சனிபகவான் தீவிரமான சிவ பக்தர். காசியில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து அதன் பயனாக கிரக பதவியையும் அதிகாரமும் பெற்றார். எனினும் தனக்கு அருள் கொடுத்த சிவபெருமானை பற்றித் திருவிளையாடல் செய்தவர்
ஒருசமயம், சனிபகவான் சிவபெருமானைத் தேடிக் கைலாயம் சென்றார். கயிலையில் சிவபெருமான் பார்வதியோடு அமர்ந்திருந்தார். தன்னைப் பற்றுவதற்காக வெகுதூரத்தில் சனி வருவதை அறிந்த சிவபெருமான், சனியின் பிடியிலிருந்து தப்பிக்க எண்ணினார். தான் செய்த முடிவை நிறைவேற்ற எண்ணிய சிவபெருமான் தேவியிடம் ""நான் சிறிது காலம் தவம் செய்யப்போகிறேன்'' என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார். பக்கத்தில் கயிலை மலையில் இருந்த ஒரு குகைக்குள் புகுந்தார். அந்த குகை வாசலையும் பெரிய பாறையால் நன்றாக அடைத்துவிட்டார். உள்ளே சென்ற சிவபெருமான், நிஷ்டையில் யோக சமாதியில் ஆழ்ந்து விட்டார்.
ஏழரை ஆண்டுகள் ஆனபிறகு சமாதி கலைந்து எழுந்தார். சனிபகவான் பிடியிலிருந்து தப்பிவிட்ட மகிழ்ச்சியோடு சிவபெருமான் குகையில் பாறையை விலக்கிவிட்டு வெளியே வந்தார். குகை வாசலில் வெளியே சனிபகவான் நின்று கொண்டிருந்ததைக் கண்டு சிவபெருமான் அதிர்ச்சியுற்றார். வாசலில் நின்ற சனிபகவான் சிவபெருமானை நோக்கி, "" பிரபோ, என்னுடைய கடமை முடிந்தது. தங்களிடம் விடைபெற்றுக் கொள்கிறேன்'' என்றார்.
அதைக்கேட்ட சிவபெருமான், ""உன் பிடியிலிருந்து தப்பிப்பதற்காகவே, குகைக்குள் சென்றேன். ஆனால் நீயோ, உன் கடமை முடிந்தது என்கிறாயே! எனக்கு ஒன்றும் புரியவில்லையே!'' என்றார்.
சனிபகவான் புன்னகையோடு சிவபெருமானை நோக்கி, ""ஐயனே, தங்களை அம்பிகையிடமிருந்து பிரித்து இருளாக இக்குகைக்குள் ஏழரை ஆண்டுகள் அடைத்து வைத்தது அடியேன் தான். அதனால் இப்பொழுது நான் சென்று வருகிறேன். விடை கொடுங்கள்!'' என்று கூறி பணிந்து நின்றார்.
சிவபெருமானால் ஈஸ்வரன் பட்டம் பெற்ற சனீஸ்வரனின் பிறப்பு வியப்பானது. சூரியபகவானின் மனைவி சஞ்சிகை. சூரியனோடு வாழ்ந்து மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த அவள், தனது சாயலில் ஒரு பெண்ணைப் படைத்து அங்கேயே விட்டுவிட்டு தன்னுடைய கணவனுக்குத் தெரியாமல் நீங்கினாள். சஞ்சிகை சாயலில் இருந்த சாயா தேவிக்கும் சூரியனுக்கும் பிறந்த இரண்டாவது மகன் சனிபகவான் ஆவார்.
சனிபகவான் நீல ஆடை புனைந்தவர். எட்டுக்குதிரை பூட்டிய இரும்புத் தேரை உடையவர். காகத்தை வாகனமாக உடையவர். கழுகு இவருடைய வாகனமாகக் கருதப்படுகிறது. மை போனற கருமை நிறம் உடையவர். மேற்குத் திக்கை இடமாகக் கொண்டவர். "சனைச்சரன்' என்பதே இவரின் இயற்பெயர். இவர் ராசிமண்டலத்தில் மெதுவாக இயங்கக்கூடியவர். முட்டை வடிவமான ராசி மண்டலம் 360 பாகைகளைக் கொண்டது. அந்த 360 பாகைகளும் 12 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் ராசி என்று 12 ராசிகளாக அழைக்கப்படுகிறது.
சூரியன் ஒரு ராசியை கடக்க ஒரு மாதமாகும். ஆனால் சனிபகவானோ ஒரு ராசியைக் கடக்க இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. அந்த முறையில் 12 ராசிகளையும் கடந்து செல்ல சனிபகவானுக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன. மெதுவாகச் சென்றாலும் உறுதியாகப் பற்றக் கூடியவர் சனிபகவானே ஆவார்.
சனிபகவான் எழுந்தருளியுள்ள ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இங்கு, ஏழரைச் சனி, கண்டகச் சனி இவற்றால் பீடிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைதோறும் சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக