புதன், 4 ஏப்ரல், 2018

பரமசிவன், அனுமாராக அவதாரம் எடுத்த கதை

பரமசிவன், அனுமாராக அவதாரம் எடுத்த கதை

தொடர்புடைய படம்

ஹனுமான் குழந்தை பருவத்தில் சூரியனைப் பிடிக்க முயற்சி செய்தது, இந்திரனினால் அடிக்கப்பட்டு, மயங்கி கிடந்தது, வாயு கோபம் அடைந்து உலகோரை மூச்சு விடாமல் திணர செய்தது, மும்மூர்த்திகளும், மற்ற தேவர்களும் தோன்றி அவருக்கு எல்லா வரங்களையும் அளித்த கதை சிறுவர் முதல் பெரியவர்
வரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
மேலும், அவர் பெரியவரான போது, சுக்ரீவருக்கு மந்திரியானது, ராம லக்ஷ்மணரை சந்தித்தது, ராமருக்காக சீதையை தேட ஆகாயத்தை கடந்தது,
சீதையிடம் மோதிரத்தை கொடுத்து சூடாமணியை வாங்கியது, ராவணனை சந்தித்து அறிவுரை வழங்கியது, இலங்கையை எரித்தது- என்ற நிகழ்ச்சிகள் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. ராம-ராவண யுத்ததில், அவருடைய பங்கு, ராமாயண கதை படித்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். அனுமார் இல்லாமல் ராமரால் இவ்வளவு சாதனைகள் செய்திருக்க முடிந்திருக்குமா, என்று நினைக்க தோன்றும்.
ஆனால், அனுமாருக்கு அந்த மாதிரி எண்ணம் வந்ததே இல்லை.வரவும் வராது. *அதனால் தான், அவருடைய நல்ல பண்புகளையும் குணங்களையும்
நினைத்து, அவரை, இன்றும் என்றும் வணங்கி வருகிறோம்.
எப்படி இவரால், அதுவும் ஒரு குரங்காக இருந்து கொண்டு, இவ்வளவு சாதனைகள் செய்ய முடிந்தது? அதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும்.
அவர் தேவாம்சம் பெற்றவராக இருந்திருக்க வேண்டும். சாதரண தேவருடைய அம்சமாக இருக்க வாய்ப்பில்லை. பின் யாருடைய அம்சம் இவர்?
சாஷாத் பரமேஸ்வரனுடைய அம்சம். அது என்ன கதை ? பார்ப்போமா….!!!!!
இடம்-கைலாசம்தொடர்புடைய படம்
சிவபெருமான் தன் தியானத்திலிருந்து எழுந்து வரும் போது ராம நாமத்தை
உச்சரித்து கொண்டு வந்தார். பார்வதி தேவி, எம்பெருமானை
பார்த்து கேட்டாள், “சுவாமி,நீரே எல்லோருக்கும் மேலான கடவுள். அப்படியிருக்க, 
நீர் ஏன் இன்னொரு கடவுளின் பெயரை சொல்கிறீர்.”
சிவன், அதற்கு பதில் சொல்கிறார். ”தேவி, ‘ராம’ என்ற எழுத்து 2 விஷயங்களை குறிக்கிறது. ஒன்று,”ராம” என்பது தான் பிரம்மம். இரண்டாவது, அது விஷ்ணுவின் அவதாரமான ஒரு இளவரசனை குறிக்கிறது. ராமர் தான் என்னுடய இஷ்டமான அவதாரம். நான் பூலோகத்தில் அவதரித்து ராமருக்கு தொண்டு செய்ய போகிறேன்.“

இதை கேட்ட பார்வதிக்கு கோபம் வந்து, தான் சிவனை விட்டு ஒரு நிமிஷம் கூட பிரிந்து இருக்க மாட்டேன் என்று சொன்னாள்.சிவன் சொன்னார். ” தேவி, கவலை வேண்டாம். பூலோகத்துக்கு அனுப்ப போவது என்னுடய ஒரு சிறு பகுதி தான். மற்றபடி நான் உன்னுடன் தான் இருப்பேன்.” என்றார். பார்வதியும் சமாதானமாகி சுவாமியுடன் அவர் எடுக்கப்போகும் அவதாரத்தை பற்றி
விவாதிக்க தயாரானாள். பலத்த விவாதத்துக்கு பிறகு சுவாமியின் அவதாரம்
ஒரு குரங்காக இருக்க வேண்டும் என்று நிச்சயிக்கப்பட்டது.
ஏன், குரங்கு அவதாரம்?

பரமேஸ்வரன் விளக்குகிறார். ” மனிதனாக அவதாரம் எடுத்தால், அது தர்மத்திற்கு ஒவ்வாத செயலாக அமையும். *எஜமானனை விட சேவகன் *
ஒரு படி கீழ் நிலையில் இருக்க வேண்டும். இந்த சூழலில் குரங்கு அவதாரம் பல காரணங்களால் சிறந்தது. குரங்குக்கு விசேஷமான தேவைகள் கிடையாது. நிறைய சேவகம் செய்ய வாய்ப்பு உண்டு.” என்றார்.
பார்வதி தேவி தானும் கூட வருவதாக அடம் பிடித்தாள். சுவாமியும் சம்மதித்து பார்வதி தான் எடுக்க போகும் அவதார குரங்குக்கு வாலாக இருக்கலாம் என்று முடிவு செய்தார். ( இப்போது புரிகிறதா? ஏன் அனுமார் வால் அழகாகவும் பலமுள்ளதாகவும் இருக்கிறது என்று).
பார்வதி கடைசியாக இன்னொரு சந்தேகத்தை கிளப்பினாள். “சுவாமி, ராவணன் உங்கள் பரம பக்தன். நீங்கள் எப்படி அவன் மரணத்துக்கு
உதவ முடியும்? ”,என்று கேட்டாள். சிவன், ” தேவி,உனக்கு நினைவு இருக்கிறதா? ராவணன் என் 11 ருத்ர அம்சங்களை திருப்தி பண்ணுவதற்காக
தன்னுடைய ஒவ்வொரு தலையையும் வெட்டி நெருப்பில் போட்டான்.
ராவணனுக்கு 10 தலைகள் தானே! 10 ருத்ரர்கள் தான் திருப்தி ஆனார்கள்.
ஓரு ருத்ரருக்கு கோபம். அந்த 11வது ருத்ர அம்சம் தான் குரங்கு அவதாரம் எடுக்க போகிறது.” என்றார்.
இப்பொழுது, எப்படி அவதாரம் நடந்தது என்று பார்க்கலாம்.


“அஞ்சனாதேவி” என்ற பெண் குரங்கிற்கும், ”கேசரி” என்ற ஆண் குரங்கிற்கும் மகனாய் பிறந்தவர்தான் இந்த அனுமன். ஆஞ்சநேயரின் தாயார் ”அஞ்சனாதேவி” முற்பிறவியில், பிரம்மாவின் சபையில் ஒரு ஆடல் அழகியாய் இருந்தார். தவம் இயற்றிக் கொண்டிருந்த ஒரு முனிவரின் தவத்தை கலைத்தற்காக, சாபம் பெற்று குரங்காக மாறினார்.


 ஒரு முறை ஒரு குரங்கு ஆசனம் இட்டு தவம் செய்து கொண்டிருந்தததை பார்த்தாள் ”அஞ்சனாதேவி”. அதைப்பார்த்து, சும்மா இராமல் அந்த குரங்கின் மீது பழங்களை எறிந்து விளையாடினார். உடனே, அந்த குரங்கு தவம் கலைந்து எழுந்து ஒரு முனிவராக மாறியது. கடுங்கோபம் கொண்ட அந்த முனிவர், ”அஞ்சனாதேவி” யார் மீதாவது காதல் கொண்டால், அந்த தருணமே குரங்காக மாறிவிடுவாள் என சாபமிட்டார். தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு மன்றாடினாள் ”அஞ்சனாதேவி”. தனக்கு குரங்கு முகம் இருந்தாலும், தன் காதலன் தன்னை நேசிக்க வேண்டும் என்றும், சிவப்பெருமானின் அம்சமே தனக்கு மகனாக பிறக்கவேண்டும் என்றும் வரம் வேண்டினாள். மனமிரங்கிய முனிவரும் அப்படியே ஆகட்டும். சிவபெருமானின் அம்சமாக மகன் பிறந்தவுடன் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என அருள்பாலித்தார் . 
முனிவரின் சாபத்தின் பலனால், பூமியில் பிறந்து, ஒரு காட்டில் வசித்து வந்தாள். ஒருநாள் காட்டில் ஒரு ஆடவனைக் கண்டு, அவன் அழகில் மயங்கி, அவன் மேல் காதல் கொண்டாள். காதல் கொண்ட அந்த தருணமே அவள் குரங்காக மாறிவிட்டாள். அவள் அருகில் வந்த அந்த ஆண், தன்னை ”கேசரி” என்றும், தான் ”குரங்குகளின் அரசன்” என்றும் கூறினான். குரங்கு தலையை கொண்ட மனிதனான அவனால் நினைத்த நேரத்தில் மனிதனாகவும், குரங்காகவும் உருமாற முடியும். இதைக் கண்டு ஆச்சரியமடைந்தாள் ”அஞ்சனாதேவி”. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அஞ்சனாதேவியிடம் கேட்டான். அந்த காட்டிலேயே ”அஞ்சனாதேவி”யும் ”கேசரி”யும் கந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். 
திருமணத்திற்கு பிறகும், சிவப்பெருமானை நினைத்து எப்பொழுதும் தவத்தில் இருந்தாள் ”அஞ்சனாதேவி”. இதனால் மனம் குளிர்ந்த சிவபெருமான் என்ன வரம் வேண்டும் என கேட்டார். முனிவரால் தனக்கு கிடைத்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற, சிவபெருமானே தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என கோரினாள். அப்படியே ஆகட்டும் என வரம் கொடுத்தார் சிவபெருமான்.


 அதேசமயம், அயோத்தியாவின் அரசனான ”தசரத சக்கரவர்த்தி”யும் பிள்ளை வரம் வேண்டி ”புத்திரகாமேஷ்டி” யாகத்தை நடத்திக் கொண்டு இருந்தார். இதனால், மனம் குளிர்ந்த ”அக்னிதேவன்”, ”தசரதனி”டம் புனிதமான பாயாசத்தை கொடுத்து இதனை சரி சமமாக உன்னுடைய தேவியருக்கு பங்கிட்டு கொடுன்னு எனக் கூறினார். ”தசரதனு”ம் தன்னுடைய பட்டத்து ராணியான, “கெளசல்யா” ( கோசலை)விற்கும், ”கைகேகி”க்கும் இரண்டாகப் பிரித்துக் கொடுத்தார். அவர்கள் இருவரும், தங்களுக்கு அளிக்கப்பட்ட பிரசாதத்தினை சரி பாதியாக பிரித்து, இரண்டு பங்காக சுமித்ராவுக்கு கொடுத்ததினால் அவளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது என மரபு வழி கதைகளில் சொல்வார்கள். தசரதன் அந்த பிரசாதத்தை தன் மனைவியருக்கு கொடுக்கும் போது, அதில் சிறிதளவு பிரசாதத்தை ஒரு பறவை எடுத்துச் சென்று ”அஞ்சனாதேவி” தவம் புரிந்த இடத்தருகே விட்டு சென்றது. காற்றின் கடவுளான ”வாயுபகவானி”டம் அந்த பிரசாதத்தை ”அஞ்சனாதேவி”யின் கைகளில் போடுமாறு ”சிவபெருமான்” கட்டளையிட்டார். பாயாசத்தை பார்த்த அஞ்சனா மிகுந்த சந்தோஷத்துடன் அதனை உண்டாள். அதனை உண்ணும் போது சிவபெருமானின் அருளை ”அஞ்சனாதேவி” உணர்ந்தாள். அதன்பிறகு, குரங்கின் முகத்தை கொண்ட ஒரு மகனை பெற்றெடுத்தார் ”அஞ்சனாதேவி”.அனுமன் கதைகள் க்கான பட முடிவு அக்குழந்தை சிவனின் அம்சமேயாகும். அந்தக் குழந்தை பல பெயர்களில் அழைக்கப்பட்டது. ”ஆஞ்சநேயன்”, (அஞ்சனாவின் மகன் ), ”கேசரி நந்தனா” (கேசரியின் மகன்), ”வாயுபுத்திரா” அல்லது ”பவன் புத்திரா” (வாயுதேவனின் மகன்). அந்தக் குழந்தை தன்னுடைய குழந்தைப் பருவத்திலேயே மிகுந்த பலசாலியாக விளங்கி வந்தார் அனுமன். தன் தந்தை”கேசரி” மற்றும் தாய் ”அஞ்சனாதேவி”யின் சக்திகளை அவர் பெற்றார். வாயுதேவனின் மகன் என்பதால் காற்றைப்போல் மிக வேகமாக செயல்பட்டார். ஆஞ்சநேயரின் பிறப்பால், ”அஞ்சனாதேவி” தன் சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றார். சாப விமோசனம் பெற்ற ”அஞ்சனாதேவி” வான் உலகுக்கு திரும்பினாள். பின்னர் ராமபிரானின் தீவிர பக்தனனார் ஆஞ்சநேயர். இராம இராவண யுத்தத்தில் பெரும்பங்கு வகித்து இராமர் கைகளினாலே சிரஞ்சீவி வரம் பெற்றார். தொடர்புடைய படம்

இது தான்,பரமசிவன், அனுமாராக அவதாரம் எடுத்த கதை. அதனால் தான், அனுமாரை சங்கர சுவன், கேசரி நந்தன், அஞ்ஜனி புத்திரன் என்று அழைக்கிறோம்.


*இந்த அதிசய கூட்டணி விஷ்னு அம்சமான ராமரும், சிவ அம்சமான அனுமானும்- நம்மை எல்லோரையும் காப்பாற்ற, வேண்டி வணங்கி எல்லாம் அருளையும் பெறுவோம்.!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக