வியாழன், 3 மே, 2018

பாபாவின் தினசரி வாழ்கை முறை

பாபாவின் தினசரி வாழ்கை முறைsai baba temple க்கான பட முடிவு


பாபா சூரியன் உதிக்கும் முன் அதிகாலையிலேயே எழுந்து விடுவார். துனிக்கு முன்னால் உள்ள தூணின் மீது சாய்ந்து இருந்தபடி தியானத்தில் இருப்பார். அவர் என்ன செய்கின்றார் என்பது எவருக்கும் தெரியாது. தன்   அருகில் எவரையும் அப்போது அவர் வர விடமாட்டார். யார் வந்தாலும் பதினைந்து அடி தள்ளி நின்றபடிதான் இருக்க வேண்டும். தியானத்தில் உள்ளபோது அவர் 'யாதே ஹுக்', 'அல்லா வாலி ஹாய்', 'அல்லா மாலிக் ஹாய்' என்று முணுமுணுப்பது உண்டு. அதன் பின் சில யோகக் கலைகளை செய்வார்.

அந்த நேரத்தில் அப்துல் பாபா மற்றும் மாதவ் பாஸ்லே என்பவர்கள் மட்டும் மசூதிக்கு உள்ளே சென்று தரையை பெருக்கி சுத்தம் செய்து, விளக்குத் திரியை சரி செய்து, துனிக்கு அருகில் விறகுகளை வைத்து விட்டுச் செல்வார்கள்.

விடிந்த பின் பாகோஜி ஷிண்டே என்பவர் உள்ளே சென்று பாபாவின் கால்களையும், கைகளையும் மசாஜ் செய்து விடுவார். 1910 ஆம் ஆண்டு பாபா எரிகின்ற நெருப்பில் விழுந்த குழந்தையை காப்பாற்றியபோது அவர் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது. பாகோஜி பாபாவின் பழைய கட்டை பிரித்து விட்டு, நெய்யை தடவி புதுக் கட்டு போடுவார். அவர் பாபா சமாதி அடைவதற்கு முன் எட்டு வருட காலம் அவருக்கு சேவை செய்து வந்தார் . பாபாவுக்கு தீப்புண் ஆறிய பின்னரும் அவர் பாபாவுக்கு தொடந்து சேவை செய்து வந்தார். அவர் புண்ணிய ஆத்மா.

பாபாவுக்கு ஊது குழாயில் புகையிலை அடைத்து வைத்து நெருப்பு பற்ற வைத்து பாபாவிடம் கொடுக்க பாபா அதில் இருந்து வரும் புகையை சிறிது இழுத்தப் பின் அதை அவரிடமே திருப்பித் தந்துவிடுவார். அப்போது காலை ஏழு அல்லது ஏழரை ஆகிவிட பாபாவின் தரிசனத்துக்கு பக்தர்கள் வரத் துவங்கி விடுவார்கள். வந்த சிலரிடம் பாபா எப்படியெல்லாம் மிக தூரத்தில் இருந்தவர்களையும் தான் காப்பாற்றினேன் என்பதையும், மரணம் அடைந்தவர்களை சொர்கத்துக்கு அனுப்பிய கதைகளையும் கூறுவது உண்டு. அவர் கூறியதையே பாபாவினால் குணம் அடைந்த மற்றும் காப்பாற்றப்பட்ட மக்கள் வந்து கூறும்போது பக்தர்கள் பாபா கூறியது உண்மையே எனத் தெரிந்து கொள்வார்கள்.



அவை எல்லாம் நடந்து கொண்டு இருக்கும் போதே மாதவ் பால்சேயும் துகாராமும் வந்து பக்கெட்டுகளில் நீர் நிரப்புவார்கள் . பாபா பல் துலக்கியதே இல்லை. அவர் வாயை கொப்பளித்து விட்டு முகத்தையும் கை ,கால்களையும் அலம்பிக் கொள்வார். அவர் முகத்தை அலம்பிக் கொள்வதே பார்க்க தனி அழகாக இருக்கும். அவர் வாயை கொப்பளித்து துப்பும் நீரை அங்குள்ள தொழு நோயாளிகள் தம் உடம்பில் பூசிக் கொள்வார்கள். அது அவர்களுடைய நோயை தீர்க்கும் என்ற நம்பிக்கை உண்டு. பாபா முகத்தை கழுவிக் கொள்ளும் போதே பக்தர்கள் காகட ஆரத்திக்கு தேவையான பொருட்களை எடுத்து வருவார்கள். சாவடியில் ஒரு நாள் விட்டு ஒருநாள் காகட ஆரத்தி நடைபெறும்.


பாபா தினமும் குளித்தது இல்லை. பரதேசிகளுக்கு தினமும் குளிக்க வேண்டும் என்பது இல்லை. குளித்தாலும் அவர் கிராமத்தை விட்டு சற்று தள்ளிப் போய் புதர் மறைவில் இருந்தவாறு குளிப்பாராம் . வெகு காலத்துக்குப் பின்னரே அவர் மசூதியில் குளிக்கத் துவங்கினார். இரண்டு தாமிரக் குடத்தில் வெந்நீரும், குளிர்ந்த நீரும் சேவகர்கள் கொண்டு வர மசூதியின் வாசல் திரை சீலை போடப்பட்டு மறைக்கப்படும். பாபா தனக்கு தேவையான அளவு வெந்நீர் கலந்து கொண்டு குளிப்பார். சாதாரணமாக அவர் குளிக்க ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் ஆகும்.

குளித்தவுடன் அவர் துனிக்கு முன் சென்று நிற்க அவருடைய நெருங்கிய பக்தர்கள் அவருடைய உடலைத் துடைத்து விடுவார்கள். அவர் உபயோகித்த நீரை பலரும் தமது நோய்களைத் தீர்க்கும் புனித நீராகக் கருதி உபயோகிப்பார்கள். நாசிக்கை சேர்ந்த ராம்ஜி நாயக் என்ற புத்தி பேதலித்தவர் அந்த நீரை குடித்து குணம் அடைந்தார். அவர் அதற்கு நன்றிக் கடனாக பாபா உட்கார்ந்தபடி குளிப்பதற்காக பெரிய கல்லை பரிசாகத் தந்தார். அது இன்னமும் துவாரகாமாயியில் உள்ளது.

குளிக்கும் கல் 

பாபா தினமும் குளிக்க மாட்டார். ஏழு அல்லது எட்டு நாட்களுக்கு ஒரு முறைதான் குளிப்பார். சில நேரங்களில் ஏழு அல்லது எட்டு வாரங்கள் கூட குளித்தது இல்லை. அது குறித்து அவருடைய பக்தர்கள் அவரிடம் கேட்டால் அவர் கூறுவாராம் ' நான் தினமும் கங்கை நதியில் குளித்து விட்டு வருகின்றேன். அதற்குப் பிறகு எதற்காக மீண்டும் குளிக்க வேண்டும்?'

குளிக்காமல் இருந்தாலும் கூட பாபா மிகவும் சுத்தமாகவே காட்சி அளிப்பார். குளிக்கும் முன் அவர் ஒரு பச்சை கலர் துணியை உடுத்திக் கொண்டு தன்னுடைய கப்னியை துவைத்து துனியின் மீது காயப் போடுவார். அவர் கப்னியைதான் எப்போதும் அவர் போட்டுக் கொண்டு இருப்பார். அவை மிகவும் முரட்டுத் துணி போல இருக்கும் . அவை கிழிந்து விட்டாலும் அதை அவர் உடுத்திக் கொள்வார். தாத்யா பாபாவிடம் மிகவும் வற்புறுத்திக் கூறியே பாபாவை வேறு புதுத் துணி உடுத்த வைப்பார். சில சமயங்களில் தாத்யா பாபாவின் கப்னியில் உள்ள கிழிசல்களை தானே பெரியதாக கிழித்துவிட்டு பாபாவிடம் அதைக் காட்டி ' பாபா இந்த கப்னி கிழிந்து உள்ளதே, வேறு மாற்றலாம்' என ஒன்றும் தெரியாதது போலக் கூறுவார். உடனே பாபா காசிநாத் ஷிண்டே என்ற தன்னுடைய துணி தைப்பவரை அழைத்து புதிய துணியை தைக்கச் சொல்வார். அதற்கான கூலியை விட அதிகக் கூலியை அவருக்குத் தருவார். அதன் பின் பழைய கப்னியை துனியில் போட்டு விட்டு புதியதை உடுத்திக் கொள்வார்.



சாதாரணமாக தான் புதிய கப்னியை உபயோகித்தால் தன்னுடைய பழைய கப்னிகளை அங்குள்ள சாதுக்களுக்கும் ,ஏழைகளுக்கும் தந்து விடுவார். அதனால் பாபா எப்போது புதுத்துணி தைத்தாலும் அவர்களுக்குக் கொண்டாட்டம்தான். 1914 ஆம் ஆண்டு ஒருமுறை பாபா தனது காப்னியை மற்றவர்களுக்குக் கொடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு இருந்த நார்கே என்பவர் தனது மனதில் நினைத்தார் ' எனக்கும் ஒரு கப்னியை பாபா தந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் ' . அந்த பக்கம் வந்த பாபா அவர் பக்கம் திரும்பினார் ' இந்த பரதேசிக்கு உனக்கு கப்னியை தர இஷ்டமில்லை. நான் என்ன செய்வது?' பாபா சில நேரத்தில் முடி வெட்டுபவரை அழைத்து தன்னுடைய தலையை மொட்டை அடித்து விடுமாறு கூறுவது உண்டு. அது போலவே தன்னுடைய மீசையையும் சரி வர வெட்டி விடச் சொல்லி அழகு செய்து கொள்வார். அவனுக்கு நிறைய பணமும் தந்துஅனுப்புவார்.


காலை சுமார் எட்டு மணிக்கு பாபா பிச்சை எடுக்கச் செல்லுவார். அவர் கணபதி தத்ய படேல், அப்பாஜி படேல், ஷஹராம் ஷேல்ஹே ,வாமன் கோண்ட்கர் , மற்றும் நாதுராம் மார்வாடி போன்றவர்களுடைய வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுப்பார். அவர்கள் அனைவரும் அதை பெரும் பாக்கியமாகவே கருதினர். அவர்கள் வீட்டின் முன் சென்று ' ஆபாத் -ஹி -ஆபாத், அல்லா பலா கரேகா, பாசா மா, ஜீவன் தே ரொட்டி தே போன்ற ஏதாவது ஒரு கோஷத்தை எழுப்பி பிச்சை கேட்பார்.
அப்பாஜி படேல், மற்றும் ,வாமன் கோண்ட்கர் வீட்டில் சென்று ' பக்ரி தே ( ரொட்டி குடு ) என்று கூவுவார். ஷஹராம் ஷேல்ஹே வீட்டின் முன் சென்று ' இட்லாயி பாய் ரொட்டி தோ' என்பார்.


நந்துராம் மார்வாடி வீட்டிற்குச் சென்று 'நந்துராம் பாக்ரே தே என்பார்' அல்லது அவருடைய மனைவி ராதாபாயை அழைத்து 'போப்பிடி ( திக்குவாய்) பாக்ரி தே' என்பார். ராதாபாய் திக்குவாய் உடையவர். சில நேரத்தில் அவளுடைய பெயரை சொல்லியும் அவர் அழைப்பார். அவள் பிச்சையை கொண்டு வர தாமதித்தால் அவள் மீது கோபம் கொண்டு கத்துவார். சில நேரத்தில் அவர் அவளுடைய வீட்டிற்குச் சென்று 'போப்பிடி பாய் மீத்தா (இனிப்பு) தே' என்பார். அவளும் பாபா கேட்டு விட்டதினால் பூரண் போளியை செய்து தருவாள்.

அதில் அவர் தான் சிறிது எடுத்துக் கொண்டு மீதியை மற்றவர்களுக்குத் தந்து விடுவார். அவர் 
பிச்சை எடுக்க எப்போது போவர் என்பது தெரியாது, ஆனால் அவர் தினமும் ஒருவர் வீட்டிற்குப் பின் மற்றவர் என ஒரு குறிப்பிட்ட முறைப்படித்தான் வீடுகளுக்கு செல்வார். மேலும் சில நாளில் சிலர் வீட்டிற்கு எட்டு முறைக் கூட பிச்சை எடுக்கச் செல்வார். முதல் மூன்று வருடங்கள் அவர் தினமும் எட்டு முறை பிச்சை எடுத்து வந்தார், அதன் பின் மூன்று வருடங்கள் நான்கு முறையும் அடுத்த பன்னிரண்டு வருடங்கள் தினமும் இரண்டு முறையும் கடைசி சில நாட்களில் ஒருமுறை மட்டுமே பிச்சை எடுத்து வந்தார்.


பாயாஜிபாயின் வீட்டிற்கு அவர் பிச்சை எடுக்கச் சென்றால் அவள் அவரை வீட்டிற்குள் வந்து உணவு அருந்தும்படிக் கூறுவது உண்டு. ஆனாலும் பாபா எவருடைய வீட்டிற்குள்ளும் நுழைந்து உணவு அருந்தியது இல்லை. வீட்டின் தாழ்வாரம் வரைதான் சென்று அமருவார்.
பாயாஜிபாயின் வீட்டிற்கு அவர் எத்தனை முறை பிச்சை எடுக்கச் சென்றாலும் அவள் அலுத்துக் கொள்ளாமல் ஏதாவது உணவை கொண்டு வந்து போடுவாள். ஒன்றுமே இல்லை என்றாலும் சிறிது ஊறுகாய் அல்லது அப்பளமாவது  கொண்டு வந்து போடுவாள். அவளை பாபா தன்னுடைய சகோதரி என்பார் . அவளும் அவருடைய மகிமைகளை புரிந்து கொண்டு இருந்ததினாலோ என்னவோ அவருக்கு பிட்சை போடாமல் தான்சாப்பிட மாட்டாள். அவள் பூர்வ ஜன்மத்தில் புண்ணியம் செய்தவளாக இருந்து இருக்க வேண்டும்.


1876 ஆம் ஆண்டில் அஹமத் நகர் பஞ்சத்தினால் பீடிக்கப்பட்டு இருந்தது. பாபா சீரடிக்கு வந்து இரண்டு ஆண்டுகளே ஆகியிருக்கும். ஆகவே பாபா வசதி இருந்தவர்கள் வீடுகளில் மட்டுமே சென்று பிட்சை கேட்பார். அவர்களில் முக்கியமானவர்களான நந்து ராம் மற்றும் பாயாஜி பாய் வீடுகளில் அந்த நேரங்களில் பாதி ரொட்டி மட்டுமே கிடைக்கும்.


பாபாவின் மகிமைகளை பின்னர் புரிந்து கொண்ட மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கு வரலாயினர். பல பணக்காரர்கள் பலவிதமான உணவுகளை அங்கு வந்து அவருக்குத் தந்தாலும் அவற்றை அவர் உபயோகித்தது இல்லை. அவருக்கு பிச்சை எடுத்து உண்பதே பிடித்து இருந்தது. அவருக்கு ஆடம்பரங்களும் அலங்காரங்களும் ஏற்புடையதாக இல்லை. ஒரு பரதேசி போலவே இந்த உலகில் வந்தவர் பரதேசி போலவே வாழ்ந்தார். மறு நாளைக்கு என அவர் எதையுமே வைத்துக் கொண்டது இல்லை. கடைசி நாட்களில் அவருக்கு உடல் நலமின்றே போனபோதும் கூட அவர் மற்றவர்களை பிச்சை எடுக்க அனுப்பி அவர்கள் கொண்டு வந்ததையே தான் உண்டார். சில சமயங்களில் அவருக்கு வயிற்று உபாதை ஏற்பட்டால் மூலிகைகளைக் கொண்டு தானே தயாரித்த நாட்டு மருந்தை அருந்துவார். அப்போது அதை அங்கு இருக்கும் பக்தர்களுக்கும் தருவார். கண்களில் நோய் ஏற்பட்டபோது கரும் மிளகை அரைத்து அதைத் தடவிக் கொள்வார் .
அவர் அடிக்கடி ஆஸ்துமா நோயினால் அவதிப் பட்டார். அவரை அந்த நிலையில் பார்க்கும் போது பக்தர்கள் அழுது விடுவார்கள். ஒருமுறை ரகுவீர் புரந்தாரே என்பவர் பாபா ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டதை பார்த்து விட்டு அழுது விட்டார். அதைக் கண்ட பாபா அவரிடம் கூறினார் ' சகோதரா எதற்காக நீ அழுகின்றாய்? இது விரைவில் குணமாகிவிடும்'


பாபா உடல் நலிவுற்று இருந்தாலும் தானே பிச்சை எடுப்பதையே விரும்பினார். முடியாமல் இருந்தால் சிலரது தோளில் கையை வைத்துக் கொண்டு அவர்களுடன் ஐந்து வீட்டிற்குச் சென்று பிச்சை பெற்று வருவார். பாபாவின் உடல் நிலையைக் கருதி அவருடைய பக்தர்கள் அவருக்கு சக்கர நாற்காலி வாங்கித் தந்தனர். ஆனால் அவர் அதை உபயோகிக்கவில்லை. அதை தனது கையினால் ஒரே முறை மட்டுமே தொட்டு விட்டு வைத்து விட்டார். அந்த நாற்காலி இன்றும் அங்குள்ள காட்சியகத்தில்வைக்கப் பட்டு உள்ளது. பாபாவுடன் பழகிய புண்ணியசாலிகள் மாதவராவ் தேஷ்பாண்டே, பாலக் ராம் வாமன் ராவ் படேல் போன்றவர்கள் சிலர் உண்டு.

தனது நினைவலையில் ஸ்ரீ சாயி சதானந்த எழுதினர் ' ஒருமுறை பாலக்ராம் சீரடியில் இல்லை. அப்போது அவருக்கு பதிலாக பிச்சை எடுக்க எனக்கு வாய்ப்பு வந்தது. நான் ஸ்ரீ ஜோகின் வீட்டில் இருந்து உணவும் வேறு சிலரிடம் சென்று பாலும் கொண்டு வருவது உண்டு' ஒருமுறை நார்கே அதைப் பார்த்தார். அவருக்கு தனக்கும் அந்த பாக்கியம் கிடைக்காதா என்ற ஆசை எழுந்தது. அவர் கோட்டும் பாண்டும் போட்டுக் கொண்டு மசூதிக்கு ஒருமுறை வந்த போது அவருடைய மனதை அறிந்து கொண்ட பாபா அவரை அந்த கோலத்திலேயே பிச்சை எடுக்க அனுப்பினார். அதற்குப் பின் நார்கே நான்கு மாதம் அந்த வேலையை செய்தார்.

பாபா தன்னுடைய தோளில் ஒரு பையை மாட்டிக் கொண்டு கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு பிச்சைக்கு செல்வார். ரொட்டி மற்றும் மற்ற உணவை பையில் போட்டுக் கொண்டும் பால் மற்றும் பிற திரவ பண்டத்தை கிண்ணத்திலும் போட்டுக் கொள்வார். அவர் உணவு எப்படி உள்ளது என அதன் சுவையைப் பார்க்க மாட்டார். சுவையைத் தவிர்க்க வேண்டும் என அனைவருக்கும் கூறுவார். துவாரகாமாயியில் இருந்து கிளம்பி சாவடிக்குச் சென்று முதலில் ஷகாராம் ஷேல்கே , அடுத்து வாமனராவ் கோன்த்கர், அடுத்து பாயாகி படேல், தத்யகோடி படேல் மற்றும் கடைசியாக நந்துராம் மார்வாடி என வரிசையாகச் ஒவ்வொருவர் வீட்டிற்கும் செல்வார். பாயாகி படேல் வீட்டு அருகில் கற்களால் ஆனா சாலையே இருந்ததினால் பாபா காலணி அணிந்து கொண்டே செல்வார். வழியில் உள்ள நாய் மற்றும் காக்கைகளுக்கு உணவு போடுவார். அவருடைய காலணிகள் இன்றும் அவர் நினைவாக வைக்கப்பட்டு உள்ளன. பிச்சை கொண்டு வந்ததும் அதில் சிறிது துனியில் போட்டு விட்டு மீதத்தை அங்கிருந்த 'கொலும்பா' என மராட்டிய மொழியில் அழைக்கப்பட்ட மண் பானையில் போட்டு வைப்பார். அதை நாய்களும், பூனைகளும், எறும்புகளும் வந்து சாப்பிட்டு விட்டுப் போகும். அதில் இருந்து பிராணிகள் மட்டும் அல்ல எவர் வேண்டுமானாலும் உணவை எடுத்துச் செல்லலாம். மசூதியை சுத்தம் செய்ய வருபவளுக்கு குறைந்தது ஆறு ரொட்டியாவது தினமும் அதில் இருந்து கிடைக்கும்.


பாபா தினமும் லேன்டி என்ற இடத்திற்கு காலையில் 8.30 முதல் 9.00 மணிக்குள் நடந்து போவது உண்டு . அப்போது சில நாட்கள் அவர் காலணிகள் அணிவார், சில நாட்கள் அணிய மாட்டார் . வெளியில் சென்று சிறிது நேரம் அங்குள்ள சுவற்றில் கையை வைத்துக் கொண்டு நிற்பார். அதன் பின்னர் மாருதி ஆலயத்தின் எதிரில் சென்று நிற்பார். அங்கு சென்று தன் கைகளை அப்படியும் இப்படியும் ஆட்டிக் கொண்டு ஏதோ செய்வதைப் பார்க்கலாம். அதன் பின் குருஸ்தானில் சென்று நின்றபடி எவருடனோ பேசிக்கொண்டு இருப்பதைப் போன்ற தோற்றம் தருவார்.


வாடாவில் வசிக்கும் பக்தர்கள் அவர் வருகையை எதிர்பார்த்து தெருவின் இரு புறமும் வரிசையாக நிற்பார்கள். மசூதியில் இருந்து கிளம்பி வரும் பாபா அனைவரையும் பார்த்து சிரித்தபடிச் செல்வார். சிலரை பெயரைக் கூறி அழைத்து விசாரிப்பார். அங்கிருந்து கிளம்பி 'பிலாஜி குருவே' என்பவர் வீட்டிற்கு போகும் வழியில் இடப்புறம் திரும்பி 'விட்டலா' ஆலயத்தின் எதிரில் சாலையைக் கடப்பார். அங்கிருந்து வலப்புறம் திரும்பிச் சென்று 'கனிபிநாத் ' என்ற ஆலயத்தைத் தாண்டி மீண்டும் வலப்புறம் திரும்பி லேண்டிக்கு செல்வார். அங்கு சென்று காலை கடனைக் கழிப்பார்.

அங்குள்ள வேப்ப மற்றும் அத்தி மரத்தின் இடையே உள்ள இடத்தில் அணையாத விளக்கு எரிந்து கொண்டு இருக்கும். பாபா அங்கு சென்று சற்று நேரம் அமர்ந்தபடி இருப்பார். அந்த விளக்கை சுற்றி சணல் கோணியினால் ஆன தடுப்புகள் போடப்பட்டு இருக்கும் . அந்த இடத்தை அப்துல் பாபா என்பவர் சுத்தப்படுத்தி வைப்பார். பாபாவுக்காக இரு குடம் நீரையும் வைப்பார். விளக்குக்கு எண்ணை ஊற்றி அணையாமல் பார்த்துக்கொள்வார்.

அந்த குடத்தில் உள்ள தண்ணீரை எடுத்து அனைத்து திசைகளிலும் பாபா தெளிப்பார். அப்போது எவரையுமே -அப்துல்லா பாபாவையும் சேர்த்தே- தன்னுடைய பக்கத்தில் இருக்க அனுமதிக்க மாட்டார். அனைவரும் வெகு தூரம் தள்ளி நிற்க வேண்டும். அந்த இரண்டு மரங்களுக்கான செடிகளை பாபாவே நட்டு இருந்தார் . சற்று தொய்ந்து இருந்த செடியை இப்படியும் அப்படியும் பாபா ஆட்டுவார் . அதனால்தானோ என்னவோ அது மிகவும் பருமனாக நிமிர்ந்து வளர்ந்தது.

பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தினமும் பாபா லேன்டிக்கு செல்வது அவரை ஊர்வலத்தில் அழைத்துச் செல்வது போல இருந்தது.
தொடர்புடைய படம்

பாபா மசூதியை விட்டு வெளியில் வந்ததும் பாகோஜி ஷிண்டே என்பவர் அவர் தலைக்கு மேல் ஒரு நிழல் குடையை பிடித்துக் கொண்டு நடக்க நானா சாஹேப் நிம்மோங்கர் என்பவரும் பூட்டி என்பவரும் அவருடைய இரண்டு பக்கத்திலும் நடந்து செல்வார்கள். அந்த ஊர்வலத்தின் நடை அழகே தனியானது.


சாதாரணமாக பாபா காலை பத்து மணிக்கெல்லாம் லேன்டிபாகில் இருந்து திரும்பி விடுவார். அதன்பின் காலை பதினோரு அல்லது பதினொன்று முப்பது வரை வரும் பக்தர்கள் கூறும் குறைகளைக் கேட்டும், அவர்களுடைய வேண்டுகோட்களை ஏற்றும் தரிசனம் நடைபெறும் . அதைத் தவிர அங்கு வந்து இசை இசைக்கும் கலைஞர்களுக்கு நிறைய சன்மானமும் தந்து அனுப்புவார்.

சாதாரணமாக ஒவ்வொருவருக்கும் இரண்டு ரூபாயை பாபா வழங்குவார். பக்தர்கள் கொண்டு வருவதை பாபா தொட்டு ஆசிர்வதித்துவிட்டு அவர்களுக்கே அதை பிரசாதமாகத் தந்து அனுப்பி விடுவார். மிக அபூர்வமாகவே அவர் பிரசாதத்தை சிறிது உண்பார். அவர் தரும் பிரசாதத்தை பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள். மாங்காய் விளைச்சல் பருவத்தில் மாம்பழங்கள் வந்தால் ஒன்றை தான் எடுத்துக் கொண்டு மற்றதை அங்குள்ளவர்களுக்கு விநியோகித்து விடுவார். யாரும் மாம்பழம் கொண்டு வரவில்லை எனில் தானே அதை வாங்கி மற்றவர்களுக்கு கொடுப்பது உண்டு.


தனக்கு வரும் இனிய தின்பண்டங்களை குழந்தைகளுக்குத் தருவது பாபாவின் பழக்கம். ஆகவே பல குழந்தைகள் தினமும் பாபாவைப் பார்க்க வருவது உண்டு. ஒரு வேளை அவர்கள் வரவில்லை எனில் அந்த தின்பண்டங்களை தனியாக எடுத்து வைத்து அவற்றை மறுநாள் குழந்தைகளுக்குத் தருவார். குழந்தைகளிடம் மிகவும் பிரியமாக இருப்பார். ஆகவே எவராவது குழந்தைகளை அனாவசியமாக கடிந்து கொண்டால் அவர்கள் மீது பாபா கோபப்படுவார். குழந்தைகளிடம் அத்தனை ஜாலியாகப் பழகும் பாபா பெரியவர்களிடம் சற்று ஒதுங்கியே இருப்பார். ஒரு புன்முறுவலுடன் அவர்களை அனுப்பி விடுவார். நல்ல மன நிலையில் உள்ள போது நீதிக் கதைகளைக் கூறுவார். அவற்றில் சில கதைகள் தவறுகளை கண்டிக்கும் விதமாக இருக்கும்.


அந்த கதைகளைக் கேட்கும் தவறு செய்தவர்களுக்கு அது தம்மைத்தான் குறிக்கின்றது என்பது புரியும் . சிலருக்கு ஒன்றுமே புரியாது. வேறு சிலர் கதைகளை மறந்து விடுவார்கள். அது என்ன கதை என மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தாலும் அவர்களுக்கு அது நினைவுக்கே வராது. அந்த அதிசயத்தை பலரும் அனுபவித்து உள்ளனர். சரியாக 11 .30 மணிக்கு மணி அடிக்கும். அது மதிய நேர ஆரத்திகான மணி. எவர் எங்கு இருந்தாலும் உடனே அவர்கள் அனைவரும் மசூதியில் வந்து கூடி விடுவார்கள். பாபாவுக்கு சந்தனத்தை அரைத்து இட்டும் மாலைகள் போட்டும் ஆரத்தி எடுக்கப்படும். பெண்கள் பாபாவுக்கு எதிரில் நிற்க ஆண்கள் பின் புறத்திலும் தாழ்வாரத்திலும் நிற்பார்கள். அந்த நேரத்தில் பாபாவின் முகத்தைப் பார்ப்பதற்கே கோடி கண்கள் வேண்டுமாம். அத்தனை ஜொலிக்கும் முகமாக அவர் முகம் மாறி விடுமாம். அதை பலரும் தமது நாட்குறிப்பில் எழுதி வைத்து உள்ளனராம். கர்பாடேயின் தினக் குறிப்பை படித்தால் அந்த ஆனந்தம் என்பது என்ன எனப் புரியும். ஆரத்தி முடிந்ததும் பாபா அனைவருக்கும் உதி பிரசாதம் தந்து ஆசிர்வாதமும் தந்து அனுப்புவார்.

அனைவரும் சென்றபின் தன்னிடம் வந்துள்ள உணவை பத்து அல்லது பதினைந்து பக்தர்களுடன் பகிர்ந்து கொண்டு அருந்துவார். தாத்யா படேல், ராமச்சந்திர படேல், பய்யாஜி படேல் போன்றோர் பாபாவின் இடதுபுறம் அமர்ந்து கொள்ள , படே பாபா என்ற மாலேகான் பரதேசி, சாமா, பூட்டி, காகா சாஹேப் திக்ஷித், போன்றோர் அவருடைய வலது பக்கத்தில் அமர்ந்து கொள்வார்கள். தாத்யா படேல், ராமச்சந்திர படேல், பய்யாஜி படேல் போன்றோர் ஒரு தட்டிலும், பாபா மற்றும் படே பாபா இருவரும் இன்னொரு தட்டில் இருந்தும் உணவை எடுத்து சாப்பிடுவார்கள். பாபா என்றுமே தனியாக உணவு அருந்தியது இல்லை. அது போல படே பாபா வரும் வரையில் சாப்பிட மாட்டார்.
பக்தர்கள் கைகளையும் கால்களையும் அலம்பிக்கொண்டு வந்து பாபாவின் பக்கத்தில் அமர்ந்து கொள்வார்கள். எல்லா உணவையும் கலந்து பாபாவின் முன்னால் வைப்பார்கள். வாயிலில் தடுப்புச் சீலைகள் போடப்படும். அப்போது வெளியில் இருந்து எவரும் உள்ளே வரக் கூடாது. பாபா முதலில் உணவை கடவுளுக்கு பிரசாதமாக அளித்த பின் தனக்கு வேண்டியதை வைத்துக் கொண்டு மற்றதை வெளியில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தந்து விடுவார். உணவில் ஒரு பாகத்தை பாலுடன் கலந்தும் மற்ற பாகத்தை சர்க்கரையுடன் கலந்து பிரசாதமாகத் தருவார்.

அதன் பின் நிமோல்கரும் சாமாவும் உணவை மற்றவர்களுக்கு பரிமாறுவார்கள். எவருக்காவது எந்த உணவாவது தேவை எனில் பாபா அவர்களுக்கு அதைத் தருவார்.
எம். டபில்யு. பிரதான் அது குறித்து இப்படி எழுதி உள்ளார். பாபாவுடன் நானும் அங்கு சாப்பிட்டு உள்ளேன். பாபா அனைவரது தட்டுகளையும் உணவினால் நிரப்புவார். அதில் ஒரு பகுதியை நான் வீட்டிற்கு அனுப்பி விடுவேன். அது மொத்த குடும்பத்திற்கே போதுமானதாக இருக்கும். சாப்பிட்டு முடிந்ததும் பாபா அனைவருக்கும் பழம் தருவார். என்னுடைய மகன் பாபுவிற்கு சமைத்த உணவு பிடிக்காது என்பதினால் பாபா அவனுக்கு பழங்களைத் தருவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக