அண்ணாமலையாருக்கு தாரா அபிஷேகம்
இன்று (வெள்ளிக்கிழமை) அக்னி நட்சத்திர காலம் தொடங்கியது. 28-ந்தேதிதான் அக்கினி நட்சத்திரம் நிவர்த்தியாகும். இந்த இடைப்பட்ட நாட்களில் வெயில் வாட்டி வதைத்து விடும். கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நாம் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதுபோல நாம் வழிபடும் தெய்வங்களுக்கும் கோடை வெயில் தோஷத்தை நிவர்த்தி செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்வது உண்டு. இதற்கான பூஜை முறைகளை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
சிவபெருமானை பொருத்தவரை அவருக்கு வெப்பம் என்பதே பிடிக்காது. அவர் குளிர்ச்சியை விரும்புபவர். இதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.
இதனால் அவர் உடல் சூட்டை தணிக்க அபிஷேகங்கள் செய்தனர். இடைவிடாது செய்யப்பட்ட அந்த அபிஷேகங்கள் காரணமாக, சிவபெருமான் அபிஷேகப் பிரியராக மாறினார். சிவபெருமானுக்கு நாம் எந்த அளவுக்கு அபிஷேகம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அவர் உடலும், உள்ளமும் குளிர்ச்சியாகி, மனம் மகிழ்ந்து நமக்கு நல்ல வரங்களை தந்தருள்வார் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.
எனவே அக்னி நட்சத்திர நாட்களில் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்தும், விதமாக அபிஷேகங்கள் செய்வார்கள். அதில் முக்கியமானது தாரா அபிஷேகமாகும்.
தாரா அபிஷேகம் என்பது சிவலிங்கத்துக்கு மேல் ஒரு பாத்திரம் கட்டி, அதன் அடியில் சிறு துளையிட்டு, அதில் இருந்து சொட்டு, சொட்டாக லிங்கம் மீது தண்ணீரை விழ வைப்பதாகும். இந்த தாரா அபிஷேகத்துக்காக பெரும்பாலும் கூம்பு வடிவ செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவார்கள்.
அதில் நிரப்பப்படும் தண்ணீரில் பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்படும். அந்த நறுமணத் தண்ணீர் சொட்டு, சொட்டாக விழும் போது, சிவபெருமானின் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியாகி விடுவார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் அக்கினி நட்சத்திர நாட்களில் தினமும் ஜலதாரை எனப்படும் தாரா அபிஷேகம் செய்யப்படுகிறது. காலை 10 மணிக்கு உச்சிக்கால பூஜையின்போது அண்ணாமலையார் மீது தாரா அபிஷேக பாத்திரம் தொங்க விடப்படும்.
சாயங்காலம் சாயரட்சை பூஜை நடக்கும் வரை அண்ணாமலையார் மீது சொட்டு, சொட்டாக தாரா பாத்திரத்தில் இருந்து தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும். அந்த சமயத்தில் வாசனைத் திரவியங்கள் கலந்த தண்ணீரை அண்ணாமலையார் ழுமுமையாக பெற வேண்டும் என்பதற்காக பெரிய அளவில் அலங்காரம் செய்ய மாட்டார்கள்.
அண்ணாமலையாருக்கு வழக்கமாக சாற்றப்படும் கிரீடம், நாகாபரணம், கவசம் உள்ளிட்டவை தாராபிஷேகம் சமயத்தில் இடம் பெறாது. இதன் காரணமாக தாரா அபிஷேகம் தண்ணீரை பெற்று அண்ணாமலையார் குளிர்ச்சி பெறுகிறார். சைவத்தில் சிவபெருமானே.... நாம் வாழும் உலகமாக கருதப்படுகிறார். சிவபெருமானின் உக்கிரம் தணிய வேண்டுமானால், பூமி குளிர வேண்டும். இதை கருத்தில் கொண்டும் அக்னி நட்சத்திர நாட்களில் சிவபெருமானுக்கு தாரா அபிஷகம் செய்யப்படுகிறது.
இதுபோல அக்கினி நட்சத்திர நாட்களில் எந்தெந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் பெறலாம் என்று நம் முன்னோர்கள் வரையறுத் துள்ளனர்.
அருகம்புல் தண்ணீரால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.பசும்பால் அபிஷேகத்தினால் அனைத்து வித நன்மைகளும் கிடைக்கும்.
தயிர் அபிஷேகத்தினால் பலம், ஆரோக்கியம் கிடைக்கும்.
பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் செல்வ செழிப்பு உண்டாகும்.
சர்க்கரை அபிஷேகம் துக்கத்தை போக்கும்.
புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் லாபம் வரும்.
இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல சம்பத்தும் கிட்டும்.
உத்திராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.
அரைத்தெடுத்த சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.
வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போகபாக்யங்கள் கிட்டும்.
அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், மோட்சம் மற்றும் தீர்க்காயுள் கிட்டும்.
திராட்சை ரசம் கலந்த தண்ணீரால் அபிஷேகம் செய்தால் எல்லாவற்றிலும் வெற்றி உண்டாகும்.
பேரிச்சம்பழம் ரசத்தினால் அபிஷேகம் செய்தால் எதிரிகள் இல்லாமல் போவர்.
நாவல்பழ ரசத்தினால் அபிஷேகம் செய்தால் வைராக்கியம் கிட்டும்.
மாம்பழ ரசத்தினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.
மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்தால் மங்களம் உண்டாகும்.
தயிர் அபிஷேகத்துக்கு உதவினால் குடும்பத்தில் செல்வம் பெருகும். இளநீர் அபிஷேகம் செய்தால் மகிழ்ச்சி உண்டாகும். பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் சுகமான வாழ்வு அமையும்.
அக்னி நட்சத்திர நாட்களில் உங்களுக்கு வசதியான ஒரு நாளில் அண்ணாமலையாருக்கு இந்த அபிஷேகங்களை செய்யலாம். அக்னி நட்சத்திரம் நிறைவு பெறும் போது கடைசி 3 நாட்கள் அதாவது 26, 27, 28-ந்தேதிகளில் 1008 கலாசாபிஷேகம் செய்வார்கள். காலை 10 மணிக்கு உச்சிக்கால பூஜை தொடங்கும்போது 1008 கலசாபிஷேகத்தை நடத்துவார்கள்.
அக்னி நட்சத்திர நாட்களில் அண்ணாமலையாருக்கு மட்டுமின்றி அவரது அடியார்களுக்கும் உதவி, சேவை செய்தால் அபரிதமான பலன்களைப் பெற முடியும். திருவண்ணாமலையில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் உள்ளனர்.
இதெல்லாம் சும்மா சீசனுக்காக சொல்லப்படுபவை என்று பலரும் நினைக்கலாம். நீங்கள் அப்படி நினைக்காதீர்கள். ஏனெனில் அண்ணாமலையார் இன்றும் அங்கு மிகுந்த அருளாற்றலுடன் பக்தர்களுக்கு ஆசி வழங்கி முக்தி பாதைக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.
அவர் மீது நம்பிக்கை வைத்து வழிபட்டால் நிச்சயம் நல்லதே நடக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக