செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

மாவிளக்கு வழிபாடு

மாவிளக்கு வழிபாடுமாவிளக்கு அலங்காரம் க்கான பட முடிவு

 மாவிளக்கு வழிபாடு என்பது தமிழ்நாட்டில் உள்ள இந்து சமயத்தில் அம்மன் வழிபாடு முறைகளில் ஒன்று.பண்டிகை காலத்தில் மாக்கோலம் இடுதல்,மாவிளக்கு ஏற்றுதல் போன்ற வழக்கங்கள் வழிபாட்டில் இருந்து வந்ததுள்ளது..ஆனால் தற்பொழுது மாக்கோலம் இடும் பழக்கம் குறைந்து கொண்டு வருவது வருந்தத்தக்க விஷயமாகும்.இன்றும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி தங்கள் கோரிக்கைகளை அம்பாளிடம் முறையிடுகின்றன.அம்பாளும் தன்னை நாடி வரும் பக்தர் களுக்கு  சகல செல்வங்களையும் தந்து அருள்பாவிக்கிறாள்.

நோய்கள் தீர மாரியம்மன்,காளி போன்ற தெய்வங்களுக்கு மாவிளக்கு ஏற்றி நோத்திக் கடன் செய்வர்.ஆறு,குளம் உள்ள ஊர்களில் இருக்கும் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது இரட்டிப்பு பலனைத் தரும்.

இடித்தெடுத்த பச்சரிசி,வெல்லம்,ஏலக்காய் போன்ற கலவையை விளக்கு வடிவில் செய்து தீபம்  ஏற்றுவதே மாவிளக்கு ஆகும்.


மாவிளக்கு தத்துவம்

காணும் இடங்களெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பேரொளி வடிவான இறைத்துவத்தையே மாவிளக்கு உணர்த்துகிறது. 

அரிசி[அன்னம்] பிராணமயம்.அன்னம் பிரம்ம ஸ்வரூபமேயாகும்.உலகிலுள்ள உயிர்கள் வாழ்வதற்கு  ஆதாரமாக விளங்குவது அன்னமே.


வெல்லத்தின் குணம் மதுரம்.அதாவது இனிமை.மதுரமான அம்பிகை மதுரமானவள்.ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் மதுரமான அம்பிகையே உறைகிறாள்.


அக்னி பகவான் நெய்யில் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம்.நெய்யை வார்தே ஹோமங்கள் வளர்க்கிறோம்.ஹோமங்கள் மூலம் நாம் சமர்ப்பிக்கும் பொருட்களை அக்னியே உரிய தேவதைகளிடம் சேர்க்கிறார்.


அக்னி பகவானின் சக்தி நெய்யில் அடங்கியுள்ளது.மாவிளக்கில்  ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ஸ்வரூபமாக அம்பிகை நம் இல்லங்கள் தோறும் அருள்புரிவதற்காகவே  மாவிளக்கு ஏற்றுகிறோம். 



நம்மையே விளக்காகவும்,மனதை நெய்யாகவும்,அன்பை தீபமாகவும் அர்ப்பணிக்கும் ஒரு அபூர்வவழிபாடு இது.அம்மன் கோவிலில் மட்டுமல்லாமல் அவரவர் குலதெய்வத்திற்கு ஆண்டுக்கு 1முறையாவது செய்ய வேண்டும்.



வீட்டில் மாவிளக்கு போடுதல்   


பெரும்பாலான வீடுகளில் ஆடி,தை  வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கு போடுவதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள்.புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு வீடுகளில் மாவிளக்கு போடுவதும் உண்டு.


கோவில்களில் பக்தர்கள் ஒரு குழுவாக சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தினத்தில் அம்பிகைக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.



















வலம்புரி சங்கு பூஜை

வலம்புரி சங்கு பூஜை 



என் அன்பு தோழிகளுக்கு என்னுடைய நமஸ்காரங்கள்.மேலும் மேலும் நான் இறைவனைப்பற்றி எழுத ஊக்குவித்த, அன்பு நெஞ்சங்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வலம்புரிசங்கு பாற்கடலில் மகாலக்ஷ்மியுடன்  தோன்றியதால்  புனிதமான பொருளாக கருதப்படுகிறது.மகா விஷ்ணுவின் இடது கையில் இருப்பது வலம்புரிசங்கு.இதை வீட்டில் வைத்து வழிபட்டால் நம்மை தேடி மகாலக்ஷ்மி வருவாள் என்பது வேதவாக்கியம் சொல்கிறது.
வலம்புரிசங்கு பூஜை முறையாக நடைபெற்றால் பிரம்மஹத்தி தோஷம் அகன்று விடுகிறது.வாஸ்து குறை இருக்கும் வீட்டில் மஞ்சள் நீரும்,துளசியும் சங்கில் இட்டு காலையில் தெளித்து வந்தால் குறைகள் நீங்குவதாக ஐதீகம்.


முக்காலத்தில் மக்கள் செல்வச்செழிப்புடன் இருந்து வந்ததற்கு காரணம் வீடு கட்டும்போது 5வெள்ளிக்கிழமை லக்ஷ்மி வசிய பூஜை செய்த வலம்புரி சங்கை வீட்டு நிலைவாசலில் வைத்து , நடுஹாலில் சங்கு ஸ்தாபன பூஜை செய்து திருமகள் மற்றும் வாஸ்து பகவானை வழிபட்டார்கள்.  அதனால்தான் எந்த  குறையும் இல்லாமல் அவர்களால் வாழ முடிந்தது.

வீட்டில் வலம்புரி சங்கு வைத்து பூஜை செய்யும் முறை 

48நாட்கள் தினமும் செய்ய விருப்பம் உடையவர்கள் காலையில் குளித்து வலம்புரிச்சங்கை சுத்தமான  நீரில் அலம்பி ,சந்தனம் குங்குமம் இட்டு பிளந்த பாகம் வெளிப்பக்கமாக வைத்து மஞ்சள் பொடி கலந்த நீரை  ஊற்றி  முதலில் விநாயக பெருமானையும்,குருவையும் வணங்க வேண்டும்.

ஓம் கம் கணேசாய நம  

ஸ்ரீ குருதேவாய நம  என்றும் 


ஓம் பாஞ்சஜன்யாய  வித்மஹே பாவ மானாய த்மஹி தந்நோ சங்க ப்ரசோதயாத் 

சங்கு காயத்ரி மந்திரத்தை 3முறை சொன்ன பிறகு ஸ்வாகதம் ஸ்வாகதம் என்று சொல்ல வேண்டும்.

ஸ்ரீ லக்ஷ்மி குபேராய நம  என்று சங்கில் குபேரனை அழைக்க வேண்டும்.

பிறகு ஓம் நவநிதி தேவதாயை நம 

சகல ஆராதனை சுவர்ச்சிதம் என்று சிவப்பு மலரை போட வேண்டும்.
வலம்புரி சங்கை தாமிரத் தட்டில் பச்சரிசி போட்டு அதன்மேல் சங்கை குபேரன் படத்தின் முன் வைக்க வேண்டும்.பிறகு நெய்தீபம் ஏற்றி துளசி,அரளி,சிவப்பு மலர்,மல்லிகை கலந்து பன்னீர் தெளித்து சங்கைச் சுற்றி மலர்தூவ வேண்டும்.

ஓம் பத்ம நிதியே நம ஓம் சங்க நிதியே நம ஓம் மகர நிதியே நம ஓம் சுகச்சப நிதியே நம ஓம் முகுந்த நிதியே நம ஓம் குந்தாக்ய நிதியே நம ஓம் நீல நிதியே நம ஓம் மக நிதியே நம ஓம் வர நிதியே நம என்று நிதிகளை பூஜிக்க வேண்டும்.


மூம்முறை குபேர காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும் .

ஓம் யக்ஷசாய வித்மஹே
ஓம் வைச்ரவ னாய த்மஹி
தந்நோ ஸ்ரீத ப்ரசோதயாத் 

பிறகு 16நாமாவளி அர்ச்சனை (மஞ்சள் குங்குமத்தால் செய்வது மிக விசேஷமானது )

ஓம் க்லீம் குபேராய நம ஓம் க்லீம் ஸ்ரீமதே நமஓம் க்லீம் பூர்ணாய நமஓம் க்லீம் அஸ்வாரூடாய நமஓம் க்லீம் நரவாகனாய நமஓம் க்லீம் சதா புஷ்பக வாகநாய நமஓம் க்லீம் யக்ஷõய நமஓம் க்லீம் நித்யேஸ்வராய நமஓம் க்லீம் நித்யானந்தாய நமஓம் க்லீம் தனலக்ஷ்மி வாஸாய நமஓம் க்லீம் அகாஸ்ரயாய நமஓம் க்லீம் மகதைஸ்வர்ய ரூபாய நமஓம் க்லீம் சர்வக்ஞாய நமஓம் க்லீம் சிவபூஜகாய நமஓம் க்லீம் ராஜயோக வராய நம


அர்ச்சனை முடிந்தபிறகு குபேர காயத்ரி சொல்லி தூபதீபம் காட்டி 

ஓம் லக்ஷ்மி சகித குபேரய நம:மம க்ரஹே அமுதம் நித்யானந்த வாஸம் குரு குரு 


என்று ஆத்ம பிரதட்சிணம் செய்து மலர் போட வேண்டும்.

நிவேதியமாக கற்கண்டு,பால்,அவல்  பாயாசம் வைத்து,நெய் தீபத்தை ஏற்றி ஆரத்தி காட்ட வேண்டும்.  

ஓம் வடதிசை வல்லவா போற்றி ஓம் நவநிதி தேவா போற்றி ஓம் செல்வத்தின் உருவமே போற்றி ஓம் செல்வவளம் சேர்ப்பாய் போற்றி ஓம் திருமகளின் நட்பே போற்றி ஓம் ஐஸ்வர்ய கடாட்சமே போற்றி ஓம் ஆனந்தத்தின் தனமே போற்றி ஓம் குபேர நாயகா போற்றி 


என்று நமஸ்காரம் செய்து ஒரு பெண்ணுக்கு தாம்பூலம் மஞ்சள் தர வேண்டும். 

எளிமையான இந்த குபேர பூஜையை 48நாட்கள் தொடர்ந்து செய்தால் குடும்ப வருமானம் கொழிக்கும்.6வெள்ளிக்கிழமை இந்த பூஜை செய்தால் கடன் தீர வழி வகுக்கும்.

வியாழன் மாலை 5முதல் 7.30மணி வரை குபேர காலத்தில் 9வியாழக்கிழமைகள் செய்து முடிக்க பொருள் சேர வழி உண்டாகும்.8பவுர்ணமிக்கு குபேர அர்ச்சனையுடன் சங்கு பூஜை செய்து வர செல்வம் சேரும்.

இத்தகைய பலன்களை தரக்கூடிய இந்த பூஜையை செய்து பலன் பெறுங்கள் .



உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணி இந்த பதிவை முடிக்கிறேன்.உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் எனக்கு  மேலும் எழுத வழிவகுக்கும்.

  அன்பு தோழி ஈஸ்வரி 


























வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி 


அஷ்டமி திதியில்  அவதரித்தவர் கிருஷ்ணர்.இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது.

அஷ்டமி ,நவமி போன்ற நாட்களில் சுபகாரியங்கள் செய்வது இல்லை என்ற காரணத்தால்தான் இந்த திதிகளில் பகவான் விஷ்ணு கிருஷ்ணராகவும்,ராமராகவும் பிறந்து அதிக கஷ்டங்களை அனுபவித்து இறுதியில் சாதனையும்,சக்தியும் படைத்தவர்களாக திகழ்ந்தார்கள். இந்த நாட்களை சக்தி படைத்த நாட்களாக மாற்றினார்கள்.அஷ்டமி,நவமி புனிதமான திதிகள் ஆகும்.இறைவனுக்கு உரிய நாள்கள்.தோஷ பரிகாரங்களுக்கு ஏற்ற நாட்கள்.


கண்ணை  போல் நம்மை  காப்பவர் கண்ணன். ஸ்ரீ கிருஷ்ணரை கண்ணன்,முகுந்தன்,கோபாலா என்று அழைப்பது உண்டு.முகு என்றால் முக்தியை அருள்வது ,கு என்றால் இவ்வுலக இன்பங்களை அருள்வது .இவ்வுலகம் வாழ்வதற்கும்,முக்தியை பெறுவதற்கும் கிருஷ்ணரே மூலவர் என்ற அடிப்படையில் "முகுந்தா" என்று அழைக்கிறோம்.

கிருஷ்ணரை நம்பி,வழிபட்டால் வெற்றி நிச்சயம்.மனதால் கண்ணனை நினைத்தால் நன்மைகள் தேடி வரும்.




கீதையில் கிருஷ்ணர்,"நீ எனக்கு ஒரு இலையை கொடு  அல்லது பூவை கொடு,இல்லை ஒரு பழத்தை  கொடு.அதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் கொடு,எதை கொடுத்தாலும் பக்தியோடு கொடு.சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் ஏற்று கொள்வேன்" என்கிறார்.









கிருஷ்ண  ஜெயந்தியை  வீட்டில் கொண்டாடும் விதம்  


கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலையில்  வாசல் தெளித்து,வாசற்படியிலிருந்து பூஜை அறை வரைக்கும் கண்ணனின்  பிஞ்சுக் கால்களை மாக்கோலங்களாக இடவேண்டும்.கிருஷ்ணன் தனது மென்பாதங்களை பதித்து ஒவ்வொருவருடைய வீடுகளிலும்  எழுந்தருளிகிறார் என்பது ஐதீகம்.

கிருஷ்ணர் வருகையால் ஆயர்பாடியில்  செல்வவளம்  பெருகியது போல்,ஆண்டுமுழுவதும் வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக கிருஷ்ணரது பாதத்தை அரிசி மாவினால் போடுகிறார்கள். 

அரிசி மாவினால் கோலம் போடுவது ஏன்?


கோகுலத்தில் கண்ணன் தந்து தோழர்களுடன் கோபியர் இல்லம்தோறும் சென்று வெண்ணெயைத் திருடி தின்னும்போது,வீடு முழுவதும் வெண்ணெய் இறைபடும்.அவனது கமல மலர்ப்பாதங்கள் அந்த வெண்ணெயிலே பதிந்து அந்த வீடு முழுவதும் கண்ணனின் பாதசுவடுகள் நிறைந்திருக்கும்.பண்டைகாலத்தில்  மக்கள்  கிருஷ்ண ஜெயந்தி அன்று வெண்ணையினால் பாதங்கள் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.அதன் காரணத்தாலேயே இந்நாளில் மாவினால் கோலம் போடுகின்றனர். 

 கிருஷ்ணரது சிலையை  வைத்து முதலில் நெய் ,தண்ணீர்,பால்,தேன்,தயிர்,கடைசியாக தண்ணீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.சுவாமிக்கு சந்தனம் குங்குமம் இட்டு,புஷ்பங்களால் அலங்கரிக்க வேண்டும்.வஸ்திரம் சாத்துவது விசேஷம். கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல்,வெண்ணெய்,நாவற்பழம் ,சீடை,முறுக்கு,அப்பம் ,பாலால் செய்த பலகாரங்கள் போன்றவற்றை நிவேத்தியமாக வைத்து,கிருஷ்ணாஷ்டகம்,ஸ்ரீமத் பாகவதம்,கிருஷ்ணன் கதைகள் சொல்லி கற்பூர ஆர்த்தி காட்ட வேண்டும்.

கிருஷ்ண  ஜெயந்தி விரதத்தை   கணவனும்,மனைவியும் சேர்ந்து அனுஷ்டிப்பது  மிகவும் உத்தமமாகும்.பகற் பொழுது உபவாஸம் இருந்து இரவில்,கண்ணனது திருநாமத்தை உச்சரித்து வழிபட வேண்டும்.

கோகுலாஷ்டமி அன்று இருக்கும் விரதமானது, பல்லாயிரம் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதற்கு  சமம்.

"ஹரே கிருஷ்ணா!ஹரே கிருஷ்ணா !கிருஷ்ணா  கிருஷ்ணா  ஹரே ஹரே"என்று அவனது திருநாமத்தை வணங்கி பலன் பெறுங்கள் 





















வியாழன், 25 ஆகஸ்ட், 2016

ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி

ஸ்ரீ தன்வந்திரி  ஜெயந்தி


திருமால் மக்களுக்காக மருத்துவராக தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும்.நோய்  வராமல் நல்ல உடல் ஆரோக்கியம்,நீண்ட ஆயுள் கிடைக்க தன்வந்திரி வழிபாடு செய்யப்படுகிறது.

ஸ்ரீ தன்வந்திரி, விஷ்ணு அம்சமாக பின்னிரு கரங்களில் சங்கு,சக்கரத்துடனும் முன் வலக்கையில் அட்டைப்பூச்சியை ஏந்தியும்,இடக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி  அளிக்கிறார்.

அக்கால மருத்துவமுறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட  ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப்பூச்சிகள் பயன்படுத்தப்பட்டனவாம்.

திருமாலின்  24அவதாரங்களில் 17ஆவது அவதாரம் தன்வந்திரி அவதாரமாகும்.இந்து மதத்தில் தன்வந்திரி உடல் நலத்திற்காக வழிபடக்கூடிய கடவுள் ஆவார்.தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் கூறலாம்.

தன்வந்திரி அவதாரம் 

அசுரர்கள் எப்போதும் தேவர்களை துன்பப்படுத்தும் சுபாவம் கொண்டவர்கள்.தேவர்களது சொகுசு வாழ்வு தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அசுரர்கள்  தேவர்களுடன் சண்டை இடுவது உண்டு.தேவர்களைவிட அசுரர்கள் பலசாலிகள்.

அசுரர்களிடம் இருந்து தங்களைக் காக்குமாறு தேவர்கள் மூம்மூர்த்திகளிடம் சரணடைந்தனர்.சாகாவரம் கொண்ட அமிர்தத்தை உண்டால் என்றென்றும் சாவு கிடையாது.அமிர்தத்தை பெற பாற்கடலை தேவர்கள் அசுரர்களின் உதவியுடன் கடைந்தனர்.

பாற்கடலை கடையும்போது ஆலகால விஷம் வந்தது.அதை சிவபெருமான் எடுத்து கொண்டதால் ,அதனை அடுத்து காமதேனு,கற்பக விருட்சம்,ஐராவதம்,மூதேவி,மகாலக்ஷ்மி தோன்றினர்.கடைசியாக அமிர்தத்துடன் விஷ்ணுவின் அவதாரமான தன்வந்திரி தோன்றினார். இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிர்தத்தை தேவர்கள் உண்டதால் சாவாவரம் பெற்றனர்.


"ஹிமா"என்ற அரசனுக்கு திருமணமான நான்காவது நாள் பாம்பு கடித்து இறக்க நேரிடும் என்ற சாபம் இருந்தது.இதை அறிந்த அவள் மனைவி அந்த நாள்(தன் திரேயாஸ்)  இரவில் கணவனைச் சுற்றிலும் ஏராளமான விளக்கு ஏற்றி,நடுவே ஆபரணங்களையும் வைத்து கணவனுக்கு புராணக் கதை கூறி தூங்காது பார்த்து கொண்டாளாம்.பாம்பு உருவத்தில் வந்த எமன் தீப எண்ணெயில் ஆபரணங்களின் பிரகாசத்தில் கூசவே,காலைவரை காத்திருந்துவிட்டு திரும்பி சென்றதாகவும்,மனைவி யமனிடம் இருந்து காப்பாற்றியதாகவும் கருக்கதை உள்ளது.


தன்வந்திரி  நாளன்று தன்னை சுற்றிலும் தீபங்கள் ஏற்றி தன்  மனைவி காப்பாற்றியது  தன்வந்திரி கடவுளே காரணம் என்று மன்னன் நம்பினான்.மக்கள் அனைவரையும்  தன்திரேயாஸ்  தினத்தன்று ,  இரவில் யமதீபம் ஏற்றி  வழிபடவேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஐப்பசி மாத அமாவாசை 2நாட்களுக்கு முன்பாக வரும் திரியோதசி நாளன்று தீபாவளி திருநாள் துவங்கி விடுகிறது.அன்று தன்வந்திரி ஜெயந்தி தன்திரேயாஸ் என்றும் சொல்வர்.

வைணவ ஆலயங்களில் தன்வந்திரிக்கென்று தனி சந்நிதி உள்ளது.திருவரங்கம் ஆலயத்தில் தன்வந்திரி  சந்நிதி பிரசித்தமானது.தன்வந்திரி ஹோமம் செய்வதால் நோய் தீரும்.கோவையிலும்,கேரளாவிலும் தன்வந்திரி பகவானுக்கு ஆலயம் உள்ளன.

நோய்கள் எல்லாம் நீக்கும் தன்வந்திரி  பகவானின் மூல மந்திரம்   

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய!தன்வந்தரயே!அம்ருத கலச ஹஸ்தாய!ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மகாவிஷ்ணுவே நம!

மந்திரங்களுக்கு சக்தியும்,பலமும் அளவிடமுடியாது.

தன்வந்திரி ஜெயந்தியன்று கோதுமை மாவும்,வெல்லமும் சேர்த்து தயாரித்த  பிரசாதத்தை நெய்வேத்தியம் படைக்கலாம். 

தன்வந்திரி போற்றி சொல்லி நோய்களிலிருந்து விடுபடலாம். 



  




































திங்கள், 22 ஆகஸ்ட், 2016

செளந்தர்ய லஹரி (புத்தக வெளியீடு)

செளந்தர்ய லஹரி (புத்தக வெளியீடு )



என் அன்பு தோழிகளுக்கு என் உளம்கனிந்த வணக்கங்கள் பல.

என் பதிவானது புத்தகமாக வந்திருப்பது எனக்கு மிக பெரிய சந்தோஷத்தை தருகிறது.எனக்கு தெரிந்த ஆன்மீக விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து,நீங்கள் பயன் பெற வேண்டும் என்ற   நல்ல எண்ணத்தில்தான் நான் கடந்த ஒரு வருடமாக இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன்.அதே போல், என் ஆன்மீகத் தேடல் என்ற புத்தகத்தை படித்து,என்னை உற்சாகப்படுத்தும் படியாக பலபேர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அவர்களுக்கு என்  நன்றிகள் .அவர்களுடைய ஆசீர்வாதம் எல்லாம் என் குழந்தைகளுக்கு போய் சேர நான் இறைவனை வேண்டுகிறேன்.

https://www.amazon.com/Aanmeega-Thedal-Eswari-Saravanan-ebook/dp/B01K275UP0/ref=sr_1_fkmr0_1?s=digital-text&ie=UTF8&qid=1471861237&sr=1-1-fkmr0&keywords=aanmega+thedal#nav-subnav

என்னுடைய புத்தகம் அமேஸான்.காம் யில் கிடைக்கிறது.அதை வாங்கி ,படித்து பயன் பெறுங்கள். 


செளந்தர்ய லஹரி 

அம்பிகையை ஆராதித்து சகல செளபாக்கியம் அடைய, நாம் பாராயணம் செய்வதுதான் செளந்தர்ய லஹரி.


 செளந்தர்ய லஹரி உருவான கதை 


ஆதிசங்கரர் விஜய யாத்திரை செய்துகொண்டு வரும்பொழுது,  கயிலாயத்திற்கு  சென்றார்.
கயிலாயத்தில் அவர் மெளனமான நிலையில் தியானம் செய்து கொண்டிருந்த சமயம் ,பார்வதி ,பரமேஸ்வரர் இருவரும்  தங்களுக்குள்," கீழே பூலோகத்திலிருந்து நமது கயிலாயத்திற்கு  ஒரு குழந்தை வந்திருக்கிறது".இந்த இளம்வயது பாலகனைப் பார்த்தால் ஏதாவது நாம் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது "என்று பேசிக் கொண்டார்கள்.இவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்தது ஆதி சங்கரருக்கு தெரியாது.

திடீரென்று இரண்டு சுவடிகளைப் பார்வதி பரமேஸ்வரர் இருவரும் மேலே இருந்து ஆதி சங்கரரிடம் தூக்கி எறிந்தனர்.அவரது இரு கைகளிலும் சுவடிகள் பட்டன.ஆனால் ஒன்றைத்தான் அவர் பிடித்தார்.மற்றொன்றை நந்தி பகவான் கயிலாயத்திலிருந்து பறி போகிறதே!  என்று  பிடுங்கி விட்டார்.நந்தியின் ஸ்பரிசம் பட்டதும் சங்கரர் கண்ணைத் திறந்து பார்த்தார்.கையில் ஒரு சுவடிதான் இருந்தது.இன்னொன்றைக் காணவில்லை.சங்கரர் மனம் நொந்து அழுது  மேலே பார்த்த போது,அங்கு பார்வதி,பரமேஸ்வரர்  தரிசனம்  கிடைக்க பெற்றார்.  

அம்பாளை நோக்கி "அம்மா" இது என்ன லீலை? ஒரு சுவடி மட்டுமே எனக்கு கிடைத்தது.இன்னொன்றை நந்தி எடுத்து கொண்டு விட்டார்.எனக்கு கிடைத்த பொக்கிஷத்தை தவற விட்டு விட்டேனே! என்று அழுது புலம்பினார்.

அச்சமயம் அம்பாள் "சங்கரா! நீ அழாதே!.என்னைப் பார்த்து தரிசனம் செய்து சிரம் முதல் பாதம் வரை நீ எழுது.நான் உனக்கு எல்லா இடங்களிலும் காட்சி கொடுப்பேன்.அதனால் கவலையின்றி கிடைத்தை வைத்துக் கொள் "என்றாள். 

முதல் 41ஸ்லோகம் சங்கரிடம் இருந்தது மீதி 59 ஸ்லோகத்தை நந்தி வைத்திருந்தார்.  

அன்னையின் ஆணைப்படி மடை திறந்த வெள்ளம்போல் தாமே 59 ஸ்லோகத்தையும் சங்கரர் அன்னையின் அருளால் பாடி முடித்தார்.இவ்வாறு 100 பாடல்கள் கொண்ட தொகுப்பே செளந்தர்ய லஹரி ஆகும்.இதுவே செளந்தர்ய லஹரி பிறந்த கதை.

முதல் 41ஸ்லோகம் ஆனந்த லஹரி என்று கூறப்படுகிறது.இதை ஈசனே இயற்றி அன்னையை ஆனந்தத்தில்  

செளந்தர்யம் என்றால் அழகு,100 பாடல்களிலும் அன்னையின் அழகும்,அருளும்  அற்புதமாக தாண்டவமாடுகின்றன. 

செளந்தர்ய லஹரி 99வது ஸ்லோகப்படி,இதனை பாராயணம் செய்பவர்களுக்கு பார்வதிதேவியின் எல்லையில்லாத்  அருளோடு,சரஸ்வதி கடாக்ஷமும் கிட்டும் என்பதை அறியலாம்.

ஆடி செவ்வாய்,வெள்ளி கிழமைகளில் செளந்தர்ய லஹரி சொல்லி தேவியின்  அருளை பெறலாம்.  


நன்றி வணக்கம் .








செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம் 

ஆவணி மாதம் பெளர்ணமி தினம் ஆண்களுக்காகக் கொண்டாடப்படும் பண்டிகைதான் ஆவணி அவிட்டம் ஆகும்.இதுதான் உபநயனம் என்பதும்!பூணுல் அணிந்து கொள்வதால் இப்பிறவியிலேயே  மற்றொரு பிறவி எடுத்ததாக அர்த்தம்.அதனால்தான் பூணூல் அணிபவர்களை "த்விஜர்" என்பர்.


பூணூல் அணியும் தினமான "ஆவணி அவிட்டம் "பிராமணர்களுக்கு மிகவும் புனிதமான பண்டிகை ஆகும்.எப்பொழுது ஒரு பிராமிண இளைஞனுக்கு  பூணூல் அணிவிக்கப்படுகிறதோ,அப்போது அவனுடைய மூன்றாவது கண் அதாவது ஞானக்  கண் திறந்து விடப்படுவதாக  நம்பிக்கை.


காயத்ரி ஜெபம் உபதேசம் பெற்றவர்கள்,பழைய பூணூலை கழற்றி விட்டு, புதிய பூணூல் அணிந்து கொள்கிறார்கள். இதை குரு முகமாகத்தான் செய்ய வேண்டும்.

பூணூல் அணியும் வயது- எட்டு முதல் பதினாறு வயது ஆகும்.ஒரு குரு  மூலமாக காயத்ரி மந்திரம் ஓதி,குழந்தையை தந்தையின்  மடியில்  அமரவைத்து முதன்முதலாகப் புதிய பூணூல் போட்டு விடுவார்கள்.இதை ஒரு திருமண விழா போல் கொண்டாடுவார்கள்.அவ்வாறு பூணூலை அணிந்து கொண்டப்பின்,தினம் காயத்ரி மந்திரத்தை காலை,மதியம்,இரவு என 3வேளைகளிலும்  தவறாமல் ஓத  வேண்டும்.

காயத்ரி ஜெபம் தினமும் மனத்தூய்மையுடன் செய்வதால்  மனோபலம் உண்டாகிறது.காயத்ரி ஜெபம் பொருள் அறிந்து ஜபிப்பது  மிகவும் விசேஷம்.


உபகர்மம் 

'உபகர்மம்' என்பதுதான் தமிழில் 'ஆவணி அவிட்டம்' என்றழைக்கப்படுகிறது.ஆவணி அவிட்டத்தன்று வேதபாராயணம் செய்வது விஷேச பலனைத் தரும்.பிதுர்க்களைக் குறித்தும்,ரிஷிகளைக் குறித்தும் தர்ப்பணம் செய்ய வேண்டியது முக்கியமானதாகும்.இதுவே உபகர்மாவின் உட்பொருள்!


நான்கு வேதங்களை பின்பற்றுபவர்கள் அவரவர்கள் வேதம் சொன்ன நான்கு வெவ்வேறு தினங்களில் இந்த உபகர்மாவை நடத்திக் கொள்கின்றனர்.
விசுவாமித்திரால் காயத்ரி ஜெபம் ராமபிரானுக்கு உபதேசிக்கப்பட்டு அதன் பலனாக ராமன் ராவணனை வென்றார் .இதை 27முறை ஜெபிப்பது நலம்.



காயத்ரி ஜெபம் ஜபிப்பதால் என்ன பலன் ?

பூணூல் அணிவிக்கும்போது குரு சொல்லி தருவது  காயத்ரி ஜெபம். 


"ஓம்,பூர்புவ,சுவஹ,தத் ,ஸவிதுர்,வரேண்யம்,பர்கோ ,தேவஸ்ய,தீமஹி,தியோ யோந,ப்ரசோதயாத் என்பதாகும்.இம்மந்திரத்தை 108 அல்லது 1008முறை ஜெபிக்க பாவம் நிவர்த்தியாகும்.

காயத்ரி மந்திரம் விளக்கம் 

பூலோகம்,புவர்லோகம்,ஸ்வர லோகம் முதலிய மூன்று உலகங்களைப் படைக்கக் காரணமான ஒளி பொருந்திய,வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம்.நாங்கள் மேலான,உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். 



இம்மந்திரம் உள்ளத்தை இதமாக்கும்.மந்திரங்களிலேயே  உயர்வான மந்திரம் இது.ஆரோக்கியம்,பலம்,வீரியம் முதலியவற்றை தருகிறது. ஜெபிக்கும் போது உள்ள தூய்மையுடனும் ,ஒழுக்க நெறியோடும் இருக்க வேண்டும்.


வாயால் உச்சரித்து ஜெபித்தால் 1பங்கு பலன் தரும்.
அதிக சப்தமில்லாமல் ஜெபித்தால் 10மடங்கு  பலன் கிடைக்கும்.
உதடு அசைத்து ஜெபித்தால் 100மடங்கு பலன் கிட்டும். 
மனதில் ஜெபித்தால் 1000மடங்கு பலன் தரும்.
























 


ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

வாழவைக்கும் வாழைமரம்

 வாழவைக்கும் வாழைமரம் 

இறைவழிபாட்டுக்கு வாழை மரம் முக்கிய இடம் வகிக்கிறது.வாழை மரத்திலிருந்து இலை ,பூ,காய்,கனி,தண்டு போன்றவைகள் அன்றாட வாழ்க்கைக்கு உணவாகவும்,மருந்தாகவும் பயன்படுகிறது.

வாழைப்பழத்தை நெய்வேத்தியமாக இறைவனுக்கு படைக்கப்படுகிறது.

வாழைமரம் எந்த திசையில் குலை தள்ளினால்,என்ன பலன்? 

வடக்கு நோக்கி குலை தள்ளினால் வீடு சிறக்கும்.
தெற்கு நோக்கி குலை தள்ளினால் அழிவு உண்டாகும்.கிழக்கு நோக்கி குலை தள்ளினாள்  பதவி கிடைக்கும். மேற்கு நோக்கி குலை தள்ளினால் அரச பயம் உண்டாகும்


திருமண நிகழ்ச்சிகளில் வாழைமரம்,மாவிலை தோரணம் கட்டுவது ஏன்?


சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் கும்பல் அதிகமாக இருக்கும்.அதனால்,அசுத்தமான காற்றினால் சுகாதார கேடு உண்டாகும்.


வாழைமரம் ஒரு கிருமி நாசினி.கரியமில வாயுவை உட்கொண்டு சுத்தமான பிராண வாயுவை மட்டும் வெளியிடுகிறது. சுத்தமான காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு தீங்கு ஏற்படாது.அதனால் வாழைமரத்தை கட்டுகிறார்கள். 

குலை தள்ளிய வாழை என்பது பூரண ஆயுள் பெற்றுவிட்ட வாழைமரத்தின் நிலை.திருமண வீடுகளில் வாழையடி வாழையாக மணமக்கள் வாழவேண்டும் என்ற மரபிலே  வாழைமரம் கட்டுகிறார்கள்.


மாவிலை தோரணம் கட்டுதல் தீய சக்திகளை நம்மிடம் அண்ட விடாமல் தடுக்கிறது.மாவிலை அழுகாது .ஆனால் அது காய்ந்து உலரும்.அதுபோல,என்றென்றும் நம் வாழ்க்கை கெட்டுப்போகாமல்,எல்லா வளமும் பெற்று,மங்களம் பெருக வேண்டும் என்ற காரணத்தால் மாவிலை தோரணம் கட்டுகிறார்கள்.

இந்துக்கள் இறைவனைப் பற்றியும்,இறைவழிபாட்டுக்கு செய்யப்படும் பொருட்களுக்கும் விளக்கங்கள் உண்டு.அந்தவகையில் வாழைமரத்திற்கும்,இறை வழிபாட்டுக்கும்சம்பந்தம் உண்டு.

  வாழை மரம் தோன்றிய கதை

ஒருசமயம்,சிவபெருமான்  அசுரனை அழிக்க போருக்கு  சென்றிருந்தார்.பார்வதி தேவியார், முகத்தில் பூசுவதற்கு  சிலாக் கல்லில் மஞ்சள் உரசிக் கொண்டிருந்தார்.அப்போது அவர் தன்  கணவன் போருக்கு சென்றதை நினைத்து , சிந்தனையுடன் மஞ்சளை உரசுகிறார்.சிலாக் கல்லின் குணம் கொஞ்சம் மஞ்சளை உரசினாலும்  அதிகமாக வரும் தன்மை கொண்டது. 

மஞ்சள் மங்கலமானது.மஞ்சள் பெண்களின் தோஷத்தை போக்கக்கூடியது.அதனால்தான்,பெண்களை மஞ்சள் தேய்த்து குளிக்க சொல்வது உண்டு.

பார்வதி தேவி, தனக்கு  தேவையான மஞ்சளை எடுத்து கொண்டு ,  மீதியுள்ள  அரைத்த மஞ்சளை கொண்டு ,குழந்தைமேல் உள்ள ஆசையாலும் ,தன்  கணவன்மீது கொண்ட அன்பால் ,ஒரு அழகான 9வயது ஆண் பதுமையை செய்தார்.அது பார்ப்பதற்கு  அழகாக இருந்தமையால் அதற்கு ஆடை,ஆபரணங்கள் போட்டு அழகுப்படுத்தி தாய்மை உணர்வுடன்,எடுத்து உச்சி முகர்ந்து முத்தமிட்டாள் அன்னை பார்வதி.

அந்த மஞ்சளால் செய்யப்பட்ட  பொம்மையானது  தேவியின் தாய்மை கொண்ட அரவணைப்பால், கனபொழுதில் உயிர் பெற்று, அழகான சிறுவனாக உருவெடுத்தது.கணபொழுதில் விநாயகர்   தோன்றியதால்' கணபதி' என பெயர் பெற்றார்.

தேவியின் விக்கினத்தை [குறையை]நீங்கியதால் "விக்னேஸ்வரர்" என பெயரும் ஏற்பட்டது.பார்வதி தேவியார் விநாயகரை காவல் வைத்துவிட்டு,குளிக்கச் சென்றார்.


போருக்கு சென்றுவிட்டு ,பிரம்மா,விஷ்ணு,சிவன் மற்றும் தேவர்கள் கைலாய வாசலுக்கு வந்தார்கள்.சிவபெருமான் பார்வதியை பார்க்க கைலாயத்திற்கு செல்ல நுழைகையில் விநாயகப்பெருமான் தன்னை மீறி செல்ல முடியாது எனக் கூறி வழிமறித்தார்.


சிவபெருமான் தன்னை உள்ளே போக விடுமாறு சொல்லிப்பார்த்தார்.விநாயகர் அன்னையின் கட்டளையை மீறி,தான் யாராக இருந்தாலும் அனுமதிக்க முடியாது என கூறினார்.ஒரு பொடி சிறுவன் என்னை வழிமறிப்பதா?என சிவபெருமான் கோபம் கொண்டு  தன்சூலாயுதத்தால் விநாயகரது தலையை கொய்ய முற்பட்டார்.
சூலாயுதம் கடலையே எரித்து விடும் ஆற்றல் கொண்டது.ஆனால் முதல் தடவை ,இரண்டாம் தடவை விட்ட சூலாயுதமானது விநாயகரது தலையை கொய்து,மீண்டும் ஒட்டியது.மூன்றாவது முறையாக சிவபெருமான் அளவுக்கடந்த கோபத்தால்,நெற்றிக்கண்ணை திறந்து அக்னியின் மூலமாக விநாயகரை எரித்து விட்டார்.


'அம்மா' என்ற சத்தத்தைக் கேட்டு,பார்வதி தேவியார் ஓடிவந்து விநாயகர் உடலை மடியில் வைத்து அழுகிறார்.தான் கொன்றது தன்  மகனைத் தான் என்று அறிந்து சிவபெருமானும் கவலையுற்றார்.தேவியார் வடித்த கண்ணீர் எரிந்த சாம்பலில்பட்டு ஈரமானது.


தன் மகன் மீண்டும் வேண்டும் என தேவியார் மன்றாட,சிவபெருமானோ ஒருமுறை எரிந்து விட்டால் அதை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது என்று கூறினார்.பார்வதிதேவியின் பிடிவாதத்தால் பிரம்மா ,விஷ்ணு ,சிவன் மூவர் ஆலோசித்து,வடக்கு பார்த்து ஒரு வெள்ளை யானை நோயால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறது அதன் தலையை கொய்து விநாயகருக்கு வைக்க முடிவு எடுத்தனர்.காவலாளிகளை அனுப்பி வெள்ளை யானை தலையை கொண்டுவரச் செய்தனர்.


விஸ்வகர்மாவை அழைக்கிறார்கள்.எந்த ஒரு விஷயத்தையும் வடிவமைப்பது விஸ்வகர்மாவின் வேலையாகும்.வேத மந்திரங்கள் முழங்க தலையை சிறியதாக்கி விஷ்வகர்மா தலையை விநாயகர் உடலுடன் பொருந்துகிறார்.



அனைவருடைய ஆசியுடன்  விநாயகர் உயிர் பெற்றதால்,முதலில் விநாயகரை வழிபட்ட பிறகே,தம்மை வழிபடவேண்டும் என்று மும்மூர்த்திகளும் அருள் வழங்கினர்.விநாயக பெருமான் அவதார நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.

சாம்பல் என்ன ஆனது? 

விநாயக பெருமான் எரிக்கப்பட்ட ஈரசாம்பலானது,நாரத முனிவரது காலில்  பட்டு ,பேச ஆரம்பித்தது.அன்னையின் கண்ணீரால் பேசும் சக்தி பெற்றேன்.இந்த ஈரம் காய்வதற்குள் நான் உலகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்றது.ஈரம் காய்ந்தால் உலர்ந்து காற்றோடு பறந்து போய் விடும்.அதற்குள் ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டும் என்பது  அதன் எண்ணம்.


நாரதர் அதன் நல்ல எண்ணத்தை பாராட்டி கைலாயத்திலிருந்து பூலோகம் போகும் கங்கை நீரில் சாம்பலான உன்னை நான் கரைத்து விடுகிறேன்.விஸ்வகர்மாவை நினைத்து தவம் செய்.அவர் உனக்கு நல்ல வழியை காட்டுவார் எனக் கூறி,கங்கையில் சாம்பல் பட்ட காலை கழுவினார்.நாரதரின் சொல்படி சாம்பலும் விஸ்வகர்மாவை நோக்கி தவம் செய்ய தொடங்கியது.


விஸ்வகர்மா தோன்றி,சாம்பலிடம் ,"மறுஜென்மம் கேட்காதே,நீ கங்கையில் கரைக்கப்பட்டதால் முக்தியடைவாய்.அதனால்தான்,நாம் இறந்தவர்களுடைய சாம்பலை கங்கையில் கரைக்கிறோம்.முதல் முதலில் விநாயகருடைய சாம்பல்தான் கங்கையில் கரைக்கப்பட்டது.

விஸ்வகர்மா,கங்கை தந்த வரம் 

'நான் மீண்டும் பிறந்தால் என்னை தீயினால் அழிக்க முடியாத  பொருளாக படைக்க வேண்டும்' என்று எரிக்கப்பட்ட சாம்பல் விஸ்வகர்மாவிடம் கேட்டது.அதன் வேண்டுக்கோளுக்கு இணங்க யாராலும் தீயால் அழிக்கமுடியாத வாழை மரமாக உன்னை படைக்கிறேன் என்று விஸ்வகர்மா வரத்தை தந்தார்.கங்கையிலிருந்து தவம் புரிந்ததால்,கங்கையும்' மக்கள் பாவங்களை போக்க என்னிடம் வருகிறார்கள்' அதுபோல் உன்னில் இருந்து வரும் வாழைப்பழமானது பூஜைக்கு உரிய பழமாகவும்,சுப நிகழ்ச்சிகளில் வைத்து வணங்குவார்கள் என்று வரத்தை தந்தது.


அதனால்தான் நாம் பூஜையில் வாழைப்பழத்தை வைத்து வணங்குகிறோம்.வாழைமரமானது வெட்ட வெட்ட துளிர்க்கக் கூடியது.அதுபோல் மணமக்கள் வாழ்க்கையானது என்றும் வாழையடி வாழையாக வம்சம் தழைக்க வேண்டும் என்பதால் வாழைமரம் சுபநிகழ்ச்சிகளில் காட்டப்படுகிறது.இவ்வாறு தான் வாழைமரம் தோன்றியது.

நன்றி வணக்கம் 








































   



  

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

நெய் தீபம்

நெய் தீபம் 


அன்பார்ந்த  என்  ஆன்மீக தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.

திருக்கோவில்களில் தீபம் ஏற்றுவது மிகச்சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும்.அதுவும் அதிகாலை,நண்பகல் ,அந்தி பொழுதில் நெய் தீபம் ஏற்றுவது அதிக பலனை கொடுக்கும். சிறந்ததாகும். இறைவனின் அருளை விரைவாக பெறுவது நாம் ஏற்றும் தீபங்கள் மூலமாகத்தான்.

மிகக் கடுமையான பிரச்சனைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை,இறைவனின் கருவறையில் சுடர்விட்டு பிராகசிக்கும் தூங்கா விளக்கில் ஊற்றி வந்தால் போதும்.இத்தகைய தீபம் உடலில் இருந்து பிரிய போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளிப் போடும் அளவிற்கு சக்தி வாய்ந்தது ஆகும்.

பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்கள் பண்ணுவதை, விட ஒரு நெய் தீபம் ஏற்றுவது பலமடங்கு சிறந்தது.

லக்ஷ்மிக்கு உகந்தது நெய் தீபம்.நெய் தீபம் ஏற்றி வீட்டில் வழிபட லட்சுமி நம் இல்லம் தேடி வருவாள்.

.

நெய் தீபம் ஏற்றுவதால் பலன்கள் 


நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷம் இல்லத்தில் நிலைத்து நிற்க்கும்.

கிரகதோஷங்கள் விலகி சுகம் பெறலாம்.

வருமானம் அதிகரிக்கும்.

நெய் தீபம் ஏற்றும் போது  நினைத்தது கைகூடும்.செல்வவிருத்தி உண்டாகும்

கோவில்களில் துர்க்கைக்கு ஏற்றும் தீபமானது நம்மை பார்த்து இருக்க வேண்டும்.தீபம் வடக்கு திசை நோக்கி இருப்பது  நல்ல பலனைத் தரும்.வடக்கு திசையில் தீபம் ஏற்றுவதால் செல்வமும்,மங்களமும் பெருகும்.


திருமகள் ,முருகனுக்கு  நெய் தீபம் ஏற்ற வேண்டும்.

விளக்கேற்றும் போது சொல்ல வேண்டிய சுலோகம் 

கீடா:பதங்கா:மசகாச்ச வ்ருக்ஷ:ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜாபவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!


பொருள்: புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி…இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.

நல்லதை செய்யுங்கள் அதை இன்றே செய்யுங்கள் 


நன்றி 

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

நினைத்த காரியம் நிறைவேற ஆஞ்சநேயருக்கு எளிய வழிபாடு

நினைத்த காரியம் நிறைவேற ஆஞ்சநேயருக்கு எளிய வழிபாடு 

support and subscribe my  you tube channel tamilnattu  samayal 

அன்பு,அறம்,அருள்  போன்ற முழு வடிவமாக திகழும் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு சர்வமங்கள அளிக்கக்ககூடியது.இந்த பூஜையானது நவகிரக பூஜைக்கு சமமாக கருதப்படுகிறது.


ஸ்ரீ ராம காரியத்தில் சிவபெருமான் ஆஞ்சநேயர் வடிவம் எடுத்ததாகவும்,சிவபொருமானை விட்டு பிரியாத பார்வதி தேவி அனுமானின் வாலாக உருவெடுத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.ஆகவே,அனுமனை வணங்குவதால் சிவனையும்,பார்வதியையும் சேர்த்து  வணங்குவதாக கருதப்படுகிறது.

ஸ்ரீஆஞ்சநேய பெருமான் வலிமை முழுவதும் வாலில்தான் உள்ளது. இதற்கு ஒரு வரலாறு உள்ளது.

அனுமானின் வாலின் பெருமையை கூறும்  கதை  

பீமர் பாரிஜாதம் பூ தேடி காட்டில் அலைந்த போது மிகவும் களைப்படைந்து விட்டார்.குறுக்கே குரங்கு வால் ஒன்று தென்பட்டது.அதை நகர்த்த குரங்கை கேட்டார்.


படுத்திருப்பது ஆஞ்சநேயர் என்பதை அறியாமல் தனது வேண்டுக்கோளை வேகமாகச் சொல்லி கோபப்பட்டார்.உடனே,அனுமார்,"வயதாகி விட்டதால் என்னால் என்  வாலை நகர்த்த முடியவில்லை,நீயே அதை எடுத்து ஓரமாக நகர்த்தி விடு"என்று சொன்னார்.பீமர்  வாலை அப்புறப்படுத்த முயற்சி செய்தார்.பலமுறை முயன்றும் முடியவில்லை.அப்போது ஆஞ்சநேயர் தான் வாயுபுத்திரன் என்று அறிமுகப்படுத்தி வாலைத் தானே நகர்த்தி பீமன் போவதற்கு  வழி கொடுத்து வாழ்த்தினார்.


தான் எவ்வளவு முயன்றும் முடியாத ஒன்றை இவ்வளவு சுலபமாக செய்து விட்டாரே என்று ஆச்சரியப்பட்டு பீமன் ஆஞ்சநேயரை பார்த்து ,"உங்கள் வாலின் வலிமையையும் மகிமையையும் தெரியாமல் உதாசீனப்படுத்திய என்னை மன்னித்து,எனக்கு சர்வ சக்திகளையும்,மங்கலத்தையும் அளித்தீர்களே!அதே போல் உங்களது வாலைப் பூஜித்து துதிப்பவர்களுக்கும் சர்வ மங்கலத்தையும் கொடுத்து அருள வேண்டும்" என்று  கேட்டுக்  கொண்டார்.


அப்படியே அனுமாரும் வரம் அளித்தார்.இந்த கதையினால்தான் ஆஞ்சநேயருக்கு வாலில் பொட்டு  வைத்து வழிபடும் முறை வந்தது.


வழிபாடு செய்யும் முறை 

அனுமனுடைய உடலில் வால் ஆரம்பமாகும் பகுதியிலிருந்து ஆரம்பித்து தினசரி முதலில் சந்தனப்பொட்டு வைத்து அந்த சந்தனப்பொட்டின் மேல் குங்குமத்திலகம் இட்டு வரவேண்டும்.


ஒவ்வொரு நாளும் இம்மாதிரி தொடர்ந்து வைத்துக் கொண்டே வந்து வாலின் நுனிவரை முடிக்க வேண்டும்.அப்படி முடிக்கிற நாளன்று, ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்திப் பூஜை செய்ய வேண்டும்.


அப்போது ஆஞ்சநேயர் நாமத்தையும்,ராம நாமத்தையும் ஜெபிக்க வேண்டும்.அப்படி செய்து வந்தால் நினைத்த காரியம் கைகூடும்.அனுமான் சாலீஸாவை தொடர்ந்து சொல்லலாம் அல்லது சனிக்கிழமைகளில் பாராயணம் செய்யலாம்.


திருமணமாகாத பெண்கள் ஆஞ்சநேயர்க்கு  வால்  வழிபாடு செய்வதன் மூலம், பார்வதிதேவியின் அருள் பெற்று, விரைவில் திருமண பாக்கியம் பெறுவர்.