உழைக்காமலே வரம் கேட்கலாமா?
உழைக்க மறுப்போருக்கு உண்பதற்கு உரிமையில்லை' என்பது பழமொழி; கடமையை செய்பவருக்கே கடவுளும் உதவுவார் என்பதற்கு இக்கதை ஓர் உதாரணம்...
ஆஞ்சநேய பக்தர் ஒருவர், அவ்வப்போது ஒற்றை மாட்டு வண்டியில், நகர்புறம் சென்று, கிராமத்திற்கு திரும்புவார். ஒருநாள் அவ்வாறு திரும்பும்போது, வண்டிச் சக்கரம் வாய்க்கால் சேற்றில் ஆழப் புதைந்து விட்டன.
வண்டியிலிருந்து இறங்கி, வாய்க்கால் ஓரமாக தரையில் உட்கார்ந்து, அனுமனை நினைத்து, 'கடலை தாண்டி போய், சீதையின் கண்ணீரை துடைத்தவனே... என் துயரை துடைக்க வா... வண்டிச் சக்கரம் வாய்க்கால் சேற்றில் புதைந்து விட்டது; வந்து எடுத்துக் கொடு...' என, துதிபாடி முறையிட ஆரம்பித்தார், வண்டிக்காரர்.
அவருடைய புலம்பல் வெகுநேரம் நீடித்தது; வண்டிக்காரரின் இறை நம்பிக்கைக்கு இரங்கி, அவனுக்கு காட்சியளித்து, 'பக்தா... உன் துாய்மையான பக்தியை பாராட்டுகிறேன்; அதேசமயம், முயற்சி செய்யாதவனுக்கு தெய்வத்தால் கூட உதவ முடியாது. ஸ்ரீராமர் நினைத்திருந்தால், இருந்த இடத்திலிருந்தே, ராவணனை சம்ஹாரம் செய்திருக்கலாம். காடு, மேடெல்லாம் கடந்து, கடுந்துயரங்களை அனுபவித்திருக்க வேண்டியதில்லை.
'கடவுளாக இருந்தாலும், தேரோட்டியாக இருந்து, குதிரைகளை பராமரிக்கும் வேலையை பொறுப்பாக செய்தார், ஸ்ரீராமர். காரணம், ஒவ்வொரு உயிரும், தனக்கான கடமையை செய்வதே, பிறவியின் நோக்கம் என்பதை, இவ்வுலகிற்கு உணர்த்துவதற்காக! 'ஆனால் நீயோ, வண்டிச் சக்கரத்தை எடுப்பதற்கான சிறு முயற்சியைக் கூட செய்யாமல், பிரார்த்தனையின் மூலம் பலனை எதிர்பார்க்கிறாய்.
'உன் கடமையை ஒழுங்காக செய்; அதன்பின் தெய்வத்திடம் முறையிடு. மாட்டை விரட்டி, சக்கரத்தை தோள் கொடுத்து துாக்கி, அது சேற்றிலிருந்து வெளியே வருவதற்கு முதலில் உன் உழைப்பை பயன்படுத்து, அதற்கு, நான் பலம் தந்து உதவுவேன்...' என்றார்.
வண்டிக்காரர் அப்படியே செய்ய, சேற்றில் புதைந்திருந்த வண்டி, ஆஞ்சநேயர் அருளால் வெளியே வந்தது.
சித்த புருஷர்கள், ஞானிகள், மகான்கள் என பலரும், அவரவர் வழியில் உழைத்து தான் உன்னத நிலை அடைந்தனரே தவிர, உழைக்காமல் யாரும் உயர்வை அடையவில்லை. அதனால், உழைக்காமல், பிரார்த்தனை மூலம் பலன் பெற நினைக்காமல், உழைப்போம், உயர்வோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக