ஞாயிறு, 27 டிசம்பர், 2020

 

ஆனை முகனின் அழகிய நாமங்கள்


‘‘விநாயகன்’’ என்பதன் பொருள் தனக்குமேலே வேறொரு தலைவன் இல்லாதவன் என்பதாகும். ‘‘வி’’ என்றால் சிறப்பு என்ற பொருளைச் சுட்டுகின்றது. ‘‘நாயகன்’’ என்பதன் பொருள் தன்னிகரில்லாத் தனிப்பெருந்தலைவன் என்பதாகும். விநாயகப் பெருமான், மூலாதாரத்திற்குரியவர். முழுமுதலாக விளங்குபவர்.

 ‘‘கணபதி’’ என்பதில், ‘க’ என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும் ‘‘ண’’ என்பது மோட்சம் பெறுதலையும் ‘‘பதி’’ என்பது ஞான நெறியில் திகழ்ந்து பரம்பொருளை அடைதலையும் குறிப்பதாகும். கணங்களின் தலைவன் என்பதால் கணபதி.

 ‘‘கஜானன்’’ கஜா என்றால் யானை என்று பொருள். யானை முகம் கொண்டவன் என்பதால் கஜானன். அடியார்களின் துன்பங்களை நீக்கிக் கருணை புரிபவர்; ஞானத்தை வழங்குபவர்.

 ‘‘ஏகதந்தர்’’ என்றால் ஒற்றைக்கொம்பர் என்பதாகும். விநாயகர் தம்முடைய ஒரு கொம்பை  தந்தத்தை ஒடித்து, அதனைக் கொண்டு கயமுகாசுரனைக் கொன்றார். ஒரு தந்தத்தோடு இருப்பதால் ஏகதந்தர். மேலும் பரமேஸ்வரனால் வழங்கப்பட்ட பரசு ஆயுதத்தால் பூவுலகில் தனது லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டார் பரசுராமர். இதன் பொருட்டு சிவனாருக்கு நன்றி சொல்ல திருக்கயிலாயம் வந்தார். வாயிலில் அவரைத் தடுத்து நிறுத்தினார் பிள்ளையார். அவரை பொருட்படுத்தாமல் உள்ளே நுழைய முயன்றார் பரசுராமர். 






இதனால் இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. அதன் உச்சகட்டமாக... விநாயகரை நோக்கி பரசு ஆயுதத்தை வீசினார் பரசுராமன். அந்த ஆயுதத்தால் தன்னை எதுவும் செய்துவிட முடியாது என்பது பிள்ளையாருக்குத் தெரியும். ஆனால், தந்தை அளித்த அந்த ஆயுதத்துக்கு இழிவு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கருதினார் பிள்ளையார்; தமது இடது தந்தத்தால் அந்த ஆயுதத்தை எதிர்கொண்டார். தந்தம் முறிந்தது. இதன் மூலம் ஏக தந்தர் எனும் திருநாமத்தை ஏற்றார்.

 ‘‘விகடர்’’ வேடிக்கைகள் செய்வதில் வல்லவர். அதனால் உண்டான பெயர். ‘‘விக்கினேஸ்வரன்’’ விக்கினராஜன், விக்கினங்கள் நீக்குபவர். அதேவேளை, தம்மை வந்து அணுகாதவர்களுக்கு விக்கினங்களை, இடையூறுகளை வருவிப்பவர். விக்கினங்களை உண்டாக்கவும், போக்கவும் வல்லவர். 
அதனால், விக்கினேஸ்வரன் என்ற திருப்பெயர், விநாயகருக்கு வழங்கப்பட்டது.

 ‘‘சிந்தாமணிவிநாயகர்’’ கபிலமுனிவருக்குச் சொந்தமான சிந்தாமணியை கணராஜன் என்பவன் கவர்ந்து சென்றான். விநாயகர் அவனை வென்று சிந்தாமணியை மீட்டு அருளியமையினால் இப்பெயர் வழங்கப்பட்டது.

 ‘‘வக்கிரதுண்டர்’’ பிரளயகால இறுதியில் தோன்றி பிரம்மா, மகாவிஷ்ணு, சிவபெருமான் முதலான மூவர்க்கும் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை ஆற்றும்படி அருளுபவர்.

 ‘‘பாலச்சந்திரவிநாயகர்’’ அக்கினியைக் கிளப்பி, அச்சுறுத்திய அனலாசுரனை விநாயகர் குழந்தை வடிவில் சென்று விழுங்கியருளியமையினால் பாலச்சந்திரவிநாயகர் பெயர் அவருக்கு வந்தது.

 ‘‘மகோற்கடவிநாயகர்’’ காசி ராஜனைக் காப்பாற்றுவதற்காக நராந்தகன், தேவாந்தவன் ஆகிய அசுரர்களை, அழித்தொழித்தமையால் இப்பெயர் வரக்காரணமாயிற்று.

 ‘‘வல்லபை விநாயகர்’’ விநாயகரிடத்தில் வரம்பெற்ற பெலி என்னும் அசுரன் திரிலோகங்
களிலும் சஞ்சரிக்கின்ற தேவர்களுக்கு துன்பம் செய்து, அல்லற்படுத்தியபோது தேவர்களின் வேண்டுதலுக்கிணங்க பஞ்சமுக விநாயகராக அவதரித்து அவ்வசுரனைச் சம்காரம் செய்த திருவடிவம் வல்லபை விநாயகர்.

 ‘‘துண்டி விநாயகர்’’ துராசதன் என்னும் கொடியவனை வதம் செய்து, திவோதாசன் என்பவனுக்கு அருள்புரிந்த வடிவம் துண்டி விநாயகர்.

 ‘‘தூமகேதுவிநாயகர்’’ மாதவராசன், அவனின் மனைவி சுமுதை ஆகியோருக்கு கொடுமை இழைத்து வந்த தூமராசன் என்பவனை அழித்து, அருள்புரிந்த வடிவம் தூமகேதுவிநாயகர்.

 ‘‘கயமுகாசுர சம்காரமூர்த்தி’’  தேவர்களை துன்புறுத்திய கயமுகாசுரனை விநாயகப் பெருமான், தம்முடைய திருக்கோட்டிலொன்றைத் திருக்கரத்தால் முரித்துக் கயமுகாசுரன்மீது விட்டார். அது அவனுடைய மார்பைப் பிளந்து விரைந்து சென்று, சுத்தோதக சமுத்திரத்தில் மூழ்கி, அவருடைய திருக்கரத்தில் வந்து வீற்றிருந்தது. கயமுகன் ஆரவாரித்துத் தேர்மேல் வீழ்ந்து மயங்கினான், அவனுடைய மார்பினின்றும் நதி போலப் பெருகிய ரத்தவெள்ளம் பக்கத்திலுள்ள ஒரு காட்டிற் புகுந்தமையால் அவ்விடம் திருச்செங்காடு என்னும் பெயர்பெற்றது.

மார்பு பிளந்த நிலையிலும் கயமுகாசுரன், பழைய உருவத்தை விட்டு ஒரு பெருச்சாளி வடிவங்கொண்டு, விநாயகக் கடவுளைத் தாக்கும்படி வந்தான். வந்தவன் மனம் மாறி, விநாயகரிடம் தங்களை சுமக்கும் பாக்கியம் எமக்கு தந்தருள வேண்டும் என்று பணிந்தான். விநாயகர் ஏற்றுக்கொண்டார். கயமுகாசுரனை சம்காரம் செய்தமையால் கயமுகாசுர சம்காரமூர்த்தி என்று அழைக்கப்பட்டார்.

 ‘‘அநந்தசாப நிவாரண மூர்த்தி’’ ஆதிபராசக்தி, சிவபெருமானுடன் பகடை ஆடுகிறாள். அப்போது மகா விஷ்ணு நடுவராக இருக்கிறார். இதில் சிவபெருமான் வெற்றி பெற்றுவிடுகிறார். சூது செய்து தன்னை வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்று சிவபெருமானிடம் சினம் கொள்கிறாள் சிவசக்தி. அதோடு நின்று விடாமல் சிவபெருமானின் இந்த வெற்றிக்கு துணை போனதால் அண்ணன் என்றும் பாராமல் மகாவிஷ்ணுவை பாம்பாக போவக்கடவாய் என்று பார்வதி தேவி சபித்தாள். 

இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவது எப்படி என்று சிவனிடம் கேட்டார் விஷ்ணு. அதற்கு சிவபெருமான், தென்திசையில் ஆலவனமென்று ஒரு இடமிருக்கின்றது. அதில் மிகப்பெரிய ஒரு ஆலமரமுள்ளது. நீ அங்கே போய் அம்மரத்தடியிலுள்ள பொந்தொன்றில் இச்சாபம் நீங்கும்படி பெரும்தவம் செய்துகொண்டிரு. அங்கே நம்முடைய குமாரனாகிய விநாயகன் அங்கே வருவான். நீ அவனை எதிர்கொண்டு தரிசிக்கும்பொழுது, உன்னுடைய இப்பாம்பு வடிவம் நீங்கும் என்று சொல்லி அருளினார்.

அதன்படி மகாவிஷ்ணு பாம்பு உருவத்துடன் ஆலவனத்திற்குப்போய் அங்குள்ள அரசமரத்தடி பொந்தில் தவம் செய்தார்.
விநாயகப்பெருமான் அவ்விடம் வருவதை அறிந்து மகாவிஷ்ணு எதிர்ச்சென்று அவரை பூஜித்து வணங்கினார். பாம்பு உருங்கொண்டிருந்த சாபத்திலிருந்து விமோசனம் பெற்றார். அநந்த என்றால் பாம்பு என்று பொருள். மகாவிஷ்ணுவின் பாம்பு(அநந்த)சாபத்திலிருந்து விமோசனம் அளித்ததால் விநாயகருக்கு அநந்த சாப நிவாரணமூர்த்தி என்ற பெயரும் வந்தது.

 ‘‘வரம் பெறு மூர்த்தி’’ காஞ்சிபுரத்திலுள்ள அநேகதங்காவதம் என்னும் தலத்திலே விநாயகமூர்த்தி அநேகபேச்சுரர் என்னும் திருநாமத்தோடு சிவலிங்கத்தை வைத்து பூஜித்தார். சிவபெருமான் உமாதேவி சமேதராய் தோன்றினார். விநாயகக்கடவுள் அவர்களை வணங்கி நின்றார். உடனே சிவபெருமான், விநாயகரை தமது வலது தொடையின்மேலிருத்தி அவரை நோக்கி, எவராயினும், எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் முன்பு அந்தச் செயல் எந்த இடையூறுமின்றி முடிவுற வேண்டுமென்று உன்னை வழிபடுவாராயின் அச்செயல் உனது அருளால் வெற்றியாய் முடியும்.

தேவர்களுக்கும், நம்முடைய பூதாகணங்களுக்கும் அவர்கள் வரம் பெற துணை நிற்கும் நாயகனாக இருப்பாய் என்று அருளினார் சிவ
பெருமான். அதன் பொருட்டே யாவரும் பல்வேறு வரம் வேண்டி தவம் செய்வாராயின் அவர்கள் முதலில் தங்களது தவம் வலிமை பெறவும், அத்தவம் எந்த இடையூறுமின்றி முழுமைபெறவும் விநாயகப்பெருமானின் அருள் வேண்டி முதலில் பூஜிக்கின்றனர். இதன் காரணமாகவே விநாயகப் பெருமானுக்கு வரம்பெறு மூர்த்தி என்ற நாமம் உருவாகிற்று.

 ‘‘அச்சறுத்தருண் மூர்த்தி’’ திரிபுர சங்காரத்தின் பொருட்டுத் தேவர்களால் அமைக்கப்பட்ட பூமியாகிய தேரின்மீது சிவபெருமான் அமர்ந்து, பிரம்மாவிடம் தேரை ஓட்டுங்கள் என்றார். பிரம்மா நான் மறைப் புரவியைச் செலுத்தினார். ரதம் நகரவே இல்லை. பிரம்மா சாட்டையினால் குதிரைகளை அடித்தார். குதிரைகள் தங்களால் ஆன மட்டும் பாய்ந்து செல்ல முயன்றும் தேரானது நின்ற நிலையினின்றும் கொஞ்சம் கூட அசையவில்லை. தேவர்கள் யாவரும் அதனைக்கண்டு ஆதிசிவனின் ரதமே அசையாது நிற்கும்படி தடை ஏது வந்தது.

எதனால் இது நிகழ்ந்தது என யோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது தான் தெரிந்தது. யானை முகத்தான் கணேசப் பெருமானின் செயல் என்று. உடனே தேவர்கள், பிரம்மாவோடு சேர்ந்து விநாயகப் பெருமானைப் பூஜித்தார்கள். மறுகனமே மூஷிக வாகனத்தில் கணநாதன் எழுந்தருளினார்.
தேரானது நிலை பிரியாது நின்ற இடம் திருஅச்சிறுப்பாக்கம் என்று சொல்லப்படும். இறுதல் - முறிதல், பாக்கம் - ஊர்.

ரதத்தின் அச்சு செயல்படாமல் தடுத்து மீண்டும் அதை செயல்பட வைத்ததாலே கணநாதனுக்கு அச்சறுத்தருண் மூர்த்தி என்ற நாமமும் உண்டு.
 ‘‘விக்கினேசுவரமூர்த்தி’’ தேவர்கள் தேவாமிர்தம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்த பொழுது விநாயகரை வணங்கவில்லை. இதனால் மத்துவாக இருந்த மந்தரமாகிய மலை பாதாள உலகத்துக்கு போய்விட்டது.

பின்னர் திருமாலின் உதவியுடன் மந்தரமலையை பெற்ற தேவர்கள்,  விநாயகரை வணங்கிவிட்டு திருப்பாற்கடலை கடையும் பணியை மேற்கொண்டனர். அதன் விளைவாக அவர்கள் வெற்றிபெற்றனர்.தம்மை நினைக்காதவர்களுக்கு விக்கினங்களை உண்டு பண்ணுதலானும், தம்மை நினைத்தவர்களுக்கு விக்கினங்களைப் போக்குவதாலும் விநாயகப் பெருமானுக்கு விக்கினேசுவர மூர்த்தி என்ற 
நாமமும் உருவானது



 ‘‘பிரணவமூர்த்தி’’ வேதமானது சிவபெருமானை முதல் இடை கடைகளிற் பிரகாசப்படுத்துகின்றது. முதலில் ஓம் என்று தொடங்குகின்றது. அது பிரணவம் என்று சொல்லப்படும். இதன் வடிவமே விநாயகர். வேதத்தின் முதலெழுத்து விநாயகருடைய சொரூப மாதலை அவரது திருமுக முணர்த்தும். அதனையே “கைவேழமுக”மென்று கூறுவர். 

அது “முந்தைவேத முதலெழுத்தாகிய எந்தை” எனவும்,பிரணவமூர்த்தி “மூலமொழிப்பொருளாமெந்தை” எனவும், “தாரகப் பிரமமான மாக்கயமுகத்து வள்ளல்” எனவுங் கந்த புராணங் கூறுமாற்றானும் உணர்க. பிரவணத்தின் வரிவடிவை முதற்கண் அறிவது மரபாம். முதலாம் இரண்டாம் உறுப்புகள் நட்சத்திரவடிவு தண்டவடிவுகளாக அமையப் பெற்றது. பிரணவம் என்று காமிகாகமம் கூறுகின்றது. 

ஆகையால் அவ்விரண்டு உறுப்புங் கலந்த பிள்ளையார்சுழி என்றும், மௌனாக்கரம் என்றும், மௌனக்குறி என்றுஞ் சொல்லப்படும். ‘உ’ என்று எழுத்து நாதவிந்துகளின் வரிவடிவாம். இது ஓங்காரவாச்சியராகிய விநாயகரது துதிக்கை போலாம். இதுபற்றியே கணபதியினை முதலில் வழிபடும் மரபை உலகங் கைக்கொண்டு அனுஷ்டித்து வருகின்றது.

 ‘‘புராண பரிபாலனமூர்த்தி’’ வாதராயணர் என்னும் பெயர்பெற்ற வியாச முனிவர் சிவபெருமானுடைய அனுமதிப்படி சனற்குமார முனிவரிடத்தில் மாணக்கராக இருந்து பதினெண்புராணங்களையும் கூறினார். பின்பு, யாவருந்தம்மை நினைத்துத் தொடங்கிச் செய்கின்ற கருமங்களை விக்கினமின்றி நிறைவேற்றுந் தெய்வமாகிய விநாயகமூர்த்தியை வழிபடாது அப்புராண சரித்திரங்களைச் சுலோக ரூபமாகச் சொல்லத் தொடங்கினார். அவர் விக்கினேசுவரருடைய அருளைப் பெற்றுத் தொடங்காமையால் உண்மை ஞானத்தைப் பெறாமல் ஊமரைப்போல வருந்தி மயங்கிப் பிரம்மதேவரிடம் போய்த் தமது குறையை விண்ணப்பித்தார். 

பிரம்மா வியாசரை நோக்கி, “முனிவனே! நீ வேதத்தை நான்காகப் பகுத்தபோது முதலில் பிரணவத்தை உச்சரியாதபடி வேதம் ஓதுதல் முறையல்ல என்பதை உணர்ந்து முதலிற் பிரணவத்தைச் சொன்னாய்; பிரணவப் பொருளாயிருக்கும் விநாயகர் தம்மைப் பிரணவத்தினாற் தோத்திரஞ் செய்யத் திருவுள்ளம் உவந்து இடையூறு சேராவண்ணங் காத்தருளினார். இப்பொழுது வித்தியா கருவத்தினால் விக்கினங்களை நீக்குங் கடவுளை மனம் வாக்குக் காயங்களினால் வழிபாடு செய்யாமல் புராணஞ் சொல்லத் தொடங்கினமையால் இத்துன்பம் வந்து சேர்ந்தது, விநாயகக் கடவுளைப் பூசைசெய்யின் அவர் உண்மை ஞானத்தைத் தந்து, எடுத்த கருமத்தை நிறைவேற்றுவார்” என்று உபதேசித்தார்.

வியாச முனிவர் பிரம்மாவை வணங்கி விடை பெற்றுக்கொண்டு, ஒரு வனத்திற்சென்று கணபதியைத் தியானித்துப் பன்னிரண்டு வருடம் தவம் செய்தார். விநாயகர் அருள்கூர்ந்து காட்சி கொடுத்தருளினார். முனிவர் அன்புடன் நமஸ்காரஞ் செய்து, கண்களினின்றும் ஆனந்த அருவி சொரிய, சரீரம் பளகங்கொள்ள, அகமுருகிச் “சச்சிதானந்த சொரூபரே! அடியேனது மலபாசத்தை நீக்கி, நீங்காத மெய்யன்பை தருதல் வேண்டும். பதினெண் புராணங்களையும் இடையூறின்றி நிறைவேற்றவும் அருள் செய்யவேண்டும்” என்று பிரார்த்தித்தார். 

விநாயகர், “அவ்விதமே ஆகுக” என்று அருட்செய்து, மறைந்தருளினார். வியாசமுனிவர் தமக்குக் கணேசப்பெருமான் காட்சி கொடுத்தருளிய இடத்தில் ஒரு ஆலயமும் உண்டாக்கி, விநாயகரைப் பிரதிஷ்டைசெய்து, பதினெண் புராணங்களையும் இடையூறின்றி நிறைவேற்றினார்.

 ‘‘பிரம்மசாரியமூர்த்தி’’ மென்கண்டதேவர் திருவெண்ணெய்நல்லூர் சிவாலயத்தில் சுயம்பு மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் பொல்லாப்பிள்ளையாருடைய திருச்சந்நதியிலே வேத சிவாகமப் பொருளை உணர்ந்தும், சிவஞானபோதத்தைத் தெளிந்து நீட்டை கூடியும் வருங்காலத்து, அப்பொல்லாப்பிள்ளையார் மெய்கண்ட தேவருக்குச் சூர்ணிகையைச் செவியறிவுறுத்தினர்.

சூர்ணிகையும் மெய்கண்டதேவர் சிவஞானபோதத்திற்கு அருளிய வார்த்திகமும் பொருளால் ஒற்றுமையுடையனவாம். சூர்ணிகை என்பது சூத்திர முதலியவற்றின் பொருளை இலகுவாகச் சுருங்கிய வசனரூபமாயுரைப்பது எனப் பொருள்படும். வார்த்திகம் என்பது மொழிப்புரை எனப்பொருள்படும்.பொள்ளார் பொல்லார் என மருவிற்று. உளி முதலியவற்றால் போழ்ந்து செய்யப்படாதவர் என்பது கருத்து, எனவே, சுயம்பு மூர்த்தி என்றதாம். என நிரம்பவழகிய தேசிகராற் கூறப்பட்டவாற்றானு முணர்க.

 ‘‘திருமுறை கண்டமூர்த்தி’’ திருவாரூரை தலைநகராகக் கொண்டு அரசாட்சி செய்து வந்த குலசேகர ராஜராஜ மன்னர், தமது சபையில் வரும் அன்பர்கள் மூலம் தேவாரத்துள் ஓரோர் பதிகங்களை ஓதக் கேட்டு, கையிரண்டும் உச்சிமேலேற, கண்ணீர் கரைந்தோட, சிவபெருமானை துதித்து வந்தார்.

அங்ஙனம் இருக்கையில் ஒரு நாள் காலை, திருநாரையூரிலே ஓர் ஆதிசைவப் பிராமணருக்கு ஒரு ஆண் மகன் தோன்றினான். அவன் தான் நம்பியாண்டார் நம்பி. உபநயனஞ் செய்யப்பெற்று, வேதம் முதலிய கலைகளைப் பயின்றுவரும் நாளில், பிதாவாயினார் ஓரூர்க்குச் செல்ல, அவர் கட்டளைப்படி (சுயம்புமூர்த்தி) பொல்லாப்பிள்ளையாருக்குத் திருமஞ்சனம் முதலியன எல்லாம்செய்து, நிவேதனத்தை அவர் திருமுன்னிலையில் வைத்து, “எம்பெருமானே! அதனைத் திருவமுது செய்யவேண்டும்” என்று பிரார்த்தித்தார். பிள்ளையார் திருஅமுது செய்யாதிருப்பது கண்டு, அப்புத்திரர் வெம்பி, அடியேன் ஏதேனுந் தவறு செய்ததுண்டோ? அடியேன் நிவேதித்ததை உண்ணாதது என்ன?” என்று தமது தலையினை கல்லில் மோதலானார். அப்பொழுது பிள்ளையார் “நம்பீ! பொறு” என்று தடுத்து அவ்வமுது முழுவதையும் உவந்து திருவமுது செய்தருளினார்.

நம்பியாண்டார் நம்பி “எந்தையே! அடியேன் இனிப் பாடசாலைக்குச் சென்றால் உபாத்தியாயர் அடிப்பார். ஆதலாலே வேதமுதலிய கலைகளைத் நீரே ஓதித் தரவேண்டும்” என்று கூறினார். பரமாச்சாரியராகிய விநாயகரும் ஓதுவிக்க, நம்பியாண்டார் நம்பி ஓதி மகிழ்ந்தார், அதுபோல மற்றை நாளும் நிகழ, நம்பியாண்டார் நம்பி வீற்றிருந்திடுஞ் செய்தியை வேந்தர் கேட்டு, திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையாருக்கு 
நம்பியாண்டார் நம்பி நிவேதிக்கும்படி வாழைப்பழம், தேன், அவல், எள்ளுருண்டை முதலியவற்றோடு அந்நகரில் வந்து சேர்ந்தார்.

அங்ஙனம் வந்தவர் நம்பியினுடைய பாதங்களை வணங்கி, “இவற்றைப் பொல்லாப்பிள்ளையாருக்கு இப்பொழுதே நிவேதிக்க” என்று சொன்னார், நம்பி, அரசர் கூறியவற்றைக் கேட்டு யானைமுகக் கடவுளுடைய திருவடிகளை வணங்கி, “அரசன் தொகுத்த இப்பொருள்களை நிவேதித்தருளுக” என்று படைத்தனர். விநாயகர் துதிக்கையினால் ஏற்றுத் திருவமுது செய்தருளினார். நம்பியாண்டார்நம்பிக்கு அருள்புரிந்து தில்லைச் சிதம்பரத்திலிருந்த தேவாரத் திருமுறைகளை உலகத்தவர் உய்யும் வண்ணம், வெளியுலகிற்குக் கொண்டுவர அருள்பாலித்தவர் விநாயகப் பெருமான். அதனால் திருமுறைகண்டமூர்த்தி என அழைக்கப்படுகிறார்.

 ‘‘சூர்ப்பகர்ணர்’’ விநாயகரிடம் ஒருமுறை, அக்னி பகவானும் சாபம் பெற்றார். அக்னியைக் காப்பாற்ற தனது காதுகளையே முறங்களாக்கி விசிறி, அக்னியின் வெப்பம் தணியாமல் இருக்க அருள் செய்தார் விக்னேஸ்வரர். இதனால் சூர்ப்பகர்ணர் என்று பெயர்கொண்டார்.

 ஐங்கரன்: மகாகணபதி, சித்தகணபதி, சக்திகணபதி, மோட்சகணபதி, வித்தியாகணபதி என இவ்வைந்து முகங்களோடு கூடி கணபதிப் பெருமானைப், ‘‘பஞ்சமுக விநாயகர்’’ என்று அழைக்கின்றனர். விநாயகப்பெருமான் ஐந்துமுகங்களோடும், ஐந்துகரகங்களோடும் காணப்
படுவதால் சக்தி தெய்வமாகவே விளங்குகிறார்.

ஐந்து என்ற எண்ணில், சில சிறப்புக்கள் உண்டு. பஞ்சாட்சரம், பஞ்சமூர்த்திகள், பஞ்சபூதங்கள், பஞ்சகவ்வியம், பஞ்சாமிர்தம், பஞ்சப்புலன்கள், பஞ்சகோசம், பஞ்செழுத்து மந்திரம், பஞ்சகிருத்தியங்கள், பஞ்சதளம், பஞ்சப்பிரமாணங்கள், இப்படியாக ஐந்தின் மகிமையோடு விளங்குபவர், பஞ்சமுக விநாயகர். ‘‘வித்யா கணபதி’’ வடிவம்; ஐந்தின் மகிமையோடு விளங்குகின்றது. சக்தியின் வாகனமான சிங்கத்தின் மீது, ஐந்து முகங்களோடு காட்சி தருபவர் அருள்புரிபவர், சக்தி விநாயகர். விநாயகப்பெருமான் ஐந்து கரங்களுடன் ஐங்கரன் ஆக விளங்குகிறார்.

எந்தெந்த மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகப்பெருமானை வழிபடும் அடியவர்களுக்கு என்னென்ன பலன் கிட்டும் என்பவற்றைப் பற்றிய அருட்தகவல் கீழே தரப்பட்டுள்ளன :

வன்னிமரப்பிள்ளையார் : அவிட்ட நட்சத்திரத் தினத்தில், வன்னி விநாயகரை நெற்பொரியினால், அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் கைகூடும்.

புன்னைமரப்பிள்ளையார் : ஆயில்ய நட்சத்திரத் தினத்தில், விநாயகருக்கு இளநீர் அபிஷேகம் செய்து, வஸ்திரங்கள் அணிவித்துப் பின் ஏழைகள் மற்றும் நோயாளிகளுக்கு உணவு, உடைகள் தானம் செய்து, விநாயகரை வழிபட்டால் கணவன், மனைவி தம்பதிகளுக்கிடையே உள்ள மனக்கசப்பு நீங்கும்.

மகிழமரத்தடிப் பிள்ளையார் : அனுஷ நட்சத்திரத்தன்று இந்தப் பிள்ளையாருக்கு, மாதுளம்பழ முத்துக்களால், அபிஷேகம் செய்தால் பணிக்காகக் குடும்பத்தை விட்டுப்பிரிந்து சென்றிருப்பவர்கள் நலமுடன் இருப்பர்.

மாமரத்தடிப் பிள்ளையார் : கேட்டை நட்சத்திரத்தில், இந்தப் பிள்ளையாருக்கு விபூதிக் காப்பிட்டு, ஏழைச் சுமங்கலிப் பெண்களுக்கு உடை, உணவு அளித்து வந்தால் கோபம், பொறாமை, பகைமை நீங்கிப், பாதிக்கப்பட்ட வியாபாரம் சீர்பெறும்.

வேப்பமரத்தடி விநாயகர் : உத்திரட்டாதி நட்சத்திர நாளில் தீபம் ஏற்றி இவரை வழிபட்டால் கன்னிப் பெண்களுக்கு மனம்போல மாங்கல்ய பாக்கியம் கிட்டும்.

ஆலமரத்தடிப் பிள்ளையார் : ஆலமரத்தின் கீழ் வடக்கு நோக்கி வீற்றிருக்கும் விநாயகருக்கு மகம் நட்சத்திரத் தினத்தன்று, சித்திரான்னங்களை நிவேதனம் செய்து தானம் அளித்தால் கடுமையான நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.

வில்வமரத்தடிப் பிள்ளையார் : சித்திரை நட்சத்திரத்தினத்தன்று, இவ்விநாயகருக்கு அர்ச்சனை செய்து, வழிபட்டு, ஏழைகளுக்கு முடிந்தளவு தானம் அளித்து வில்வ மரத்தைச் சுற்றிவந்தால் பிரிந்த தம்பதியர், மீளவும் ஒன்று சேர்வர்.

அரசமரத்தடிப்பிள்ளையார் : பூச நட்சத்திரத்தன்று, இவ்விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்து, வழிபட்டால், விளைபொருள்கள் மற்றும் பூமியால் லாபம் கூடும்.