வெள்ளி, 20 ஏப்ரல், 2018

பஞ்சபாத்திரம் - உத்தரணி என்ற பெயர் எப்படி வந்தது? -

பஞ்சபாத்திரம் - உத்தரணி என்ற பெயர் எப்படி வந்தது? தொடர்புடைய படம்

உத்தரணி அல்ல, அதனை ருத்ரணி என்று சொல்லவேண்டும். பஞ்ச என்றால் ஐந்து என்று மட்டுமல்ல, அகலமான என்ற பொருளும் உண்டு. பஞ்ச பாத்திரம் என்றால் ‘வாய் அகன்ற பாத்திரம்’ என்று பொருள். நீங்கள் நினைப்பது போல் ஐந்து பாத்திரங்களோ அல்லது ஐந்து விதமான உலோகங்களின் கலவையோ அல்ல. அதேபோல அதனுடன் இணையாக இருக்கும் சின்னஞ்சிறு கரண்டிக்கு ருத்ரணி என்று பெயர். ருத்ரனின் அணிகலனான பாம்பின் உருவினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். பாற்கடலை பாம்பைக் கயிறாகக் கொண்டு கடைந்துதானே அமிர்தத்தை எடுத்தார்கள்! 

அதுபோல பஞ்சபாத்திரத்தில் உள்ள தீர்த்தத்தை எடுக்கும்போது அது அமிர்தமாக வேண்டும் என்பதால் பாம்பின் உருவில் அதனை வடிவமைத்தார்கள். பஞ்சபாத்திரம்-ருத்ரணி என்பதே சரி. இறைவனை முறைப்படி பூஜை செய்து வழிபடும்போது, முதலில் அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லி தியானிப்பார்கள். 
உதாரணத்திற்கு பிள்ளையார் பூஜை செய்யும்போது ‘விநாயகாய நமஹ: த்யாயாமி’ (விநாயகப்பெருமானே உம்மை தியானிக்கிறேன்), ‘ஆவாஹயாமி’ (ஆவாஹனம் செய்கிறேன்), ‘ஆஸனம் சமர்ப்பயாமி’ (உட்காருவதற்கு ஆசனம் அளிக்கிறேன்) என்று சொல்லி அழைப்பார்கள். 

விநாயகப் பெருமான் வந்து ஆசனத்தில் அமர்ந்துவிட்டதாக எண்ணி அடுத்து, பஞ்ச உபசாரம் என்ற பூஜைகளைச் செய்வார்கள். அதாவது ஒரு விருந்தினர் நம் வீட்டிற்குள் வந்தவுடன் அவர்களை ‘வாருங்கள், வாருங்கள்’ என்று வரவேற்று, ‘உட்காருங்கள், தண்ணீர் குடியுங்கள்,’ என்று முதலில் உபசாரம் செய்வோம் அல்லவா, அதே போல இறைவன் நம் வீட்டிற்குள் வந்தவுடன் அவருக்கு பாதபூஜை செய்யும் விதமாக

‘பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி’ (உம்முடைய பாதத்தில் தீர்த்தம் விட்டு அலம்புகிறேன்), ‘

ஹஸ்தயோ: 
அர்க்யம் சமர்ப்பயாமி’ (கைகளை அலம்பிக்கொள்ள தீர்த்தம் விடுகிறேன்),

‘முகே ஆசமனீயம் சமர்ப்பயாமி’ (முகம் வாய் அலம்ப தீர்த்தம் தருகிறேன்), 

‘சுத்தோதக ஸ்நானம் சமர்ப்பயாமி’ (நீராட சுத்தமான தண்ணீரை விடுகிறேன்), 

‘ஸ்நான அனந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி’ (இறுதியாக மீண்டும் ஜலம் விடுகிறேன்)

என்று ஐந்து முறை ருத்ரணியினால் தீர்த்தம் விடுவார்கள். 

இந்த ஐந்து விதமான பஞ்ச உபசாரத்தினைச் செய்வதற்கு துணையாக இந்த பாத்திரம் பயன்படுவதால் ஐந்து என்ற அர்த்தத்தோடு இதனை பஞ்சபாத்திரம் என்று அழைப்பதாகவும் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக