வியாழன், 17 மே, 2018

விளக்கு வைத்து சாப்பிடுவது ஏன்?

விளக்கு வைத்து சாப்பிடுவது ஏன்? 

முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு பிராஹ்மணன் இருந்தான். அவனுக்குக் கல்யாணம் நிச்சயமாயிற்று. ஒரு தொண்டுக் கிழம் அவருடைய கடைசி பெண்ணை விவாஹம் செய்துவிட்டு உயிர்விடக் காத்திருந்தது. கல்யாணமும் சுகமே முடிந்தது. அன்றிரவு சாந்தி முகூர்த்தம்; மாப்பிள்ளை சுத்த வைதீகப் பிராஹ்மணன்; ஆகையால் மாலைச் சந்தியாவந்தனத்தை முடிக்க குளக்கரைக்குச் சென்றான். அந்த ஊரில் முதலைகள் அதிகம்; அது பற்றி புது மாப்பிள்ளையை யாரும் எச்சரிக்கவில்லை. அவர்கள் இதெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்து விட்டார்கள் போலும்.


குளத்தில் இறங்கிய புது மாப்பிள்ளையின் காலை ஒரு முதலை கவ்வியது. மாப்பிள்ளைக்கு ஒரே நடுக்கம்; இருந்தபோதிலும் சுதாரித்துக் கொண்டு,

“முதலை மாமா! முதலை மாமா! ஒரே ஒரு விண்ணப்பம். நான் இப்போதுதான் கல்யாணம் கட்டி, சாந்தி முகூர்த்தத்துக்கு காத்திருக்கிறேன்; நீ என்னை சாப்பிடுவதானால் சாப்பிடலாம்; ஆனால் நான் போய் என் மனைவியுடன் படுத்துவிட்டு, விஷயத்தைப் புரியவைத்துவிட்டு, அனுமதி வாங்கி வந்து விடுகிறேன்; என்னை நம்பி ஒரு பெண்ணும், அவளது தந்தை ஒரு தொண்டுக் கிழமும் இருக்கின்றனர். நான் போகாவிடில் இருவரும் உயிர் விடுவர். நீ மூன்று உயிர்களைப் பறித்த பாவத்துக்கு ஆளாவாய். மேலும் பிராஹ்மணர்கள் ஸத்யம் தவறாதவர்கள் என்பது உனக்குத் தெரிந்திருக்கும்;நான் கட்டாயம் திரும்பி வருவேன். என்னை விடுவாயா?” என்று கேட்டனன்.
முதலை சொன்னது:
“உன்னை இப்போது சாப்பிட்டாலும் நாளை சாப்பிட்டாலும் எனக்கு ஒன்றுதான்; போய் வா மகனே, போய் வா! இன்று போய் நாளை வா!”

அவன் மனைவியிடம் சென்றான்; சாந்தி முகூர்த்தம் தடபுடலாக நடந்தது. நள்ளிரவில் மனைவியிடம் எல்லா வற்றையும் சொன்னான். அவள் சொன்னாள்—“ நாளை வரை காத்திராதீர்கள் இப்போதே போங்கள்”.

அவனும் புறப்பட்டான்; இந்த மாதிரி கொலைகார மனைவியிடம் வாழ்வதைவிட ஒரு முதலையின் பசியைத் தீர்ப்பது சாலச் சிறந்தது. இரண்டு மணி நேரம் சுகம் அனுபவித்த பின், முதலையிடம் என்னைப் பலி கொடுக்கத் தயாராகி விட்டாளே! என்று மனதுக்குள் வசை பாடிக்கொண்டு குளத்துக்கு வந்தான்.

“முதலை மாமா! நீ நாளை வரை காத்திருக்க வேண்டாம்; என் மனைவியே என்னை அனுப்பி விட்டாள்; என்னைச் சாப்பிடு என்றான்.
முதலையும் தாவிப் பாய்ந்தது.
அப்போது ‘பளிச்’ என்று ஒரு வெளிச்சம் தோன்றி மறைந்தது; மீண்டும் இருள் சூழ்ந்தது.

முதலை சொன்னது,
“அடக் கடவுளே! சாப்பிட வந்த போது விளக்கு அணைந்துவிட்டதே. நான் உன்னைச் சாப்பிடக்கூடாது. சாப்பிடும் போது விளக்கு  அணைந்தாலும், விளக்கு இருந்தாலும் சாப்பிட மாட்டேன். நீ போகலாம்” என்று அனுப்பிவிட்டது.

திரும்பிப் பார்த்தான்; அவன் மனைவி ஒரு சட்டியில் அணைந்த  விளக்குடன் ஓடி வந்தாள். அவள் சொன்னாள்
“என் பிராண நாதா! சுவாமி! நீங்கள் எந்த விக்கினமும் இல்லாமல் திரும்பி வரவேண்டும் என்று உலகிள்ள எல்லா ஸ்வாமியையும் பிரார்த்தித்தேன். என் பிரார்த்தனை பலித்தது” என்று சொல்லி அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

விளக்கின் மஹிமை இத்தகையது. மிருகங்களும் ஸத்தியத்துக்குக் கட்டுப்படும். இதனால் மனிதர்கள் யாரும் விளக்கு ஏற்றாமலோ , விளக்கு அணைந்தாலோ சாப்பிட மாட்டார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக