ஒப்பில்லாதவன் உப்பிலியப்பன்!
|
உப்பூர்! - கொஞ்சம் ‘சுவை’யான பெயர்தான். சமஸ்கிருதத்தில் இதன் பெயர் ‘லவணபுரி’. அம்மொழியில் ‘லவணம்’ என்றால் உப்பு, ஆகவே, தமிழில் ‘உப்பூர்’. உப்பூரில் அருள்பாலிப்பவர், வெயிலுகந்த பிள்ளையார். ‘வெயில்’ என்பது சூரியனைக் குறிக்கிறது. ‘உகந்த’ என்றால் ‘மகிழ்ந்த’ அல்லது ‘மகிழ்ந்து வணங்கிய’ அல்லது ‘வழிபட்டு மகிழ்ச்சியைப் பெற்ற’ என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம். ஆக, இங்கு எழுந்தருளியிருக்கும் பிள்ளையார் சூரியனின் பிரார்த்தனையை ஏற்று மகிழ்ந்திருக்கிறார் அல்லது சூரியன் அவரை வழிபட்டு மகிழ்ந்திருக்கிறான். அதனால்தான் இந்தப் பெயர் அமைந்திருக்க வேண்டும். சூரியன் எதற்காகப் பிள்ளையாரை வழிபட்டான்? தாட்சாயணியான உமையம்மையின் தந்தை தக்கன். அவன் சிவபெருமானை அவமானப்படுத்துவதற்காகவே ஒரு யாகத்தைத் தொடங்கினான்.
உலகில் எல்லோரும் தங்கள் யாகங்களில் எழுந்தருளுமாறு சிவபெருமானை வேண்டிக்கொண்டிருக்கையில், சிவனுடைய சொந்த மாமனார் தன்னுடைய யாகத்துக்குச் சிவனை அழைக்கவில்லை. கவனக்குறைவால் அல்ல, வேண்டுமென்றேதான். தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமான
சிவபெருமானுக்கு மரியாதையில்லாத இடத்தில் மற்ற தெய்வங்கள் இருக்கலாமா? இதை யோசிக்காமல், சில தெய்வங்கள் அந்த யாகத்தில் பங்கேற்றார்கள். அதனால், பெரும் துயரத்துக்கு ஆளானார்கள். அவர்களில் ஒருவன், சூரியன். தக்கனின் யாகத்தில் பங்கேற்றதால் அவனுக்குத் தண்டனை கிடைத்தது. அதிலிருந்து மீளும் வழியறியாமல் தவித்தான் அவன். சூரியனின் நிலை கண்டு இரக்கப்பட்ட சிவபெருமான், விநாயகரை வழிபட்டு விமோசனம் பெறச் சொன்னார்.
அதற்காகச் சூரியன் தவம் செய்த இடம்தான் உப்பூர். சூரியனின் தவத்தில் மகிழ்ந்த பிள்ளையார் அவனுக்குக் காட்சியருளினார். அவனுடைய துயரத்தைத் தீர்த்தார், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார். ‘நான் என்றைக்கும் உங்களை வணங்கிய வண்ணம் இருக்க வேண்டும். அதற்கு அருள் புரியுங்கள்’ என்று கேட்டுக்கொண்டான் சூரியன். அவ்வாறே அருளினார் விநாயகர். அதன்பிறகு, ஒவ்வொரு நாளும் உச்சிப்பொழுதின்போது சூரியனுடைய கதிர்கள் இங்கு எழுந்தருளியிருக்கும் விநாயகப்பெருமானை வணங்குவதுபோல் விழுகின்றன. இது மிகவும் விசேஷமான காட்சி! சூரியனுக்காக இங்கே தோன்றிய விநாயகருக்குக் கோயில் கட்டப்பட்டபோது, அந்த மன்னனின் கனவில் விநாயகர் தோன்றி தனது ஆலயத்திற்கு மேற்கூரை அமைக்கவேண்டாம் என்று கூறியதாக ஸ்தல புராணங்கள் கூறுகின்றன.
அதன்படி வெயில் தினந்தோறும் பிள்ளையார் மீது பட்டுக் கொண்டிருக்கும் வண்ணம் கோயில் அமைக்கப்பட்டதாம். வெயில் உகந்த இந்தப் பிள்ளையாரை ராமபிரான் வழிபட்டுள்ளார். சீதையை மீட்கச் சென்றபோது அவர் உப்பூர் விநாயகரை வணங்கியதாக நம்பிக்கை. உப்பூரைப் பற்றியும் திருமால் அவதாரமான ராமபிரானைப் பற்றியும் பேசும்போது, உப்பிலி யப்பனும் நினைவுக்கு வருவது இயல்புதான்! உப்பு+இலி+அப்பன், அதாவது, உப்பு இல்லாத / உப்பை விரும்பாத தெய்வம் என்ற பொருளில் இத்தலத்தில் திருமால் வணங்கப்படுகிறார். அவருக்கு உப்பில்லாத பண்டங்களே படைக்கப்படுகின்றன. இதற்கு ஒரு பிரபலமான புராணக் கதையும் உண்டு.
மார்க்கண்டேய மகரிஷியின் மகளாகப் பிறந்த பூமாதேவி ‘துளசி’ என்ற பெயரில் வளர்ந்து கொண்டிருந்தார். அவரைப் பெண் கேட்டு
மகாவிஷ்ணு மார்க்கண்டேயரைச் சந்தித்தார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்று மார்க்கண்டேயருக்குத் தெரியவில்லை, ‘என் மகள் சிறு குழந்தை, அவளுக்கு உப்புப் போட்டுச் சமைக்கக்கூடத் தெரியாது’ என்று திருமணத்தை ஏற்க மறுத்தார். மகாவிஷ்ணு புன்னகையுடன், ‘பரவாயில்லை, நான் அவளை மணந்து உப்பில்லாத உணவே உண்கிறேன்’ என்றார். அப்போதுதான், வந்திருப்பவரைப் புரிந்துகொண்டார் மார்க்கண்டேயர். மகாவிஷ்ணுவுக்கும் பூமாதேவிக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
மகாவிஷ்ணு மார்க்கண்டேயரைச் சந்தித்தார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்று மார்க்கண்டேயருக்குத் தெரியவில்லை, ‘என் மகள் சிறு குழந்தை, அவளுக்கு உப்புப் போட்டுச் சமைக்கக்கூடத் தெரியாது’ என்று திருமணத்தை ஏற்க மறுத்தார். மகாவிஷ்ணு புன்னகையுடன், ‘பரவாயில்லை, நான் அவளை மணந்து உப்பில்லாத உணவே உண்கிறேன்’ என்றார். அப்போதுதான், வந்திருப்பவரைப் புரிந்துகொண்டார் மார்க்கண்டேயர். மகாவிஷ்ணுவுக்கும் பூமாதேவிக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
இதன்படி, இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் திருமாலுக்கு உப்பில்லாத பொருட்களைப் படைப்பது வழக்கமாகிவிட்டது. உப்பிலியப்பன் என்ற பெயரும் நிலைத்துவிட்டது. உண்மையில், ‘ஒப்பிலியப்பன்’ என்பதுதான் பெருமாளின் பெயர். ஒப்பு+இல்+அப்பன். அதாவது, தனக்கு நிகராக யாரையும் சொல்ல இயலாத அளவுக்குச் சிறப்புகள் நிறைந்த இறைவன் என்பது பொருள். இந்த ‘ஒப்பிலியப்பன்’தான் பின்னர் ‘உப்பிலியப்பன்’ என்றாகி, அதற்கு ஒரு கதையும், இறைவனுக்கு உப்பின்றிச் சமைக்கிற பழக்கமும் ஏற்பட்டுவிட்டது! ‘ஒப்பிலாத பெருமான், தன் மனத்திருக்கும் நாயகிக்காக உப்பிலாமல் உண்டார்’ என்பதும் ஒரு ‘சுவை’யான கோணம்தான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக