சனி, 31 மார்ச், 2018

பிரம்மஹத்தி தோஷம் பற்றிய விளக்கம்!

பிரம்மஹத்தி தோஷம் பற்றிய விளக்கம்!தொடர்புடைய படம்


பிரம்மத்தினை உணர்ந்தவரை கொலை செய்வதாலோ, பிரம்மத்தினை உணர்ந்தவருக்கு தொல்லைகள் கொடுத்தாலோ, பிரம்மத்தினை உணர்ந்தவரை பழித்து பேசினாலோ உண்டாகும் தோஷம் 
பிரம்மஹத்தி தோஷம் ஆகும். கொடுமையான தோஷங்களில் இந்த பிரம்மஹத்தி தோஷமும் ஒன்று. பிராமணர் என்பவர் பிறப்பால் ஏற்படும் உயர்வு நிலை ஆகாது. பிரம்மம் ஆகிய கடவுளை உணர்ந்தவர் எவரோ அவரே பிராமணர் ஆவார். ராவணனை ராமபிரான் கொன்றதால் ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதே போல் எந்த ஒரு உயிருக்கும் தொல்லைகள் தரவும் நமக்கு உரிமை கிடையாது. அவ்வாறு நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யும் பாவங்கள் அனைத்தும் தோஷமாக மாறும் என்பது திண்ணம்.



பிரம்மஹத்தி தோஷத்தினை எவ்வாறு அறியலாம்? ( ஜோதிடம் பிரம்மஹத்தி தோஷமும் )
ஒருவரின் ஜாதகத்தில் குரு மற்றும் சனி கோள்கள் சேர்க்கை பெற்றாலும், குரு பகவானை சனி பகவான்எங்கிருந்து நோக்கினாலும், குருவின் சாரத்தில் சனியும் – சனியின் சாரத்தில் குருவும் இருத்தலும், குரு மற்றும் சனி கோள்கள் ஒன்றையொன்று நோக்கினாலும் பிரம்மஹத்தி தோஷம் உள்ள ஜாதகம் ஆகும். உண்மையில் தோஷமில்லாத ஜாதகம் என்பது உலகில் இல்லை. 

பிரம்மஹத்தி தோஷத்தினால் வரும் துன்பங்கள் என்ன?
பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்டவர்கள் வாழ்வில் நிம்மதி என்பதே இருக்காது. ஒருவர் கொலை செய்து விட்டால் அவரது மனம் எப்படி அவரை உறுத்துமோ அதே போன்ற உறுத்தல் கண்டிப்பாக இருக்கும். இந்த தோஷத்தினால் கல்வி, வேலை, திருமணம், குழந்தைப்பேறு இவற்றில் தீராத பிரச்சனைகள் உண்டாகும். தீராத கடனும் பகையும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியே இருக்காது. தீராத வறுமை உண்டாகும்.

பிரம்மஹத்தி தோஷம் ஆண் – பெண் இருபாலருக்கும் வருவது உண்டு. தோஷங்களுக்கு ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது. கடும் பாவம் செய்தவர்கள், கொலை செய்தவர்கள், மனைவி, பெற்றோரை கவனிக்காமல் விடுபவர்கள் என முற்பிறவி கர்மாக்களால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்து அதில் துன்பப்படுபவர்கள் ஏராளம். இதே போன்ற பிரச்சனைகள் மற்ற தோஷங்களினாலும் வரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சிவ பெருமானை வணங்கினால் அவர் நமது கர்மவினைகளை அழிப்பார். நமது பாவங்கள் நீங்கினால் தானாகவே நமது தோஷங்களும் நீங்கி விடும். ராமபிரானும் சிவ பெருமானை வணங்கியே பிரம்மஹத்தி தோஷத்தினை போக்கிக் கொண்டார் என்பதை ராமாயணம் கூறும்.

பிரம்ம ஹத்தி தோஷம் பரிகாரம்!
பிரம்மஹத்தி தோஷத்திற்க்கு பரிகாரம் என்றால் திருவிடை மருதூர் கோவிலில் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜை செய்து கோவிலின் தலைவாசல் வழியாக சென்று பின்வாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு. மதுரை மன்னனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் இக் கோவிலின் வழியாக இம்முறையில் சென்றுவந்தபோது நீங்கியதாக கூறப்படுகிறது.  பெரும்பாலானவர்கள் சொல்வது இந்தக்கோவிலின் பரிஹார முறையைத்தான்.

இதைத்தவிர வேறு சில எளிதான பரிஹாரமுறைகளும் சொல்லப்படுகிறது.
கடும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க‌ 
ராம நாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் ராமபிரான் கடலுக்கு அடியில் உருவாக்கிய நவக்கிரகங்களுக்கு தகுந்த வைதீகர் மூலம் பூஜைகள் செய்து கடலில் நீராடி வழிபட்டு அங்குள்ள கடலடைத்த பெருமாளைவணங்கினால் பிரம்மஹத்திதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை

பழமையான சிவன் கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் பஞ்சக்கூட்டு எண்ணெய் கொண்டு விளக்கேற்றிவந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். ராமேஸ்வரம் கடலில் நீராடி அனைத்து தீர்த்தங்களிலும் குளித்து ஒரு நாள் அங்கேயே தங்கி இருந்து மறுநாள் ராமேஸ்வரம் அருகில் தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள ஜடாமகுட தீர்த்தத்தில்நீராடி ஜடாமகுடேஸ்வரரை வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. 

ஏனென்றால் ராவணனுடன் வதம் செய்து ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் இத்தலத்தில்தான் ராமபிரானுக்கு நீங்கியதாக வரலாறு.

 ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று, மாலை 5 மணிக்கு சிவன் கோவிலுக்கு சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து சிவனை வணங்கிவரவேண்டும். 

இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கி, சிவனுக்கு மூன்று அகல் விளக்கு ஏற்றி, அர்ச்சனையும், அபிஷேகம் செய்து வந்தால் சிவபெருமான் அருள்பாலித்து, பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார் என்பது ஐதீகம். இவைகளை செய்வதால் பிரம்மஹத்தி தோஷத்தால் அனுபவித்து வரும் பாதிப்புகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்திரன் மற்றும் வரகுண பாண்டியன் போன்றோரும் சிவ பெருமானை வணங்கியே தங்களின் பிரம்மஹத்தி தோஷத்தினை நீக்கிக் கொண்டனர் என்பதை புராணங்கள் தெளிவாக உரைக்கின்றன.

பரிகாரம்


நல்லெண்ணெய்-1/2 லிட்டர்;
விளக்கெண்ணெய்-1/2 லிட்டர்;
நெய் 1/2 லிட்டர்;
இலுப்பை எண்ணெய் 1/2 லிட்டர்;
வேப்பேண்ணெய்-1/2 லிட்டர்;
மேல்லே கூறிய ஐந்துவகை எண்ணெய் வகைகளை ஒன்றாகக் கலந்து
வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு அமாவாசை தினத்தன்று, மாலை ஐந்து மணிக்கு ஒரு சிவன் கோவிலில் மேற்கூறப்பட்டபடி கலந்து வைத்துள்ள எண்ணெயை ஊற்றி விளக்கேற்றவேண்டும்.  அது தவிர  கீழ்க்கண்ட இடங்களிலும் அந்த எண்ணெயை அகல் விளக்குகளில் ஊற்றி தீபம் ஏற்றவேண்டும்.
1. பலிபீடம்;
2. கொடிமரம்;
3. கொடிமர நந்தி
4.அதிகார நந்தி;
5. வாயில் கணபதி;
6. துவார பாலகர்;
7.சூரியன், சந்திர பகவான்;
8. சமயக் குரவர்கள்;
9. சப்த கன்னிமார்கள்;
10. கன்னிமார் அருகில் உள்ள கணபதி;
11. வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னிதி;
12. சுர தேவர்;
13. ஸ்வாமி  அய்யப்பனின்  சாஸ்தா பீடம்;
14. தட்சிணாமுர்த்தி
15. கால பைரவர்;
16. சண்டிகேஸ்வரர்;
17. சனீஸ்வரர்;
18. சிவன் சன்னிதி;
19. அம்பாள் சன்னிதி தவிர மற்ற துணை தெய்வங்கள். 

மேற்கூறப்பட்டவிதமாக விளக்கேற்றிவிட்டு,  அர்ச்சனையும் செய்யவேண்டும். அர்ச்சனை செய்வது எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த முறையில், அதாவது, சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும், வெற்றிலை பாக்கு, பழம், பூ, ஊதுவத்தி, சூடம், தேங்காய், அவரவர் விருப்பத்திற்கேற்ப ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் பூமாலை ஆகிய பொருட்களை வைத்து அர்ச்சகர் மூலம்  அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த தீப பரிகாரத்தை குடும்பத்தில் உள்ளவர் அனைவரும் ஒரே இடத்திலும் ஒரே நேரத்திலும் இணைந்து செய்தால், உடனே பலன் கிட்டும். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தால் போதும். பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி, சிவபெருமான் நற்பலன்களை தொடர்ந்து வழங்கிடுவார்.



அகத்தியரின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய பூவனநாத திருக்கோவில்
கோவில்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயில் 

இத்திருக்கோயில் இராமபிரான் சிவ வழிபாடு செய்த பெருமை உடையது.
இறைவன் பூவனநாதர் என்ற பெயரில் லிங்கத் திருமேனியுடன் அருள் பாலிக்கிறார். இத்திருக்கோயில் தீர்த்தமானது அகத்திய முனிவரால் தோற்றுவிக்கப்பட்டதாகும். எனவே இது அகத்திய தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சங்கன், மதுமன் என்ற இரு பாம்புத் தலைவர்கள் இறைவனை பூவனப் பூக்களால் அர்ச்சித்ததால் இறைவன் பூவனநாதர் எனப் பெயர் பெற்றார். ஈசன் திருமணத்தின்போது வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்த நிலையில் உலகைச் சமன் செய்யும் பொருட்டு இறைவன் ஆணைப்படி அகத்தியர் பொதிகை மலை நோக்கி பயணமானார், வழியில் எதிர்த்த அரக்கர்களான வாதாபி மற்றும் வில்வனன் ஆகியோரை வதைத்ததனால் உண்டான பிரம்மஹத்தி தோசம் நீங்க அகத்தியர் பொன்மலை களாவனத்தில் எழுந்தருளியுள்ள பூவனநாதரைப் பூஜித்து தோஷம் நீங்கப் பெற்றார். பொன்மலை முனிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அகத்தியர் தீர்த்தத்தை ஏற்படுத்திவிட்டு, தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

பிரம்மஹத்தி தோஷம் நீங்க

குக்கி சுப்ரமண்யா திருக்கோயில், குக்கி சுப்ரமண்யா, தட்ஷின கன்னடா
திருநோக்கிய அழகிய நாதர் திருக்கோயில், திருப்பாச்சேத்தி, சிவகங்கை
ஆலந்துறையார் திருக்கோயில், கீழப்பழுவூர், அரியலூர்
பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில், கண்டியூர்,, தஞ்சாவூர்
கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கோட்டூர், திருவாரூர்
திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், நாகப்பட்டினம்


பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலங்கள்:
பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலங்கள் பல உண்டு.
காசி
காஞ்சிபுரம்
திருவண்ணாமலை
இராமேஸ்வரம்
மதுரை
திருவாஞ்சியம்
பிரம்மதேசம்
மேல்மலையனூர்
ஆகியன முக்கியமானவை ஆகும்.


சிவனை பிடித்த பிரம்மஹத்தி தோஷம்
ஆதிகாலத்தில் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. அந்த தோஷத்தை நீக்கும் பொருட்டு தோன்றியவர் அங்காளம்மன். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி அன்று சிவனை பிடித்து இருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியதாக ஐதீகம். 

இதற்கு ஒருபுராணக்கதை உண்டு. சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பதை போல், தனக்கும் 5–வது தலை வேண்டும் என்று நினைத்தார் பிரம்மதேவர். ஆகவே சிவபெருமானை நோக்கி தவம் இருந்து வரம் கேட்டு பெற்றுக்கொண்டார். இதனால் பிரம்மாவுக்கும் 5 தலைகள் இருந்தது. ஒருநாள் பிரம்மா கர்வத்துடன் கயிலாயத்துக்கு சென்றார். 

பிரம்மதேவனை கண்ட பார்வதி, சிவபெருமான் தான் வந்துவிட்டார் என்று நினைத்து அவர் பாதங்களில் விழுந்து வணங்கி பூஜை பொருட்களை சமர்ப்பித்தார். பின்னர் பிரம்மாவின் முகத்தை பார்த்து உண்மை நிலையை தெரிந்து கொண்ட பார்வதி ஆத்திரம் அடைந்தாள். பிரம்மாவை நோக்கி உன் ஒரு தலை அழியக்கடவது என்று சாபம் இட்டார். 

மேலும் நடந்ததை சிவனிடமும் கூறினார் பார்வதி. பரமசிவன் தன் சூலாயுதத்தால் பிரம்மாவின் ஒரு தலையை வெட்டினார். ஆனால் வெட்டப்பட்ட இடத்தில் புதிய தலை முளைத்தது. சிவன் தலையை வெட்டுவதும் அந்த இடத்தில் புதிய தலை முளைப்பதுமாக இருந்தது. இந்த புதிரை சிவபெருமானால் புரிந்துகொள்ள முடியவில்லை. 

பின்னர் வெட்டப்பட்டு கீழே கிடந்த பிரம்மாவின் தலைகளை ஒரு கயிற்றில் கோர்த்துக்கட்டி அதை தன் கழுத்தில் மாலையாக சிவன் அணிந்து கொண்டார். (இந்த நிகழ்ச்சியை நினைவுப்படுத்தும் வகையில் தான் சைவ பக்தர்கள் உத்திராட்ச மாலையை அணிகிறார்கள்). அதன்பிறகு பிரம்மனின் தலையை வெட்டி அதை கீழே போடாமல் தன் கையிலேயே வைத்துக்கொண்டார். 

இப்போது பிரம்மனின் தலை வெட்டப்பட்ட இடத்தில் புதிய தலை முளைப்பது நின்றுவிட்டது. ஆனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து விட்டது. சித்தம் கலங்கி பித்து பிடித்த நிலையில் கையில் மண்டையோடும், மற்றொரு கையில் சூலாயுதத்துடனும், உடலெங்கும் சாம்பலை பூசி ஊர் ஊராக அலைந்து திரிந்தார். 

பிரம்மாவின் ஒரு தலை அழிந்துவிட காரணமாக இருந்த பார்வதியிடம் கோபத்தோடு வந்தாள் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி. ‘பார்வதி! இனி நீ அழகுமிக்க ஆடைகளை அணியக் கூடாது. அதற்கு பதிலாக கொக்கு, சிறகு, மயில் தோகைகளை அணிந்து பூமியில் புற்றாக இருக்க வேண்டும்’ என்று சாபமிட்டாள். 

அதன்படி பார்வதிதேவி உருவம் மாறி நாடு, நகரம் என அலைந்து திருவண்ணாமலை வழியாக மேல்மலையனூர் வந்து புற்றாக அமர்ந்தாள். இந்த சூழ்நிலையில் பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டு வடகயிலாயம் நோக்கி சென்ற சிவன், மேல்மலையனூரில் அங்காளம்மன் 4 ஆயிரம் நோய்கள், பில்லி–சூனியம் ஆகியவற்றை தீர்த்து வைப்பதை அறிந்து மேல்மலையனூர் வந்தார். 

அங்காளம்மன் கோவில் முன்வந்து ‘அரகரா! அன்னதான பிச்சை’ என்று உரக்க சத்தம் போட்டார். இந்த சத்தம் அங்காளம்மன் காதில் விழுந்தது. உடனே அவர் மனம் மகிழ்ந்தார். யாசகம் கேட்கும் கணவருக்கு எதை வழங்குவது என்று யோசித்தார். அப்போது சிவனுக்கு எதை வழங்குவது என்று மகாவிஷ்ணு யோசனை கூறினார். 

‘அம்பிகையே! உன் கணவருக்கு எது சாப்பிடக் கொடுத்தாலும் அதை அவரது கையில் உள்ள கபாலம் சாப்பிட்டு விடும். ஆதலால் நீ உலகத்தில் உள்ள பயிர் பட்சணங்களை எல்லாம் வரவழைத்து உணவாக சமைக்க வேண்டும். பின்பு அதை 3 கவளமாக தயார் செய்ய வேண்டும். இரண்டு கவளத்தை உன் கணவர் கையில் உள்ள கபாலத்தில் போட வேண்டும். 

3–வது கவளத்தை கபாலத்தில் போடுவதை போல் நடித்து அதை கைதவறி கீழே போடுவதை போல் தரையெங்கும் சிதறிவிட வேண்டும். சாதத்தின் ருசி அறிந்த கபாலம் அதை பொறுக்க பரமசிவன் கையில் இருந்து கீழே இறங்கும். அப்போது நீ பெரிய உருவெடுத்து அதை காலால் நசுக்கிவிடு. அந்த நேரத்தில் உன் கணவரை பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகி விடும்’ என்றார். 

அன்னையும் மிக மகிழ்ந்து திருமால் கூறிய யோசனைப்படி செயல்பட்டார். சாதம் தயாரானது. உடனே அங்காளி, மூத்த பிள்ளை விநாயகரை அழைத்து விஷயத்தை சொல்லி, ‘உன் தந்தையை அக்னி குளத்தில் குளித்து வரச்சொல்’ என்று கூற, சிவனும் அதன்படி அக்னி குளத்தில் தீர்த்தமாடி கோவிலுக்கு வந்தார். 

அவருக்கு அங்காளம்மன் பாதபூஜை செய்து பணிவுடன் வரவேற்று உபசரித்தார். பிறகு கவள சாதங்களை எடுத்து வந்து ஒரு கவளத்தை சிவன் கையில் இருக்கும் கபாலத்தில் போட்டார். உடனே அதை கபாலம் சாப்பிட்டு விட்டது. 2–வது கவளத்தையும் போட அதையும் கபாலம் சாப்பிட்டது. 3–வது கவளத்தையும் உண்டு விட கபாலம் காத்திருக்க சாதத்தை தரை முழுவதும் வாரி இறைந்தாள் அங்காளம்மன்.

சாதத்தின் ருசிக்கு அடிமைப்பட்ட கபாலம், பரமசிவனின் கையில் இருந்து விருட்டென்று கீழே இறங்கி தரையில் சிதறிய அன்னத்தை பொறுக்கியது. அப்போது அங்காள பரமேஸ்வரி அகிலமே நடுங்கும் அளவு, மண்ணுக்கும் விண்ணுக்கும் வளர்ந்து நின்று அகோரவடிவில் கபாலத்தின் மீது ஓங்கி மிதித்தார். 

கபாலம் பெரும் கூச்சல் போட்டு, ‘நீயார்? என்னை ஏன் மிதித்தாய்?’ என்று ஆக்ரோஷத்துடன் கேட்டது. அதைக்கேட்ட அன்னை, ‘கபாலமே! நீ இனி சிவனிடம் போக முடியாது. என் கீழ் தான் இருக்க வேண்டும். உனக்குதேவையானவற்றை என்னிடம் கேட்டு பெற்றுக்கொள்ளலாம்’ என்றாள். அதற்கு கபாலமும் உடன்பட்டது. 

இந்த நேரத்தில் பரமசிவனை பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. சுயநிலை வரப்பெற்ற பரமசிவன் ஆனந்த நிலை அடையப்பெற்றார். சிதம்பரம் சென்று ஆனந்ததாண்டவம் ஆடினார். அப்போதும் அங்காள பரமேஸ்வரியின் சினம் தணியவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்களும், 40 ஆயிரம் ரிஷிகளும் ஒன்று கூடி அங்காள பரமேஸ்வரியின் கோபத்தை தணிக்க தேர்த்திருவிழா நடத்தினர். 

அங்காளபரமேஸ்வரி கோபம் தணிந்து சிறிய உருவாக மாறி அந்த ரதத்தில் ஏறி அமர்ந்தார். உருமி மேளம் முழங்க மங்கள நாதம் இசைக்க வாணவேடிக்கை ஜாலம் காட்ட பிரமாண்டமான முறையில் தேர்த்திருவிழா நடைபெற்றது. சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது மகா சிவராத்திரியன்று தான் என்பதால் இக்கோவிலில் மகாசிவராத்திரியை தொடர்ந்து 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. 

அப்போது மயானக்கொள்ளை, தேரோட்டம் நடைபெறும். புத்திசுவாதீனம் இல்லாதவர்கள், பில்லி, சூனியம், செய்வினை கோளாறு, ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிலுக்கு வந்து அக்கினி தீர்த்தத்தில் நீராடி அம்மனை வணங்கி நோய் நீங்கி அவர்கள் நலம் பெறுகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில் மேல்மலையனூர் அமைந்துள்ளது. 

செஞ்சியில் இருந்து வடதிசையில் 20 கி.மீட்டர் தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து கிழக்கு திசையில் 30 கி.மீட்டர் தூரத்திலும் மேல்மலையனூர் உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக