ரீமத்இ நாராயணன்வ்வை அசுர சம்ஹாரத்திற்கு வேண்டிப் பூலோகத்திற்கு மூன்று கோடி தேவர்களுடன் எழுந்தருளினார்.இதன் காரணமாகவே வைகுண்ட  ஏகாதசிக்கு "முக்கோடி ஏகாதசி "என்ற பெயர் ஏற்பட்டது.

ஏகாதசி எப்படி உருவானது? 

சந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என்ற (முரன்) அவனுடைய மகன் மருவாசுரனும் தேவர்களை துன்புறுத்தி வந்தனர். இதனால் விஷ்ணுபகவானிடம் தேவர்கள், அசுரர்களால் தாங்கள் படும் துன்பத்தை எடுத்துரைத்தார்கள். இதனால் மகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன் போர் புரிந்தார். இந்த போர் பல வருடங்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டே இருந்தது. இதனால் சோர்வடைந்த ஸ்ரீமந் நாராயணன், ஒரு குகையில் நன்றாக உறங்கினார். அப்போது அவர் உடலில் இருந்து ஒரு பெண் சக்தி தோன்றி, போர் நடக்கும் களத்திற்கு சென்று, அந்த அசுரர்களை வீழ்த்திவிட்டு மீண்டும் ஸ்ரீமகாவிஷ்ணுவிடமே திரும்பி வந்தது.

தன் எதிரில் ஒரு பெண் தேவதை நிற்பதை கண்டு அந்த தேவதை தன் உடலில் இருந்து வெளிப்பட்டது என்பதையும் உணர்ந்து, அந்த தேவதை அசுரர்களை அழித்ததையும் தெரிந்து, அதனை வாழ்த்தி, “ஏகாதசி” என்று பெயர் சூட்டினார். “நீ தோன்றிய இந்த நாளில், யார் என்னை நினைத்து விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு நீ துணை இரு. பக்தர்களின் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் அருள வேண்டும்.” என்று ஆசி வழங்கி, பிறகு அந்த ஏகாதசியை மீண்டும் தன்னுள் ஐக்கியபடுத்திக்கொண்டார் ஸ்ரீமந் நாராயணன். 

ஏகாதசி விரதத்தின் மகிமை


 ருக்மாங்கதன் என்ற அரசர் இருந்தார். அவர் ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி தெரிந்துக் கொண்டார். அதனால் தன் நாட்டு மக்கள் யாவரும் பாவத்தில் இருந்து விடுபட்டு, புண்ணியம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஏகாதசி விரதத்தை கட்டாயமாக மக்கள் அனைவரும் அனுசரிக்க வேண்டும் என்று அரசாங்க உத்தரவிட்டார். அத்துடன் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்காதவர்கள் ராஜதண்டனைக்கு ஆளாவார்கள் என்றும் ஆணையிட்டார். இதனால் எட்டு வயது குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை அரசாங்கத்துக்கு பயந்தே ஏகாதசி விரதத்தை கடைபிடித்தார்கள். ஏகாதசி விரதத்தின் மகிமையால் நல்ல பலன் கிடைத்தது. நாடும், அந்நாட்டு மக்களும், அரசரும் சுபிக்ஷமாக வாழ்ந்தார்கள். 

அரசரால் திண்டாடிய மோகினி 

அரசர் ருக்மாங்கதன், தன் நாட்டு மக்களை கட்டாயப்படுத்தி ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க சொன்னதால் துஷ்டமோகினிக்கு வேலை இல்லாமல் போனது. ஆம். யார் ஏகாதசி விரதம் இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு கஷ்டத்தை தர வேண்டிய துஷ்ட தேவதைக்கு, அரசர் ருக்மாங்கதன் நாட்டில் மட்டும் அதற்கு வேலை இல்லாமல் போனது. காரணம் மக்கள் அனைவரும் ஏகாதசி விரதத்தை அரசருக்கு பயந்து நிறைவேற்றினார்கள். பொறுத்து பொறுத்து பார்த்த மோகினி, கடைசியில் விஷ்ணுபகவானிடம் ருக்மாங்கதனை பற்றி புகார் சொன்னாள். தன் பக்தனான ருக்மாங்கதன், தன் நாட்டுமக்கள் மேல் அதிக பிரியத்துடன் இருப்பதால் இப்படி செயல்படுகிறான் என்பதை உணர்ந்த ஸ்ரீவிஷ்ணுபகவான், ருக்மாங்கதன் முன் தோன்றி, “நீ யாரையும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கட்டாயபடுத்தக்கூடாது. ஏகாதசி விரதம் என்பது புண்ணியத்தை கொடுக்ககூடியது. புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று யாருக்கு விதி இருக்கிறதோ அவர்களே  விரதத்தை கடைபிடிப்பார்கள். இயற்கைக்கு விரோதமாக நீ யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம்.”  என்று தன் பக்தனான அரசர் ருக்மாங்கதனுக்கு சொன்னார் ஸ்ரீவிஷ்ணுபகவான். இப்படி பாவத்தை போக்கி புண்ணியம் தருவதுதான் ஏகாதசி விரதத்தின் மகிமை. ஏகாதசி விரதம் யார் இருக்கவில்லையோ அவர்களிடம்தான் துஷ்ட மோகினிக்கு வேலை என்கிறது புராணம். 

நோய்வாய்பட்டவர்கள் விரதத்தை கடைபிடிக்க முடியுமா? 

ஏகாதசி விரதம் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்என்கிறது சாஸ்திரம். ஆனால் வியாதியால் அவதிப்படுபவர்கள் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க முடியாதல்லவா.? ஆகவே நோய்வாய்பட்டு விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள் ஏகாதசி விரததன்று உணவு சாப்பிடும் முன்னதாக இறைவனை வணங்கிய விட்டு சாப்பிடலாம் எனகிறது சாஸ்திரம். ஏகாதசி விரதத்தை எப்படி கடைபிடிப்பது? 
ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று, உணவு சாப்பிட்டு  இறைவனுடைய நாமத்தையும், விஷ்ணு புராணம் போன்ற புராணங்களையும், மந்திர ஸ்தோத்திரங்களையும், பாடல்களையும் உச்சரிக்க வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையில் பெருமாள் கோயிலுக்கு சென்று, சொர்க்கவாசல் வழியாக இறைவனை வணங்கி தரிசித்துவிட்டு, அன்று நாள்முழுவதும் இறைவனுடைய நாமத்தையும், பாடல்களையும், புராணங்களையும் படிக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி இறைவனுக்கு நெல்லிக்காய், அகத்திகீரை போன்றவை சமைத்து படைத்து பூஜித்த பிறகு,  ஒருவருக்காவது அன்னதானம் செய்த பிறகு சாப்பிட வேண்டும். விரதத்தை கடைபிடித்தவர்கள் நெல்லிக்காய், சுண்டக்காய், அகத்திகீரை போன்றவற்றை பல்லில் படாமல் சாப்பிடவேண்டும். சாப்பிடும் முன் இறைவனுடைய நாமத்தை உச்சரிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். இதனால் புண்ணியம் கிட்டும். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் முன்னோர்களின் சாபமும் நீங்கிடும். 

சொர்க்கவாசல்  உருவான கதை 

விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்க முடியாமல் திணறினர் தேவர்கள். அதனால் விஷ்ணுவின் சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணுபகவான் ஒருவரே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட, பெருமாள் மது, கைடபருடன் போர் செய்தார். ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள். “பகவானே…தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால் எங்களுக்கு நீங்கள் கருணை  காட்ட வேண்டும்.” என்ற பணிவாக கூறி வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றார்கள் இந்த அசுர சகோதரர்கள். தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று எண்ணி  அசுரர்களாக இருந்தாலும் நல்ல மனதுடன் பெருமாளிடம் வேண்டினர். “எம்பெருமானே…தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் (மனித வடிவம்) தாங்கள் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் தெரிந்து செய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள். .அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி இனிதே நடைபெறுகிறது. இந்த ஏகாதசி நன்னாளில், “ஓம் நமோ நாராயணாய” என்று உச்சரித்து, பெருமாளை தரிசித்து பாவங்கள் நீங்கி, ஸ்ரீமகாலஷ்மியின் அருளையும் பெறுவோம்.



27 தீபங்களும்,அதன் பலன்களும்

27தீபங்களும் ,அதன் பயன்களும் 

தீபஜோதியே நமோ நம 

சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தன சம்பதா
சத்புத்தி ப்ரகாசாய தீபஜ்யோதிர் நமோநம:

தீபம் ஏற்றுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனசேர்த்தி, நல்லபுத்தி ஆகியவை பெருகும் எனச் சொல்கிறது மேற்காணும்  ஸ்லோகம்.

நம் பாரதத்தின் ஆன்மிகக் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது தீபவழிபாடு. விரிவான வழிபாடுகள் தெரியவில்லை என்றாலும், காலை-மாலை இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றிவைத்து, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும்; தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் ஸித்திக்கும் என்கின்றன ஞான நூல்கள். அப்படியான தீபத்தைச் சிறப்பிக்கும் மாதம்தான் திருக்கார்த்திகை. இந்த மாதத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது அவ்வளவு விசேஷம்.

தினமும் 27 விளக்குகள்...


கார்த்திகை மாதத்தில், நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டுமாம். அவை எந்தெந்த இடங்கள், எந்தெந்த  இடங்களில்  எத்தனை தீபங்கள்  ஏற்றுவது?   என்பது குறித்து விரிவாக அறிவோமா

கோலமிடப்பட்ட வாசலில்: ஐந்து விளக்குகள்
திண்ணைகளில்: நான்கு விளக்குகள்
மாடக்குழிகளில்:  இரண்டு விளக்குகள்
நிலைப்படியில்: இரண்டு விளக்குகள்
நடைகளில்: இரண்டு விளக்குகள்
முற்றத்தில்: நான்கு விளக்குகள்


இந்த இடங்களில் எல்லாம் தீபங்கள் ஏற்றிவைப்பதால், நமது இல்லம் லட்சுமி கடாட்சத்தை வரவேற்கத் தயாராகி விடும்; தீய சக்திகள் விலகியோடும்.

பூஜையறையில்: இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றிவைக்கவேண்டும். இதனால் சர்வமங்கலங்களும் உண்டாகும்.


சமையல் அறையில்: ஒரு விளக்கு; அன்ன தோஷம் ஏற்படாது.


தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில்: யம தீபம் ஏற்றவேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும். 


பின்கட்டு பகுதியில்:நான்கு விளக்குகளை ஏற்றிவைக்க விஷ ஜந்துக்கள் அணுகாது.


ஆனால், அபார்ட்மென்ட் மற்றும் மாடி வீடுகள் அதிகம் உள்ள தற்காலத்தில்,   மேற்சொன்ன முறைப்படி விளக்கு ஏற்ற முடியாது ஆகையால், வசதிக்கு ஏற்ப வீட்டுக்குள்ளேயும் வெளியிலுமாக 27 விளக்குகளை ஏற்றிவைத்து பலன் பெறலாம்.

தீபத்தின் வகைகள்


தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் `தீபலட்சுமியே நமோ நம' என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தை பலவகையாகச் சொல்லி விளக்குகின்றன ஞானநூல்கள். அவற்றில் சில...

சித்ர தீபம்: தரையில் வண்ணப் பொடி களால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது  ஏற்றப்படும் தீபங்கள்.


மாலா தீபம்: அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படுவது.


ஆகாச தீபம்: வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படுவது, ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், யம பயம் நீங்கும்.


ஜல தீபம்: நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபங்கள் ஜல தீபம் ஆகும்.


நௌகா (படகு) தீபம்: கங்கை  கரையோரங்களில் வாழும் மக்கள், புண்ணிய யாத் திரையாக கங்கைதீரத்துக்குச் செல்பவர் கள், கங்கை நதிக்கு மாலைவேளையில் ஆரத்தி செய்து, வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்து, அதை கங்கையில் மிதக்கவிடுவர். படகு போன்ற வடிவங் களில் தீபங்கள் தயார் செய்தும் மிதக்க விடுவார்கள். இவற்றையே நெளகா தீபங் கள் என்று அழைப்பர். சம்ஸ்கிருதத்தில் `நௌகா' என்றால் `படகு' எனப் பொருள்.


சர்வ தீபம்: வீட்டின் அனைத்து பாகங் களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகும்.


மோட்ச தீபம்: முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, ஆலய கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படுவது.


சர்வாலய தீபம்: கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலைவேளையில் சிவாலயங்களில் ஏற்றப்படுவது. அதாவது, பனை ஓலை களால் கூடுபோல் பெரிதாகச் செய்து, அதற்கு பூஜை செய்து தீபாராதனை காட்டி, கற்பூரத்தின் ஜோதியை அதில் ஏற்றுவது, சர்வாலய தீபம் ஆகும்.


அகண்ட தீபம்: மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம்.திருவண்ணாமலை, பழநிமலை, திருப் பரங்குன்றம் முதலான திருத்தலங்களில், அகண்ட தீபத்தைத் தரிசிக்கலாம்.


லட்ச தீபம்: ஒரு லட்சம் விளக்குகளால் ஆலயத்தை அலங்கரிப்பது லட்சதீபமாகும்.   திருமயிலை, திருக்கழுக்குன்றம் (12 ஆண்டுகளுக்கு ஒருமுறை) முதலான பல ஆலயங்களில் லட்சதீபம் ஏற்றுவது உண்டு.


மாவிளக்கு தீபம்: அம்மன் ஆலயங்களில் நோய் தீர வேண்டிக்கொண்டு மாவிளக்கு ஏற்றுவார்கள். அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டை யாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரி போட்டு ஏற்றுவது மாவிளக்கு ஆகும். 


காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு  கச்சபேஸ்வரர் ஆலயத்தில், கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை களில், இவ்வகை தீபத்தை தலையில் வைத்துக்கொண்டு ஆலயத்தை வலம் வந்து வழிபடும் வழக்கம் உண்டு. இதை, `மண்டை விளக்கு பிரார்த்தனை' என்கிறார்கள்.


விருட்ச தீபம்: ஒரு மரத்தைப்போன்று கிளைகளுடன் அடுக்கடுக்காக அமைக்கப் படும் தீப ஸ்தம்பங்களில் விளக்கேற்றும்போது, விருட்சத்தைப் போன்று காட்சித் தரும்.சிதம்பரம், திருவண்ணாமலை, குருவாயூர் ஆலயங்களில் விருட்ச தீபத்தைக் காணலாம்.

மார்கழியின் சிறப்புக்கள்

மார்கழியின் சிறப்புக்கள் 


வீதியெங்கும் வண்ணக் கோலங்கள் மின்னுவதும், விடியற்காலையில் ஒலிக்கும் பஜனைப் பாடல்களும், மார்கழி மாதத்தின் தனிச் சிறப்புகள்.  ‘மார்கழித் திங்கள்  மதி நிறைந்த நன்னாளாம்’ என்று கோதை நாச்சியார் தனது திருப்பாவைப் பாடல்களால் கண்ணனை கன்னித் தமிழின் துணை  கொண்டு ஆராதனை செய்த  மாதம் இது. ஆண்டாளின் அடிதொட்டு, மணமாகாத பெண்கள் தாங்கள் நினைத்தபடி வரன் அமைய இன்றளவும்  மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்து  முடித்து திருப்பாவைப் பாடல்களை மனமுருகப் பாடுவதை சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில்  காண முடிகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நம்  இல்லங்களில் மார்கழி மாதத்தில் சுபநிகழ்ச்சிகள் எதுவும் செய்வதில்லை. 


அப்படியிருக்க  மார்கழி மாதத்தை ஏன் உயர்வாகக் கொண்டாட வேண்டும்?

மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம் என்பது தேவர்களைப் பொறுத்த வரை  ஒரு நாள் கால அளவே ஆகும். அந்த வகையில் கணக்கிட்டால்  நமக்கு ஒரு மாதம் என்பது தேவர்களுக்கு 2 மணி நேரம் மட்டுமே. ( 1 மாதத்திற்கு 2 மணி  நேரம் வீதம் 12 மாதத்திற்கு 24 மணி நேரம் = 1 நாள்) இதில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வருகின்ற ஆறு மாத  காலம் தேவர்களுக்கு பகல்  பொழுதாக அமைகிறது. இந்தக் காலத்தை உத்தராயணம் என்று அழைக்கிறோம். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம்  வரை வருகின்ற ஆறு மாத காலம்  தேவர்களுக்கு இரவுப் பொழுதாக அமைகிறது. இதை தட்சிணாயணம் என்று சொல்கிறோம். இந்த தட் சிணாயணத்தின் நிறைவுப் பகுதி - அதாவது, தேவர்களைப்  பொறுத்தவரை இரவுப் பொழுது - நிறைவடையும் காலமான அதிகாலை 4 மணி  முதல் 6 மணி வரையான நேரமே மார்கழி மாதம் என்று பொருள்  கொள்ளலாம். 

இந்த காரணத்தால்தான் தேவர்களை வரவேற்கின்ற விதமாக மார்கழி மாதத்தில் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் வீட்டு வாசலில் பெண்கள்  வண்ணக்  கோலமிடுவதை வழக்கமாகக் கொண்டனர். ஆனால், இன்றைய காலத்தில் அதிகாலையில் எழுவதை சிரமமாகக் கருதும் சில பெண்கள்  முதல் நாள் இரவே  கோலம் போட்டு வைத்துவிட்டு பின்னர் உறங்கச் செல்கின்றனர். இது முற்றிலும் தவறான ஒன்று என்பதை நினைவில் கொள்ள  வேண்டியது அவசியம்.  மார்கழியின் தனிச்சிறப்பே அதி காலையில் எழுந்து கோலமிடுவதுதான். அந்த நேரத்தில் கோலமிட்டு கோலத்தின் நடுவே  விளக்கேற்றி வைத்துப் பாருங்கள்,  மனதினில் மட்டற்ற மகிழ்ச்சி பொங்கும். மகாலட்சுமியின் அருள் பூரணமாகக் கிட்டும்.

ஜோதிட சாஸ்திர ரீதியாக ஆராய்ந்தால், மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பௌர்ணமி தோன்றும் மாதத்தை ‘மார்க்கசிர’  என்று  வடமொழியிலும் மார்கழி என்று தமிழிலும் அழைக்கிறோம். இந்த மிருகசீரிஷ நட்சத்திரம் ம்ருகண்டு மகரிஷிக்கு உரியது. ஜோதிடப்  பிதாமகராகத் திகழ்பவர்  ம்ருகண்டு மகரிஷி. இவரது ‘ம்ருகண்டு சூத்ரம்’ மற்றும் ‘ம்ருகண்டு வாக்கியம்’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே  அந்நாளில் 
பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. என்றும் சிரஞ்சீவியாக விளங்கும் மார்க்கண்டேயரின் தந்தை இந்த ம்ருகண்டு மகரிஷி என்பதும் மார்க்கண்டேயரின்  ஜென்ம  நட்சத்திரம் மிருகசீரிஷம் என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை.

சப்த சிரஞ்சீவிகள் என்றழைக்கப்படும் அஸ்வத்தாமர், மகாபலி, வியாஸர், ஹனுமான், க்ருபாசார்யர், பரசுராமர், விபீஷணர் ஆகிய ஏழு பேருக்கு  அடுத்தபடியாக  நேரடியாக சிரஞ்சீவிப் பட்டத்தைப் பெற்றவர் மார்க்கண்டேயர். தனது உயரிய பக்தியின் மூலமாக மரணத்தை வென்ற மகாயோகி  அவர். மார்கழி மாதத்திற்கு  உரிய நட்சத்திரமான மிருகசீரிஷத்தில் உதித்த அந்த இளம் ஞானி தனது 16வது வயதில் மரணம் நிச்சயம் என்பதை  உணர்ந்தும் இவ்வுலக சுகங்களை  நாடாமல் இறைவனை மட்டுமே சிந்தையில் கொண்டிருந்தார். தனது அபரிமிதமான பக்தியினால் சிவலிங்கத்தைக்  கட்டித் தழுவியிருந்த அவரைக் கொண்டு  செல்ல நினைத்த எமதர்மனை சிவபெருமான் வதைத்த கதை நாம் அறிந்ததே. மார்க்கண்டேய சரித்திரம்  மரணத்தை வெல்லும் மார்கழி என்று இந்த மாதத்தின்  பெருமையை நமக்கு உணர்த்துகிறது. எனவேதான் ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்ய மார்கழி  மாதத்தை தேர்ந்தெடுப்பார்கள், விவரம் அறிந்தவர்கள்.

அரங்கநாதனையே மணாளனாக அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டாள் விரதமிருந்த மாதம் இது. அவரது உயரிய பக்தியின்  காரணமாகத்தான்  அவரால் ஆண்டவன் அடி சேர முடிந்தது.
அதே போன்று ராம நாம ஜபத் தினையே தனது உயிராகக் கொண்டிருக்கும் ஆஞ்சநேயர் பிறந்ததும் மார்கழி மாத  அமாவாசை நாளில்.மார்கழி மாதத்தில் வரும் வளர் பிறை ஏகாதசித் திருநாளை வைகுண்ட ஏகாதசி எனக் கொண் டாடுகிறோம்.
வைணவர்கள் மட்டுமின்றி  இந்துக்கள்  எல்லோருமே விரதம் இருக்கும் நாள் வைகுண்ட ஏகாதசி. விவரம் தெரியாதவர்கள் கூட வைகுண்ட ஏகாதசி நாள் அன்று விரதம் இருப்பதோடு   உறங்காமல் கண் விழிக்கவும் செய்வார்கள். அந்த நன்னாளில் அதிகாலை வேளையில் ஆலயங்களில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அன்றைய தினத்தில்  பெருமாளை சேவிப்பவர்கள் சொர்க்கத்தை அடைவர் என்று நம்பிக்கைக் கொண்டி ருக்கிறோம். இவ்வாறு பக்தி சிந்தனைக்கு உரிய உயரிய மாதமாக மார்கழியை  வைத் திருக்கிறார்கள் நம் பெரியோர்கள்.

மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தனுசு ராசிக்கு அதிபதி குரு  பகவான். அதாவது,  குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது. நவகிரகங்களில் அரசன் ஆகிய சூரியன், குருகுலவாசம் செய்யும்  நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள்  உட்பட சத்திரியர்கள் யாரும் போர்த் தொழிலில் ஈடுபட மாட்டார்கள். பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக  இணைந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபட வேண்டிய  காலமாக மார்கழியைக் கொண்டிருந்தார்கள் நம் முன்னோர்கள்.
‘மாதங்களில் நான் மார்கழி’ எ ன்று கீதையில் கண்ணன் சொன்னது பக்தி மார்க்கத்தால் என்னை  அடைய முடியும் என்பதை சுட்டிக்காட்டவே என்பதை நாம் உணர வேண் டியது அவசியம்.

நமது சொந்தக் காரியங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த ஒரு மாதமாவது இறைவனின் மேல் நமது முழு சிந்தனையையும் செலுத்த  வேண்டும்  என்ற காரணத்தினால்தான் மார்கழியில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகளைத் தவிர்த்தார்கள் நம் முன்னோர்கள். பக்தி மார்க்கத்திற்கு  வழிகாட்டும் மாதமாக  மார்கழியைக் கருதினார்கள். வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதம் இது. பீடு என்றால் பெருமை மிகுந்த  அல்லது உயரிய என்று பொருள். பீடு  உடைய மாதமாகிய இதனை பீடை மாதம் என்று கூறுவது முற்றிலும் தவறு. 

இத்துணை சிறப்பு வாய்ந்த  இந்த மாதத்தில் நாமும் அதிகாலை நேரத்தில்  மட்டுமாவது இறைவனின் மீது சிந்தனையைச் செலுத்துவோம்; வாழ்வினில் வளம் பெறுவோம்..!

புதன், 28 டிசம்பர், 2016

அர்ச்சுனன் கர்வம் நீக்கிய ஆஞ்சநேயர்

அர்ச்சுனன் கர்வம் நீக்கிய ஆஞ்சநேயர்

கண்ணனின் திறமையை அறிந்திருந்த அர்ச்சுனனுக்கு, ராமரின் திறமை புரியவில்லை. 

திரேதா யுகம் முடிந்து, துவாபர யுகம் தொடங்கியிருந்தது. சிரஞ்சீவியாக வாழும் வரம் பெற்றிருந்த அனுமன், ராம நாமத்தை ஜெபித்தபடி ராமரின் தரிசனம் எப்போதாவது கிட்டும் என்ற எண்ணத்தில் தவத்தை தொடர்ந்து வந்தார். உண்மை பக்தனின் உள்ளத்தை அறியாமல் இருப்பாரா கண்ணன். அனுமனுக்கு தரிசனம் அளிக்க சித்தம் கொண்டார்.



மகாபாரத காலத்தில் ராமரை தரிசிக்க வேண்டும் என்பதற்காக, பூமியில் ராமனை நினைத்து தவ வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார் அனுமன். அமைதி தவழ்ந்து கொண்டிருந்த நதிக்கரையோரம் அது. ஒரு நாள் அந்த வழியாக வந்தான் அர்ச்சுனன். அப்போது மரத்தில் அமர்ந்து ராமரை நினைத்து தியானித்துக் கொண்டிருந்த ஆஞ்சநேயர் அவன் கண்ணில் பட்டார். அவரைப் பார்த்து, ‘வானரரே! தாங்கள் யார்?’ என்று வினவினான்.

அர்ச்சுனன் யார் என்பதை தன் தவ வலிமையால் உணர்ந்து கொண்ட ஆஞ்சநேயர், ‘அர்ச்சுனா! நான் ராமாயண காலத்தில் ராமனுக்கு தூதுவனாக இருந்த ஆஞ்சநேயன்’ என்று பதிலுரைத்தார். அவரை பற்றி பல வழிகளிலும் கேள்விப்பட்டிருந்த அர்ச்சுனன் அவரிடம் தலைதாழ்ந்து தனது வணக்கத்தை தெரிவித்தான். அப்போது அவனுக்குள் இருந்த கர்வம் விழித்துக் கொண்டது.
‘வாயு புத்திரரே! ராமாயண காலத்தில் சீதாதேவியை தேடி இலங்கைக்கு அனைவரும் புறப்பட்டபோது, கடலுக்கு நடுவில் வானரங்களை கொண்டு கல்லால் பாலம் அமைத்ததாக கேள்வியுற்றேன். 

ராமர் சிறந்த வில்லாளி என்று அறிந்தேன். ஆனால் அவர் தனது வில்லை நம்பாமல், வானரங்களை வைத்து கல் பாலத்தை அமைத்ததைப் பார்த்தால், ராமர் சிறந்த வில் வித்தை வீரர் இல்லை என்பதுபோல் தோன்றுகிறதே!’ என்று கேள்வி எழுப்பினான்.
ராமனே சித்தம் என்று நித்தமும் எண்ணிக் கொண்டிருக்கும் அனுமனிடம், அர்ச்சுனன் இப்படி ராமரின் திறமையை பரிகசித்து பேசி, எகத்தாளமாக கேள்வி எழுப்பியதும், அவருக்கு கோபம் வந்து விட்டது. 

கண்ணனின் திறமையை அறிந்திருந்த அர்ச்சுனனுக்கு, ராமரின் திறமை புரியவில்லை. ஏனெனில் அவன் கண்ணனும், ராமரும் வேறுவேறு என்று நினைத்து விட்டான்.
‘அர்ச்சுனா! ராமர் நினைத்திருந்தால் பாலம் அமைத்து தான் அங்கு செல்ல வேண்டும் என்பதே இல்லை. அவர் நினைத்தால் அந்த நிமிடமே நினைத்த இடத்தில் இருக்கும் வல்லமை பெற்றவர். அப்படிப்பட்டவரை நீ இகழ்வாக பேசி விட்டாய். உன்னால் அனைவரையும் தாங்கும் ஒரு பாலத்தை அம்பால் அமைக்க முடியுமா?, அப்படி அமைத்தாலும் அது என் ஒருவனின் கட்டை விரல் சுமையையாவது தாங்குமா?. அப்படி தாங்கி விட்டால் மகாபாரத போரில் உனது தேரில் கொடியாக இருந்து உனக்கு உதவி புரிகிறேன்’ என்றார் ஆஞ்சநேயர்.
‘ஏன் முடியாது? என் திறமை தெரியாமல் பேசுகிறீர்கள். என்னால் எதுவும் முடியும். இப்போதே இந்த நதியில் என் வில்லின் சக்தி கொண்டு ஒரு பாலம் அமைக்கிறேன்’ என்று கூறி, அம்புகளை சரமாரியாக தொடுத்து கண நேரத்தில் ஒரு அம்பு பாலத்தை கட்டி முடித்தான் அர்ச்சுனன். பின்னர், வானரரே! இப்போது இதில் ஏறி குதித்து விளையாடும், அங்கும் இங்கும் ஓடும். அப்போது என் திறமையை உணர்ந்து கொள்வீர். பாலம் உடைந்து விட்டால் நான் இங்கேயே தீயில் இறங்கி உயிரை மாய்த்துக் கொள்கிறேன்’ என்று மீண்டும் ஆணவம் பொங்க பேசினான்.
இதைக் கேட்டு நகைப்புடன், ராம ராம என்று துதித்த படி தனது வலது காலின் கட்டை விரலை அந்த அம்பு பாலத்தின் மீது வைத்து அழுத்தினார் ஆஞ்சநேயர். அது மண் மாளிகை போன்று பொலபொலவென சரிந்து விழுந்தது. இதனை பார்த்ததும் அர்ச்சுனனின் முகம் கறுத்துப் போயிற்று. தன் திறமை என்னவானது என்று எண்ணினான். தன் ஆணவப் பேச்சுக்கு விழுந்த அடியால் துவண்டு போனான்.
பின் தான் அழித்த வாக்குறுதிப்படி தீக்குளிக்க முயன்றான். 

அப்போது அந்தணர் உருவில் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் அர்ச்சுனன் தீக்குளிக்க முயலும் காரணத்தைக் கேட்டார். அப்போது நடந்த விவரங்களை அர்ச்சுனன் கூறினான். அதற்கு அந்த அந்தணர், ‘நடுவர் ஒரு வரும் இல்லாமல் எப்படி போட்டி நடத்தி வெற்றி தோல்வியை நிர்ணயிப்பீர்கள். எனவே போட்டி மீண்டும் நடைபெறட்டும். நான் நடுவராக இருந்து தீர்ப்பு கூறுகிறேன்’ என்று கூறினார்.

அதன்படி மீண்டும் போட்டி நடந்தது. அர்ச்சுனன் இப்போது கண்ணனை நினைத்தபடி மீண்டும் தனது வில்லை எடுத்து அம்பு மழை பொழியச் செய்து பாலத்தை கட்டி முடித்தான். ஆஞ்சநேயர் அதனை காலால் மிதித்தார். ஆச்சரியம் பாலம் உடையவில்லை. ஏறி நின்று குதித்தார். தனது திறமையை எல்லாம் காட்டினார். ஆனால் அந்த பாலம் அசையவில்லை. ஆஞ்சநேயர் திகைத்து போனார்.


அப்போது அந்தணர் உருவில் இருந்த கண்ணன் சுயஉருவை காட்டி இருவருக்கும் அருள்புரிந்தார். மேலும் அனுமனே நீ கூறியபடியே மகாபாரத போரில் அர்ச்சுனன் தேரில் கொடியாக இருந்து அவனுக்கு உதவியாக இரு! என்று கூறினார்.

அப்போது ஆஞ்சநேயர் தனது தவத்தை தெரிவித்ததும், அவருக்கு ராமராகவும் காட்சியளித்தார். அந்த திருக்காட்சியை கண்டு ஆஞ்சநேயரும், அர்ச்சுனனும் ஆனந்தத்தில் திளைத்தனர். 









சந்தோஷம் தரும் சந்தோஷிமாதா விரதம்!...


சந்தோஷம் தரும் சந்தோஷிமாதா விரதம்!...Related image


விநாயகர் பெரும்பாலும் பிரம்மச்சாரியாகவே அறியப்படுகிறார். ஆனால் அவருக்கும் திருமணமாகி இரு மனைவி, பிள்ளைகள் இருப்பதாக சில புராணங்கள் கூறுகின்றன. விநாயகப் பெருமானுக்கு சித்தி (ஆன்மீக சக்தி), புத்தி (அறிவு) என்ற இரு மனைவியர்களும், அவர்களுக்கு லாபம், சுபம் ஆகிய இரு மகன்கள் இருப்பதாகவும் அவை எடுத்துரைக்கின்றன. பிரம்மாவின் மகள்கள் சித்தி,புத்தி .நாரதரின் சகோதரிகள்.சித்தி தேவிக்கு சுபன் என்ற மகனும்,புத்தி தேவிக்கு லாபன் என்ற மகனும் இருந்த்தாக சொல்லப்படுகிறது.

ஒரு முறை விநாயகப்பெருமான், தனது மனைவியர் மற்றும் மகன்களுடன் பூலோகம் வந்தபோது, அங்கு ரக்ஷாபந்தன் என்னும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பெண்கள் அனைவரும் தங்கள் சகோதரர்களுக்கு கயிறு கட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனைக் கண்ட விநாயகரின் மகன்கள் இருவரும், தங்களுக்கு கயிறு கட்ட, ஒரு சகோதரி இல்லையே! என்று வருந்தினர். பின்னர் தங்களுக்கு ஒரு சகோதரி வேண்டும் என்று தந்தையான விநாயகரிடம் வேண்டினர். விநாயகர், தன்னுடைய மகன்கள் கேட்ட வரத்தை அளித்தார். அதன்படி விநாயகருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அந்தக் குழந்தை வேண்டுபவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கக் கூடியவர் என்பதால் இந்த அன்னைக்கு 'சந்தோஷி மாதா" என்று பெயர் வந்தது. அந்த பெண் குழந்தை பிறந்த நாள் வெள்ளிகிழமை. அந்த அழகான பெண் குழந்தை தன் இருகரங்களால் தன்னுடைய அண்ணன்மார்களுக்கு ராக்கி கட்டியவுடன் அழுத பிள்ளைகள் சிரித்தன. இதை கண்ட விநாயகர், 'மற்றவர்களை சந்தோஷப்படுத்திய இந்த குழந்தையின் பெயர் 'சந்தோஷி" என்று அழைக்கப்படட்டும்.!" என்றார்.

இதை கேட்ட நாரதர், 'இனி வெள்ளிகிழமை தோறும் சந்தோஷியை பூலோகவாசிகள் வணங்கினால் அவர்களின் இன்னல்கள் மின்னல் வேகத்தில் மறைய வேண்டும். அதற்கு உங்களின் ஆசி, உங்களின் மகளுக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டினார். அதற்கு எல்லாம் நடக்கும் நாரதா" என்று ஆசி வழங்கினார் கணபதி.

ஆனந்த நகரம் என்ற ஊரில் போலாநாத் என்ற பக்தர், சுனீதி என்ற சந்தோஷி மாதா பக்தையை மணந்தார். சுனீதியை கணவன் வீட்டார் கொடுமைப்படுத்தினர். அவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. யார் என்ன சொன்னாலும் விடாப்பிடியாக சந்தோஷி மாதா விரதத்தை மட்டும் அவள் விடாமல் செய்துவந்தாள். அவளது பக்திக்காக சந்தோஷி மாதா குடும்பத்தினரை திருத்தி சுனீதிக்கு அருள்செய்தாள். குடும்பம் ஒற்றுமையானது.

சந்தோஷி மாதாவிற்கு விரதம் இருக்கும் முறை :


இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் விரதத்தைத் தொடங்க வேண்டும். தொடர்ச்சியாக 11 வெள்ளிக்கிழமைகள் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் நினைத்த காரியம் நிறைவேறும். இல்லத்தில் மகிழ்ச்சி குடிகொள்ளும். 

விரதம் இருக்கும் நாளன்று, வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறைக்குள் சுத்தமான பலகை வைத்து, அதன் மேல் கோலம் போட்டு, அதற்கு மேலே கும்பம் வைக்க வேண்டும். சந்தோஷி மாதா படத்தையும், சந்தனத்தில் பிடித்து வைக்கப்பட்ட பிள்ளையாரையும் வைப்பதோடு, படத்துக்கும், கும்பத்துக்கும் மாலை போட்டு, அருகில் குத்துவிளக்கும் ஏற்றிவைக்க வேண்டும்.

நைவேத்தியமாக சந்தோஷி மாதாவுக்கு பிடித்தமான கொண்டைக்கடலை, வெல்லம் வைத்து வழிபடலாம். விரதம் இருப்பவர்கள், விரத நாள் அன்று புளிப்பு சேர்க்கக்கூடாது. தொடர்ந்து நாம் நினைத்த காரியம் நடைபெற வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டு, விநாயகருக்கும், சந்தோஷி மாதாவுக்கும் பூஜை செய்து வணங்க வேண்டும். பின்னர் கும்பத்தில் உள்ள நீரைத் தீர்த்தமாகப் பயன்படுத்த வேண்டும். நினைத்த காரியம் நிறைவேறும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த விரதத்தை தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் யாருக்கும், தட்சணை கொடுக்கக்கூடாது.

   சந்தோஷி மாதாவை வழிபட்டு குடும்பத்தில் எல்லா அருளையும் பெறுங்கள்......! 


உபவாசம் -விரதம்

உபவாசம் -விரதம் என்றால் என்ன?

எல்லா மதங்களிலும் உபவாசம் - விரதம் அல்லது உண்ணா நோன்பு சிறந்ததாகச் சொல்லப்படுகின்றது. இந்துக்கள் ஏகாதசி போன்ற குறிப்பிட்ட தினத்திலோ, வெள்ளிக்கிழமை போன்ற குறிப்பிட்ட கிழமைகளிலோ, சில விசேஷ நாட்களிலோ சாப்பிடாமல் உபவாச விரதம் இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் ரம்ஜான் சமயத்தில் உண்ணா நோன்பு இருக்கிறார்கள். அது அவர்களுக்குக் கடமையாக்கப்பட் கிறிஸ்தவர்களும் உபவாசம் இருந்து ஜெபிப்பதை விசேஷமானதாக எண்ணுகிறார்கள். எனவே உபவாசம் என்பது மதம், இனம் கடந்து அனைத்து தரப்பினரிடத்திலும் சிறப்பிடத்தைப் பெற்று இருப்பது தெளிவாகிறது. சமஸ்கிருதத்தில் 'உப' என்றால் 'அருகில்' என்று பொருள். 'வாசம்' என்றால் வசித்தல் அல்லது இருத்தல் என்று பொருள்.

ஆகவே உபவாசம் என்பதற்கு 'இறைவனுக்கு அருகில் இருத்தல்' என்று பொருள் சொல்லப்படுகின்றது. சிலர் இறையருளைப் பெறவும் தங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளவும் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உபவாசம் இருக்கிறார்கள். சிலர் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், மனவலிமையை மேம்படுத்திக் கொள்ளவும் உபவாச விரதம் இருக்கிறார்கள். நமது நேரமும், சக்தியும் உணவைத் தயாரிப்பதிலும், பெறுவதிலும், உண்பதிலும், செரிப்பதிலுமே அதிகம் செலவாகிறது. சில வகை உணவுகள் நம் மூளையை மந்தமாக்கி நம்மை சஞ்சலப்படுத்துகின்றன. எனவே தான் சில நாட்களில் நம் நேரத்தையும், சக்தியையும் அதிகம் வீணாகாமல் தவிர்க்க எளிதில் செரிக்கக் கூடிய உணவை உட்கொண்டோ அல்லது உணவை முற்றிலும் தவிர்த்தோ உண்ணாவிரதம் இருக்கின்றோம்.

இதனால் நேரமும் சக்தியும் சேமிக்கப்படுகின்றன. புத்தி கூர்மையாகிறது. மனம் தூய்மையாகி ஒருமுகப்படுகிறது. எந்த அளவிற்கு நாம் நமது ஐம்புலன்களின் விருப்பங்களுக்கு அடிமையாகி செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு அவற்றின் வேட்கையும் தூண்டுதலும் அதிகரிக்கும். உண்ணா நோன்பு இருக்கையில் புலன்கள் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. உண்மையில், உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மையடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதியும் சுட்டிக் காட்டுகிறான்.


'லங்கணம் பரம் ஒளஷதம்' என்று நம் முன்னோர்களும் சொல்லி இருக்கிறார்கள். அதன் பொருள் 'உபவாசம் இருப்பது உடலுக்கு மிகப்பெரிய மருந்து' என்பது தான். இப்படி ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பயனளிக்கும் உபவாச விரதத்தை நாமும் இருந்து இருவகையிலும் பயனடையலாமே !உபவாசம் செய்வதன் நோக்கம் உடல், மனம் இரண்டையும் சுத்தப்படுத்துவது.பட்டினி கூடாது. பழச்சாறு, மோர், பானகம், எலுமிச்சைச்சாறு, இளநீர் போன்ற நீர்ச்சத்து பானங்களை போதுமான இடைவேளைகளில் அருந்தலாம்.

சிவன் தலையில் இருக்கும் கங்கை யார்?

சிவன் தலையில் இருக்கும் கங்கை யார்?

சிவனுக்கு இரு மனைவி என்று யாவரும் கூறுவர்.சிவனுக்கு பார்வதி தேவி மட்டுமே மனைவி.அப்படியானால் கங்கா தேவியை சிவபெருமான் தலையில் ஏன் வைத்திருக்கிறார் என நமக்கெல்லாம் கேள்வி எழும்.அதைப்பற்றித்தான் இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம் .

அன்றைய காலத்தில் கங்கையானது பூமியில் ஓடாது, ஆகாய கங்கையாக ஓடி கொண்டி ருந்தது. அப்போது பகீரதன் என்ற அரசன் தன் மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக அதன் வழி தேடி முனிவர்களை 
 எல்லாம் ஒரு உபாதை கூறும்படி கேட்டான். முக்காலம் அறிந்த முனிவர் ஒருவர், ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்து அவர்களின் அஸ்தியை அதனில் கரைத்தால் அவர்கள் முக்தி அடைவார்கள் என்று கூறினார். ஆகையால், பகீரதன் கங்கையை பூமிக்கு அழைக்க கங்கா மாதாவை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.
பகீரதனின் கடுந்தவத்தை மெச்சி கங்கா மாதா அரசன் முன் எழுந்தருளினாள். “வேண்டும் வரம் கேள் பகீரதா” என்றாள்.
“தாயே, நீ அறியாதது எதுவும் இல்லை. என் மூதாதையரின் ஆத்மா சாந்தி அடைய அவர்களின் அஸ்தியை நான் கங்கையில் கரைக்க வேண்டும் என்பது விதி. ஆகாய கங்கையாய் ஓடும் நீ இப்புவியிலும் பெருக்கெடுத்து ஓட வேண்டும். என்னோடு இனி வரும் சந்ததியினரையும் உய்விக்க வேண்டும்.”
”வரம் தந்தேன் பகீரதா, ஆனால் ஒரு நிபந்தனை. நான் என்னுடைய வேகத்தில் இந்த பூமியை நோக்கி வந்தேன் என்றால் இந்த பூமி என் வேகம் தாங்காது வெடித்து சிதறிவிடும். ஆகவே, என் வலிமையை தாங்க கூடிய ஒருவர்
என்னை அவர் தலையில் தாங்கி இந்த பூமிக்கு தருவிக்க வேண்டும். நீ தென்னாடுடைய சிவனை நோக்கி தவம் செய். பரமனால் மட்டும் தான்என் வலிமையை தாங்க முடியும்” என்று கூறி மறைந்தாள்.


பகீரதனும் சிவனை நோக்கி தவம் செய்து தான் எண்ணத்தை வேண்டி நின்றான். சிவ பெருமானும் தன் சடாமுடியை விரித்து அதில் கங்கையை இறங்க சொன்னார். 

சிவனின் திருமுடியை அடைந்த கங்கா, வேகம் குறைந்து திருமுடியில் இருந்து பூமிக்கு இறங்கினாள். ஆகவே தான், சிவனின் திருமுடியில் கங்கா குடியிருக்கிறாள்.
இந்த சம்பவத்தை முன்னிட்டு கங்கைக்கு பகீரதை என்ற பெயரும் வழங்குவதுண்டு. இனியாவது சிவனுக்கு ஒரே மனைவி என்று உரைப்போம்.

செவ்வாய், 27 டிசம்பர், 2016

அனுமனின் அவதாரக் கதை

அனுமனின் அவதாரக் கதை


புகழ்பெற்ற இதிகாசங்களுள் ஒன்று, ராமாயணம். அந்த மகாகாவியத்தை அறிந்த பலருக்கும் ராம பக்தியில் மூழ்கித் திளைத்த அனுமன் இஷ்ட தெய்வமாக விளங்குகிறார். காற்றின் மைந்தன் என்றும் அஞ்சனையின் புத்திரன் என்றும் போற்றப்படும் இவரின் பிறப்பு, பால லீலைகள் என எல்லாமே நாம் அறிந்ததுதான். அனுமனை சிவனின் ருத்ர அவதாரம் என்பர். அதன் பின்னணியில் ஒரு சுவையான கதை உள்ளது.


அவதாரக் கதை : ஒரு நாள் கயிலையில் பரமேஸ்வரர் ராம நாமத்தை ஜபித்தபடி இருந்தார். அதைக் கேட்ட பார்வதி, தங்களுடைய நாமத்தை விட சிறப்பு வாய்ந்ததா இந்த நாமம்? என்று கேட்டார். அதற்கு சிவன், உமா! இனி வரப்போகும் காலத்தில் உலகம் தர்ம வழிப்படி நடக்கவும், ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைக் காட்டவும் உன் அண்ணனாகிய மகாவிஷ்ணு ராமன் என்ற பெயரில் பூமியில் தசரதச் சக்கரவர்த்தியின் மகனாகப் பிறந்து, செயற்கரிய செயல்கள் செய்யப் போகிறார். அந்த அவதாரத்தில் ராம என்ற பெயர் மிகவும் புகழ் பெறும். அது மட்டுமல்லாமல் நானே என்னுடைய பதினோராவது ருத்ர ரூபத்தை ராமரின் உதவிக்காக பூமியில் பிறக்கச் செய்யப்போகிறேன் என்றார். 


அதைக் கேட்ட சக்திக்கு அந்த அவதாரத்தின் போது தானும் உடனிருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஈசனிடம் அதைச் சொல்ல, அவரும் சம்மதித்தார். அந்த அவதாரம் எப்படி இருக்க வேண்டும் என விவாதித்தனர் அம்மையும் அப்பனும். மனித வடிவு எடுப்பது இயலாது. ஏனெனில் ராமனுக்கு தாசனாக, பணியாளனாக இருக்க வேண்டும். எப்போதுமே எஜமானனை விட பணியாளன் ஒரு படி குறைந்தவனாகவே இருப்பது நல்லது என்பது ஆன்றோர் வாக்கு. அது மட்டுமல்ல, முன்னொரு காலத்தில் ராவணன் நந்தியை மதிக்காமல் குரங்கு முகம் என பழித்தான். அதனால் நந்தி ஒரு குரங்கால் உன் ராஜ்ஜியம் முழுவதும் அழியும் என்று சாபம் கொடுத்தார். அந்த சாபம் பலிக்கவும், ராமனுக்கு தாசனாக இருக்கவும் தோதாக வானர ரூபம் எடுக்க முடிவானது. உலகன்னை வானரத்தின் வாலாக நான் இருப்பேன் என வேண்ட, எம்பெருமான் அதற்கு ஒப்புக் கொண்டார். அதனால்தான் அனுமனின் வால் சக்தி மிகுந்ததாகவும், அழகானதாகவும் விளங்குகிறது. 

அனுமன் பிறப்பு 

தசரதச் சக்கரவர்த்தி புத்ர காமேஷ்டி யாகம் செய்ததும், அதன் பிரசாதமான பாயசத்தை ஈசன் அருளால் ஒரு கருடன் கொத்திக் கொண்டு போய் காற்று அதை மிகச் சரியாக அஞ்சனையில் கையில் சேர்க்க கேசரி, அஞ்சனை தம்பதியினருக்கு மார்கழி மாத மூல நட்சத்திரத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு சுந்தரன் என்று பெயரிட்டு வளர்த்தாள் தாய். ஒரு நாள் பசிக்கிறது என்று வானத்தில் அப்போது தான் உதிக்கும் சூரியனை பழம் என நினைத்து அதைச் சாப்பிட வானில் தாவினார் மாருதி. அவரைத் தடுத்த இந்திரன் தன் ஆயுதத்தால் மிக மெதுவாக அவரது தாடையில் அடிக்க, அது நீண்டு உருமாறியது. அன்று முதல் சுந்தரனுக்கு அனுமன் என்ற பெயர் ஏற்பட்டது. (அனுமன் என்றால் வளைந்த தாடையை உடையவன் என்று பொருள்)


மிக மிக குறும்புக்காரராக இருந்தார் பால அனுமன். முனிவர்களின் யாகத்தைக் கலைப்பதும், மரத்தின் மீது ஏறிக் கொண்டு அவர்கள் மீது கல்லை வீசுவதும் என அவரது தொல்லை சகிக்க முடியாமல் போனது. அந்த வனத்தில் இருந்த முனிவர்களுக்கு மாருதியின் அவதார நோக்கம் தெரியும் என்பதால் சிறு சாபம் ஒன்று கொடுத்தனர். அதன்படி பவன குமாரருக்கு தனது பலம் என்ன என்பது தெரியாமல் மறந்து போனது. 

மாருதியின் கல்விக்கான நேரம் வந்த போது, சூரியனே கல்வியில் மிகச் சிறந்தவர் என்று எல்லாரும் சொல்லக் கேட்டு, அவரையே தனது குருவாக வரித்தார் அனுமன். சூரியனின் சுழற்சி வேகத்துக்கு ஈடு கொடுத்து நடந்தபடியே நால்வகை வேதங்கள், தர்மசாஸ்திரங்கள், புராணங்கள் என எல்லாம் கற்றுத் தேர்ந்தார். அதோடு மட்டுமல்லாமல் வியாகர்ணம் எனப்படும் சமஸ்கிருத இலக்கணத்தை மிக நன்றாகக் கற்று பண்டிதர் எனப் பெயர் பெற்றார். 
கல்விக்காலம் முடிந்ததும் தனது அவதார நோக்கத்தை அறிந்து கொண்டார் அவர். ராமபிரான் வரும் வரையில் காத்திருப்பதுதான் தன் கடமை என உணர்ந்து கொண்டார். அந்த நேரத்தில் சுக்ரீவன் மனைவியையும், நாட்டையும் இழந்து காட்டில் சுற்றிக் கொண்டிருந்தான். அவனது அமைச்சனாக, வழிகாட்டியாக பணியில் அமர்ந்தார் அனுமன். ராமபிரானை முதல் முதலில் கண்டு, தான் இன்னார் என்று வெளிப்படுத்திக் கொண்டு ராமனுக்கு அளப்பரிய பணிகள் அனுமன் செய்தது நாம் அறிந்தது. ஜாம்பவான் மாருதியின் பலத்தை நினைவுபடுத்த அதன் பிறகு அவர் கடலைத் தாண்டியதும், சீதையை கண்டதும், இலங்கையை தீக்கிரையாக்கியதும் நாடறிந்த ஒன்று.