வியாழன், 29 மார்ச், 2018

இல்லற வாழ்வு அருளும் பங்குனி உத்திரம்

Image result for panguni uthiram imagesஅன்பார்ந்த என் ஆன்மீக நண்பர்களுக்கு என் வணக்கம்.இந்துக்கள் அனைவரும் இறைவனை வணங்கும்விதமாக பல விழாக்களை கொண்டாடுகிறோம்.அதன்வரிசையில் நாளை பங்குனி உத்திரம் வருகிறது.ஆதலால் அதைப்பற்றி எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.உங்களால் என்ன செய்து இறைவனை குளிர்விக்க மகிழ்விக்க முடியுமோ அதை செய்யுங்கள் இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற வரைமுறை இல்லை.ஆத்மாத்தமாக  ஒரு பூ,நீர் என எதை   கொடுத்தாலும் இறைவன் ஏற்று நமக்கு அருள் புரிவார்.எனவே மகிழ்ச்சியாக முருகனை, சிவசக்தியை துதித்து வழிபடுங்கள் 

இந்த உலகத்தின் அனைத்து இயக்கங்களுமே சிவசக்தியின் சங்கமத்தால்தான் நிகழ்கின்றன. சிவசக்தியின் தத்துவத்தை உணர்த்தும் புனித நாளே பங்குனி உத்திர திருநாளாகும். 



இல்லற வாழ்வு அருளும் பங்குனி உத்திரம்

 பங்குனி உத்திர நாளில்தான் பார்வதி தேவியை சிவபெருமான் மணந்ததாகவும், முருகப்பெருமான், தெய்வ யானையை மணந்ததாகவும், ஸ்ரீரங்கத்தில் ஆண்டாளை ரங்கமன்னார் மணந்ததாகவும், சீதையை ராமர் மணம்புரிந்ததாகவும் கூறப்படுகிறது.


 இதனால் பங்குனி உத்திர விரதமே திருமண விரதம் என்று அழைக்கப்படுகிறது. இத்தினத்தில் இளைஞர்களும் கன்னிகளும் சிவனையும் முருகனையும் திருமண கோலத்தில் வணங்கி வழிபட்டால், அவர்களுக்கு விரைவிலேயே சிறப்பான இல்லற துணையும் வாழ்வும் அமையும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.

பங்குனி உத்திரம் உருவான வரலாறு

அக்காலத்தில் தட்சனின் மகள் தாட்சாயினியாக உமாதேவி பிறந்தார். அவரை பெண் கேட்ட சிவபெருமானை ஆணவத்தால் தட்சன் அவமதித்தான். இதனால் கோபமான தாட்சாயினி ஹோமகுண்டத்தில் வீழ்ந்தார். பின்னர், தட்சனுக்கு மகளாகப் பிறந்த களங்கத்தை போக்க, பார்வதி என்ற நாமகரணத்துடன் காஞ்சிபுரத்தில் மலையரசன் இமயவனின் மகளாகப் பிறந்தார். அப்போது காஞ்சிபுரத்தில் ஓடிய கம்பை ஆற்றில் சிவபெருமானை எண்ணி, பார்வதிதேவி மணலால் சிவலிங்கம் செய்து வைத்து தினந்தோறும் வழிபட்டு வந்தார். அந்த கம்பை ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப் பெருக்கில் தான் வழிபட்டு வரும் சிவலிங்கம் அடித்து செல்லப்படுமே என அஞ்சிய பார்வதி, அந்த லிங்கத்தை தனது மார்புடன் கட்டி அணைத்து கொண்டாள். பார்வதியின் அன்பில் நெகிழ்ந்த சிவபெருமான், அவரை மணமுடித்த நாளே பங்குனி உத்திர திருநாளாகும். ஆண்டுதோறும் பங்குனி உத்திர தினத்தன்று மயிலை உட்பட பல்வேறு சிவாலயங்களில் சிவபெருமான்-பார்வதி திருக்கல்யாண உற்சவங்கள் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

பங்குனி உத்திர விரதம் இருக்கும் முறை

பங்குனி உத்திர விரதத்தை 8 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் 80 வயதுக்கு உட்பட்ட பெரியவர்களும் மேற்கொள்ளலாம். விரதம் இருப்பதற்கு முன்தினம் இரவு குறைவாக உணவருந்த வேண்டும். விரத தினத்தன்று காலைக்கடன்களை முடித்துவிட்டு, பூஜை மற்றும் பாராயணங்களை செய்து முடிக்க வேண்டும். அன்று சிவபெருமான் மற்றும் உமையன்னைக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, தூப தீபாராதனை காட்டி, நைவேத்தியம் படைக்க வேண்டும். அன்றைய தினம் நம்மை விட மூத்த மற்றும் வயதான தம்பதி ஒருவரை வீட்டுக்கு வரவழைத்து, அவர்களுக்கு பாதபூஜை செய்ய வேண்டும். பின்னர் அவர்கள் இருவருக்கும் அறுசுவை விருந்து அளித்து, தாம்பூலத்துடன் வேட்டி, புடவை வழங்கி வணங்க வேண்டும். பின்னர் நாள் முழுவதும் இறைவனை பற்றிய சிந்தனையில் மூழ்கி சிவபுராணம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றை படிக்கலாம். ஓம் சிவாயநம, ஓம் பராசக்திநம என்ற நாமத்தை 108 முறை ஜெபிக்கவேண்டும். 

இறைவனின் நாமாவளிகளை கூறலாம். பட்டினி இருக்க முடியாதவர்கள் துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் போன்ற திரவ பொருட்களை சிறிதளவு எடுத்து கொள்ளலாம். அன்றைய தினம் ஆலயங்களில் நடைபெறும் சிவபெருமான்-பார்வதி, முருகப்பெருமான்-தெய்வானை, ரங்கமன்னார்-ஆண்டாள் ஆகியோரின் திருமண உற்சவங்களை கண்டுகளித்து அருள் பெறலாம். பின்னர் இரவில் பால், பழம் உண்டு, தரையில் துணி விரித்து படுக்க வேண்டும். மறுநாள் மீண்டும் கோயிலுக்கு சென்று இறைவனை தரிசித்து விரதத்தை முடிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக