புதன், 23 மே, 2018

இறந்தவர்களை வணங்குவதால் என்ன பலன்?

இறந்தவர்களை வணங்குவதால் என்ன பலன்?முன்னோர்களுக்கு தர்ப்பணம்

வணங்குதல் வேறு, வழிபடுதல் வேறு. பொதுவாக நம்முடைய போற்றுதலுக்கு உரியவர்கள் மூவர் - தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள் என்று வரிசைப்படுத்தலாம். தேவர்களையும், ரிஷிகளையும் நாம் நேரடியாகக் காண இயலாது. இவ்வாறு காணமுடியாமல் அனுபவித்து மட்டுமே உணரக்கூடிய இந்த சக்திகளைப் போற்றும் முறைக்கு வழிபடுதல் என்று பெயர். பித்ருக்கள் என்று அழைக்கப்படுபவர்களை நேரடியாகக் கண்டிருப்போம், அவர்களது மறைவிற்குப் பின் அவர்களுடன் பழகிய நினைவுகளை எண்ணி அதனை அனுபவித்தும் உணர்வோம். 

உயிருடன் இருக்கும்வரை அவர்களை வணங்கியும், இறந்தபின் அவர்களை தெய்வாம்சம் கொண்டவர்களாகக் கருதி அவர்களை வழிபடவும் செய்கிறோம். ஆக, உயிருடன் இருப்பவர்களைப் போற்றுவதை வணங்குதல் என்றும், கண்ணால் காண முடியாத சக்திகளைப் போற்றுவதை வழிபடுதல் என்றும் இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். இந்த இரண்டு முறைகளையும் நாம் பயன்படுத்துவது முன்னோர்களிடம் மட்டுமே. 

இந்த மூவரில் தேவர்களிடம் ஏதேனும் ஒரு வேண்டுகோளை நிறைவேற்றக்கோரும் வகையில் நம்முடைய வழிபாடு அமைகிறது. ரிஷிகளிடம் ஞானத்தினையும், நல்லறிவினையும் தர வேண்டுகிறோம். இந்த இருவரிடமும் ஏதோ ஒரு ஆதாயத்தை எதிர்பார்த்தே நம்முடைய வழிபாடு அமைகிறது. ஆனால், முன்னோர்களை ஆராதனை செய்வது என்பது நாம் அவசியம் செய்ய வேண்டிய நம் கடமைகளில் ஒன்று என சாஸ்திரம் வலியுறுத்துகிறது. 

பலனை எதிர்பாராமல் செய்யவேண்டிய கடமைகளில் அதிமுக்கியமானது முன்னோர் வழிபாடு. பித்ரு லோகத்தில் இருக்கும் அவர்களுக்கு ஆகாரம் அளிக்க வேண்டியது பிள்ளைகளாகிய நமது கடமை. ஈரேழு பதினான்கு லோகத்தில் உள்ளவர்களுக்கும் இறைவன் ஏதோ ஒருவழியில் உணவளித்துக்கொண்டுதான் இருக்கிறான் என்றாலும் பித்ரு லோகத்தில் உள்ளவர்களுக்கு அவர்களது வம்சாவழியினர் அளிக்கின்ற உணவே திருப்தியைத் தருகிறது. தனயன் வெறும் தண்ணீரைத் தந்தாலும் அது அமிர்தமாக தந்தையைச் சென்றடைகிறது. 

உதாரணமாக பள்ளியில் மாணவர்களுக்கு என்னதான் அரசாங்கம் மதிய உணவினைத் தந்தாலும், வீட்டிற்கு வந்து பெற்றோர் கையால் சாப்பிடும் உணவே அவர்களுக்கு முழுமையான மனநிறைவைத் தருகிறது. ஹாஸ்டலிலும், ஹோட்டலிலும் பணம் கட்டிச் சாப்பிட்டாலும், பெற்றவர்களின் கையால் சாப்பிடும் பழைய சோறுகூட பஞ்சாமிர்தமாக சுவைக்கிறது. 

ஆக, அவரவருக்கு உரிமையானவர்கள் அளிக்கும் உணவே முழுமையான திருப்தியைத் தருவதால் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. வம்சவிருத்தி, மனத்தெளிவு, நிலையான சொத்து அமைதல் என சகல சௌபாக்யங்களும் முன்னோர் வழிபாட்டின் பலனாகக் கிடைக்கும் என்றாலும், இந்தப் பலன்களையெல்லாம் எதிர்பாராது செய்ய வேண்டிய அதிமுக்கியமான கடமை முன்னோர்களை வழிபடுவதாகும். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக