மார்கழி கோலங்களில் பரங்கிப்பூ வைப்பது ஏன்?
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்- என்பது கண்ணன் வாக்கு. விதவிதமான கோலங்கள் வீட்டை அலங்கரிக்க, சிலவீடுகளில் அக்கோலங்களின் மீது பரங்கிப்பூவை (பூசணிப்பூ) சாணத்தின் மீது செருகி வைத்திருப்பார்கள்.மார்கழியை நினைவுபடுத்துகிற முக்கியமான அடையாளங்களில் ஒன்று கோலங்களை அலங்கரிக்கிற பரங்கிப்பூ. அதிகாலையில் வாசல் தெளித்து மெழுகி, பெரிய பெரிய கோலங்கள் இட்டு, நடுவில் சாணம் வைத்து, அதில் பரங்கிப்பூவை செருகி வைப்பது வழக்கம். சாணம் என்பது கிருமிநாசினி. அதன் நடுவில் வைக்கப்படுகிற மஞ்சள்நிற பரங்கிப்பூவானது மங்கல அடையாளம். மலர்ச்சியை வரவேற்கும் வழி என்பது நம்பிக்கை. வீதிகளில் ஒரு கூட்டம், இசைக்கருவிகளுடன் பஜனை செய்தபடி வரும். அநேகமாக, அந்த பஜனை முடிந்தபின் தான், சூரிய பகவானேஉதயமாவார். மார்கழியில் இதெல்லாம் எதற்காக?விஞ்ஞான ரீதியாகவே, மார்கழி மாதத்தில் மட்டும், அதுவும் அதிகாலையில் ஏராளமான சக்திகள் (குறிப்பாக வைட்டமின்) வெளிப்பட்டு காற்றில் தவழ்ந்துகொண்டிருக்கும். சூரியன் வெளிப்பட்டு வெம்மையை வீசத் தொடங்கியதும் அந்த சக்திகள் அனைத்தும் அப்படியே கரைந்து போய்விடும்.ஆரோக்கியத்தை அளிக்கும் அந்த சக்திகளை நாம் அடைய வேண்டும் என்பதற்காகவே, மார்கழி அதிகாலையில் வீதி பஜனை, கோலமிடுதல் என்றெல்லாம் ஏற்படுத்தி வைத்தார்கள்.அதெல்லாம் சரி... கோலத்தின் மேல் ஏன் பரங்கிப் பூவை வைக்க வேண்டும்? சூட்சுமமான தகவல் அது.முற்காலத்தில், இப்போது இருப்பது போல மணமகன், மணமகள் தேவை போன்ற மேட்ரிமோனியல் பகுதிகளோ, தரகர்களோ இருந்தது கிடையாது.
அதனால்....எந்தெந்த வீடுகளில் மகனோ.. மகளோ திருமணத்திற்கு தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டுக் கோலங்களில் பரங்கிப்பூவை வைத்துவிடுவார்கள். ஊர்க்காரர்கள் தெருவில் பஜனை செய்தபடி வரும்போது, அந்தப் பூவைப் பார்ப்பார்கள். பூ இருக்கும் வீட்டில் பூவை இருக்கிறாள் என்று புரிந்து கொள்வார்கள். தை மாதம் பிறந்ததும், அந்த வீட்டிற்குப் போய் பெண்ணையோ, மாப்பிள்ளையையோ பேசி முடித்து விடுவார்கள்.ஆனால், இப்போதோ, இந்த சூட்சுமத்தை உணராமல், எல்லா வீடுகளிலும் கோலத்தின் மேல் அழகுக்காக பூ வைக்கிற வழக்கம் வந்து விட்டது. .அந்த பழைய வழக்கத்தில் வேறொரு அற்புதமான நிகழ்ச்சியும் உண்டு. கோலங்களின் மீது பரங்கிப் பூக்களை வைத்தார்கள் இல்லையா! அதிலுள்ள தேனைக் குடிக்க கருத்த வண்டுகள் மலர்களைச் சுற்றி வட்டமிடும். குழந்தைகள் அந்தக் கோலத்தைச் சுற்றி அமர்ந்து, அந்த வண்டுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டுஇருப்பார்கள். சூரியன் உச்சியை அடையும் முன் சின்னஞ்சிறு கிண்ணங்களில் பாலைக் கொண்டு வந்து அந்த மலர்களுக்குள் ஊற்றி நிரப்புவார்கள். அதை அப்படியே சூரிய பகவானுக்கு நைவேத்யம் செய்வார்கள். கிண்ணத்தில் மீதியிருக்கும் பாலைத் தாங்களே குடித்துவிடுவார்கள். இதற்குள் சூரியன் உச்சியைத் தாண்டி சென்று விடும். உடனே, அந்தப்பூவை சாணத்திற்குள் அழுத்தி,பூ வரட்டி தட்டி வெயிலில் காய வைத்து விடுவார்கள். தினமும், இப்படியேபூ வரட்டி தட்டி, குட்டிப் பொங்கல் (குழந்தைகளுக்காக தை மாதத்தின் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வைக்கும் சிறுவீட்டுப்பொங்கல்) வைக்க சேகரித்து வைத்துக் கொள்வார்கள். சில குழந்தைகள் பொங்கல் அன்று தாங்களாகவே, சிறிய அளவில் பொங்கல் வைத்துவிடுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக