திங்கள், 2 ஏப்ரல், 2018

அள்ள அள்ள குறையாத செல்வம் தரும் அட்சய திருதியை வழிபாடு!

akshaya tritiya க்கான பட முடிவுஅள்ள அள்ள குறையாத செல்வம் தரும் அட்சய திருதியை வழிபாடு!
வடமொழியில் ‘அட்சய’ என்ற சொல்லுக்கு என்றும் குறைவில்லாத, வற்றாத என்று பொருள்.அட்சய திருதியை தினத்தன்று யுகங்கள் தோறும் பல சிறப்பான நிகழ்வுகள் நடந்துள்ளன. அவை செல்வத் திருமகளாம் மகாலட்சுமியின் அருளால் செல்வம், அன்னம், கல்வி முதலியவை குறைவில்லாது வளரும் என்பதை வலியுறுத்துகின்றன. 
முதலில் திருதியை என்றால் என்ன என்று பார்ப்போம். முழு நிலவு அல்லது அமாவாசை முடிந்த மூன்றாம் நாள், ‘திருதியை’ என்று அழைக்கப்படுகிறது. அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை மூன்றாம்பிறையாக சிறப்பிக்கப்படுகிறது. சிவன் தன் நெற்றியில் அணிந்திருக்கும் பெருமை பெற்றது இப்பிறை.ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் பிறை நாளில் வருவதுதான் அட்சய திருதியை. இந்த நன்னாளில் எக்காரியத்தைத் துவக்கினாலும் அது குறைவின்றி வளரும் என்பது நம்பிக்கை. 
அட்சய பாத்திரம் உருவான விதம்:
பல யுகங்களுக்கு முன்னால் காசியில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. உண்ண உணவும், பருக நீரும் இல்லாமல் மக்கள் மிகவும் அவதியுற்றனர். அதைக் கண்டு சகிக்க முடியாத மலைமகள், அன்னபூரணியாக அவதாரம் எடுத்தாள். தனக்கென்று ஒரு மாளிகையை ஏற்படுத்திக் கொண்டு பரிவார தேவதைகளின் உதவியோடு மக்களின் பசிப்பிணி தீர்த்தாள். யார் எப்போது வந்தாலும் ‘இல்லை’ என்று சொல்லாமல் உணவு வழங்கிக் கொண்டே இருந்தாள்.ஒரு நிலையில் அன்னையும் அவளது பரிவாரங்களும் களைத்துப்போய் விட்டனர். அவர்களுக்கு உதவவும், அன்னபூரணியின் பெருமையை உலகறியச் செய்யவும் திருவுளம் கொண்டார் எம்பெருமான் ஈசன். பிட்சாடனர் வேடம் பூண்டு மனைவியின் மாளிகைக்குப் போய் தன் பசியைத் தீர்க்கும்படி வேண்டினார். அன்னையும் நிறைய அன்னம், காய்கறிகள், பழங்கள் என உணவிட்டுக்கொண்டே இருக்க அவரும் அனைத்தையும் உண்டு கொண்டே இருந்தார்.
மாளிகையில் இருந்த அரிசி, பருப்பு, காய்கறி முதலிய பொருட்கள் அனைத்தும் தீரும் நிலை. 
என்ன செய்வாள் அன்னை? உடனே காசியில் பிந்து மாதவன் என்ற பெயரில் சேவை சாதிக்கும் தன் அண்ணனாம் திருமாலை நினைத்து வழி கேட்டாள். தங்கையின் துயர் தீர்க்க தயாபரன் தானும் ஒரு பிச்சாண்டி போல உருக்கொண்டு மகாலட்சுமியின் அருளால் கிடைத்த பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு வந்தார்.வந்தவரை வரவேற்று அன்னம் படைத்தாள் அன்னபூரணி. அவற்றை அந்த பாத்திரத்தில் இட்ட மகாவிஷ்ணு, ‘அட்சய’ என்ற வார்த்தையைக் கூறி அப்பாத்திரத்தைத் தொட்டார். அன்று முதல் அதிலிருந்து குறைவின்றி பலவகையான உணவுப் பொருட்கள் தோன்றின. முதல் முதல் அட்சய பாத்திரம் தோன்றிய நாள் அட்சய திருதியை நன்னாள்தான். பிட்சாடனராக வந்த சிவனின் பசியையும் தீர்த்தது அப்பாத்திரம். உடனே தன் சுய உருவத்தில் தோன்றி, அன்னபூரணியின் பணி தடையின்றி நடக்கவும், அவள் புகழ் திக்கெட்டும் பரவவும் வரம் அளித்தார் ஈசன்.
மகாவிஷ்ணுவும் அப்பாத்திரத்தை தங்கையின் கையில் கொடுத்து, ‘‘உமா! இது தான் அட்சய பாத்திரம். இதிலிருந்து வரும் பொருட்கள் என்றுமே குறையாது. இதைக் கொண்டு நீ உன் பணியைச் செவ்வனே நிறைவேற்றுவாயாக! இதன் தேவை தீர்ந்த பின் இப்பாத்திரம் தானே வைகுண்டம் வந்து சேர்ந்துவிடும்’’ என்று கூறி மறைந்தார். அதன் பிறகு பஞ்சம் தீரும் வரை அப்பாத்திரத்தைக் கொண்டு அன்னை அன்னபூரணி மக்களின் துயர் தீர்த்தாள். பஞ்சம் தீர்ந்து அன்னபூரணி விசாலாட்சியாக மாறியதும் அட்சயப் பாத்திரம் மகாலட்சுமியைச் சென்று சேர்ந்து விட்டது.
அட்சய திருதியை தினத்தின் சிறப்புகள்:
பல சிறப்புகளும் புராண இதிகாச நிகழ்வுகள் நடந்ததும் இந்த அட்சய திருதியை நாளில்தான். பாண்டவர்கள் வனவாசம் செல்லுமுன் சூரியனை நோக்கி தவமியற்றி அட்சய பாத்திரம் பெற்ற நாள் இதுவே.
கௌரவர் சபையில் பாஞ்சாலி மானபங்கப் படுத்தப்பட இருந்தபோது அவள் ‘கோவிந்தம் புண்டரீகாட்சம் ரட்சமாம் சரணாகதம்’ என்ற மந்திரத்தைச் சொல்லி ‘அபயம் அபயம்’ என்று அழுதாள். அப்போது கண்ணபிரான் எங்கோ துவாரகையில் இருந்தார். ஆனால் திரௌபதியின் அவலக்குரல் அவரை எட்டியது. உடனே அபயக்கரத்தை நீட்டி ‘அட்சய’ என்று மூன்று முறை கூறினார். பாஞ்சாலியின் சேலை குறைவின்றி வளர்ந்து கொண்டே இருந்தது. அவள் மானம் காக்கப்பட்டதும் இந்த அட்சய திருதியை நாளில்தான்.
வனவாசத்தின் போது துர்வாச முனிவரின் கோபத்துக்கு ஆளாகாமல் கிருஷ்ணர் பாண்டவர்களை காத்ததும் இந்த அட்சய திருதியை நன்னாளில்தான். மேலும் வியாச முனிவர் மகாகாவியமான மகாபாரதத்தை அவர் சொல்லச் சொல்ல யானை முகத்தோன் எழுதத் துவங்கியதும் இந்த நாளில்தான்.
Related image
தசாவதாரங்களில் ஒன்றான பரசுராம அவதாரம் நிகழ்ந்தது, திருமாலின் மார்பில் லட்சுமி தேவி நீங்கா இடம் பிடித்தது, குபேரன் மகாலட்சுமியை வணங்கி சங்க நிதி, பதும நிதிகளைப் பெற்றது, குசேலர் அவல் கொடுத்து குறைவற்ற செல்வத்தைக் கண்ணனிடமிருந்து பெற்றது, ஆதி சங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம் பாடி, தங்க நெல்லிக்கனி மழையைப் பெய்ய வைத்தது என பல முக்கிய நிகழ்ச்சிகள் இந்நாளில் நடந்துள்ளன.
இந்த நன்னாள் தானத் திருநாள் என்றே சிறப்பிக்கப்படுகிறது. அட்சய திருதியை அன்று செய்யப்படும் தான தர்மங்கள் பல மடங்கு பலன் கொடுக்கும். அதோடு அன்று துவங்கும் எந்தக்காரியமும் மிக மிக சிறப்பாக குறைவின்றி வளரும். வியாபாரம் துவங்குபவர்கள், புத்தகம் வெளியிடுபவர்கள் அட்சய திருதியை அன்று துவக்கினால் தொழில் சிறப்பாக வளரும்.
அட்சய திருதியை பூஜை: 
இந்த தினம் மகாலட்சுமிக்கு உரியது. அன்று அன்னை திருமகள் எல்லா மங்கலப் பொருட்களிலும் வாசம் செய்வதாக ஐதிகம். அன்று தங்கம் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. இயலாதவர்கள் வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் இவற்றையும் வாங்கலாம். ‘மகாலட்சுமி தந்திரம்’ என்னும் நூலில் அட்சய திருதியை அன்று என்ன வாங்க வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது. மகாலட்சுமியின் பிறப்பிடம் கடல். உப்பு கடலில்தான் விளைகிறது. செல்வத்தை அருள்பவனாம் சுக்கிரனுக்கு உரிய தெய்வம் மகாலட்சுமி. அவருக்கு உரிய நிறம் வெண்மை. அதனால் கடலில் விளைந்த வெண்மை நிறமான உப்பை வாங்குவது மிகவும் சிறப்பானதாக சொல்லப்பட்டிருக்கிறது.Related image
இந்த தினத்தில் மகாலட்சுமிக்கும், குபேரனுக்கும் பூஜை செய்தால் நம் இல்லத்தில் செல்வத்துக்கு குறைவு என்பதே வராது. அட்சய திருதியை அன்றுதான் குபேரனும், அவன் மனைவியும் திருமகளைப் பூஜித்து வற்றாத செல்வத்தைப் பெற்றனர். அதனால் இப்பூஜையை தம்பதிகளாகத்தான் செய்ய வேண்டும். இப்பூஜையை வியாபாரத் தலத்திலும் செய்யலாம். 
முன்னாளில் மகோதயம் என்ற ஊரில் ஊணன் என்ற வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் என்ன தான் நேர்மையாக வியாபாரம் செய்தும் அவனால் குடும்பத்துக்குத் தேவையான பொருள் ஈட்ட முடியவில்லை. அதனால் வீட்டில் சதா பிரச்சினை, சண்டை, சச்சரவு, நிம்மதி இல்லாத நிலை. அப்போதுதான் அவன் அட்சய திருதியை நாளின் பெருமையைக் கேள்விப்பட்டு வருடாவருடம் திருமகளையும், குபேரனையும் அந்நாளில் பூஜை செய்ய முடிவு செய்து கொண்டான். அதே போன்று பக்தி சிரத்தையுடன் நெய்விளக்கேற்றி, திருமகளை தியானித்து பூஜை செய்தான்.
முதல் வருடத்திலேயே அவன் வியாபாரம் செழிக்க ஆரம்பித்தது. ஆனால் விடாமல் ஒவ்வொரு வருடமும் பூஜை செய்யச் செய்ய அவன் நிலை மிக உயர்ந்தது. நகரின் மிகச் சில செல்வந்தர்களுள் ஒருவனாக அவன் ஆனான். அது மட்டுமல்ல, மறு பிறவியில் குசாணம் என்ற நாட்டுக்கு அரசனாகப் பிறந்து செல்வச் செழிப்பில் வாழ்ந்தான் என்று மகாலட்சுமி தந்திரம் என்னும் புராண நூல் குறிப்பிடுகிறது. 
 பூஜையைச் செய்வது எப்படி?
காலையில் எழுந்து நீராடி பூஜையில் இருக்கும் மகாலட்சுமி படத்திற்கு பூவும், குங்குமமுமிட்டு அலங்கரித்துக் கொள்ள வேண்டும். வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை முதலிய பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது சிறப்பானது. தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் தயார் செய்து கொள்ள வேண்டும். மகாலட்சுமி அஷ்டகம், கனகதாரா ஸ்தோத்திரம் முதலியவைகளைப் படித்து அர்ச்சனை செய்ய வேண்டும். தீப தூபம் காட்டி சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்தை வீட்டாரும், பணியாளர்களும் உண்டு, தயிர் சாதத்தை முதிய யாசகர்களுக்கு தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டிலும் வியாபாரத் தலத்திலும் திருமகள் நித்திய வாசம் செய்வாள். 

 தானத்துக்கும் பூஜைக்கும் உரிய நாளான அட்சய திருதியை நாளன்று நாமும் லட்சுமி குபேர பூஜை செய்து, வீட்டில் என்றும் செல்வம் நிலைத்திருக்க வேண்டுவோம். அதோடு வறியவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவி, நம் மனதில் என்றும் நீங்காத அருட் செல்வத்தையும் பெறுவோம். அட்சய திருதியை அன்று கீழ்க்காணும் மகாலட்சுமி மந்திரத்தைக் கூறி தியானித்தால் எல்லா வளங்களும் கிட்டும்.

யா தேவி சர்வ பூதேஷு லட்சுமி ரூபேண சமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக