வெள்ளி, 24 ஜூலை, 2015

குத்து விளக்கு

நலம் தரும் குத்துவிளக்கு


         இந்துக்கள் பெரும்பாலான வீடுகளில்  குத்து விளக்கை வைத்து பூஜை செய்வதை எல்லோரும் கேள்விப்பட்டு இருப்போம். சில பேர் பாத்தும்  கூட இருக்கலாம் . குத்து விளக்கைப்  பற்றி சொல்லலாம் என்று  நான்  வந்திருக்கேன்.  விளக்குகளில் எத்தனையோ  விளக்குகள் இருக்கின்றன . அதில்  காமாட்சி விளக்கு ,குத்து விளக்கை   அம்பாளாக எண்ணி வணங்க வேண்டும் .

குத்து விளக்கு தெய்வீகமானது .தெய்வீக அம்சம் பொருந்தியது .குத்து விளக்கின் அடிப்பாகம்
பிரம்ம  அம்சம் ,நீண்ட நடுப்பகுதி விஷ்ணு அம்சம் ,மேற்பகுதி சிவ அம்சம் ஆகும். இந்த மூன்று
பாகம் சேர்த்து  குத்து விளக்கு என்பர் .


ஒளி வெளியே இருந்தால் மட்டும் போதாது .நம் உள்ளேயும் ஒளி இருக்க வேண்டும் .உள்ளும்
புறமும் ஒளி ஏற்றி அஞ்ஞான  இருள் அகலவே விளக்கு வழிபாடு  நம் பூஜையறையில் அவசியம்
செய்ய வேண்டும் .

அதிகாலை எழுந்ததும் குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏதேனும் ஒன்றை ஏற்றி
வைக்க வேண்டும் .தீபம் லக்ஷ்மி வாசம்  செய்யும் இடம்.காலை ,மாலை விளக்கு ஏற்றுவது நல்லது .
பூஜையறையில் 24 மணி நேரமும் விளக்கு எரிய வேண்டும் .

ஐந்து முக விளக்கு ஏற்றினால் சகல செளபாக்கியம் அத்தனையும் நமக்கு கிடைக்கும் .குத்து
விளக்கில் 5 முகங்களும் 5 குணங்களை சொல்கின்றன .அவை

அன்பு ,மன உறுதி ,நிதானம் ,சம யோகித புத்தி ,பொறுமை


விளக்கு பூஜை செய்ய உகந்த நாட்கள்


             வெள்ளிகிழமை ,கார்த்திகை ,பெளர்ணமி ,ஆடி செவ்வாய் , ஆடி வெள்ளி ,தை செவ்வாய் ,
தை வெள்ளி ,விசாகம்,அமாவாசை,சதுர்த்தி ,பஞ்சமி ,ஏகாதசி ஆகிய திதிகள் ,நவராத்திரி,சிவராத்திரி போன்ற நாட்களில் குத்து விளக்கு ஏற்றி வழிபட   வேண்டும் .

குத்து விளக்கு  108 மந்திரம் சொல்லி ,குங்கும அர்ச்சனை
அல்லது பூவால்  அர்ச்சனை செய்தால்  நன்மை பல கிடைக்கும் .

குத்து விளக்கு 108 மந்திரம்


பொன்னும் மெய்ப் பொருளும் தருவாய் போற்றி 
போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி 
முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி 
மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி 
வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி! 
இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி 
ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி 
பிறர் வயமாகா பெரியோய் போற்றி 
பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி 
பேரருட் கடலாம் பொருளே போற்றி ! 
முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி 
மூவுலகுந்தொழ மூத்தோய் போற்றி 
அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி 
ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி 
ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி ! 
இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி 
மங்கல நாயகி மாமணி போற்றி 
வளமை நல்கும் வல்லியே போற்றி 
அறம் வளர்நாயகி அம்மையே போற்றி 
மின் ஒளியம்மையாம் விளக்கே போற்றி ! 
மின் ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி 
தையல் நாயகித் தாயே போற்றி 
தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி 
முக்கட் சுடரின் முதல்வி போற்றி 
ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி! 
சூடாமணியே சுடர் ஒளி போற்றி 
இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி 
அருள் பொழிந்து எம்மை ஆள்வாய் போற்றி 
அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி 
இல்லற விளக்காம் இறைவி போற்றி! 
சுடரே விளக்காம் தூயாய் போற்றி 
இடரைக் களையும் இயல்பினாய் போற்றி 
எரி சுடராய் நின்ற இறைவி போற்றி 
ஞானச் சுடராய் நின்றாய் போற்றி 
அருமறைப் பொருளாம் ஆதிபோற்றி ! 
தூண்டு சுடர் இனிய சோதி போற்றி சோதியே போற்றி 
சுடரே போற்றி ஓதும் உள் ஒளி விளக்கே போற்றி 
இருள் கெடுக்கும் இல்லத்து விளக்கே போற்றி 
சொல்லக் விளக்காம் சோதியே போற்றி! 
பலர்காண் பல்கலை விளக்கே போற்றி 
நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி 
உவப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி 
உணர்வுசூழ் கடந்ததோர் விளக்கே போற்றி 
உடம்பெனும் மனையக விளக்கே போற்றி ! 
உள்ளத் தகளி விளக்கே போற்றி 
மடம்படும் உணர் நெய் விளக்கே போற்றி 
உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி 
இடம்படும் ஞானத்தீ விளக்கே போற்றி 
நோக்கு வார்க்கு எரிகோள் விளக்கே போற்றி ! 
ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி 
அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி 
சோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி 
தில்லைப் பொதுநட விளக்கே போற்றி 
கற்பனை கடந்த சோதியே போற்றி ! 
கருணையே உருவாம் விளக்கே போற்றி 
அற்புதக் கோல விளக்கே போற்றி 
அருமறைச் சிரத்து விளக்கே போற்றி 
சிற்பர வியோம விளக்கே போற்றி 
பொற்புடன் நடஞ்செய் விளக்கே போற்றி ! 
உள்ளத் திருளை ஒழிப்பாய் போற்றி 
கள்ளப் புலனை கரைப்பாய் போற்றி 
உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி 
பெருகு அருள் சுரக்கும் பெரும் பொருள் போற்றி 
இருள் சேர் இருவினை எறிவாய் போற்றி ! 
அருவே உருவே அருவுரு போற்றி 
நந்தா விளக்கே நாயகியே போற்றி 
செந்தாமரைத்தாள் தந்தாய் போற்றி 
தீபமங்கல ஜோதி விளக்கே போற்றி 
மதிப்பவர் மனமணிவிளக்கே போற்றி ! 
பாகம் பிரியா பராபரை போற்றி 
ஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றி 
ஏகமும் நடஞ்செய் எம்மான் போற்றி 
ஊழி ஊழி உள்ளோய் போற்றி 
ஆழியான் காணா அடியோய் போற்றி ! 
ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி 
அந்தமிலா இன்பம் அருள்வாய் போற்றி 
முந்தைய வினையை முடிப்போய் போற்றி 
பொங்கும் கீர்த்தி பூரணி போற்றி 
தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி ! 
அருளே உருவாய் அமைந்தோய் போற்றி 
இருநில மக்கள் இறைவி போற்றி 
குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி 
ஆறுதல் எமக்கிங் களிப்பாய் போற்றி 
தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி ! 
பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி 
எத்திக்குந் துதிஎய்தாய் போற்றி 
அஞ்சேலென்றருளும் அன்பே போற்றி 
தஞ்சமென்றவரைச் சார்வோய் போற்றி 
ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி ! 
ஓங்காரத்து உள்ளொளி விளக்கே போற்றி 
எல்லா உலகமும் ஆனாய் போற்றி 
பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி 
புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய் போற்றி 
செல்வாக்கு செல்வம் தருவாய் போற்றி ! 
பூங்கழல் விளக்கே போற்றி போற்றி 
உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி 
உயிர்களின் பசிப்பிணி ஓழித்தருள் போற்றி 
செல்வம் கல்வி சிறப்பருள் போற்றி 
நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி ! 
விளக்கிட்டார்க்கு மெய்ந்நெறி விளக்குவாய் 
போற்றி நலம் எல்லா உயிர்க்கும் நல்குக போற்றி 
தாயே நின்னருள் தந்தாய் போற்றி 
தூய நின் திருவடி தொழுதனம் போற்றி போற்றி 
என்பார் அமரர் விளக்கே போற்றி ! போற்றி 
என்பார் மனிதர் விளக்கே போற்றி போற்றி 
என் அன்பொளி விளக்கே போற்றி போற்றி! போற்றி! 




விளக்கு வைத்தவுடன் என்ன செய்யக் கூடாது ?
---------------------------------------------------------
விளக்கு ஏற்றியவுடன் தலை சீவக் கூடாது .

வீட்டை பெருக்கக்கூடாது .

வெளியே செல்லக் கூடாது .

துணி துவைப்பது ,தலைக்கு குளிப்பது கூடாது .

அம்பாள் வரும் நேரம் உறங்கக்  கூடாது .

சாப்பிடக்கூடாது .

பால்,மோர்,உப்பு ,தவிடு ,சுண்ணாம்பு ,அரிசி ,கடன் கொடுக்கக் கூடாது .


விளக்கு பூஜை செய்வோருக்கு

-------------------------------------

இரு  விளக்கு வைத்து வணங்கக் கூடாது .1 அல்லது 3 விளக்கு வைத்து வழிபட வேண்டும் .நெய் தீபம் சிறந்தது .

விளக்கை கிழக்கு திசை நோக்கி வைப்பது சிறப்பு .கிழக்கு ,வடக்கு பார்த்து சாமீ கும்பிடுவது நல்லது .

அர்ச்சனை செய்த குங்குமத்தை எடுத்து சுமங்கலிகள் தாலியிலும் ,தலை உச்சி வகிடுலும் வைத்து வர கணவர் நலமுடன் வாழ்வர் .

பூஜை செய்யும் போது  விளக்கை தலைவாழை இலையிலோ ,தாம்பாள  தட்டிலோ வைத்து  பூஜை
செய்ய வேண்டும் .

விளக்கின் சுடர் நிதானமாக எரிய வேண்டும் .தானாக அணையக் கூடாது .

விளக்கின் சுடரில் மகாலட்சுமி வாசம் செய்வதால் கையால் வீசி  அணைக்கவோ ,வாயால் ஊதி
குளிர வைப்பது குற்றம் .பூவால் அணைத்து குளிர செய்யலாம் .திரியை உள்ளே இழுத்து ஒளியை
எண்ணெயில்  மறைய செய்யலாம் .

என்ன திரி போட்டால் என்ன நன்மை ?


தாமரை  திரி ----மனதிற்கு பிடித்த துணையுடன் இணைத்து வைக்கும் .

 வாழை திரி ----மக்கட் பேறு

வெள்ளை எருக்கு பட்டை தீபம் ---துர் ஆவிகளிடமிருந்து காப்பாற்றும் .

உங்கள் மனை விளங்க ,குலம் விளங்க விளக்கேற்றி வழிபடுங்கள்

மீண்டும் நாளை சந்திப்போம்

உங்கள் ஈஸ்வரி



1 கருத்து: