நாசுக்கு என்பது அவசியமா? இல்லையா?
"நாசூக்கு" மிக அவசியம் ... ஞானிகளுக்கு கூட...!
பிராமணர்கள் கடல் கடந்து போகக் கூடாது என்பது அந்தக் கால ஆச்சாரமாம் ...அதை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன்...!
அப்படி கடல் கடந்து வெளிநாடு போய் வந்தவர்களுக்கு காஞ்சி மஹா பெரியவர் , தன் கையால் தீர்த்தம் கொடுப்பது இல்லையாம் .அதையும் கேள்விப்பட்டிருக்கிறேன்...!
ஆனால்..இந்த "நாசூக்கு" சம்பவத்தை இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன்..!
# ஒரு தடவை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி – சதாசிவம் தம்பதிகள் , கச்சேரிக்காக வெளிநாடு போய் விட்டு திரும்பி வந்தவுடன் ...நேராக காஞ்சி மஹா பெரியவரை தரிசனம் செய்ய வந்து விட்டார்கள்...அவர்கள் வந்த அந்த வேளையிலே பெரியவர் தன் கையாலேயே பக்தர்கள் எல்லாருக்கும் தீர்த்தம் கொடுத்துக் கொண்டிருந்தாராம்...
சற்றும் யோசிக்காமல் , சதாசிவமும் தீர்த்தம் வாங்க வரிசையில் நின்று விட்டாராம்...[அவருக்கு இந்த ஆச்சாரம் ,அனுஷ்டானம் எல்லாம் அந்த சமயத்தில் எப்படி மறந்து போனதோ..தெரியவில்லை..! ]
சதாசிவத்துக்கு பின்னால் ரா.கணபதி என்ற ஆன்மீக எழுத்தாளர் நின்று கொண்டிருக்கிறார்..! [இவர்தான் காஞ்சிப் பெரியவர் சொல்லச் சொல்ல அவற்றைத் தொகுத்து "தெய்வத்தின் குரல்” என்ற நூலை எழுதியவர்] காஞ்சி மடத்துக்கு ரொம்ப நெருக்கமான அவருக்குத் தெரியும்...கடல் கடந்து போய்விட்டு வந்த பிராம்மணர்களுக்கு பெரியவர் தன் கையால் அபிஷேக தீர்த்தம் தருவது சாஸ்த்திர விரோதம்...அதனால் கண்டிப்பாக கொடுக்க
மாட்டார் என்று..! ஆனால்....இதை எப்படி நாசூக்காக சதாசிவத்துக்கு எடுத்துச் சொல்வது..?
இப்போது ரா.கணபதிக்கு திக் திக்....
ஆனால், சதாசிவமோ இதைப் பற்றி எதுவும் சிந்திக்காமல் , ரொம்ப ரொம்ப சந்தோஷமாக ,பெரியவரை நோக்கி கியூவில் முன்னேறிக் கொண்டே இருக்கிறார் ...
அவர் பக்கத்தில் நெருங்க நெருங்க , ரா.கணபதிக்கு “பக் பக்”....
மஹா பெரியவர் , சதாசிவத்துக்கு மட்டும் தீர்த்தம் கொடுக்காமல் விட்டு விட்டால் சதாசிவம் மனசு புண்பட்டுப் போவாரே..? இந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி இங்கிதமாக சமாளிப்பது ?
ஊஹூம்..இனி அதைப் பற்றி யோசித்துப் பலன் இல்லை..! வரிசை நகர்ந்து.......நகர்ந்து...........இதோ... சதாசிவம் பெரியவர் முன் , குனிந்து பணிவோடு பவ்யமாக தீர்த்தத்துக்காக கை நீட்டி நிற்கிறார் ...
படபடக்கும் இதயத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார் ரா.கணபதி...!
நீட்டிய கைகளோடு சதாசிவம் நின்று கொண்டிருக்க....மஹா பெரியவர் , மிக இயல்பாக தீர்த்த பாத்திரத்தை கீழே வைத்து விட்டு , சற்றே திரும்பி அவருக்கு அருகிலிருந்த தேங்காயை எடுத்து தரையில் “பட்” என்று தட்டி உடைத்து....அதிலிருந்த இளநீரை சதாசிவத்தின் கைகளில் விட்டு விட்டு சொன்னாராம் :
“இன்னிக்கு உனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்!”
ஆஹா...அசந்து விட்டாராம் ரா.கணபதி...!
என்ன ஒரு இயல்பான இங்கித சமாளிப்பு....நாகரிக நாசூக்கு .! இளநீரை ஏந்தியபடி நின்ற சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்ட பூரிப்பாம்...! பக்கத்தில் நின்ற ரா.கணபதியிடம் திரும்பி .திருப்தியோடு சொன்னாராம் :
“பாத்தியா..? இன்னிக்கு பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷலா தீர்த்தம் கொடுத்துருக்கா... ”ரா.கணபதி , மஹா பெரியவர் முகத்தைப் பார்க்க ...அதில் மந்தஹாசப் புன்னகை...!
பெரியவர் சாஸ்திரத்தையும் மீறவில்லை..! மற்றவர் மனசு நோகும்படி நடந்து கொள்ளவும் இல்லை...! இதற்குப் பெயர்தான் “நாசூக்கு”
# ஆம்... நாசூக்கு மிக மிக அவசியம் .. ஞானிகளுக்கு கூட...!
# நமது பேச்சு , மற்றும் பழக்கவழக்கங்களில் மற்றவரைப் புண்படுத்தாத தன்மை...மென்மை..இங்கிதம்..
அதுவே தெய்வீகம்...!
அதை அருமையாக வெளிப்படுத்திய அந்த மஹா பெரியவரை , மனமார நினைவில் வைப்போம் வணங்குவோம்!!.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக