வியாழன், 30 மார்ச், 2017

விஷ்ணுதுர்க்கையும் ,சிவதுர்க்கையும்

விஷ்ணு துர்க்கையும்  ,சிவதுர்க்கையும் 

அன்பார்ந்த என் ஆன்மீக நண்பர்களுக்கு  என் இனிய  காலை வணக்கங்கள்.

நாம் எல்லோரும் சிவன்,விஷ்ணு கோவில்களில் துர்க்கையை சிவதுர்க்கையாகவும்,விஷ்ணு துர்க்கையாகவும் வழிபட்டு வந்திருப்போம்.எனக்குள் இந்த வித்தியாசம் என்ன? என்பதை அறிய என் உள்ளம் ஏங்கியது.அதன் பொருட்டு, எனக்கு தெரிந்த அறிந்தவற்றை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

விஷ்ணு துர்க்கை





நான்கு  கரங்களுடன் குறிப்பாக தனது இரண்டு கைகளிலும் சங்கமும் சக்ரமும் ஏந்தி ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அம்சமாகக் காட்சி தருபவள் விஷ்ணுதுர்க்கை எனப்படுகிறாள்.

சிவதுர்க்கை 

 பதினெட்டு அல்லது எட்டு அல்லது நான்கு கைகளுடனும் ஒவ்வொரு கைகளிலும் கத்தி சூலம் போன்ற ஆயுதங்களுடனும், அசுரர்களை எதிர்த்து போரிடும் உக்ர ஸ்வரூபமாகக் காட்சிக் கொடுப்பவள் சிவதுர்க்கை எனப்படுகிறாள்.  சும்பன் நிசும்பன் சக்தபீஜன் போன்ற அரக்கர்களை அழிப்பதற்காக தேவர்களின் வேண்டுதலை ஏற்று பூமியில் சிம்ம வாகனத்துடன் தோன்றி காட்சியளிப்பவள் சிவதுர்க்கை எனப்படுகிறாள்.

ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் கட்டளைப்படி மதுரா நகரத்தில் தேவகியின் வயிற்றில் தோன்றிய ஏழாவது கர்ப்பத்தை ஆகர்ஷித்து இழுத்துக்கொண்டு போய் நந்தகோகுலத்தில் ரோஹிணி என்பவளின் கர்ப்பத்தில் சேர்த்துவிட்டு தானும் யசோதைக்குப்  பெண் குழந்தையாகப் பிறந்து கம்சனுக்கு அறிவுரை சொல்லி ஆகாசத்தில் காட்சி தந்தவள் விஷ்ணு துர்கை எனப்படுகிறாள் என்கிறது ஸ்ரீ பாகவதம். ஆகவே கைகளில் சங்கும் சக்ரமும் இருந்தால் அந்த தெய்வம் விஷ்ணு துர்கை என்றும் சங்கு  சக்கரம் இல்லாமல் மற்ற ஆயுதங்களை தாங்கிக் கொண்டிருந்தால் அது சிவ துர்கை என்றும் பொதுவாக புரிந்து கொள்ளலாம்.

நாம் வணங்கும் தெய்வங்களின் வரலாறுகளை அறிந்து வணங்கினால் அது நமக்கு மேலும் கடவுளை வணங்குவது ஆத்மார்த்தமாக  இருக்கும். 

என்னுடைய பதிவுகள் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.உங்கள் கருத்தையும் பகிர்ந்தால் மேலும் நிறைய பதிவுகள் எழுத ஒரு தூண்டுகோலாக அமையும்.

உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி சரவணன் 

நந்திக்குக் காப்பரிசி எதற்கு?

நந்திக்குக் காப்பரிசி எதற்கு?




தேவர்களும் அசுரர்களும் ஆலகால விஷத்துக்கு பயந்து கயிலாயத்துக்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டபோது, ‘‘பயப்படாதீர்கள்!’’ என்று அபயம் அளித்த சிவபெருமான், எதிரில் இருந்த நந்திகேஸ்வரனை அழைத்து, ‘‘அந்த ஆலகால விஷத்தை இங்கே கொண்டு வா!’’ என்றார் 

ஈசனை வணங்கி விடை பெற்ற நந்திபகவான், ஆலகால விஷத்தை நெருங்கினார். அதன் வெம்மை மாறியது. அதை எடுத்துக் கொண்டு வந்து ஈஸ்வரனிடம் தந்தார். ஈசன் அதை வாங்கி உண்டார். அருகில் இருந்த அம்பிகை, சிவபெருமானின் கழுத்தை மென்மையாகத் தொட்டதால், விஷம் அங்கேயே நின்று விட்டது. இதைப் பார்த்த நந்தி பகவான் கேலியாகச் சிரித்தார். ‘‘ஹே! இந்த விஷம் அவ்வளவு கடுமையானதா? சர்வ சாதாரணமாக நான் எடுத்து வந்த விஷமான இதற்கு, கொல்லும் அளவுக்குச் சக்தி இருக்கிறதா என்ன?’’ என எகத்தாளமாகப் பேசினார்.


உடனே சிவபெருமான், ‘‘நந்தி! இங்கு வா!’’ என்று அழைத்து, விஷத்தை வாங்கி உண்ட தன் கையை விரித்து, ‘‘இதை முகர்ந்து பார்!’’ என்றார். நந்தி பகவான் முகர்ந்தார். அதே விநாடியில் சுயநினைவை இழந்தார். கீழே விழுந்தார். எழுந்தார். அழுதார். சிரித்தார். பித்துப் பிடித்தவர் போலப் பலவிதமான சேஷ்டைகளைச் செய்து சுற்றித் திரிந்தார். உலகின் அனைத்து ஜீவராசி களுக்கும் தாயான உமாதேவி அதைக் கண்டு வருந்தினாள். ‘‘ஸ்வாமி! நந்திக்கு இப்படிப்பட்ட தண்டனை தரலாமா? போதும்... மன்னித்து விடுங்கள்!’’ என வேண்டினாள்.

‘‘உமாதேவி! ஆணவத்துடன் பேசியதால் அவனை அடக்கவே அவ்வாறு செய்தோம். விஷத்தின் வாசனையை முகர்ந்ததற்கே இந்தப் பாடுபடுகிறான் என்றால், அதை உண்டால் என்ன பாடுபட்டிருப்பான்? அதை அவனுக்குக் காட்டவே இவ்வாறு செய்தோம். அரிசியைப் பொடி செய்து வெல்லத்துடன் சேர்த்துக் கொடு. அவன் தெளிவு பெற்றுப் பழைய நிலையை அடைவான்!’’ என்றார் சிவபெருமான். அவரது சொற்படியே செய்தாள் அம்பிகை. அதை உண்ட நந்தி பழையபடி சுயநிலையை அடைந்தார். அன்று முதல் பிரதோஷ நாளன்று, நந்திக்குக் காப்பரிசி நைவேத்தியம் செய்யப்படுகிறது.

முந்தி வரம் தரும் நந்தி தரிசனம் என்பார்கள். ‘நந்தியின் நாமம் நமசிவாயவே’ எனப் பாடிப்பரவி யுள்ளார் திருஞானசம்பந்த பெருமான். நந்தி என்பதற்கு வளர்வது என்று பொருள். ஞானத்திலும், குணத்திலும் உயர்ந்தவர்களை நந்திகள் என்றழைப்பது உண்டு. நம் வாழ்வு செழிக்க, ஞானம் வளர இறைவனின் திருவருள் தேவை. நந்தி தரிசனம் அதற்கு உதவும். பிரதோஷம், சனி பிரதோஷமாக வருவது மிகவும் விஷேசம்.பிரதோஷம் அன்று   உரிய நேரத்தில் சிவாலயம் சென்று வணங்குவதுடன், நம் வாழ்வு செழிக்க நந்தியையும் வணங்கி, அவர் மூலம் சிவனாரிடத்து வரம்பெற்று மகிழ்வோம். 

நந்தியின் நல்லருளை பூரணமாகப் பெற்று மகிழ ஏதுவாக, நந்தியெம் பெருமான் குறித்த சிறப்பு தகவல்களும் ,தலங்களும் 


* திருவையாறு புராணம் திருமழப்பாடியில் சிலாதல முனிவருக்கு மகனாகத் தோன்றிய சைலாதி என்பவரே, தனது ஒப்பற்ற தவத்தால் நந்தியாகும் பேறு பெற்றார் என்கிறது.

* திருமழப்பாடியில் நடைபெறும் நந்தி கல்யாண விழா சிறப்பு மிக்கதாகும். நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் ஆகும் என்பது சொல்வழக்கு. இதற்கேற்ப நந்தி கல்யாணத்தைத் தரிசிக்க இந்தத் தலத்தில் பெரும் கூட்டம் கூடும்.

* நந்தி திருமணம் முடிந்து சுமார் ஒருமாத காலத்துக்குப் பிறகு, முனிவர்களின் ஆசியைப் பெறுவதற்காக சுற்றிலும் உள்ள ஆசிரமங்களுக்கு மணமக்களை ஐயாறப்பர் அழைத்துச் செல்வார். அவை: திருவையாறில் சிலாதர் ஆசிரமம், திருப்பழனத்தில் கவுசிகர் ஆசிரமம், திருச்சோற்றுத் துறையில் கவுதமர் ஆசிரமம், திருவேதிக் குடியில் வியாசராசிரமம், திருக்கண்டியூரில் சதாதய ராச்சிரமம், திருப்பூந்துருத்தியில் காசியபராசிரமம், திருநெய்த்தானத்தில் பிருகு முனிவராசிரமம் ஆகியன.

* தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் நந்திதேவரின் வரலாற்றை விவரிக்கும் சிற்பங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவை சோழர்காலத்து கலைப்பணியாகும்.

* மயிலாடுதுறையில் அருள்மிகு மயூரநாத ஸ்வாமி ஆலயத்தில் குடைவரையில் திருமணக் கோலத்துடன் அருளும் அதிகார நந்தி தேவரைக் காணலாம்.

* திருக்கழுக்குன்றம், மயிலை ஆகிய தலங்களில் வெள்ளியாலான அதிகார நந்தி வாகனங்கள் உண்டு. திருக்கழுக்குன்றத்தில், சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாள் காலையில் வேதகிரீஸ்வரர் அதிகார நந்தி வாகனத்தில் வலம் வருகிறார்.

* திருவையாறு புராணத்தில் நந்திதேவர் சிவனாரை வேண்டி குரங்கு முகம் பெற்றதாக தகவல் உண்டு. காஞ்சிபுரம் சுற்று வட்டாரத்தில் குரங்கு முகத்துடன் கூடியவராக அதிகார நந்தியை அமைத்து வழிபடுகின்றனர். 

* நந்தனாருக்காக நந்தி விலகிய தலம் தில்லை. திருவலம் தலமும் நந்தி விலகி அமர்ந்த தலமாகும். திருவைகாவூரில் நந்தியெம்பெருமான் திரு முகத்தை சற்றே திருப்பிவைத்திருப்பார். 

* கர்நாடக மாநிலம், பெங்களூருக்குச் சென்றால், அங்குள்ள பசவன்குடி நந்தி கோயிலுக்குச் செல்லாமல் வரக்கூடாது என்பார்கள். ‘பஸவ’ என்ற கன்னட சொல்லுக்கு ‘நந்தி’ என்று பொருள். ஆமாம், இந்தத் தலத்தின் சிறப்பம்சம் நந்திதான். சுமார் 16 அடி உயரம், 21 அடி நீளத்தில் பிரமாண்டமாகக் காட்சி தருகிறார் இங்குள்ள நந்தியெம்பெருமான்.

இன்றைக்கும் இந்த நந்தியெம்பெருமானுக்காக இப்பகுதி விவசாயிகள் ஒன்றுசேர்ந்து, வருடம் தோறும் கார்த்திகை மாதம் கடைசி திங்களன்று நிலக்கடலைத் திருவிழா நடத்துகிறார்கள். இதனால் நிலக்கடலை அமோகமாக விளையும் என்பது நம்பிக்கை. 

இங்குள்ள நந்தி பகவான், ஸ்ரீபார்வதி- பரமேஸ்வரரை தரிசிக்கும் நிலையில், இமயமலை இருக்கும் வடதிசை நோக்கி காட்சி தருவது சிறப்பம்சம். நந்தியின் வலக்காலின் அடியில் தபேலா போன்ற ஓர் இசைக் கருவி இருக்கிறது. அதன் அடியில் ஒரு தாமரைப்பூ. அதன் அடியில் தான் ‘ரிஷபா நதி’ என்றொரு நதி உற்பத்தியாகி காசி- கங்கையில் சங்கமமாவதாக ஐதீகம்.

நெல்லை- தூத்துக்குடி சாலையில், நெல்லையில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் முறப்பநாடு. இங்குள்ள ஸ்ரீகயிலாசநாதர் திருக் கோயிலில் குதிரை முகத்துடன் திகழும் நந்தியைத் தரிசிக்கலாம்.

* பிரமாண்டத்தில் நம்மை மலைக்கவைப்பவர் தஞ்சை நந்தியெம் பெருமான். ராஜராஜன் வைத்த நந்தி, காலப் போக்கில் சிதைந்துவிட..., பின்னர் வந்த நாயக்கர்கள் நந்தி அமைத்து, மண்டபம் எழுப்பினர்.



மகாவிஷ்ணுவின் பதினாறு நாமாக்களை எந்த நேரத்தில் சொல்ல வேண்டும்


காவிஷ்ணுவின்  பதினாறு நாமாக்களை எந்த நேரத்தில் சொல்ல வேண்டும் 


பதினாறு திருநாமங்கள்!


காவிஷ்ணுவுக்குப் பதினாறு நாமாக்கள் உண்டு. எந்தெந்தத் தருணங்களில் எந்தெந்த நாமத்தைச் சொல்லி அவரை வணங்க வேண்டும் என்று ஞான நூல்கள் வழிகாட்டியுள்ளன.



மருந்து உட்கொள்ளும்போது - விஷ்ணு

உணவு உட்கொள்ளும்போது - ஜனார்த்தனன்

படுக்கச் செல்லும்போது - பத்மநாபன்

திருமணத்தின்போது - பிரஜாபதி

யுத்தம் செய்யும்போது - சக்ரதாரி

வெளியில் கிளம்பும்போது - திரிவிக்கிரமன்

நண்பர்களைச் சந்திக்கும்போது - ஸ்ரீதரன்

கெட்ட கனவுகண்டால் - கோவிந்தன்

கஷ்டம் வரும்போது - மதுசூதனன்

காடுகளில் செல்லும்போது - நரசிம்மன்

நெருப்பால் கஷ்டம் வரும்போது - ஸ்ரீமஹாவிஷ்ணு

தண்ணீரால் கஷ்டம் வந்தால் - ஸ்ரீவராகன்

மலையின் மேல் ஏறும்போது - ஸ்ரீராமன்

நடக்கும்போது - வாமனன்

இறக்கும் நிலையில் - நாராயணன்


எல்லா சமயங்களிலும் - மாதவன்

புதன், 29 மார்ச், 2017

அஷ்டமா சித்திகள் ( எட்டுவகை சக்திகள் )

அஷ்டமா சித்திகள் ( எட்டுவகை சக்திகள் )  


அட்டமா சித்தி என்றால் என்ன?அட்டமா சித்தி எட்டு வகையான அபுர்வ சக்திகளை சித்தர்கள் தங்களது தவ வலிமையாலும் இறைவனின் அருளாலும் பெறப் பட்டதே அட்டமா சித்தி எனப்படும்.  


ஆஞ்சநேயர் " ராம நாமத்தை" அடிக்கடி ஜபித்து வந்ததால் அஷ்டமா சித்திகள் எனப்படும் எட்டுவகை சக்திகளை பெற்றார், 

எட்டு வகையான சித்திகளின் பெயர்கள் வருமாறு:

அணிமா:

பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது/ஆக்குவது.ப்ரிங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.


மஹிமா:

சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது.வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும்க்ருஷ்ணன் அர்ஜூனனுக்கு உயர்ந்த வடிவம் காட்டிஉலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.

லஹிமா:

கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது.திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்ததுலஹிமா ஆகும்.

கரிமா:

இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது.அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோதுஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி கரிமா.

பிராத்தி:
எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது.
திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல சித்தரான படலம்"என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்குதிசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.

பிரகாமியம் 

வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல்.
அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய  

பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.                    

ஈசத்துவம்:

ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்தல்.

திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.

வசித்துவம்:
ஏழுவகைத் தோற்றமாகிய  தேவ,  மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப்படுத்துதல்.

திருநாவுக்கரசர் தம்மை கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும்,ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.

மேற் கொடுக்கப்பட்டுள்ள எட்டு விதமான அபூர்வ சக்திகளைக் கொண்டு சித்தர்கள் நம்பமுடியாத பல அதிசயங்களை செய்தனர். இன்றும் நம்மோடு வாழ்ந்து வரும் பல சித்தர்கள் சூட்சுமான வாழ்க்கையோடு வாழ்கிறார்கள்.



மஹா பெரியவா சொன்ன நிகழ்ச்சி

மஹா பெரியவா சொன்ன நிகழ்ச்சி




ஓர் ஏழைப் பாட்டி.பெரியவாளிடம் அபார பக்தி.
கையிலிருந்த சொற்ப பணத்தைக் கொண்டு மிகவும்
சிக்கனமாக வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்தாள்.
மடி ஆசாரம் பார்ப்பாள். ஏராளமான பக்தி.
தினமும் பெரியவர் இருக்கும் இடத்தைச் சுத்தம் செய்வாள்.
கோலம் போடுவாள். தீபம் ஏற்றி வைப்பாள்.

இரண்டு புடவைகள் தான் அவளுடைய ஆஸ்தி.இன்னொரு
புடவை வாங்கக் கூட அந்தப் பாட்டியிடம் பொருளில்லை.
ஒரு பக்தர் அரிசிக் குறுணையும்,வெல்லமும்
பெரியவாளிடம் சமர்ப்பிந்திருந்தார்.அவற்றை நல்லபடியாக
விநியோகம் செய்ய வேண்டுமே?
பாட்டிக்கு பெரியவா உத்தரவு போட்டார்கள்.
“காஞ்சிபுரத்தில் உள்ள எல்லா எறும்புப் புற்றுக்களிலேயும்
கொஞ்சம் கொஞ்சம் போட்டுட்டு வா. அரை ஆழாக்கு
வீதம் போடு…” என்றார்கள்.
அந்தப் பாட்டியும் பக்தி சிரத்தையுடன் அலைந்து திரிந்து,
பல எறும்புப் புற்றுகளில் அரிசிக் குறுணையும்,
வெல்லமும் போட்டு விட்டு வந்தாள்.
அந்த வேலை முடிந்ததும் பெரியவா அந்தப் பாட்டியைக்
கூப்பிட்டார்கள்.
பெரிய மாலை போலத் திரிநூல் இருந்தது.

ஒரு டின் நிறைய எண்ணெய் இருந்தது.
“திரிநூலை கட் பண்ணி ஒவ்வொரு கோயிலுக்காகப் போய்,
எவ்வளவு விளக்குக்குப் போட முடியுமோ, அவ்வளவுக்குப்
போடு.ஒவ்வொரு நாளும் இரண்டு,மூன்று கோயில்களுக்குப் போய் விளக்கேற்றினாலும் போதும்” என்றார்கள்.
பாட்டிக்குப் பரம சந்தோஷம். பரம சிரத்தையுடன் நாள்தோறும் சில கோயில்களுக்குச் சென்று பெரியவா உத்தரவை நிறைவேற்றி வந்தாள்.சில நாட்களில் இந்தக் கைங்கரியம் நிறைவு பெற்றது.அந்தச் செய்தியையும் தெரிவித்தாள் பாட்டி.
பாட்டியின் பணிகள் முடிந்த சில நாட்களுக்குப்பின்,
ஒரு பெரிய மனிதர், ஆடம்பரமாக மடத்துக்கு வந்தார்.
பெரிய மனுஷத் தோரணை, அகங்காரம்.
“ஸஹஸ்ரபோஜனம் செய்துட்டு வந்திருக்கேன்.
லட்சதீபம் போட்டிருக்கேன்…..” என்று தற்பெருமை
தொனிக்கப் பெரியவாளிடம் சொன்னார்.
பெரியவாளுக்கு அவருடைய அகம்பாவம் புலப்பட்டது.
தர்ம காரியங்கள் செய்துவிட்டு அதைப் பற்றி பேசிக்
கொள்வது புண்ணியத்தைத் தராது. தர்மம் செய்தவருக்கு
நற்பலன்கள் கிடைக்காமல் போய்விடும்.
வினயத்துடன் சொல்லியிருந்தால் பெரியவா
சந்தோஷப்பட்டிருப்பார்கள். ஆனால்,அந்தப்
பெரிய மனிதர் அகம்பாவத்துடன் பேசினார்.
பெரியவா சொன்னார்கள்.
“இங்கே ஒரு பாட்டி இருக்கா. அந்த அம்மா

லக்ஷபோஜனம் செய்திருக்காள்.
பல லக்ஷச தீபம் போட்டிருக்காள்….”
ஆணவப் பணக்காரருக்கு சற்று திடுக்கிட்டது.
‘யார் அந்தப் பாட்டி…அவ்வளவு பெரிய பணாக்காரி?’
என்று தெரிந்து கொள்ள ஆவல் பிறந்தது.
பெரியவா அந்தப் பாட்டியை அழைத்து வரச் சொன்னார்கள்.
“இவள்தான் அவ்வளவு பெரிய உத்தமமான காரியம்
செய்தவள்…”
அழுக்கான கிழிசல் புடவையைக் கட்டிக்கொண்டு
வந்து நின்ற பாட்டியைப் பார்த்து, பெரிய மனிதர்
அயர்ந்து போனார்.பாட்டியின் நெற்றியிலிருந்த
வெள்ளை வெளேரென்ற திருநீற்றுப் பூச்சு,
அவளுடைய இதய சுத்தத்தை விளாக்கினாற்போலிருந்தது.
பெரியவா சொன்னார்கள்.
“ஸர்வ ஜீவனிலும் பகவான் வியாபித்திருக்கிறார்.
பிரும்மா முதல் பிபீலிகம் (எறும்பு) வரை பகவான்
இருக்கிறார். மனுஷ்யாளிடத்திலும் இருக்கிறார்.
“நீ ஆயிரம் பேருக்கு அன்னம் போட்டிருக்கிறாய்.
ஆனால், இந்தப் பாட்டியோ பல லக்ஷம் ஜீவன்களுக்கு
(எறும்புகளுக்கு) ஆகாரம் போட்டிருக்கிறாள்.
“ஏதோ ஒரு கோயிலில் லக்ஷச தீபம் போட, நீ திரவியம்
கொடுத்திருக்கே. லக்ஷச தீபத்திற்கு  எண்ணெய் – திரி
போட்டு உன்னால் ஏற்றவே முடிந்திருக்காது. இந்தப்
பாட்டி, பல கோயில்களுக்குப் போயிருக்கிறாள்.

பக்தி சிரத்தையாய் அகல் வாங்கி,எண்ணெய் ஊற்றி,திரி
போட்டு தன் கையாலேயே ஏற்றியிருக்கிறாள்….”
கேட்டுக் கொண்டிருந்த பிரமுகர் தலைகுனிந்தார்.
பெரியவாளிடம் பவ்யமாகவும்,அகங்காரமில்லாமலும்
பேசவேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார்.பின்னால்
பல பக்தர்கள் வந்து நிற்பதைப் பார்த்து சற்றே நகர்ந்து
இடம் கொடுத்தார்.
சிறிது நேரம் கழித்து, பெரியவாளே அந்தப் பெரிய
மனிதரைக் கூப்பிட்டு, உட்கார வைத்து,பல சமாசாரங்கள்
பேசி, பிரசாதம் கொடுத்தனுப்பினார்கள்.
அடக்கம் கற்றுக்கொண்ட அவர், ஆனந்தமாகத்

திரும்பிச் சென்றார்

சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன?

சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன?

சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் 

சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது. இயற்கை தெய்வம்  அவன். பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாகவும் காட்சியளிப்பான். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது. தாருகா வனத்தில்... ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும். மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான். கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிடும். அதற்குத் தியாகம் என்று பொருள்.

தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம்! பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம்.
வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும் என்கிறது உபநிடதம்.லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் ஒட்டிக்கொள்ளாது. அபிஷேகத் தண்ணீர் தங்காது, அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால் அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும். சிலைக்கு அதாவது கல்லுக்கு, தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது; அதாவது, அது உணராது. சுக துக்கங்கள் தெரியாது. சொல்லப்போனால் சுகமும் துக்கமும் அதற்கு ஒன்றுதான். பனிப்பொழிவு என்றாலும் சரி, வெயில் கொளுத்தினாலும் சரி... அது அசையாது. சுக-துக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம். கண்ணனும் சுக - துக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான்.


சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம். உடல் உறுப்புகள் இருந்தால்.. அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து வெளிவர முடியாமல் திண்டாடி கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும். ஆசைகளை அறுத்தெறிந்தால் நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம். வாயால் உபதேசிக்காமல் செயல்முறையில் விளக்கம் தருகிறது சிவலிங்கம். நடைமுறையில் நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். கச்சேரியின் முடிவு மங்களம். சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும். பஜனையில் அத்தனைபேருக்கும் மங்களம் பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின் முடிவிலும்கூட, சுபம் என்று போடுவார்கள். மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு. எங்கும் எதிலும் இருப்பது சிவம். அதுதான் சிவலிங்கம். உருவமற்ற பொருள் நமக்காக இறங்கி வந்து சிவலிங்க உருவத்தோடு விளங்குகிறது.

செய்த பாவங்களில் இருந்து காப்பாற்றும் நரசிம்மர் விரதம்

செய்த பாவங்களில் இருந்து காப்பாற்றும் நரசிம்மர் விரதம்

செய்த பாவங்களில் இருந்து காப்பாற்றும் நரசிம்மர் விரதம்
நரசிம்ம ஜெயந்தியன்று அதிகாலை குளித்து, வீட்டை சுத்தம் செய்து பூஜையறையில் சுவாமி படத்திற்கு முன்பு விளக்கேற்றி வழிபட வேண்டும். அன்று பகல் முழுவதும் உணவின்றி நீராகாரமாக பருகி, நரசிம்மர் ஸ்தோத்திரம் கூறி வழிபடலாம். அன்று மாலை 4.30 மணி முதல் 7.30 மணிக்குள் வழிபட வேண்டும். விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும் மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும். செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளை படைக்கலாம்.
நரசிம்மரை முழுமையாக சரணடைந்து ‘ஓம் நமோ நாராயணாய’ எனகூறி வழிபட்டால் தாயுள்ளம் படைத்த அவர் தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்க செய்வார். அவரது படத்தை பூஜை அறையில் கிழக்குநோக்கி வைக்க வேண்டும். தினமும் குளித்துவிட்டு நரசிம்மபிரபத்தி ஸ்லோகத்தை 3, 12, 28, 28 என பாராயணம் செய்ய வேண்டும்.
‘நரசிம்மரே தாய்; நரசிம்மரே தந்தை, சகோதரனும் நரசிம்மரே, தோழனும் நரசிம்மரே, அறிவும் நரசிம்மரே, செல்வமும் நரசிம்மரே, எஜமானனும் நரசிம்மரே. இவ்வுலகத்தில் நரசிம்மரே, அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு செல்கிறாயோ, அங்கெல்லாம் நரசிம்மரே’. நரசிம்மரை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை. அதனால் நரசிம்மரே உம்மை சரணடைகிறேன்.
இந்த சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது. இதை முறையாக கடைபிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும். பின்னர் நரசிம்மர் கோவிலுக்கு சென்று, சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். இதனால் கடன் சுமை குறையும். நோய் குணமாகும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலையில் இடைஞ்சல் அகலும்.

செவ்வாய், 28 மார்ச், 2017

துர்க்கை அம்மன் 20 வழிபாட்டு குறிப்புகள்

துர்க்கை அம்மன் 20 வழிபாட்டு குறிப்புகள் 


1. அஷ்டமி தினத்தில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். சிவப்பு வஸ்திரம் அம்பாளுக்கு அணிவிக்கலாம்.

2. துர்க்கைக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி சண்டிகைதேவி சகஸ்ர நாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும். இவை சக்தி வாய்ந்தவை.

3. துர்க்கையின் அற்புதத்தை விளக்கும் துர்கா சப்தசதி என்ற 700 ஸ்லோகங்கள் படிப்பது நல்ல மனநிலையை ஏற்படுத்தும்.

4. பிறவி வந்து விட்டால் கஷ்டங்கள் துன்பங்கள் அதிகம். துக்கங்கள் அதிகமாகும். அந்த துக்கத்தைப் போக்குபவளே துர்காதேவி.

5. கோர்ட்டு விவகாரங்கள் வெற்றி பெறவும், சிறை வாசத்திலிருந்து விடுபடவும் துர்காதேவியை சரண் புகுந்தால், வெற்றியும் பந்த நிவாரணமும் சித்திக்கும்.

6. மிகச் சிறிய விஷயத்திலிருந்து, பெரிய பதவி அடைய முயற்சிக்கும் விஷயம் வரை, நினைத்தது நடக்க வேண்டுமானால் துர்க்கா மாதாவின் திருவடி நிழலைப் பிரார்த்திக்க வேண்டும்.

7. பரசுராமருக்கு அமரத்வம் அளித்தவள் துர்காதேவி.

8. துர்க்கையின் உபாஸனை மனத்தெளிவை தரும்.

9. துர்க்கையை அர்ச்சிப்பவர்களுக்கு பயம் ஏற்படுவதில்லை. மனத்தளர்ச்சியோ சோகமோ ஏற்படுவதில்லை.

10. ஸ்ரீ துர்கையின் வாகனம் சிம்மம். இவளுடைய கொடி ``மயில்தோகை''.

11. ஸ்ரீ துர்க்காவை பூஜை செய்தவன் சொர்க்க சுகத்தை அனுபவித்து பின் நிச்சயமாக மோட்சத்தையும் அடைவான்.

12. ஒரு வருஷம் துர்க்கையை பூஜித்தால் முக்தி அவன் கைவசமாகும்.

13. தாமரை இலையில் தண்ணீர் போல துர்க்கா அர்ச்சனை செய்பவனிடத்தில் பாதகங்கள் எல்லாம் தங்குவதில்லை.

14. தூங்கும் போதும் நின்ற போதும், நடக்கும் போதும் கூட தேவி துர்க்கையை வணங்குபவனுக்கு சம்சார பந்தம் ஏற்படுவதில்லை.

15. ஸ்ரீ துர்கா தேவிக்கு மிகப்பிடித்த புஷ்பம் நீலோத்பலம். இது எல்லா புஷ்பங்களையும் விட நூறு மடங்கு உயர்ந்தது.

16. துர்க்கையின் முன் புல்லாங்குழல் வாத்யம் வாசிக்கக் கூடாது.

17. துர்க்கையை ஒன்பது துர்க்கைகளாக ஒன்பது பெயரிட்டுக் கூறுகின்றது. மந்திர சாஸ்திரம். 1. குமாரி, 2. த்ரிமூர்த்தி, 3. கல்யாணி, 4. ரோஹிணி, 5. காளிகா, 6. சண்டிகை, 7. சாம்பவி, 8. துர்கா, 9. சுபத்ரா.

18. சுவாஸினி பூஜையிலும் 1. சைலபுத்ரி, 2. ப்ரம்ஹசாரிணி, 3. சந்த்ரகண்டா, 4. கூஷ்மாண்டா, 5. மகாகௌரி, 6. காத்யாயனி, 7. காளராத்ரி, 8. மகாகௌரி, 9. சித்திதார்ரி என்ற ஒன்பது துர்க்கைகள் இடம் பெறுகின்றனர்.

19. துர்க்கை என்ற பெயரையும் சதாக்சி என்ற பெயரையும் எவர் கூறுகின்றனரோ அவர் மாயையினின்று விடுபடுவர்.


20. துர்க்கை என்ற சொல்லில் `த்', `உ', `ர்', `க்', `ஆ' என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன. `த்' என்றால் அசுரர்களை அழிப்பவள். `உ' என்றால் விக்னத்தை (இடையூறை) அகற்றுபவள். `ர்' என்றால் ரோகத்தை விரட்டுபவள். `க்' என்றால் பாபத்தை நலியச் செய்பவள். `ஆ' என்றால் பயம் சத்ரு இவற்றை அழிப்பவள் என்பது பொருளாகும்

கோயிலுக்கு செல்வதால் கிடைக்கும் நன்மைகள்


தெய்வத்தின் இல்லமான கோயிலுக்கு சென்று சிலையை வணங்கி தீபத்தை பார்த்தால் மட்டும் போதாது.அந்த இடத்தின் மகிமையை உண்ர்ந்து குறைந்தது ஒரு மணிநேரமாவது கோயிலில் அமர வேண்டும்.

*கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் ,மனரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு மருத்துவமனை என்று சொல்லலாம்.

*சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்புறத்திலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்! இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும்.சமதளமான இடத்தைவிட மலையுச்சியில் அமைந்துள்ள  கோயிலுக்கு சக்தி அதிகமாகும்.

*கோயிலின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறி பக்தருக்கு நன்மை கிடைக்கிறது.

*சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் அதிர்வு சக்தியைத் தருகின்றன.



*வைணவ தலமான பெருமாள் கோயில்களில் பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் பச்சை கற்பூரம்,ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது.

*கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.


*கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.

மகிமை பொருந்திய கோமதி சக்கரம்!

மகிமை பொருந்திய கோமதி சக்கரம்!




 துவாரகாவும் கோமதி சக்கரமும்

நம் பாரத தேசத்தின் மேற்கு கோடியில் குஜராத் மாநிலத்தில் கடலோரமாக உள்ள திருத்தலம் துவாரகை. இங்கு பஞ்ச துவாரகை உள்ளது. அதில் ஒன்று கோமதி துவாரகை ஒன்றும் உண்டு. இந்த துவாரகையில் தான் கோமதி ஆறு கடலோடு கலக்கிறாள். இதன் கரையில்தான் பகவான் கண்ணபிரான் விஷ்வகர்மா உதவியுடன் அரண்மனை அமைத்து ஆண்ட இடம் என கூறப்படுகிறது. இவ்விடத்தில் கண்ணபிரான் அருளோடு கோமதி சக்கரம் உருவானது என்று கூறப்படுகிறது. 

கோமதி சக்கரம்! கோமதி நதியில் கிடைக்கும் ஒரு கல் எனலாம்.
இந்த கோமதி சக்கர கல்லின் வேறு பெயர்கள் துவாரகா கல்,
விஷ்ணு சக்ர கல், பிரதீக் கல், நாராயணக் கல், திருவல சுழி கல் என வேறு பெயர்களும் உண்டு. 



இந்த கோமதி சக்கர கல்லை வைத்து வணங்கினால் முக்தி தரும் ஷேத்திரங்கள் 7 ஆகும். அவை அயோத்தியா, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சிபுரம், அவந்திகா எனும் உஜ்ஜயினி, துவாரகை ஆகிய ஏழு ஷேத்திரங்களை வணங்கிய பலன் உடன் கிட்டும். 

சொர்ணக்கல் சக்கரம் என்றும் கோமதி சக்கரத்தைக் கூறுவர். கோமதி ஆறு கங்கையில் உருவாகி பிரிந்து இறுதியாக கடலில் கலந்து முடியும் இடம் துவாரகையாகும்.

துவாரகையின் பரம பவித்ரமான கோமதி நதியில் அஷ்டலட்சுமியும் குடிகொண்டதால் தான் இந்நகரமே ஜொலித்தன என புராணம் கூறுகிறது. அஷ்டலட்சுமிக்கு இணையாக பகவானால் உருவாக்கப்பட்ட மேலான செல்வமே கோமதி சக்கரம் என புகழப்படுகிறது. இந்த கோமதி சக்கரத்தின் சக்தியே இதற்கு சாட்சியாகும். கோமதி சக்கரத்தை வைத்து வழிபட்டதால்தான் துவாரகை மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமுடனும் வாழக் காரணம் என அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.
கோமதி சக்கர கல்லை வைத்து பூஜிப்பவர்கள் மோட்சம் அடைகிறார்கள்.

சங்கோதரா, ஸ்ரீ தீர்த்தா என்ற பெயரும் துவாரகைக்கு உண்டு. இங்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சி செய்த தர்மசபை உள்ளது. அவர் கோமதி கல் சுழியின் மீதமர்ந்தே ஆட்சி செய்ததாக ஐதீகம். மேலும் ஸ்வர்க துவாரம், மோட்ச துவாரம் என்ற இடத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த கல்லை உருவாக்கியதாக ஐதீகம். இந்த கோமதி சக்கர கல் சொர்க்கம் + மோட்சம் இரண்டிற்கும் உதவுகிறது. விஷ்வ கர்மாவால் உருவாக்கப்பட்ட துவாரகையில் கிருஷ்ணன் மக்கள் சங்கடம் போக்கி கொள்ள கோமதி சுழியை பதித்து கொடுத்துள்ளார் என்ற ஐதீகமும் உண்டு.

மகிமைகள்!

கோமதி சக்கரம் ஸ்ரீவிநாயக பெருமானோடு  தொடர்புள்ளதாகும்.சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு என்று கூறுவார்கள். எச்செயலை செய்ய துவங்கும் முன்னரும் பிள்ளையார் சுழி போட்டு செயல்களை செய்ய துவங்கினால் லாபகரமாக முடிவு இருக்கும் என்பர். பிள்ளையார் சுழிக்கு இன்னொரு பெயர்தான் கோமதி திருவல சுழியாகும். இதன் உட்பொருள் சுபம் லாபம் என்பதாகும். இந்த சுழியை ஒருவர் கண்டாலே அவர் மூலாதாரத்தை தொட்டதாகவும் முதற்கடவுளை வணங்கியதாகவும் அர்த்தமாகும். ஆதியில் எல்லா சுழிக்கும் முதல் சுழி கோமதி சுழியாகும். பிள்ளையாரின் துதிகை சுழியை பார்த்தால் வெற்றியாகும். அதே போல் கோமதி சுழியை பார்த்தாலே வெற்றியாகும் என ரகு (சூரியவம்சம்) வம்சத்தினர் கையாண்டு வெற்றிபெற்று நிரூபித்துள்ளனர். சுதர்சன சக்கரத்திற்கு ஆதிசக்கரம் இந்த கோமதி சக்கரமாகும்.




கோமதி சக்கர மகிமைகளும் அற்புத பலனும்

கோமதி கல் உடல் போன்றது நம்மிடம் ஆத்மா உள்ளது . அந்த கோமதி சுழி உடலோடு நம் ஆத்மாவை இணைத்து கோரிக்கை என்னவோ அதற்கு செயல்படுத்தினால் போதும். அக்கோரிக்கை நிகழும். இதுதான் இந்த கோமதி சக்கரத்தின் செயலாகும்.
 
இறக்கும் புண்ணிய ஆத்மாக்கள் எரித்தப்பின் கங்கையை சார்ந்த நதிகளில் எவர் சாம்பல் கலந்தாலும் அது கோமதி சக்கரமாக மாறி அதிஷ்டம் உள்ளவனுக்கு அது கிடைத்து பலன் பெறட்டும் என ஸ்ரீ ஹரியால் உருவாக்கப்பட்டது . ஒரே ஒரு சக்கரம் இருந்தால்கூட  பலன் கொடுக்கும். ஆனால் கங்கை நீர் அருகில் இருக்க வேண்டும். இல்லையேல் பலன் கொடுக்காது






இதன் உள்ளடங்கிய சக்திகள் :



வலம்புரி சங்கிலும் மேல்புறத்தில் திருவல சுழி இருக்கும். இதற்க்கினையான இந்த கோமதி சக்கரத்தை வைத்து பூஜிக்கும் போது வலம்புரி சங்கின் பலனும் சேர்ந்து கிடைத்துவிடும்.


அடுத்து கோமாதா (பசு) வின் சக்தி, ஏனெனில் கோமதி சுழி பசுவிடமே நிறைந்துள்ளது . கண்களில், முதுகில், கால் குளம்பில், முதுகில், வால் மேல்பகுதியில், நெற்றியில், கழுத்தில், அடிவயிற்றில், குதத்தில் என பல சுழிகளை பசு மட்டுமே அதிகம் பெற்றிருக்கும். இது ஸ்ரீ ஹரியால் உருவாக்கப்பட்டது . அதனால் தான் பசுவிற்கு தனி இடம் கொடுக்கப்படுகிறது . இந்த கோமதி சுழி கல் ஒட்டுமொத்த பலனும் ஸ்ரீ ஹரிஹரனால் முக்தி பெற்ற ஆத்மா மூலம் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது.

கோமதி சக்கரத்தை வலம்புரி சங்காக நினைத்தால் வலம்புரி சங்கின் பலனைத் தரும். பசு மாதாவாக நினைத்தால் பசுவின் பலனைத் தரும். உங்களுக்குப் பிடித்த தெய்வங்களாக நினைத்தும் வழிபாடுகள் செய்தால் அதனதன் பலனைக் கொடுக்கும். இதுதான் இக்கல்லின் அதிசயம். இதுதான் ஆதியில் தோன்றிய சக்கரமாகும்.


சாலி கிராமத்தை வைத்து பூஜிப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த சாலி கிராமத்தின் உள் ரகசியமே இந்த திருவல சுழி சக்கரம் தான். இதை வைத்து பூஜிக்கும்போது பிரமிடு, மகாமேரு   ஸ்ரீ சக்கரம் தனியாக வைத்து பூஜித்து அடையும் சக்தியை இந்த கோமதி சக்கரம் ஒன்றிலேயே பெறலாம்.


இந்த உலகின் யந்திர வடிவமே சுழிதான். அந்த சுழியே கோமதி சுழியாகும். 12,000 ஆண்டுகளுக்கு மேலான மிக பழமை வாய்ந்த சக்கர முறையாகும் இது . பயண தொலைவும், போக்குவரத்து வசதியும் இல்லாத காரணத்தால் இச்சுழி சக்கரம் நாட்டில் பரவ முடியாமலும், அருமை, பெருமை மறைந்தும் போயின.  ஸ்ரீ வாராகி அன்னையை இனம் கண்டு இப்போது மக்கள் எப்படி பல ஆண்டுகளுக்கு பின் வழிபட ஆரம்பித்திருக்கிறார்களோ அதைப்போல் இனி வருங்காலத்தில் கோமதி சக்கரத்தையும் வழிபாடு செய்வார்கள்.


 இந்த கோமதி சக்கரத்தை வழிபாடு செய்தால் மூன்று லோகத்தையும் வழிபட்ட பலன் கிட்டும். சிவபெருமான் சிரசு முடியின் உச்சி கங்கை சுழியும் நம் தலையில் விழும் சுழியும் இதே திருவல சுழிதான். இது தலைவிதி சக்கரமாகும். பசுவின் பார்வை வீட்டில் பட்டால் பல பாவங்கள் விலகும். பசுவின் திருஷ்டி சக்தியே இந்த கோமதி சக்கரமாகும். இஃது வீட்டின் எந்த பாகத்தில் வைத்தாலும் திருஷ்டி விலகும். நாகத்தின் சுழியும் இதுவேயாகும். இந்த சுழியில் நாகலட்சுமி குடிகொண்டுள்ளாள். எனவே நாகதோஷங்கள் விலகிவிடும்.

சிவப்பு வண்ண துணியின் மேல் வைத்து பயன்படுத்தினால் இந்த கோமதி சக்கரம் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத்தரும்.


ஒருவருடைய சகல தோஷமும் விலக இறைவனால் உண்டாக்கப்பட்ட கோமதி சக்கரத்தைக் கொண்டு 13 சங்கல்பம் அவரவரே செய்தால் எத்தோஷமும் அதன்பின் அவர்களிடம் இருப்பதாக கருத தேவையில்லை. எல்லாம் மறைந்துவிடும்.  பகவான் ஸ்ரீமன் நாராயணர் அளித்த திருவல சுழி சக்கரம் நம்மிடம் உள்ளவரை எத்தோஷமும் நெருங்குவதில்லை.
                          

தெரிந்து கொள்ளவேண்டியவை பயன்கள்


லிங்க வடிவமுள்ள சாலிகிராமத்தையும், ஸ்ரீ சக்கரத்தையும், வலம்புரி சங்கையும் சுத்தமற்றவர் பூஜித்தால் தரித்திரத்தில் தள்ளிவிடும். ஆனால் திருவல சுழி கொண்ட கோமதி சக்கரம் யார் வேண்டுமானாலும் பூஜிக்கலாம். ஆசாரம் ஒரு முக்கியமில்லை. மனமே முக்கியம்.

 
கோமதி சக்கரம் பயன்படுத்தும் போது நிமிர்த்தியே வைக்க வேண்டும். அதாவது சுழி  ஆகாயத்தை பார்த்தார் போல் வைக்க வேண்டும். பூஜைக்கு பின் எப்படி வேண்டுமானாலும் வைக்கலாம்.
 
பி(வி)ல்வம் 6 மாதம் வரை பலனளிக்கும். கோமதி சக்கரம் ஆண்டாண்டு காலமாக பலனளிக்கும். கோமதி சக்கரத்தை யார் தலையில் வைத்தும் ஆசிர்வாதம் செய்யலாம்.
 
ஸ்ரீராமர் ஆஞ்சநேயர் மூலம் சீதா தேவிக்கு அடையாளம் காட்ட கொடுத்த ரகுவம்ச கணையாழி (மோதிரம்) இந்த கோமதி சக்கரம் பதித்தது தான் .
 
கோமதி சக்கர வழிபாட்டை இருக்கும் இடத்தில் இருந்து ஒருமுறை செய்தாலோ அல்லது நினைவு கூர்ந்தாலோ சகல பாவமும் விலகுகிறது.
 
 கோமதி சக்கரத்தை வைத்து வழிபட்டாலே போதும். காசிக்கு செல்ல வேண்டிய கட்டாயமே இல்லை.  அக்கினியால் எல்லா பிரச்சனையும் தீர்க்க முடியாது. ஆனால் கங்கையாலும் கங்கையில் படைக்கப்பட்ட பொருளாலும் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கலாம்.
 
அன்னை கங்கா மாத கோமதி சுழி பூஜை செய்து நாடி வருவோர் துன்பத்தை போக்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம் உண்டு. புண்ணியம் செய்யும் மனிதருக்கே கோமதி சக்கரம் கையில் கிடைக்கும் எனவும் ஐதீகம் உண்டு.
 
புண்ணியம் செய்தவருக்கு தன்னால் சேர வேண்டும் என்ற காரணத்தினாலேயே இதை பற்றிய விமர்சனம் வெளியில் பிரபலமில்லாமல் போனது . பரத்வாஜ் மகரிஷிகள் இதற்கு விமோசனம் தந்தார் எவ்வாறெனில் கங்கை தீர்த்தம் உடன் கொண்டு எவர் பூஜித்தாலும் அவர்களின் குடும்பத்திலுள்ள பாவ சாபங்களை கங்கை நீர் ஈர்த்துக்கொள்ளும் என வழி கூறினார். கங்கை தீர்த்தம் பாவங்களை ஈர்த்துக்கொள்ளும் கோமதி சக்கரம் செல்வ பெருக்கத்தை தொழில் பெருக்கத்தை உண்டாக்கும். நிம்மதியைக் கொடுக்கும்.
 
இதை எவரும் ஆராதிக்கலாம். இதை வைத்திருந்தாலே நாகதோஷம் தன்னால் விலகுகிறது . பரிகார ஷேத்ரம் எங்கும் போக வேண்டியதில்லை. கோமதி சக்கரம் ஒரு உயிர்கல் வகையாகும். வளரக்கூடியதாகும். இது எல்லா அதிஷ்ட கற்களுக்கும் மேலானதாகும். இதன் சுழியை சற்று நேரம் உற்று பார்த்து கொண்டிருந்தாலே சில மாறுதல் மனத்திரையில் தெரிவதை உணர்வீர்கள்.
 
 கோமதி சக்கரத்தில் பெயரை ஓதி செம்பு சொம்பில் போட்டு தண்ணீர் ஊற்றி அந்த நீரை விநாயகருக்கு அபிஷேகம் செய்தால் உங்கள் சக்தி பன்மடங்காக உயரும் .
 
 
கோமதி சக்கரம் உள்ள இடத்தில் சிவகோபம் சக்தி கோபம் உண்டாவதில்லை. இல்லத்தில் மூதேவி வணக்கத்திற்குரியவளாக மாறுவாள். விரட்டக்கூடியவளாக இருக்கமாட்டாள். கோமதி சக்கரத்தில் மகாலட்சுமியின் சின்னம் (பிரதீக்) உள்ளதால் அவ்விடம் குபேர வாசம் உண்டாகி தரித்திரம் விலகும். இந்த கற்களை வைத்து பூஜிக்கிறவர்கள் மோட்சத்தை அடைகிறார்கள்.
 
அதிஷ்ட தேவதை தேடிவர காரணம் இக்கோமதி சக்கரம் சுதர்சன சக்கரத்தால் உருவானதால் இது இருக்கும் இடம் தீயசக்தி விலகுவதால் அதிஷ்ட தேவதை தேடிவந்து குடிகொள்கிறாள். இச்சுழி இருக்கும் இடத்தில் குழப்பம் இருப்பதில்லை. தன்னால் ஒரு வழி பிறக்கிறது. நீத்தாருக்கு திதி கொடுக்காத தோஷம் முதல் நாம் கண்ட கடின தோஷங்கள் இக்கோமதி திருவல சுழியை பயன்படுத்துவதன் மூலம் விலகுகிறது.
 
கோமதி சக்கரம் உள்ள இடத்தில் கூடுதல் எனர்ஜி பெறுகிறது. அதனால் வாஸ்து குறைகள் யாவும் பாதிப்பதில்லை . தொழில் செய்யும் இடத்தில் ஒரு சிவப்பு துணியில் கோமதி சக்கரம் 13 ஐ கட்டி ஈசான்ய பாகத்தில் வைத்தால் அல்லது கல்லா பெட்டியில் வைத்தால் பணம் பெருகும். தொழில் பெருகும்.
 
இந்த கோமதி சக்கரம் உள்ள இடத்தில் வலம்புரி சங்கை சிரமப்பட்டு வாங்க வேண்டிய அவசியமில்லை. கடின சுத்தமும் அவசியமில்லை. அசுரகுலம், தேவகுலம் இரண்டிற்கும் பொதுவானவள் அன்னை மகாலட்சுமி. அதைப்போல சுத்தத்திற்கும், அசுத்தத்திற்கும் பொதுவானது கோமதி சக்கரம். எனவே இதை வைத்திருந்தாலே போதும். நற்பலன் விளையும் . அசுத்த தீட்டு பாதிக்காது .

படைக்கப்பட்ட உயிர்கள் அத்தனையும் சுழியுடனே படைக்கப்பட்டது. காய்கறிகளை நறுக்கினாலும், மரங்களை அறுத்தாலும் கூட உள்ளே வல சுழி இருக்கும். உருண்டையான பூமியை இரண்டாக பங்கிட்டு அதன் மையத்தில் உயிர்களும் கீழே பாதாளமும் மேலே ஆகாயமும் உள்ளது. இதில் பாதாள சுழியும் ஆகாய சுழியும் உயிர்களின் சுழியும் ஒன்றாகவே இருக்கிறது. அதனால்தான் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்கிறது.  சம்மந்தமும் ஏற்ப்படுகிறது . உற்பத்தி ஆவதும் அழிவதும் மாறி மாறி நடக்க இந்த சம்மந்தமும் ஒரு காரணமாகும். இதில் சுதர்சன சக்கரம்போல் காக்கக்கூடிய சுழி கோமதி சக்கரமாகும. 


புராண கதையில்கூட ஒரு அசுரன் கோமதி சக்கரம் வைத்து வழிபாடு செய்து தன் கையிலேயே வெற்றி சக்கரமாக வைத்திருந்ததால் அவனை யாராலும் வெல்ல முடியவில்லை. பகவான் மகாவிஷ்ணு சூழ்ச்சியாக அந்த கோமதி சக்கரத்தை அசுரனிடம் இருந்து அப்புறப்படுத்திய பின்புதான் அவரால் வெற்றிகொள்ள முடிந்தது .
 

அறிவீராக :- 

சங்கிலும் சுழிசக்கரத்திலும் சுழிகைகளிலும் காலிலும் சுழி இருக்கும்உச்சி தலையிலும்முன் நெற்றியிலும் இந்த சுழி இருக்கும். உள்ளங்கை சந்திர மேட்டிலும்விரல்மேல் விரல் அங்குலாஸ்தியிலும்நம் தொப்புளிலும்மார்பு குழியிலும்தொண்டைக் குழியிலும்ஆசன வாயிலிலும்முதுகின் பின்புறமும்மச்சங்களிலும்கண் கருவிழியிலும்நடுநெற்றி கண்ணிலும் இந்த சுழி இருக்கும். உள்ளங்கையிலும்கை கால் முட்டியிலும் இந்த சுழி இருக்கும். மூக்கின் நுனி பகுதியிலும்உள் நாக்கிலும் இந்த  சுழி இருக்கும். நம் காதுகளும் திருவல சுழிதான். நாம் சுவாசிக்கும் காற்றும் திருவல சுழியாகத்தான் இயங்குகிறது. வீசுகின்ற சுழல் காற்றானாலும்கடல் அலையானலும் கோமதி சுழியாகத்தான் சுற்றும். தெய்வத்தை மூன்றுமுறை சுற்றி வலம் வந்தால் அது கோமதி சுற்றாகும். அதுவே செல்வ வளம் தரும். கிரிவலமாக இருந்தாலும் தொடர்ந்து மூன்று பௌர்ணமி தலா ஒரு சுற்று வீதம் மூன்று பௌர்ணமி சுற்றினால்தான் கோமதி வல பலன் கிட்டும். எலுமிச்சை கனி உட்பிரகாரமும்மரங்களின் உட்பிரகாரமும்பூமியின் உட்பிரகாரமும் கோமதி சுழி கொண்டதாகும். அசையும்ஆடும்சுற்றும் பொருளெல்லாம் பெரும்பாலும் வலது புறமாகவே சுற்றும். பூமி கூட கோமதிச் சுற்றாகவே உழல்கிறது. வலசுழி பொருள் எல்லாம் சுபமானது. சக்தி வாய்ந்தது என்பதால் தான் வலம்புரி சங்குவலம்புரி விநாயகர் என வலபக்க சக்தி அதிகமாக நேசிக்கப்படுகிறது. 



தமிழ் உயிர் எழுத்துக்களிலும் பிற மொழி எழுத்துக்களிலும் சுழியில்லாமல் இருக்காது. விலங்குகளின் உடலிலும்முகத்திலும்பாதங்களிலும் கோமதி வல சுழி உண்டு. கோள்கள் உழல்வதும் பிரிவதும் சேர்வதும் வலச்சுழியோடு தான். இடச்சுழியும் உண்டு. இது ஒரு சில கோள்களேயாகும் எனினும் வலச்சுழி இதிலிருந்து பாதுகாப்பு தரும்.
கோமதி எனும் விதிச்சுழியை நினைவில் பதிய வைத்தால் நினைவாற்றல் பெருகும். சுழியை நெற்றிக்கண்ணில் பதித்து வலபக்க மூளையில் வேண்டுதலை பதிக்க விரைவில் நிறைவேறும்


கோமதி சக்கரத்தால் பலன்பெரும் விதம்!

கோமதி யந்திரத்தை சாதாரணமாக கையில் வைத்திருந்தாலே நாம் கோரும் பலன் விரைவில் கிடைக்கும்,வீட்டின் வாயிலில் 7 கோமதி சக்கரங்களை சிறிய சிகப்பு பட்டு துணியில் கட்டி தொங்கவிட, எதிர்மறை சக்திகள்,கோளாறுகள் விலகி நன்மைகள் பெருகும். வீட்டில் பூஜிக்கும் பொழுது 11 கோமதி சக்கரம், 11 மஞ்சள் நிற சோழிகள், குங்குமப்பூ,மஞ்சள் கட்டை, சந்தன கட்டை மற்றும் வெள்ளி நாணயங்கள் வைத்து  பூஜிக்க பொருள் வரவு மேம்படும். தற்போது மோதிரமாகவும், கழுத்தில் அணியும் செயின் வடிவிலும் கிடைக்கிறது. விலை குறைந்த ஆனால் லட்சுமி அம்சமுள்ள நோய்கள் தீர்க்கவல்ல சிறிய சங்கு போன்ற கல். தொழில் முன்னேற்றம், கண் திருஷ்டி, பில்லி,சூனியம், வியாபார விருத்தி போன்றவற்றிற்கும் மிக சிறந்த விலை குறைந்த தீர்வே இந்த கோமதி சக்கரம். வடக்கில் இது மிக பிரபலம். வியாபாரத்திற்க்கு ஏழு சக்கரங்களை வைத்து பூஜிக்க செல்வம் பெருகும். இரண்டு சக்கரங்களை துணியில் கட்டி வாசலில் தொங்க விட அனைத்து திருஷ்டி மற்றும் தீமைகள் விலகும். வாஸ்து தோஷம் விலக 11 சக்கரங்களை வீட்டில் வைக்கவோ அல்லது புதைத்து வைக்கவோ செய்யின் வாஸ்து தோஷம் விலகும்.




வியாழன், 23 மார்ச், 2017

பிரதோஷ காலத்தில் நந்தியை (Nandhi) வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் :

பிரதோஷ காலத்தில் நந்தியை (Nandhi) வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் :

1. செல்வங்கள் பெருகும்.
2. கடன் தொல்லைகள் நீங்கும்.
3. நோய்கள் அகலும்.
4. எதிரிகளால் ஏற்படும் அனைத்து தீய செயல்களும் செயலற்றுப் போகும்.
5. குழந்தைகளின் கல்வி மேம்படும்.
6. வேண்டிய வரம் கிட்டும்.
7. குழந்தைகள் எவ்விதமான கஷ்டமும் இன்றி உணவு எடுத்துக்கொள்ளும்.
8. நீடித்த ஆயுள் கிட்டும்.
9. சிவ சக்தியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.
ஒவ்வொரு நாளும் மாலை 4.30 – 6.00 நேரம் நித்திய பிரதோஷம் எனவும்ஒவ்வொரு அமாவசைக்கு முன்னரும்பெளர்ணமிக்கு முன்னரும் வரும் திரயோதசி திதி பட்ச பிரதோஷம் எனவும்சனிக் கிழமையில்திரயோதசி சேர்ந்தால் – அது சனி மஹா பிரதோஷம் எனவும்திங்கட் கிழமையில்திரயோதசி சேர்ந்தால் – அது ஸோம பிரதோஷம் எனவும் போற்றப்பட்டுசிறப்பான வகையில் வழிபாடு செய்யப்படும்.

பிரதோஷப் பாட்டு :

சிவாய நமஓம் சிவாய நமஹ!
சிவாய நமஓம் நமச்சிவாய!
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர!
ஆடியபாதா அம்பலவாணா!
கூடியே பாடினோம் பிழைபொறுப்பாயே!
அஞ்செழுத்தில் அமர்ந்த சுந்தரேசா!
நெஞ்சில் நிறைந்திருப்பாயே சொக்கேசா!
சுந்தரர்க்கு தோழனான சுந்தரேசா!
சம்பந்தர்க்கு தந்தையானாய் சொக்கேசா!
மண்சுமந்து கூலிகொண்ட சுந்தரேசா!
பெண் சுமந்து பெருமை கொண்டாய்!
தோடுடைய செவியனே சுந்தரேசா!
தூய வெண்ணீரணிந்தவனே சொக்கேசா!
நரியைப் பரியாக்கிய சுந்தரேசா!
நாரைக்கு முத்தி கொடுத்த சொக்கேசா!
மணிவாசகத்தின் ஒளியானாய் சுந்தரேசா!
தேவாரத்தோடு இணைந்திட்ட சொக்கேசா!
சிவசிவ சிவசிவ சபாபதே!
சிவகாமி சுந்தர உமாபதே!
காலகால காசிநாத பாகிமாம்!
விசாலாக்ஷி சகித விஸ்வநாத ரக்ஷமாம்!
ஆலால சுந்தரம் மீனாட்சி சுந்தரம்!
கல்யாண சுந்தரம் கடம்பவன சுந்தரம்!
நடராஜா நடராஜா நர்த்தன சுந்தர நடராஜா!
சிவராஜா சிவராஜா சிவகாமி நாதா சிவராஜா!
என்னப்பன் அல்லவா என்தாயுமல்லவா!
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத் தேவா!
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்!
சிவசக்தி சிவசக்தி சிவசக்தி ஓம்!

நந்தீஸ்வரர் துதி :

கந்தனின் தந்தையைத்தான் கவனமாய்ச் சுமந்து செல்வாய்!
நந்தனார் வணங்குவதற்கு நடையினில் விலகி நின்றாய்!
அந்தமாய் ஆதியாய் அகிலத்தை காக்க வைத்தாய்!
நந்தியே உனைத் துதித்தேன் நாடி வந்தெம்மைக்காப்பாய்!
ஒன்பது கோள்களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய்!
பொன்பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய்!
சிந்தனை வளம் கொதிப்பை சிகரத்தில் தூக்கி வைப்பாய்!
நந்தியே உனைத் துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்!
மாலைகள் ஏற்க வைப்பாய் மழலைகள் பிறக்க வைப்பாய்!
வேலைகள் கிடைக்க வைப்பாய் விதியையும் மாற்றி வைப்பாய்!
சோலைக்குயில் வண்ணப் பூவைச் சூடும் நந்தி தேவா!
நாளும் நான் உனைத் துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்!
தஞ்சையில் பெரிய நந்தி தளிருடல் வெண்ணை சாத்தி!
அஞ்சாத வேந்தன் நந்தி அழகிய நெகமம் நந்தி!
குஞ்சர முகத்தான் தந்தை குந்திடும் ரிஷப நந்தி!
தஞ்சமாய் உனையடைந்தேன் தயங்காது எம்மைக் காப்பாய்!

பிரதோஷ துதிகள்:

நாகத்தான் கயிறாக நளிர்வரையதற்குமத்தாகப்
பாகத்தேவ ரொடகடர் படுகடலின் யெழக் கடைய
வேகநஞ் செழவாங்கே வெருவோடு மிரிந்தெங்குமோட
ஆகந்தண்ணில் வைத்தமிர்தமர்க்குவித்தான் மறைக்காடே!
திருஞானசம்பந்தர்
பருவரை ஒன்று சுற்றி அரவங்கை விட்ட இமையோ ரரிந்து பயமாய்த்
திருநெடுமால் நிறத்தை அடுவான் விசும்பு சுடவா னெழுத்து விசைப் போய்ப்
பெருகிட மற்றிதற்கொர் பிதிகாரமொன்றை அருளாய் பிரானே எனலும் அருள்
கொடு மாவிடத்தை எரியாமலுண்ட அவனண்ட ரண்டர் அரசே!
திருநாவுக்கரசு நாயனார்
கோல் வரை மத்தென்ன நாட்டிக் கோளரவு சுற்றிக் கடைந்தெழுந்த
ஆல நஞ்சு கண்டவர் மிகவிரிய அமரர்கட்கருள் புரிவது கருதி
நீலமார் கடல் விடந்தனை யுண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த
சிலங் கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன் கூருளானோ!
சுந்தரர்
கோலால மாகிக் குரைகடல் வாயென் றெழுந்த
ஆலால முண்டா வைன்சதுர்தா னென்னேடி
ஆலால முண்டிலனேல் அயன்மா லுள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம் வீடுவகாண் சாழலோ!
மாணிக்கவாசகர்
இனியோ நாமுய்ந்தோம் இறைவன்தாள்சேர்ந்தோம்
இனியோ ரிடரில்லோம் நெஞ்சே – இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கு மீளாப்பிறவிக்
கனைக்கடல்நீந்தினோம்காண்
காரைக்கால் அம்மையார்