அக்னி நட்சத்திர வரலாறு
அக்னி நட்சத்திரம் என்ற கொடிய வெயில் நாட்கள் ஆண்டுதோறும் 21 நாட்கள் வருகின்றன. சில வருடங்களில் 25 நாட்கள்கூட அக்னி தேவன் நம்மை வாட்டி எடுத்துவிடுவான். இதுபோன்ற அக்னி நட்சத்திர நாட்களில்தான் அம்மை, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, கண்நோய் போன்றவையெல்லாம் வரும்.
கத்திரி என்பது வேனில் காலத்துக் கடுங்கோடை! சித்திரை மாதம் 21-ஆம் தேதிமுதல், வைகாசி மாதம் 15-ஆம் தேதி வரை அக்னி நட்சத்திர காலமாகும். கத்திரி என்பது தமிழ் மாதத் தேதி தொடர்பாக அமையும் காலப் பகுதி. அக்னி நட்சத்திரம் என்பது சூரியனுடைய சஞ்சாரம் தொடர்பாக அமையும் காலப்பகுதியாகும். இவ்விரண்டும் பெரும்பாலும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும் வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இணைந்த பகுதியாகும். இந்நாட்களில் முதல் ஏழு நாட்கள் சுமாராகவும் இடையில் ஏழு நாட்கள் மிக அதிகமாகவும் கடைசி ஏழு நாட்கள் சுமாராகவும் வெப்பம் தகிக்கும்.
அக்னி நட்சத்திர நாளில் சந்திரன் மட்டுமல்ல; பூமிகூட சூரியனுக்கு சற்று அருகே இருக்கும். கார்த்திகை நட்சத்திர அதிதேவதை அக்னி தேவன். இது நெருப்பைக் கக்கும் நட்சத்திரம். எனவேதான் இதை அக்னி நட்சத்திரம் என்கிறார்கள். அக்னி நட்சத்திர நாட்களில் சிவாலயங்களில் தாரா அபிஷேகம் செய்வது நல்லது. தாரா பாத்திரம் என்ற பாத்திரத்தை சிவலிங்கத்தின்மேல் தொங்கவிட்டு, இடைவிடாமல் நீர் விழவைப்பதே தாரா அபிஷேகம். இந்நாட்களில் அதிகாலைத் துயிலெழுந்து, நீராடி சூரிய பூஜை செய்யலாம். சூரிய நமஸ்காரம் செய்வதும் நல்லது.
சித்திரை மாதத்தில் குடை, விசிறி, பாதரட்சைகள் தானம் செய்யலாம். அன்னதானம், பானகதானம், தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் தருவது போன்றவை செய்யலாம். இந்த கோடை வெயிலின் அக்னி காற்று நோயைப் பரப்பும். அதனால் தினம் குடத்தில் மஞ்சள் நீர் கரைத்து அதில் வேப்பிலையை நனைத்து வீடு முழுதும் தெளிக்கலாம். மகமாயிக்கு மிகவும் உகந்த இந்த வேப்பிலை குளிர்ச்சி மிக்கது. இளநீர், தர்பூசணி, நீர் மோர் ஆகியவை உடல் சூட்டைத் தணிக்க உதவும்.
சித்திரை வெயிலிலிருந்து விடுபட மகாவிஷ்ணுவைச் சாந்தப்படுத்த வேண்டும். அதேபோல் மகமாயியையும் குளிரச் செய்ய வேண்டும். பால், தயிர், இளநீர், வேப்பிலை கலந்த மஞ்சள் நீர் அக்னி தேவனின் வெம்மையைக் குறைக்க உதவும்; அதேசமயம் அம்மனின் அருளும் கிட்டும்.
இந்த அக்னி நட்சத்திர நாளில் தினமும் தலைக்குக் குளித்து, பின் தயிர் சாதம், நீர் மோர், பானகம் மற்றும் நம்மால் இயன்ற நிவேதனப் பொருட்களை மகாவிஷ்ணுவிற்குப் படைத்துவிட்டு, அதை பிரசாதமாக அனைவருக்கும் வழங்கலாம். நாராயண மந்திரத்தை தினம் 108 முறை ஜபித்து அன்னதானம் செய்யலாம். மாரியம்மனை குளிர்விக்கும் சீதாஷ்டக சுலோகத்தைப் பாராயணம் செய்யலாம். இதை குழுவாகவும் பிரார்த்தனை செய்யலாம்.
அக்னி நட்சத்திரம் பிறந்த கதை
முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள். தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது. அவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால்தான் தீரும். எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தான்.
அவ்வனத்தில் உள்ள அரக்கர்களும் கொடிய விலங்குகளும் தாவரங்களும் சாந்தமான விலங்குகளும் தங்களை அக்னி தேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணதேவனிடம் முறையிட்டன. "அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்' என வருணன் கூறினான்.
இதையறிந்த அக்னி கிருஷ்ணரிடம் ஓடி, "நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான். என்னைக் காப்பாற்றுங்கள்' என முறையிட்டான். கிருஷ்ணன் அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் அம்புகளை சரமாரியாக எய்து வானை மறைத்து சரக்கூடு கட்டினான். அப்போது அக்னி தேவன் தன் ஏழு நாக்குகளால் வனத்தை எரிக்க முற்பட்டான்.
அப்போது கிருஷ்ணர், "21 நாட்கள்தான் உனக்கு அவகாசம். அதற்குள் உன் பசியைத் தீர்த்துக் கொள்' என்றார். அதன்படி அக்னி காண்டவ வனத்தை அழித்து விழுங்கி, தன் பசி தணிந்த அந்த 21 நாட்கள்தான் அக்னி நட்சத்திர தினம் என்றும் கத்திரி வெயில் என்றும் கூறுகின்றனர்.
அக்னி நட்சத்திர நாளில் முருகனையும், மீனாட்சி அம்மையையும் வழிபடுவது நல்லது. பரணிக்குரிய துர்க்கையையும், ரோகிணிக்குரிய பிரம்மனையும் வழிபடுவதுடன், கிருத்திகைக்குரிய தேவதை அக்னியையும் வழிபட்டால் நற்பலன் கிடைக்கும்.
அகமும் புறமும் குளிரும் வண்ணம் தர்மம் செய்து இறைவனை வணங்கி வழிபாடு செய்து, கத்திரி வெயிலில் கடவுள் அருள் பெறலாமே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக