திங்கள், 16 ஏப்ரல், 2018

செல்வம், செல்வாக்கு, புகழ், முக்தி அனைத்தையும் அருளும் கிருஷ்ணநாம ஜபம்!

செல்வம், செல்வாக்கு, புகழ், முக்தி அனைத்தையும் அருளும் கிருஷ்ணநாம ஜபம்!


முன்னொரு காலத்தில் இறைநம்பிக்கையில் நாட்டம் இல்லாத விஜயபாலன் என்னும் இளைஞன் ஒருவன் வாழ்ந்து வந்தான். எந்த வேலைக்கும் செல்லாமல் ஊரைச் சுற்றுவதையே முழுநேரப் பணியாகச் செய்துவந்தான். அவன் வசிக்கும் கிராமத்திலுள்ள கிருஷ்ணன் கோயிலில் ஒருநாள் திருவிழா நடைபெற்றது.
கிருஷ்ணநாம ஜபம்
ஊர் சுற்றிய களைப்பில் அந்த வழியாகப் பசியோடு வந்து கொண்டிருந்தான் விஜயபாலன் . திருவிழாவுக்கு வந்திருந்த கிருஷ்ண பக்தர்கள் அனைவரும் கிருஷ்ண நாமத்தை ஜபித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அதனைக் கண்டு மிகுந்த எரிச்சலடைந்தான்.
நேராக அவர்களிடம் சென்று, 'ஏன் எல்லோரும் 'கிருஷ்ணா ' 'கிருஷ்ணா' என்று ஒரே வார்த்தையையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். இப்படியே நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பதால், இங்கே என்ன நிகழ்ந்து விடப் போகிறது என்று கோபத்தோடு கேட்டான்.
மேலும், 'உங்கள் கிருஷ்ணனால் என் பசியைப் போக்க முடியுமா?' என்றான் ஆத்திரத்துடன்.
அப்போது அந்தக் கூட்டத்திலிருந்த பெரியவர் ஒருவர் 'தம்பி எங்களைப் போன்று நீயும் கிருஷ்ண நாமத்தை ஜபித்தால், உனக்குத் தேவையான உணவு மட்டுமல்ல, உன் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையும் கிடைக்கும்' என்றார்.பகவான் ஶ்ரீ கிருஷ்ணா
பெரியவரின் பேச்சில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், பசியின் கொடுமையால் கிருஷ்ண நாமத்தைச் சொல்லித்தான் பார்ப்போம் என்று முடிவெடுத்தான். அதற்காக ஊருக்கு வெளியே  உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றான். அங்கே ஒரு மரத்தின் மீது ஏறி, அமர்ந்து அமைதியாக, 'கிருஷ்ணா' 'கிருஷ்ணா' என்று ஜபிக்க ஆரம்பித்தான்.
அப்போது அந்தவழியாக வழிப்போக்கன் ஒருவன் வந்தான். வந்தவன் விஜயபாலன் அமர்ந்திருக்கும் மரத்துக்கு கீழே அமர்ந்து உணவருந்தினான். பின்பு அங்கேயே உறங்கவும் ஆரம்பித்தான். விஜயபாலனும் மரத்தின்மீது அமர்ந்தபடியே கிருஷ்ண நாமத்தை ஜபித்துக்கொண்டே தன்னை மறந்து உறங்க ஆரம்பித்தான்.
சிறிது நேரத்தில் விழிப்பு வரவே கண்விழித்தான். அப்போது மரத்துக்கு கீழே ஓர் உணவுப் பொட்டலம் இருப்பதைக் கண்டான். வழிப்போக்கன்தான் உணவுப் பொட்டலத்தை அங்கே மறந்து விட்டுச் சென்றிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டான்.
நாம் ஜபித்த கிருஷ்ணநாமம் நம்மைக் கைவிடவில்லை என்று நினைத்துக்கொண்டே கீழே இறங்கினான். இறங்கிய பின் அவனுக்குள் ஒரு தயக்கம் உண்டானது. கிருஷ்ண நாமத்தின் மகிமையால் நமக்கு இது கிடைத்தது என்றால் நமக்கே நேரடியாகக் கிடைத்திருக்கவேண்டும். ஒருவன் மறந்து வைத்துவிட்டு போன உணவு எப்படி நமக்கானதாக இருக்கும் என்றெண்ணி உணவுப் பொட்டலத்தைத் தொடாமல் மீண்டும் மரத்தின்மீது ஏறி அமர்ந்துகொண்டான்.
சூரியனும் மறையத் தொடங்கியது. திடீரென்று யாரோ சிலர் வரும் சத்தம் கேட்கவே விஜயபாலனின் கவனம் அவர்களின்மீது திரும்பியது. வந்தவர்கள் அனைவரும் திருடர்கள் கூட்டம் எங்கேயோ திருடிவிட்டு, மர நிழலில் அமர்ந்து பங்கு பிரித்துக் கொண்டிருந்தனர். இந்த மரமே அவர்கள் எப்போதும் திருடிய பொருள்களைப் பங்கு பிரிக்கும் இடமாகும்.
அப்போது எதிர்பாராதவிதமாக விஜயபாலன் அமர்ந்திருக்கும் மரத்தின் கிளை ஒன்று முறிந்து கீழே விழுந்தது. கள்வர்கள் கூட்டம் அனைவரும் மரத்தில் அமர்ந்திருந்த விஜயபாலனை பார்த்துவிட்டனர். கள்வர்கள் கூட்டதின் தலைவனோ " இவன் கண்டிப்பாக நம்மை வேவு பார்க்க வந்தவனாகத்தான் இருப்பான். நாம் தினமும் இங்குதான் பங்கு பிரிப்போம் என்பதைத் தெரிந்து கொண்டு மரத்தின்மீது அமர்ந்து இருக்கிறான். இவனை அப்படியே இறக்கி மரத்தில் கட்டி வையுங்கள் என்று கட்டளைடயிட்டான். தலைவனின் பேச்சைக் கேட்ட திருடர்களிம் அப்படியே செய்தனர்.
சிறிது நேரத்தில் கூட்டத்தில் ஒருவனுக்கு அதிகமான பசி ஏற்படவே எதாவது உணவு இருக்கிறதா என்று தேடினான். சரியாக வழிப்போக்கன் வைத்து விட்டுச் சென்ற உணவு அவன் கண்ணில் பட்டது. உடனடியாக மிகுந்த மகிழ்ச்சியோடு பொட்டலத்தைப் பிரித்து உண்ண முற்பட்டான். ஆனால் கள்வர்கள் கூட்டத் தலைவன் அவனைத் தடுத்தான். மேலும் இந்த உணவை இவன்தான் விஷம் கலந்து இங்கு வைத்திருப்பான், இதை உண்ணாதே, இதை இவனுக்கே கொடு என்று விஜயபாலனுக்குக் கொடுக்கச் சொன்னான். விஜயபாலனும் வேறு வழியின்றி உணவை உண்ண ஆரம்பித்தான். சிறிது நேரம் ஆன பின்பு உணவில் விஷம் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டனர் திருடர்கள்.
இவன் நம்மை வேவு பார்க்க வந்தவன் அல்ல என்பதை உணர்ந்து கொண்டு விஜயபாலனை கட்டவிழ்த்துவிட்டனர். விஜயபாலனைப் பற்றி விசாரித்தான் கள்வர் கூட்டத் தலைவன். விஜயபாலனின் நிலைமையைப் புரிந்து கொண்ட கள்வர் கூட்டத் தலைவன் ' நீ மிகவும் கஷ்டப்படுகிறாய். இந்தா பணம், இதை நீ வைத்துக்கொள் 'என்று கொஞ்சம் பணத்தைக் கொடுத்தான்.
ஶ்ரீ கிருஷ்ண பகவான்

ஆனால், விஜயபாலனோ 'நான் நம்பிக்கையே இல்லாமல், 'கிருஷ்ண நாமம்' சொன்னதற்கே எனக்கு உணவு, பணம் எல்லாம் கிடைக்கிறது. நான் இறைவனின் மீதும், அவர் நாமத்தின் மீதும் முழு நம்பிக்கையோடு இருந்து உழைத்து, இதை விடச் சிறப்பாக வாழப் போகிறேன்' என்று கூறி அங்கிருந்து மகிழ்ச்சியோடு விடைபெற்றான்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக