திங்கள், 30 ஏப்ரல், 2018

மேன்மை சிறக்க வைக்கும் ஸ்ரீசக்ரமும்,அதன் தலங்களிலும்

தொடர்புடைய படம்

மேன்மை சிறக்க வைக்கும் ஸ்ரீசக்ரமும்,அதன் தலங்களிலும் 

சில கோயில்களில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். அம்பிகையின் பீடமாகவோ அல்லது அம்பிகைக்கு எதிரிலோ இவ்வாறு  அமைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீசக்ரம் மிகுந்த சக்தி வாய்ந்தது. ஆதிசங்கரர் போன்ற பரமாசார்யார்களால் நிறுவப்பட்ட இந்த ஸ்ரீசக்ரம் நமக்கு  நல்வாழ்வளித்து மேன்மை சிறக்க வைக்கும் வல்லமை வாய்ந்தது. சிவன் சக்தி இருவருக்கும் இருப்பிடமானது ஸ்ரீசக்ரம். ஸ்ரீசக்ரத்தின் நடுவில்  பிந்துவும் சுற்றி ஒன்பது முக்கோணங்களும் உள்ளன. இந்த அமைப்பில் மேல் நோக்கிய நான்கு முக்கோணங்கள் சிவனையும் கீழ்நோக்கிய  ஐந்து சக்தியையும் குறிக்கும். எல்லையற்ற சக்தி, ஞானம், கல்வி, ஆரோக்கியம், முக்தி என அனைத்தையும் நல்கும் அற்புதச் சக்ரம் இது.  பாரத நாட்டில் 180க்கும் மேல் உள்ள தலங்களில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவற்றில் சில தலங்களை நவராத்திரி காலத்தில்  தரிசிப்போம்:



திரு ஆனைக்காவல்: பஞ்சபூத ஸ்தலங்களில் இது அப்பு ஸ்தலம். அம்பாளின் உக்ரத்தைச் சாந்தப்படுத்த ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர தாடங்கங்களை  சாத்தினார். இதில் ஒரு சக்ரம் சிவ சக்ரம் மற்றொன்று சக்தி சக்ரம் எனப்படும் ஸ்ரீசக்ரமாகும்.

* திருவிடைமருதூர்: இங்குள்ள மூகாம்பிகை சந்நதியில் பஞ்சலோகத்தினால் ஆன 12”x12”x12” என்ற அளவு கொண்ட ஸ்ரீசக்ரம் உள்ளது.  அம்பிகையே கிளி வடிவில் தோளில் அமர்ந்த பாக்யம் பெற்ற பாஸ்கரராயர் எனும் தேவி உபாசகரால் பூஜிக்கப்பட்ட சக்ரம் இது என்பது  விசேஷ செய்தியாகும்.

வேளச்சேரி: சென்னையில் உள்ள வேளச்சேரி தண்டீஸ்வர் ஆலயத்தில் கருணாம்பிகையின் பாதங்களின் அருகில் ஸ்ரீசக்ரம் அமைக்கப்பட்டுள்ளது.

மாங்காடு: மிகப்பெரிய ஸ்ரீசக்ர கோயில். பல்லவர் காலத்தியது. கர்ப்பகிருகத்தில் உள்ள 6 அடி x 6 அடி x 3 அடி என்ற அளவிலான ஸ்ரீசக்ரம் ஆதி சங்கரரால் ஸ்தாபிக்கப்பட்டது. ஏராளமான அதிசய ரகசியங்களைக் கொண்ட இந்தக் கோயிலில் இந்த சக்ரம் அர்த்த மேரு  வடிவில் அமைந்து பரவசப்படுத்துகிறது. 

திருவொற்றியூர்: இங்குள்ள தியாகராஜர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வட்டப்பாறை அம்மன் சந்நதியில் கல்லினால் வட்டவடிவமான  மூன்றரை அடி குறுக்களவும், 1½ அடி உயரமும் உள்ள காளியந்திரம் ஆதிசங்கரால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

* குற்றாலம்: இங்குள்ள சிவாலயத்தில் தேவிசந்நதியின் அருகில் ஸ்ரீசக்ரத்திற்காகவே தனி சந்நதி உள்ளது. 2’ x 2’ x 1’4” என்ற அளவில்  கருங்கல்லினால் ஆன ஸ்ரீசக்ரம் அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது பராசக்தி பீடம் என போற்றப்படுகிறது.

* காஞ்சிபுரம்: இந்த நகரமே ஸ்ரீசக்ரவடிவிலானது. இங்கு பரமேஸ்வரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட காமகோடி என்னும் பெயர் பெற்ற  ஸ்ரீசக்ரத்தில் அம்பாள் காமாக்ஷி நித்ய ஸாந்நித்திய மாக விளங்குகிறாள். இந்த சக்ரத்தைச் சுற்றிலும் திருமியச்சூரில் லலிதா
ஸஹஸ்ரநாமத்தை இயற்றிய வசின்யாதி வாக்தேவதைகள் எழுந்தருளியுள்ளனர்.

* குஜராத், த்வாரகா நகரில் உள்ள ஆலயத்திலும் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்தை நிறுவியுள்ளார். கேரளத்தில் ஸ்ரீசக்ரம் பதிக்கப்பெற்ற ஆலயங்கள்  ஏராளம். கொடுங்களூரில் உள்ள பத்ர காளி சிலையின் அடியில் ஐந்து ஸ்ரீசக்ரங்களை ஆதி சங்கரர் ஸ்தாபித்துள்ளார்.

1 கருத்து: