பயன் தரும் மந்திரங்கள்
பாவம் போக்கும் சிவன் மந்திரம்
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!
ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்
தன் வினைதான் தன்னைச் சுடும். நாம் செய்யும் ஒவ்வொரு வினைக்கும் உறுதியாக எதிர்விளைவு ஒன்று உள்ளது. நல்லது செயின் நல்ல விளைவுகள் ஏற்படும். தீமைகளும், பாவங்களும் செயின் அதற்கேற்ற தீய விளைவுகளே வாழ்வில் கிடைக்கும். ஒருவர் செய்யும் பாவங்கள் மட்டுமின்றி, அவருடைய பெற்றோர், மூதாதையர் செய்த பாவ வினைகளும் அவர்களைத் தொடர்ந்து வரும். நாம் அறிந்தோ அறியாமலோ செய்யும், தீய செயல்களான தீமையானதைத் திட்டமிடும் சிந்தனை, பிறருடைய மனதைப் புண்படுத்தும் சொல், பிறரைத் துன்பத்திற்கு ஆளாக்கும் செயல், செய்ய வேண்டிய கடமையைப் புறக்கணித்தல், தற்பெருமை, சீற்றம், காம வெறி, பேராசை, பெருந்தீனி விரும்பல், பொறாமை, சோம்பல் போன்ற செயல்கள் அனைத்தும் பாவ செயல்களாகக் கருதப்படுகின்றன. இப்படி ஒருவர் செய்யும் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற தீய விளைவுகள் அவர்கள் அனுபவிக்க நேரிடும்.
அத்தகைய பாவ விளைவுகளை களைய, ஒருவர் தன்னுடைய ஆணவத்தை துறந்து, சிவனை மனதார வணங்கி, தான்செய்த தீய வினைகளை அவனடியில் சமர்ப்பித்து, மேலே கூறப்பட்டுள்ள சிவன் மந்திரங்களை சொல்லி இறைவனை வணங்க வேண்டும். சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷ தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வர வேண்டும்.
உங்களுடைய பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திடும். வாழ்வில் நிறைவு ஏற்படும்.
திருப்பம் தரும் திருமால் மந்திரம்
"ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நம ஸ்ரீ வேங்கடேசாய"
இந்த மந்திரம் நமக்கு நல்ல திருப்பங்களை தந்தருளும் திருப்பதி திருமலை திருவேங்கடவனின் மீது பாடப்பட்ட அரிய மந்திரமாகும். திருவேங்கடவனின் திருவருளை பெறும் பலவித வழிகளில் இந்த மந்திரமும் ஒன்று.
முதலில் பிள்ளையாரையும், குல தெய்வத்தையும் மனதார வணங்கி விட்டு இந்த மந்திரத்தை துளசி மணி மாலை கொண்டு தினமும் காலையில் 108 முறை ஜபம் செய்யவும்.
இம்மந்திரத்தை ஒரு வளர்பிறை திங்கட்கிழமையன்றோ, அல்லது ஒரு திருவோண நட்சத்திரத்தன்றோ அல்லது வளர்பிறை ஏகாதசியன்றோ அதிகாலையில் சொல்லத் துவங்குதல் கூடுதல் நலம் பயக்கும். இம்மந்திரத்தை துதிப்பதோடு ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் முதல் திங்கட்கிழமைகளில் மலையேறி சென்று திருமலையானின் தரிசனத்தையும் பெற்று வந்தால் சர்வ நிச்சயமாக ஒருவரது பொருளாதார நிலையில் திருப்திகரமான நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
ஆதித்ய மந்திரம்
சூரிய பகவானின் திருவருளைப் பெற மந்திரம் அருளை பெற மந்திரம்
‘ஓம் ஆதித்யாய நம’
இந்த மந்திரம், ஆதவனின் அருளைப் பெற உதவும் மந்திரம் ஆகும். இம்மந்திரத்தை ஒரு வளர்பிறை ஞாயிறு தினத்தன்று காலையில், சூரிய ஹோரை நேரத்தில், கிழக்கு நோக்கி அமர்ந்து, 108 முறை சொல்லி சூரிய பகவானை வணங்க வேண்டும்.
இந்த ஆதித்ய மந்திரத்தை 108 முறைகள் சொல்வதால், நம் ஆன்மப் பிரகாசம் தூண்டப்பட்டு உடலும், மனமும், முகமும் தெளிவுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். மன எழுச்சியினால் ஒருவரின் உள்ளொளியை அதிகரிக்க கூடிய மகத்தான சக்தி வாய்ந்த மந்திரம் இந்த ஆதவ மந்திரம் ஆகும்.
வளர்பிறை ஞாயிற்று கிழமையில் துவங்கி, தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் இந்த மந்திரத்தை சொல்லி சூரிய பகவானை வணங்கலாம். முடியாதவர்கள், வளர்பிறை ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இதைக் கடைப்பிடிக்கலாம்.
காரியத்தடை போக்கும் சந்திரன் வழிபாட்டு
சிவனின் சடைமேல் சிறப்புடன் விளங்கும்
மதியே உன்னை மகிழ்வுடன் துதித்தேன்!
நிறத்தில் வெண்மையும், நெல்லாம் தான்யமும்
சிறப்புடன் வழங்கச் செல்வம் கொடுப்பாய்!
முத்தாம் ரத்தினம் முழுமலர்
அல்லி வைத்தோம் உனக்கு வரம்தருவாயே!
புத்தி பலம்பெற பொன்பொருள்
குவிய சக்தி வழங்கும் சந்திரா வருக!
இந்த சந்திரன் வழிபாட்டு பாடலைச் சொல்லி சந்திரனை வழிபடுவதால், நாம் செய்யப் போகும் காரியங்களில் ஏதேனும் காரியத்தடை அல்லது இடையூறுகள் இருப்பினும் அவைகள் நீங்கப் பெற்று செய்யும் செயல்கள் அனைத்தும் ஜெயமாகும். ‘மனது காரகன்’ மற்றும் ‘மாதா காரகன்’ என்று அழைக்கைப்படுபவர் சந்திரன் ஆவார். எனவே, இந்தப் பாடலைச் பாடி சந்திரனை வணங்குவதால் நினைத்த காரியங்கள் குறையேதும் இன்றி வெற்றிகரமாய் அமையும். மனமகிழ்ச்சியும் நிறைவும் வாழ்வில் என்றும் நிலைக்கும்.
கடன் தீர்க்கும் அங்காரக ஸ்தோத்திரம்
அங்காரக மஹீபுத்ர பகவன் பக்த வத்ஸல
நமோஸ்துதே மமாசேஷம் குணமாசு விமோசய
ருணரோகாதிதாரித்ர்ய பாபக்ஷ தபம்ருத்யவ:
பயக்ரோத மன:க்லேசா: நச்யந்து மமஸர்வதா
ருணதுக்க வினாசாய புத்ரஸந்தான ஹேதவே
மார்ஜயாம்யஸிதாரேகா: திஸ்ரோ ஜன்மஸமுத்பவா:
துக்கதௌர்பாக்யநாசாய ஸக ஸந்தான ஹேதவே
க்ருதரேகாத்ரயம் வாம பாதாத் ஸம்மார்ஜயாம்யஹம்
இந்த மந்திரத்தை, செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் பகவானின் யந்திரம் அல்லது திருவுருவப் படத்தின் முன்பு காலை அல்லது மாலையில் விளக்கேற்றி வைத்த பின் சொல்லி வணங்க வேண்டும். செவ்வாய் பகவானின் யந்திரம் அல்லது திருவுருவப் படத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூக்கள் தூவி சாம்பிராணி ஏற்றி வைத்து நெய் வேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து ஸ்ரீ அங்காரகனை மனதார மேற்கூறிய மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும்.
இந்த மந்திரத்தின் பொருள்:
“பூமியின் மைந்தனும் பகவானும் பக்தர்களின் மீது பிரியம் கொண்டவருமான ஸ்ரீஅங்காரக பகவானே, தங்களை வணங்குகிறேன். வெகு சீக்கிரம் எனது எல்லாக் கடன்களையும் போக்கியருள வேண்டும். என்னை வாட்டும் கடன், ரோகம் முதலானவை, தரித்திரியம், பாபம், பசி, அபிமிருத்யு, பயம், கோபம், மனக்கவலை ஆகிய யாவும் அழியட்டும்.
கடனால் ஏற்பட்ட துக்கம் விலகுவதற்கும், தொடர்ந்து குழந்தைகள் பிறப்பதற்கும் வேண்டி, முன் ஜன்ம கர்ம வினைப்பாடுகளை அழிப்பதுபோன்று இந்த மூன்று கோடுகளையும் அழிக்கிறேன் (என்றபடி மூன்று கோடுகளையும் அழிக்கவேண்டும்). அத்துடன், ‘மிகுந்த தேஜஸ்வியும், ஸ்ரீபரமசிவனின் வியர்வையில் இருந்து உண்டானவருமான செவ்வாய் பகவானே, தங்களை வணங்குகிறேன்.
மிகுந்த கடனாளியான நான் உங்களையே சரணடைகிறேன். எனது கஷ்டங்களை நீக்கி அருளுங்கள்” என மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீ அங்காரக பகவானை இந்த மந்திரம் சொல்லி வழிபடுவதால் நமது கடன்கள் யாவும் நீங்கி நன்மை பயக்கும். இல்லத்தில் தரித்திரமும், வறுமையும் அகன்று குபேர சௌபாக்கியம் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக