வெள்ளி, 28 ஏப்ரல், 2017

பலராம ஜெயந்தி!


பலராம ஜெயந்தி!

பெருமாளின் அவதாரங்களில் இது 8வது அவதாரமாகும்: கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர். 

அசுரர்களே அரசுபரிபாலனம் செய்தனர் என்றாலும் அவர்களை விட்டு ஆணவம் குறையவில்லை. அதனால் அவர்களுடைய பாரம் பூமிதேவியை வருந்திற்று. அவள் தன் குறையைப் பிரம்ம தேவனிடம் முறையிட்டாள். பிரம்மா பாற்கடலுக்குப் போய் புருஷக்தம் என்ற மந்திரத்தால் தேவர்களுடன் கூடிப் பரந்தாமனைத் துதித்தார். அப்போது ஓர் அசரீரி வாக்கு அவர்களுக்கு கேட்டது. பிரம்மதேவனே! தேவர்களே! பூமியின் துயரத்தை நான் அறிகிறேன். தேவர்கள் யதுகுலத்தில் பிறக்கட்டும். தேவமாதரும் கோபியராக அங்கு ஜனனம் செய்யட்டும். நீங்கள் யது குலத்தில் பிறந்து என் வரவுக்காகக் காத்திருங்கள்! என்று கட்டளை பிறந்தது. அதன் பின் தன் லோகத்திற்கு அவர்கள் போயினர். 

சூரசேனன் என்ற அசுரன் மதுரையை ஆண்டு வந்தான். மத்ரா என்றும் மதுரையைக் கூறுவார்கள். சூரசேனனுக்கு ஒரு தம்பி. அவன் பெயர் உக்கிரசேனன். அவன் மகன் கம்ஸன். ராஜகுமாரியாகிய தேவகிக்கும், வசுதேவர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆனதும் தம்பதியர் திருமண மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக வீடு திரும்ப ரதத்தில் ஏறினார்கள். அந்த ரதத்தை ஓட்டுவதற்கு தேவகியின் சிற்றப்பா மகனும் அண்ணனுமாகிய கம்ஸன் குதிரைகளின் கடிவாளத்தைக் கையில் பிடித்தான். ஊர்வலம் சீரும் சிறப்புமாக மங்கள வாத்தியங்கள் முழங்க வந்து கொண்டு இருந்தது. அப்போது கம்ஸனுக்கு ஓர் அசரீரி கேட்டது. மதியற்றவனே! கம்ஸா, கேள்! உன் தங்கை தேவகிக்கு நீ ரதசாரதியாக இப்போது இருக்கிறாய். அந்த ராஜகுமாரியின் எட்டாவது குழந்தை உன் உயிரை வாங்கப் போகிறது என்று அசரீரி சொல்லியது. அப்போதே கம்ஸன் தேவகியைக் கொன்று விட்டால் தன் மரணப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும் என்று வாளை உருவி அவளைக் கொல்லப் போனான். அப்போது தேவகியை மணந்த வசுதேவன் கம்சனிடம் நல்ல வார்த்தை சொல்லி, நீ என் மனைவியாகிய புதுமணப் பெண்ணை, மணக்கோலம் கலையாது இருக்கும் கன்னியைக் கொல்லும் பாவம் மிகவும் கொடியது. மேலும் அசரீரி இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளால் தானே உனக்கு மரணம் வரும் எனச் சொல்லியது? நான் இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளை உன்னிடம் கொடுத்து விடுகிறேன். நீ அவற்றை உன் இஷ்டப்படி வதம் செய்வதானால் செய்து கொள்! என்று தன் மனைவிக்கு வந்த ஆபத்தை நீக்கி கொண்டார். சிசுக்கள் பிறந்தவுடன் இதைப்பற்றி முடிவு செய்து கொள்வோம் என்று வசுதேவர் தீர்மானித்து அப்படிச் சொன்னார். அதனால் சினம் தணிந்த கம்ஸன் தேவகியை விட்டுவிட்டான்.

ஒருநாள் நாரதர் கம்சனை சந்தித்து, ஆயர்பாடியில் தேவர்கள் அவதரித்திருக்கிறார்கள். அவர்களுடைய தலைவன் நந்தனும், யாதவரும் உனக்குப் பகைவர் என்று சொல்லி புவியின் பாரம்தீர பிரம்மாவால் செய்த ஏற்பாட்டையும் எடுத்துச் சொன்னார். உடனே கம்ஸன் தந்திரமாக வசுதேவரையும், தேவகியையும் சிறையிட்டான். அவர்களுடன் தன் தந்தை உக்கிரசேனனையும் சிறையில் அடைத்து ராஜ்ஜியத்தையும் தான் ஏற்றுக் கொண்டாள். தன் அசுர நண்பர்களுடன் சேர்ந்து யதுகுலத்தாரை அழிப்பதிலேயே குறியாக இருந்தான். அதனால் யதுக்கள் பயந்து வேற பல நாடுகளில் போய் தங்கினார்கள். தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான். ஏழாவது சிசுவை தேவகி கருத்தரித்தாள். அந்தக் கருவில் ஆதிசேஷனே உருவானான். அச்சமயம் மகாவிஷ்ணு தனது யோக மாயை மூலம் ஓர் ஏற்பாடு செய்தார். அவர் தேவியை வரவழைத்து, தேவி! வசுதேவருக்கு ரோகிணி என்ற வேறு ஒரு மனைவி உண்டு. அவளை அவர் ஆயர்பாடியில் ரகசியமாக ஒளித்து வைத்திருக்கிறார். மதுராபுரியில் சிறையில் வாடும் தேவகியின் வயிற்றில் ஆதிசேஷன் கருக்கொண்டிருக்கிறான். நீ அந்தக் குழந்தையை ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றி விடு. அத்துடன் நீ நந்தகோபன் மனைவி யசோதையிடம் பெண்ணாகப் பிறக்க வேண்டும். நான் தேவகியின் வயிற்றில் திருஅவதாரம் செய்யப் போகிறேன். இதனால் சகல மனோ பீஷ்டங்களையும் அளிப்பதற்குக் காரணமானவளாக ஈஸ்வரியாக காளி, வைஷ்ணவி என்றும் பின்னர் மக்கள் உன்னை வழிபடுவார்கள் என்றார். பரந்தாமன் கட்டளைப்படி மாயாதேவி தேவகியின் கர்ப்பத்திலிருந்து குழந்தையை ரோகிணி கர்ப்பத்திற்கு மாற்றினாள். தேவகியின் கர்ப்பம் அவள் சிறையில் வாடும் வேதனையிலும் கம்ஸன் தரும் தொல்லைகளாலும் சிதைந்து போயிற்று என அனைவரும் கம்சனை ஏசினார்கள்.

இச்சமயம் ரோகிணியின் மைந்தனாக ஆதிசேஷன் பிறந்தான். அவனுக்கு யதுகுல குருவாகிய கர்கர் மிகவும் ரகசியமாகப் பசுமடத்தில் சடங்குகளை செய்து ராமன் என்று பெயரிட்டார். ராமன் என்றால் சமிக்கச் செய்வான். தவிர இவன் நல்ல பலசாலியாக இருப்பான் என்பதால் இவனை பலராமன் எனப் பெயரிட்டு அழைப்போம் என்றார் கர்கர். நரகாசுர வதத்தைக் கிருஷ்ணன் செய்த நாளைத்தான் நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம் என்று ஒரு சிலர் சொல்வதுண்டு. அந்த நரகாசுரனுக்கு துவிவிதன் என்ற ஒரு வானரத்தலைவன் இருந்தான். அவனுக்கு மயிந்தன் என்ற சகோதரன் உண்டு. கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்றதைக் கண்டு வானரத் தலைவன் கடும் கோபம் கொண்டான். அவன் தான் எப்படியும் கிருஷ்ணனைக் கொன்று விடுவதாகச் சொல்லி பல அட்டகாசங்களைச் செய்தான். அந்த வைராக்கியத்தில் நேரே கோவர்த்தனகிரியை அடைந்தான். அங்கே தவம் செய்து கொண்டு இருந்த மகரிஷிகளை அவன் அடித்தும் உதைத்தும் இம்சை செய்தான். அந்த நேரத்தில் ரைவத மலையில் பலராமன் கோபியர்களுடன் ஆனந்தமாக இருந்தான். அதைப் பார்த்த வானரத் தலைவன், பலராமன் மீது பாய்ந்தான். அவன் அணிந்திருந்த பட்டு பீதாம்பரத்தைப் பற்றி இழுத்துக் கிழித்தான். சுக்கல் சுக்கலாகக் கிழித்து தூர எறிந்தான். மரத்தை வேரோடு பிடுங்கி பலராமனுடன் இருந்த கோபியரை அடித்து விரட்டினான். இதைப் பார்த்ததும் பலராமனுக்குக் கோபம் வந்தது. உடனே வானரனைக் கட்டிப் பிடித்தான். அச்சமயம் அவன் பலராமனை முஷ்டிகளால் குத்தித் தள்ளித் துன்புறுத்தினான். ஆனால் பலராமனோ அவனைப் பிடித்து கைமுஷ்டியால் அவன் தலையில் ஒரு குட்டு குட்டினான். அந்த க்ஷணத்திலேயே அவன் மூக்கிலும் வாயிலும் ரத்தம் ஒழுக அந்த இடத்திலேயே இறந்தான். இதே போல கோவர்த்தன கிரியில் பலராமன் கண்ணனுடன் மாடு மேய்த்து வந்தான். அப்போது ஸ்ரீதாமன் என்ற சிறுவன் வேகமாக பலராமன், கண்ணனிடம் ஓடி வந்தான்.

பலராமா! கண்ணா! இந்த மலைச்சாரலைக் கடந்து நாம் மலைக்காட்டிற்குள் போனால் அங்கே அநேக பனைமரங்களைக் காணலாம். அந்த பனைமரத்தின் அடியில் பழங்கள் உதிர்ந்து கிடப்பதைப் பார்க்க முடியும். ஆனால் அங்கே நாம் போக முடியாது. காரணம் தேனுகன் என்ற அரக்கன் அந்த வனத்தைக் காத்து வருகிறான். அவன் கழுதை வேடம் போட்டுத் திரிகிறான். அவனைச் சேர்ந்தவர்களும் அது மாதிரியே அவனுடன் காட்டைச் சுற்றி வருகிறார்கள். அவனுக்கு மனித மாமிசம் என்றால் மிகப் பிரியம். அவன் பக்கத்தில் போனவர்களை அடித்துக் கொன்று தின்றுவிடுவான். எனினும் அவன் வசிக்கும் பனைக்கூட்டத்தின் மத்தியில் சிந்தி சிதறிக் கிடக்கும் பழங்களின் வாசனை தான் இது. கண்ணா! அந்த பழங்களை எப்படியாவது எடுத்து வந்து எங்களுக்கு கொடுப்பாயா? என்று ஸ்ரீதாமன் கேட்டான். இதைக் கேட்ட பலராமனும் கண்ணனும் சிரித்தார்கள். வாருங்கள்! நாம் எல்லோரும் பனங்காட்டிற்குச் செல்லலாம் என்று கண்ணன் சொல்லவே கோகுலச் சிறுவர்களும், பலராமனும் அவனுடன் சேர்ந்து அங்கே போனார்கள். இவர்கள் பேசியதைக் கேட்ட தேனுகன் வேகமாக ஓடிவந்து பலராமனைத் தாக்க ஆரம்பித்தான். கழுதையாகிய அவன் தன் பின்னங்கால்களால் பலராமனை உதைத்தான். பலராமனோ கழுதையின் காலைப் பிடித்து இழுத்து அப்படியே உயரே தூக்கி சுழற்றினான்.  இப்படி பலமுறை சுற்றிச் சுழல விட்டு அவன் சடலத்தை பனைமரத்தின் மீது வீசினான். அந்த மரம் அல்லாது அடுத்து இருந்த மரங்களும் அவனோடு பூமியில் சரிந்தன. இவ்வாறு பலராமனும், கிருஷ்ணனும் அரக்கர் கூட்டத்தை அழித்து ஒழித்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக