யாரை எப்படி வணங்க வேண்டும்?
ஆதிமனிதர்கள் தாங்கள் பார்த்து பயந்து வியந்த விஷயங்களை எல்லாம் வணங்க ஆரம்பித்தார்கள். நாளடைவில், தங்களைவிட பலம் வாய்ந்த மனிதர்களைக்கூடப் பார்க்கும்போது, மரியாதையாக வணங்கும் பழக்கம் உருவானது. எந்த ஒரு சுபநிகழ்ச்சியும் வணக்கம் என்கிற வார்த்தையில் இருந்துதான் தொடங்குகிறது.. அதேபோன்று முடியும்போதும் வணக்கத்துடன் கூடிய நன்றியுடன்தான் நிறைவடைகிறது.
சுபநிகழ்ச்சிகளில் தாய், தந்தையரை வணங்கி அவர்களது ஆசிகளைப் பெறுகிறோம். இல்லத்திலோ, கோயில்களிலோ இறைவனை வணங்கித்தான் வழிபடுகிறோம்.
நண்பர்களை வணங்குவதற்கும், தாய், தந்தையரை வணங்குவதற்கும், இறைவனை வணங்குவதற்கும் வேறுபாடுகள் உள்ளன. நண்பர்களின் மீதிருப்பது நட்பு. தாய் தந்தையர்களின் மீது இருப்பது அன்பு, பாசம் கலந்த மரியாதை. இறைவனின் மீதிருப்பது பக்தி.
ஒவ்வொருவரையும் வணங்குவதற்கான காரணங்கள் வேறுபடுவதைப்போல் வணங்கும் முறைகளையும் நம் முன்னோர்கள் வேறுபடுத்தி வைத்துள்ளனர். யாரை,எப்படி வணங்குவது என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்
வணக்கங்கள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை அஷ்டாங்கணம், சாஷ்டாங்கம், பஞ்சாங்கம், நமஸ்காரம், அபிநந்தனம், சரணஸ்பர்ஷம்.
அஷ்டாங்கணம்:
'அஷ்டாங்கணம்' தெய்வங்களை வழிபடும்போது மட்டுமே மேற்கொள்ளவேண்டும். நம் உடலின் நெற்றி, மூக்கு, தாடை, மார்பு, வயிறு, கை, கால், மூட்டு ஆகிய எட்டுப் பாகங்களும் தரையில் நன்றாகப்படும்படி வணங்கும் முறைக்கு 'அஷ்டாங்கணம்' என்று பெயர். பொதுவாக இந்த வணக்கமுறை ஆண்களுக்கானது. ஆண்கள் கோயிலில் கொடிமரத்தை வணங்கும்போதோ, அல்லது இல்லத்தில் இறைவனை வணங்கும்போதோ இப்படி வணங்க வேண்டும். மேலும், அறுபதாம் கல்யாணம், சுமங்கலி பூஜை போன்ற சுபநிகழ்ச்சிகளின்போது மட்டும் மனிதர்களை இந்த முறையில் வணங்கலாம்.
சாஷ்டாங்கம்”
'சாஷ்டாங்கம்’ எனப்படுவது உடலின் ஆறு அங்கங்கள் அதாவது நெற்றி, மூக்கு, தாடை, கைவிரல், கால்விரல், கால்மூட்டு ஆகியவை மட்டும் தரையில் படும்படி வணங்குவது. ஆண், பெண் இருவருக்கும் பொதுவான வணக்க முறையாகும். யோகாசனம் போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளும்போது சூரிய நமஸ்காரத்தை இந்த முறையில்தான் செய்ய வேண்டும்.
பஞ்சாங்கம்:
இதையும் தெய்வங்களை வழிபடுவதற்காக மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இந்த வணக்க முறை பெண்களுக்கு உரித்தானது. இது பெண்களின் நெற்றி, கைகள், கைமூட்டு, கால்விரல், கால்மூட்டு ஆகிய ஐந்து அங்கங்கள் தரையில்படும்படி முட்டிபோட்டு வணங்கும் முறையாகும். பெண்கள் கோயிலில் கொடிமரத்தை வணங்கும்போது பஞ்சாங்கமாகத்தான் வணங்க வேண்டும். சுமங்கலி பூஜை, சஷ்டியப்த பூர்த்தி போன்ற சுபநிகழ்ச்சிகளின்போது மட்டும், மனிதர்களை இப்படி வணங்கலாம்.
மனிதர்களை வணங்கும்போது பின்பற்றும் முறை. இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து, மார்பின் அருகிலோ, நெற்றிக்கு நேராகவோ, அல்லது தலைக்கு மேல் உயர்த்தியோ வணங்கும் முறைக்கு 'நமஸ்காரம்' என்று பெயர். பெரும்பாலும் நமஸ்காரம் அனைவராலும் வைக்கப்படும் ஒரு வணக்க முறை. மனிதர்கள் மட்டுமின்றி, கோமாதா பூஜையின்போது பசுக்களை நாம் இந்த முறையில் வணங்கலாம். பசுக்கள் மட்டுமின்றி, எந்த ஜீவராசிகளை வணங்கும்போதும் நாம் இந்த முறையையே பின்பற்றலாம். இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து வணங்குவதன் மூலமாக `நீயும் நானும் சமமானவன்’ என்ற தத்துவம் வெளிப்படுகிறது.
அபிநந்தனம்:
இருகைகளையும் கூப்பி மார்பின் அருகே வைத்து, தலையைச் சாய்த்து, பணிவோடு வணங்கும் முறைக்கு `அபிநந்தனம்’ என்று பெயர். தெய்வங்களை வழிபடும்போதும், உயர்ந்த மனிதர்களை வழிபடும்போது இந்த வணக்க முறையை மேற்கொள்ள வேண்டும். பணிவாக ஒருவருக்கு மரியாதை செய்ய விரும்பினால், கண்டிப்பாக நாம் அபிநந்தன முறையில்தான் வணக்கம் வைக்க வேண்டும்.
சரணஸ்பர்ஷம்:
நேரடியாகக் கால்களை மட்டும் தொட்டு வணங்கும் முறைக்கு 'சரணஸ்பர்ஷம்' என்று பெயர். மாதா, பிதா, குரு, தெய்வம், சான்றோர் ஆகியோரை மட்டுமே இப்படி வணங்கவேண்டும்.தெய்வங்களின் பாதங்களைத் தொட்டு வணங்குவதென்பது இறைவனின் பாதத்தில் சரணடைதலைக் குறிக்கிறது.
வணங்குதல் என்பது மிக உயர்ந்த குணமே. இருந்தபோதும் தாய், தந்தையர், குரு மற்றும் தெய்வங்களைத் தவிர்த்து மற்றவர்களை காலைத் தொட்டு வணங்குவதோ. அஷ்டாங்கமாகவோ, பஞ்சாங்கமாகவோ காலில் விழுந்து வணங்குவதோ முறையல்ல. யாரை எப்படி வணங்க வேண்டுமோ அப்படி வணங்கி, இறைவனிடம் இறையருளைப் பெறுவோம். சக மனிதர்களிடம் நன்மதிப்பைப் பெறுவோம். நமக்கு உதவும் ஜீவராசிகளை வணங்கி மகிழ்வோம்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக