திங்கள், 6 ஜூன், 2016

அமாவாசையில் தர்ப்பணம்

 அன்பார்ந்த என் ஆன்மீக நண்பர்களுக்கு என்  நமஸ்காரங்கள்.

அமாவாசையில் பித்ருக்களுக்கு வழிபாடு செய்வார்கள் என்பது  நாம் அனைவரும் அறிந்ததே.

நம்முடன்  வாழ்ந்து ,நம் இன்ப, துன்பங்களில் பங்கு கொண்ட,  இறந்து போன முன்னோர்களை நாம் நினைப்பது மிகவும் முக்கியம். நாம் அவர்களுக்கு செய்யும் வழிபாடும்,தர்ப்பணமும் அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து ,நம்முடைய முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவர்.

பித்ருக்கள் பற்றி நான் எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அமாவாசையில் தர்ப்பணம்  

அமாவாசையை தமிழக தெற்கு பகுதியில் நல்ல நாளாக கருதுவது இல்லை .காரணம் அமாவாசை நாளன்று ,முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நாளாக கருதப்படுவதால் .ஆனால் வடக்கு பகுதியில் அன்றுதான் ஒரு புதிய பொருள் வாங்குதல்,நிலம் வாங்குதல் போன்றவற்றை செய்கிறார்கள்.

அமாவாசை தினத்தில் சூரியனும்,சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது .அதாவது ஒன்றையொன்று சந்தித்து கொள்கிறது.இந்நாளில் பித்ருக்களுக்கு பசியும்,தாகமும் அதிகமாக ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பித்ருக்கள்

பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களை குறிக்கும்.தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள்.

நம்முடைய இந்த உடல்,உயிர்,பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே.இதை அனுபவிக்கும்  போது நமது பித்ருக்கள் செய்த பாவம்,பபுண்ணிய பலனை  சேர்த்தே அனுபவித்து வருகிறோம்.

பித்ருக்கள் நமக்கு எப்போதும் நன்மையே செய்பவர்கள்.

பிதுர் கடன்

நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது  அவர்களை பேணி காத்து பசியினை போக்க வேண்டும்.அதேபோல் மறைந்த பின்பும் அவர்களின் பசியை போக்க வேண்டும்.இதுவே பிதுர் கடன்  எனப்படும்.

பித்ரு லோகம் 

சூரியனுக்கு அப்பால்,பல லட்சம் மைல்  தொலைவில் பித்ரு லோகம் இருப்பதாக கருட புராணம் கூறுகிறது.அங்கிருந்து இறந்து போன நம் முன்னோர்கள் தங்கள் குடும்பங்கள் நலமாகவும்,வளமாகவும்  வாழ அருளாசி வழங்க அமாவாசை அன்று  பூமிக்கு வருகிறார்கள். தங்கள் தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள்.அவர்களது வாரிசுகளான நாம்,துவங்கும் காரியங்களை கரிசனத்துடன் பார்க்கிறார்கள்.ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.


நமது பித்ருதான் கடவுளின் அருளை நமக்கு வெகு எளிதாக பெற்றுத்தரும் வல்லமை பெற்றவர்கள்.நமது வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றி தருபவர்கள் நமது பித்ருக்களே.

எனவே,பித்ருக்களை  சிரத்தையோடு வழிபாடு செய்து அவர்களின் பசியினை போக்க வேண்டும்.அவ்வாறு பசியினை போக்காமல் விட்டுவிட்டால் நமது பித்ருக்கள் பசியால் வாடுவர்.வருத்தத்துடன் பித்ரு லோகம் செல்வர்.

வருத்தத்துடன் போகும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர்.அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபம் அளிப்பர் .இந்த சாபம் தெய்வ அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது.கடவுளின் வரங்களையே தடை செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் நமது பித்ருக்கள்.எனவே அவர்களின் கோபத்திற்கோ அல்லது சாபத்திற்கோ ஆளாகாமல் இருப்பது நல்லது.மேலும் அவர்களின் பசியைப் போக்கி அவர்களை அமைதிபடுத்த வேண்டும்.

நமது வீடு தேடி வரும் பித்ருக்களுக்கு எள்ளு கலந்த தண்ணீரை கொடுக்க வேண்டும். பித்ருக்கள் காக்கை வடிவத்தில் வந்து நாம் கொடுக்கும் உணவை சாப்பிடுவதாகச்  சாஸ்திரங்கள் சொல்கின்றன.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் 


உங்கள் அன்பு தோழி
 ஈஸ்வரி 
























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக