வியாழன், 17 மே, 2018

ரத ஸப்தமி: எருக்க இலையின் மகத்துவம்

ரத ஸப்தமி: எருக்க இலையின் மகத்துவம்

ரத ஸப்தமி: எருக்க இலையின் மகத்துவம்
சூரிய தேவன் தனது ஏழு குதிரைகள் பூட்டிய தேரை வடக்கு நோக்கிச் சரியாகத் திருப்பி ஓட்ட ஆரம்பிக்கும் நாளை “ரத ஸப்தமி’ என்பார்கள். இந்நாளில் சூரியனை வழிபட காலையில் எருக்கம் இலையைத் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்யச் சொல்வார்கள். ஏன்?
மிகப் பழங்காலத்தில் இமயமலைச் சாரலில் காலவ முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் முக்காலமும் அறிந்த ஞானி. பலர் அவரிடம் வந்து தங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கூறுமாறு பணிவுடன் கேட்பார்கள். கேட்பவரை நேர் எதிரே நிறுத்தி அவரை ஒருமுறை நன்றாய் தீர்க்கமாய் உற்றுப் பார்த்துவிட்டுப் பின்பு கண்கள் மூடிச் சிறிது நேரத்தில் அவரது எதிர்காலத்தைப் பற்றிய விவரங்களை கடகடவென்று கூறிவிடுவார்.
இவரது புகழ் எங்கும் பரவ ஒருநாள் இளம் சந்நியாசி ஒருவர் வந்து, காலவ முனிவரைப் பணிந்து தன் எதிர்காலத்தைப் பற்றிக் கூறுமாறு வேண்டினார்.
காலவ முனிவரும் கண்கள் மூடி தியானித்து, தியானித்துப் பார்க்கிறார். அந்த இளம் சந்நியாசியின் எதிர்காலம் அவருக்குப் பிடிபடவில்லை. காலவ முனிவருக்கு அதிர்ச்சி. “”ஸ்வாமி… நீங்கள் யார்? உங்கள் எதிர்காலம் எனக்குப் பிடிபட மறுக்கிறதே?” என்று வினவினார்.
“நான் யார் என்பது இருக்கட்டும். எவ்வளவோ பேருக்கு எதிர்காலம் பற்றி ஞான திருஷ்டியில் கூறும் நீங்கள் உங்கள் எதிர்காலம் எப்படி என்று பார்த்திருக்கிறார்களா?” என்று கிண்டலாகக் கேட்டார். காலவ முனிவருக்கும் அப்போதுதான் தனது எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள எண்ணம் ஏற்பட்டது. கண்கள் மூடி நிஷ்டையில் ஆழ்ந்தார். சிறிது நேரத்தில் திடுக்கிட்டார். இன்னும் கொஞ்ச நாட்களில் அவரைத் தொழுநோய் பிடித்துத் துன்புறுத்தப் போவது ஞான திருஷ்டியில் அவருக்குப் புலப்பட்டது. கண்களைத் திறந்து பார்த்தபோது அந்த இளம் சந்நியாசியைக் காணவில்லை. மறைந்துவிட்டார். உண்மையில் இளம் சந்நியாசியாய் வந்தது யமதர்மராஜன். இதையும் ஓரளவு யூகித்துவிட்ட காலவ முனிவர் தனக்கு வர இருக்கும் தொழு நோயிலிருந்து தப்பித்துக்கொள்ள நவகிரகங்கள் நோக்கி கடும் தவமிருந்தார். முனிவரது தவத்தை மெச்சி நவகிரகங்களும் அவர் முன் தோன்ற காலவ முனிவர் தன்னைத் தொழுநோய் பீடிக்காமலிருக்க வரம் தருமாறு வேண்டினார். நவகிரகங்களும் அவ்வாறே வரமளித்துவிட்டன.
இதில் பிரச்னை என்னவென்றால் இந்த நவகிரகங்களுக்கும் சுயமாக எவருக்கும் வரம் தரும் அந்தஸ்து கிடையாது.
ஆண்டவன் கட்டளைப்படி தங்களுடைய கடமைகளை அவை செய்து வர வேண்டுமே தவிர மற்றபடி வரங்கள் அருளும் தகுதி கிடையாது. இவர்களுக்கு அதிபதியான பிரம்மாவுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. உடனே கடுங்கோபத்துடன் அவற்றை வரவழைத்து விசாரணை நடத்தினார். பாவம் நவகிரகங்கள்… தங்களையும் மதித்து ஒருவன் தவம் செய்து வரம் கேட்கிறானே என்ற மகிழ்ச்சியில் தங்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி வரமளித்துவிட்டன. பிரம்ம தேவனுக்குப் புரிந்தது. இருந்தும் என்ன? செய்த தவறுக்கு தண்டணை உண்டே. அதனால் “”காலவ முனிவருக்கு வரவேண்டிய தொழுநோய் உங்களைப் பீடிக்கும். அதுதான் உங்களின் அதிகப்பிரசங்கித்தனத்திற்கான தண்டனை” என்றார் பிரம்மா.
அந்த தண்டனையைக் கேட்டு அலறிய நவகிரகங்கள் பிரம்மனின் காலடியில் விழுந்து சாப விமோசனம் வேண்டினார்கள். கொஞ்ச நேரம் அவர்களை அலற விட்டு வேடிக்கை பார்த்த பிரம்மன் கடைசியாக அவர்களை பூலோகத்திற்கு செல்லுமாறு உத்தரவிட்டார். அங்கே அர்க்கவனம் என்னும் தலத்தில் உள்ள பிராணேசுவரரை கார்த்திகை மாதம் துவங்கி 78 நாட்களுக்கு வழிபட்டு தவம் செய்யவும் உத்தரவிட்டார்.
பிரம்மனின் சாபப்படி தொழுநோய் உடனே நவகிரகங்களைப் பீடித்தது. பூலோகம் வரும் வழியில் அகத்திய முனிவரை சந்தித்து நடந்த விஷயங்களை அவருக்குத் தெரிவித்தன. அகத்தியர் அவர்களுக்கு சில வழிபாட்டு முறைகளை உபதேசித்தார்.
“திருமங்கலக்குடியின் அருகில் இருக்கும் அர்க்கவனத்தில் தங்கி, நீராடி, 78 நாள்கள் தவம் செய்யுங்கள். திங்கள் கிழமை தோறும் எருக்கு இலையில் தயிர் அன்னத்தை வைத்து விடிவதற்கு முன்பு புசியுங்கள். மற்ற நாள்களில் விரதமிருங்கள். இப்படிச் செய்தால் சாப விமோசனம் பெறுவீர்கள்” என்றார் அகத்தியர். நவகிரகங்களுக்கு ஓர் ஆவல். எத்தனையோ இலைகள் இருக்க, எருக்க இலையில் வைத்து ஏன் தயிர் அன்னத்தை புசிக்க வேண்டும்? காரணத்தை அவரிடமே கேட்க, “”அதெல்லாம் உங்களுக்கு எதற்கு? அதெல்லாம் தேவ ரகசியம். இருந்தாலும் சொல்கிறேன். எருக்க இலையின் சாரத்தில் ஒரு சிறு துளி அந்த தயிரன்னத்தில் சேரும். தொடர்ந்து 78 நாட்களுக்கு இப்படி புசித்து வந்தால் தொழுநோய் குணமாகும்” என்றார் அவர்.
அகத்திய முனிவர் குறிப்பிட்ட தேவ ரகசியம் இதுதான். வெள்ளெருக்கு இலையில் வைத்து தயிர்சாதம் சாப்பிட்டால் தொழுநோய் குணமாகும் என்ற பண்டைய மருத்துவ முறைதான் அது. அவ்வளவு சக்தி வாய்ந்தது எருக்கன் இலை. ரத ஸப்தமி (தை மாதம்) நாளில் ஏழு எருக்க இலைகள், எள், அட்சதை ஆகியவற்றை தலையில் வைத்து நீர் நிலைகளில் ஸ்நானம் செய்தால் நவகிரக தோஷம் விலகும் என்ற நம்பிக்கையும் பிறந்ததுதான் இன்றும் நம்மை ரத ஸப்தமி அன்று எருக்க இலையைத் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்யச் சொல்வது. அதற்காக, தொழுநோய் உள்ளவர்கள்தானே அப்படிச் செய்ய வேண்டும், மற்றவர்கள் எதற்காக அப்படி ஸ்நானம் செய்ய வேண்டும் என்று சிலர் கேட்கலாம். தொழுநோய் என்பது ஒரு குறியீடு. நம்மை அறியாமல் செய்யும் எவ்வளவோ தீமைகளால் ஏற்படும் நவகிரக தோஷங்களை இது போக்கும் என்பதே அதன் தாத்பர்யம்.surya bhagavan க்கான பட முடிவு
ரத ஸப்தமியன்று காலை ஏழு எருக்க இலை, பசுவின் சாணம், சிறிது மஞ்சள் அட்சதை இவற்றைத் தலையில் வைத்துக்கொண்டு 7 ஸ்நானம் செய்வதால் பாபங்கள் நீங்கும். அர்க்கன் என்றால் சூரியன். சூரியனுக்கு உகந்த பத்ரமாக இருப்பதால் எருக்க இலைக்கு, “அர்க்க பத்ரம்’ என்று பெயர். அர்க்க பத்ரம் என்பதே பிறகு எருக்க பத்ரம், எருக்க இலை என்று ஆனது. பாபங்களும், ரோகங்களும் சூரிய பகவான் அருளால் நீங்க வேண்டும் என்று ரத சப்தமியன்று “அர்க்க பத்ர ஸ்நானம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
“ஸப்த ஸப்த ப்ரியே தேவி
ஸப்த லோக ப்ரதீயிகே
ஸப்த அர்க்கபத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய”
என்ற ஸ்லோகத்தைக் கூறியபடி ஸ்நானம் செய்ய வேண்டும். அதன் பின் சூரியனைப் பார்த்தபடியோ அல்லது கிழக்கு திசை நோக்கியோ “திவாக்ராய நம: இதமர்க்யம்” என்று மும்முறை சொல்லி சூரிய பகவானுக்கு அர்க்யம் கொடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக