அன்பார்ந்த ஆன்மீக நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள்.நம்முடைய இன்ப,துன்பங்கள் அனைத்தும் நம் முன் ஜென்மத்தில் செய்த பாவங்கள்,நல்லவைகள் அதன் அடிப்படையில்தான் நம்மை வந்து சேருகின்றன.ஆதலால் இந்த பிறவியில் நாம் மனதால்கூட யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்தால் அடுத்த பிறவியில் நன்றாக வாழ முடியும்.இந்த பிறவியில் நம்மால் முயன்ற புண்ணியங்களை சேர்த்து கொள்வதே அதன் வழியாகும்.அடுத்த பிறவிக்கு சரி,இந்த பிறவியில் வரும் துன்பங்களை என்ன செய்வது என உங்கள் மனது கேட்கலாம்.நாம் அதற்கு இறைவனை பிராத்திக்க வேண்டும்.நம் கஷ்டந்தால் மலைபோல் இருந்தாலும் நம் தந்தையாகிய சிவபெருமான் அதை களைந்து நம்மை பெரும் இன்பத்தை ஆட்கொள்ள செய்வார்.
நானும் அன்றாடம் பூஜை விரதங்கள் இருக்கிறேன் ஆனால் எனக்கு மட்டும் ஏன் இப்படி கஷ்டத்தை கொடுக்கிறார் என மனவருத்தம் அடையாதீர்கள்.பொறுமையும்,நம்பிக்கையும் கடவுளிடம் வையுங்கள்.கடவுளிடம் சரணாகதி அடையுங்கள் அது கஷ்டத்தை கடக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.நம்மை பெற்ற தாய்,தந்தையர் நாம் மனம் கலக்கினால் அவர்களால் தாங்க முடியாது.அவர்களே அப்படி என்றால் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி நம் தாயும்,தந்தையும் சும்மா இருப்பார்களா ?ஓடோடி வந்து நம் துயரத்தை துடைத்து சந்தோஷத்தை கொடுப்பார்கள்.
தினமும் அம்மை,அப்பனை மனதார வழிபடுங்கள்.பூஜை செய்துதான் வழிபாடு செய்ய வேண்டும் என்பது இல்லை.ஒரு நாளில் இறைவனுக்காக 5நிமிடம் ஒதுக்குங்கள்.எங்கு இருந்து கொண்டும் இறைவனை நினைத்து வணங்கலாம்.நம்முள் தான் இறைவன் இருக்கிறான்.நாம்தான் அதை புரிந்து கொள்வதில்லை.நாம் எல்லா தவறையும் செய்துவிட்டு கடவுளை பழிக்கிறோம்.இதைத்தவிர்த்து அவர் எந்த சூழ்நிலையிலும் நம்மைக்காப்பார் என எண்ணி அவருக்கு அவ்வப்போது நன்றிகள் சொல்லுவோம்.
மேலே எழுதியவை எல்லாம் என் உள்ளத்த்தில் தோன்றிய எண்ணங்கள்.இந்த பதிவைஎழுத காரணமாக இருந்த இறைவன்,இறைவிக்குஎன்னுடைய நன்றிகள் பல .இனி புண்ணியம் என்பது என ஒரு சிறுகதைமூலமாக பார்க்கலாம் .
ஒரு நல்ல காரியத்துக்கு உதவி செய்வது புண்ணியம். கோவில் கும்பாபிஷேகம், திருப்பணி போன்ற காரியங்களுக்கு நம்மால் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து, புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய தர்மமாக, ஒரு செங்கல் கொடுத்தாலும், அந்த செங்கல், அந்த ஆலயத்தில், எத்தனை வருஷங்கள் உள்ளதோ, அத்தனை ஆயிரம் வருஷங்கள் கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வாசம் செய்யலாமாம். ஒரு ஏழையின் கல்யாணத்துக்கு உதவுவதும், சிவபூஜை செய்யும் ஒருவருக்கு பூஜைக்கு வேண்டிய பூவோ, பழமோ, கற்பூரமோ ஏதாவது ஒன்றை கொடுத்தாலும் புண்ணியம் உண்டாகும்.
ஒரு அந்தணர், தெருவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். அவர் நெடுநேரம் தேடுவதைப் பார்த்த ஒருவர், ஐயா... என்ன தேடுகிறீர்கள்? என்று கேட்டார். சிவ பூஜைக்கு, வாழைப்பழம் வாங்குவதற்காக, ஓரணா வைத்திருந்தேன். அது கீழே விழுந்து விட்டது. அதைத்தேடிக் கொண்டிருக்கிறேன்... என்றார். பரவாயில்லை பூஜைக்கும் நாழியாகிவிட்டது; நான் ஓரணா தருகிறேன். வாழைப்பழம் வாங்கி, பூஜையை முடித்துக் கொள்ளுங்கள்...என்று சொல்லி, ஓரணாவைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். (அந்தக் காலத்தில் ஓரணாவுக்கு நாலு வாழைப்பழம்.) அவரும், ஓரணாவுக்கு வாழைப்பழம் வாங்கி வைத்து, பூஜையை முடித்தார்.தேவேந்திரன், ஒரு நாள், தர்மராஜன் சபைக்கு வந்தான். எமதர்மன், தேவேந்திரனை உபசரித்து வரவேற்றான். சபையில், ஒரு ரத்ன சிம்மாசனமும், ஒரு தங்கத்தாலான சிம்மாசனமும், போடப்பட்டிருந்தது. அந்த சமயம், இரண்டு தேவ விமானங்கள் வந்தன. எமதர்மன், ஓடிப்போய் விமானத்திலிருந்தவரை வரவேற்று உபசரித்தான். ஒவ்வொரு விமானத்திலிருந்தும், ஒவ்வொரு புண்ணிய புருஷர் இறங்கினர். எமதர்மன், ஒருவரை, ரத்ன சிம்மாசனத்திலும், மற்றொருவரை, தங்க சிம்மாசனத்திலும், உட்கார வைத்தான். புண்ணிய புருஷர்களான நீங்கள் இங்கு வந்தது என் பாக்யம்... என்று சொல்லி, அவர்களை, எமதர்மன் உபசரித்ததை பார்த்த தேவேந்திரன், எமதர்மனைப் பார்த்து, இவர்கள் அப்படி என்ன புண்ணியம் செய்தனர்! அதிலும், ஒருவரை ரத்ன சிம்மாசனத்திலும், ஒருவரை தங்க சிம்மாசனத்திலும் உட்கார வைத்திருக்கிறாயே... என்று கேட்டான்.அதற்கு எமதர்மன், இதோ தங்க சிம்மாசனத்தில் இருப்பவர், தினமும், சிரத்தையுடன் சிவ பூஜை செய்தவர். அந்த புண்ணியத்தினால், இவரை தங்க சிம்மாசனத்தில் உட்கார வைத்திருக்கிறேன். மற்றொருவரோ சிவ பூஜைக்கு உதவி செய்தவர். ஒரு நாள், சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்க வைத்திருந்த காசை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் போது, இந்த ரத்ன சிம்மாசனத்தில் இருப்பவர், அவருக்கு காசு கொடுத்து வாழைப்பழம் வாங்க, உதவி செய்தவர். அதனால், இவருக்கு ரத்ன சிம்மாசனம்... என்றான் எமதர்மன். தேவேந்திரன் ஆச்சரியப்பட்டு, சிவபூஜை செய்தவரை விட, சிவ பூஜைக்கு உதவி செய்தவருக்குத்தான் அதிக புண்ணியம் என்பதை தெரிந்து கொண்டேன்... என்று சொல்லி, எமதர்மனிடம் விடைபெற்று, தேவலோகம் சென்றான்.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு சிவபூஜை அல்லது கும்பாபிஷேகம் ஆகியவற்றை முன் நின்று நடத்துபவரை விட, அதற்கு உதவி செய்பவர்களுக்கு புண்ணியம் அதிகமாம். அதனால் தான், எங்கேயாவது கும்பாபிஷேகம், திருப்பணி என்றால், என் பணமும் அதில் சேரட்டும்... என்று, பணம் கொடுத்து. புண்ணியத்தை சேர்த்துக் கொள்கின்றனர்.
தெய்வத் திருப்பணிகளுக்குக் கொடுத்தால், புண்ணியம். கொடுத்து பாருங்கள், அந்த புண்ணியம் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்வீர்கள்!
ஒரு நல்ல தகவலை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் என்ற மகிழ்ச்சியில் இந்த பதிவை முடிக்கிறேன்.இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்கள் .தவறாக ஏதும் இருந்தால் உங்கள் கருத்தை தெரியுங்கள்.நன்றி
உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக