குல தெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
'நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்' என்பார்கள். குலதெய்வ வழிபாட்டை அத்தனை எளிதாக எல்லோராலும் செய்யமுடிவதில்லை.


நிறைந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டு பூஜை அறையில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றிக்கு இட்டுக் கொண்டு, ஒரு ஐந்து முக குத்து விளக்கு ஏற்றி, அதன் தண்டு பாகத்தில் ஒரு புதிய துணி (வஸ்திரம்) சாற்றி, பூ சாற்றி அதற்கு முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, தீபம், தூபம் காட்டி, “எங்கள் குல தெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம். ஆகவே, எங்கள் குலதெய்வத்தை நினைத்து, தங்களையே அவராகப் பாவித்து, இந்தப் படையலை சமர்ப்பிக்கின்றோம். இதனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குல தெய்வத்தைக் காட்டுவீராக” என்று வேண்டிக்கொண்டால், இறைவனின் அருளால் குலதெய்வம் பற்றிய விவரம் உங்களுக்குத் தெரியவரும்.

இன்னொரு முறையும் இருக்கிறது. உங்கள் வீட்டின் தலை வாசலில் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத் துணி சாற்றி, வெற்றிலை பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலைப்படி பூஜை செய்து மேற்சொன்னவாறு அதே வேளையில் வேண்டிக் கொண்டால், உங்கள் குல தெய்வம் பற்றி உங்களுக்குத் தெரியவரும்.
மொத்தம் மூன்று தெய்வங்கள் ஒரு குடும்பத்துக்கு வரும். அதாவது ஊருக்குள் இருக்கும் மூல தெய்வம். அது பெருமாளாக இருக்கலாம், சிவனாக இருக்கலாம், அம்மனாக இருக்கலாம். அடுத்து குலதெய்வம். பிறகு காவல் தெய்வமாக ஒரு தெய்வம் - அது ஆண் தெய்வமாக இருக்கலாம் அல்லது பெண் தெய்வமாக இருக்கலாம். மொத்தத்தில் 18 ஆண் காவல் தெய்வங்களும் 18 பெண் காவல் தெய்வங்களும் இருக்கின்றனர். ஐய்யனார், மதுரை வீரன், காத்தவராயன், ஒண்டிக் கருப்பன், கருப்பண்ண சாமி, வீரனார், சங்கிலிக் கருப்பன், ஆகாய கருப்பன், ஆத்தடி கருப்பன், நொண்டிக் கருப்பன், மார்நாட்டு கருப்பன், மண்டக் கருப்பன், முன்னடிக் கருப்பன், சமயக் கருப்பன், பெரிய கருப்பன், சின்னக் கருப்பன் உள்ளிட்ட கருப்பசாமிகள் உள்ளனர். அதேபோல வீரமா காளி, குலுமாயி அம்மன், மகமாயி, எல்லைப் பிடாரி, பெரியாச்சி, எல்லை மாரி, பேச்சியம்மன், பூவாடைக்காரி, செல்லியம்மன், கன்னிமார், சீலைக்காரி, பச்சையம்மன், துலக்கானத்தம்மன், வனதுர்கை, செல்லாயி அம்மன், காட்டேரி அம்மன், அம்முச்சியார், மாசானியம்மன் உள்ளிட்ட பெண் தெய்வங்கள் உள்ளனர். இந்தக் காவல் தெய்வங்கள் அந்தந்த பகுதிக்கு ஏற்ப வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.
குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம். வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்குச் செய்யவேண்டியதைச் செய்து, வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிப்பர். அவர்கள் உங்களிடம் அதிகம் எதுவும் எதிர்பார்ப்பதில்லை. உங்கள் கையால் ஒரு சாதாரண அபிஷேகம், ஒரு புதுத்துணி, ஒரு கவளம் அரிசி வெல்லம் கலந்த சோறு. இதைக் கொடுத்தாலே பொதும். அவர்கள் எப்போதுமே உங்கள் வீட்டின் வாசலில் காவலாக நின்று, எந்தக் கெட்ட விஷயத்தையும் அண்ட விடமாட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக