பகவான் சோதனை... பரிசளிக்கும் நன்மைகள்! - கிருஷ்ணர் உணர்த்திய நிகழ்வு
நாம் என்னதான் இறைவனிடம் பக்தி செலுத்தினாலும், அவன் நம்மை பல நேரங்களில் மிகுந்த சோதனைகளுக்கு ஆட்படுத்துகிறான். அப்போதெல்லாம், 'இறைவனிடம் இத்தனை பக்தி வைத்திருக்கும் நம்மை இப்படி சோதிப்பது சரிதானா?' என்று சலித்துக்கொள்கிறோம். ஆனால், உண்மை என்ன தெரியுமா?
அதை விளக்கும் வகையில் துவாரகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்.
பெற்றோர் இல்லாத ஏழைப் பெண் ஒருத்தி துவாரகையில் வசித்து வந்தாள். அவளுக்கு கிருஷ்ணனிடத்தில் அளவற்ற பக்தி. அவனுக்கு தான் சேவை செய்யவேண்டும்; அவன் விருப்பப்படி நடந்துகொள்ளவேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டாள்.
ஒருநாள் பகவான் கிருஷ்ணனிடம் சென்றவள், தான் கிருஷ்ணனை மிகவும் நேசிப்பதாகவும், அவன் விருப்பப்படியே நடந்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தாள்.
அந்தப் பெண்ணைப் பற்றியும், அவள் தன்னிடம் கொண்டிருக்கும் அன்பைப் பற்றியும் கிருஷ்ணனுக்குத் தெரியாதா என்ன? ஆனால், அவன் என்ன செய்தார் தெரியுமா?
தான் என்ன சொன்னாலும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறிய அந்தப் பெண்ணிடம், கிருஷ்ணன் ஒரு பெரிய மூட்டையைக் கொடுத்து, தான் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் அந்த மூட்டையைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் என்று சொன்னார். மேலும் அந்த மூட்டை தங்கள் இருவரின் கண்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது என்றும் கூறினார்.
இதைக் கேட்டு அந்தப் பெண் திகைத்துவிட்டாள். தன்னுடைய பக்திக்கு ஏற்ப ஏதேனும் கேட்பான் என்று எதிர்பார்த்தவள், மூட்டையை தூக்கிக் கொண்டு வரும்படிச் சொன்னதும் வேறு வழி இல்லாமல் தூக்கிக் கொண்டு கிருஷ்ணனுடன் சென்றாள்.
பார்ப்பதற்கு அழுக்காக இருந்த அந்த மூட்டைக்குள் என்னதான் இருக்கிறது என்று அவளுக்குத் தெரியாது. கிருஷ்ணன் செல்லும் இடமெல்லாம் தூக்கிச் செல்லும் அளவுக்கு அந்த மூட்டையில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலில், இரண்டுமுறை அந்த மூட்டையை அவிழ்க்கவும் முயற்சி செய்தாள். ஆனால்,முடியவில்லை. எனவே, 'நாம் திறந்து பார்ப்பதை பகவான் விரும்பவில்லை' என்று தெரிந்துகொண்டு தன்னைத் தானே தேற்றிக்கொண்டு, கிருஷ்ணன் செல்லும் இடமெல்லாம் மூட்டையை சுமந்து சென்றாள். நேரம் செல்லச் செல்ல மூட்டையின் பாரம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் பொறுமை எல்லை மீறிப் போனவளாக, 'கிருஷ்ணா, உனக்கு பக்தி செய்து பணி செய்ய வந்த என்னை இந்த அழுக்கு மூட்டையை சுமக்க வைத்துவிட்டாயே, என்னால் சுமக்க முடியவில்லையே கிருஷ்ணா! இது கருணைக் கடவுளான உனக்கே அடுக்குமா? ' என்று கேட்டாள்.
அதற்கு கிருஷ்ணன், 'பெண்ணே, என்னிடம் நீ கொண்டிருக்கும் பக்தி உன் பலவீனம் என்றால், அதில்தான் என்னுடைய பலம் அடங்கி இருக்கிறது. உன் பக்கம் நான் எப்போதும் துணையாக இருப்பேன். சலித்துக்கொள்ளாமல், கஷ்டப்படாமல் சுமந்து வா' என்று கூறினார்.
நாள்கள் செல்லச் செல்ல அவளால் தூக்க முடியவில்லை.அப்போதெல்லாம் கிருஷ்ணரும் ஒரு கை பிடித்து அவளுடைய பாரத்தைக் குறைக்கிறார். ஒருநாள் ஓர் இடத்தில் அந்தப் பெண்ணை நிறுத்திய கிருஷ்ணன், 'நாம் வரவேண்டிய இடத்துக்கு வந்து விட்டோம். இனி நீ சுமக்கவேண்டாம். மூட்டையை இறக்கி வை' என்று கட்டளை இட்டார். அதற்கென்றே காத்திருந்த அந்தப் பெண்ணும் மூட்டையை கீழே இறக்கி வைத்தாள். ''மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று பார்க்கலாமா?'' என்று கிருஷ்ணர் கேட்டார்.
அந்தப் பெண்ணும் அதற்குத்தானே காத்துக்கொண்டிருந்தாள். உடனே திறந்து பார்க்கலாம் என்று அவசரப்படுத்தினாள்.
கிருஷ்ணனும் சிரித்துக் கொண்டே தனது புல்லாங்குழலை இசைக்க ,முடிச்சுகள் ஒவ்வொன்றாய் தானாக அவிழ்ந்து பிரிகிறது ,
முதலில் வைக்கோல் தென்படுகிறது,பின்பு வைக்கோலுக்கு இடையில் அரிய மாணிக்கங்களும்,வைர வைடூரியங்களும்,பொற்காசுகளும், தங்க ஆபரணங்களும் குவிந்து கிடந்தன .தேவலோகத்தில் உள்ள கற்பகவிருட்சம் மட்டுமே தரக்கூடிய பொக்கிஷம்தான் அது .கிருஷ்ணன் அப்பெண்ணை நோக்கி “இத்தனை காலம் பொறுமையுடன் நீ காத்திருந்தமைக்காக உனக்கு என்னுடைய பரிசு இது. எடுத்துக்கொள்!!” என்றார்
அவளுக்கோ சந்தோஷத்தில் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. கிருஷ்ணரின் கால்களில் விழுந்து வணங்கியவள், ''கிருஷ்ணா! நீ பெரிய பொக்கிஷத்தை என்னிடம் கொடுத்திருந்தாய். ஆனால், நானோ உன்னைத் தவறாக நினைத்துக்கொண்டேன். உன் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, நான் இந்த மூட்டையை சுமந்திருந்தால், இந்த பாரம் எனக்கு இன்பமாக இருந்திருக்கும்'' என்று மன நெகிழ்ச்சியுடன் கூறினாள்.
கிருஷ்ணர் வழக்கம்போல் குறும்புச் சிரிப்பை உதிர்த்துவிட்டு மறைந்து விட்டார்.
இறைவன், ஒருவருக்கு எந்த அளவுக்கு சுமையை சுமக்க முடியுமோ அந்த அளவுக்குத்தான் சுமையைத் தருவார். அந்த சுமையும்கூட நம்முடைய கர்மவினைகளால் நமக்கு ஏற்படுவதுதான். இறைவனிடம் நாம் பக்தியுடன் இருந்தால், அவரே சமயங்களில் நம்முடைய சுமையைக் கொஞ்சம் ஏற்றுக்கொள்வார். பிறகு நமக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருவார். எனவே, இறைவன் நமக்குத் தருகின்ற சோதனைகள் எல்லாமே நம்முடைய நன்மைக்குத்தான் என்பதைப் புரிந்துகொண்டால், சோதனைகளும் கஷ்டங்களும் வரும்போது நாம் இறைவனிடம் சலித்துக்கொள்ள மாட்டோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக