செவ்வாய், 20 மார்ச், 2018

மகிமைமிக்க குங்குமம்



தொடர்புடைய படம்மகிமைமிக்க குங்குமம்


திருவாரூரை அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேங்கட  சுப்பிரமணியம்.
வேத விற்பன்னர். மகாபெரியவர் சன்னிதானத்தில் முதல் பக்தர்.
 ஒரு முறை மகாபெரியவர் மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு விஜயம் செய்தார். 
 கற்பகாம்பாள் சன்னிதியில் கொடுக்கப்பட்ட குங்குமப் பிரசாதத்தைப்
பார்த்ததும், அந்தக் குங்குமம் சுத்தமான தயாரிப்பாக இருக்க முடியாது என்று
அவருக்குத் தோன்றியது. தூரத்தே கோஷ்டியில் நின்றுகொண்டிருந்த
வேங்கட சுப்பிரமணியத்தை அருகில் வரும்படி கட்டளையிட்டார். ஓடோடி
 வந்து பவ்யமாக குனிந்தபடி நின்றார் அவர். உனக்கொரு வேலை கொடுக்கப்
போறேன். செய்வியா?” என்றார். உத்தரவு” என்றார் வேங்கட சுப்பிரமணியம்.
தமிழ்நாட்டில் பல கோயில்களில் அம்பாள் சன்னிதியில் கொடுக்கப்படும் குங்குமம் அசலான தயாரிப்பாக இல்லை. எனவே, பக்தர்களுக்காக நீ சாஸ்திரோக்தமாக குங்குமம் தயாரிக்க
வேண்டும்” என்று ஆக்ஞையிட்டார் மகாபெரியவர்.

மகாபெரியவர் கட்டளையிட்டவுடன் சும்மா இருக்க முடியுமா? வேதங்கள்,
உபநிஷத்துக்கள், அம்பாளின் மகத்துவத்தை விளக்கும் ஸ்தோத்திரங்கள்
ஆகியவற்றில் குங்குமத்தின் பெருமைகளைக் குறித்த தகவல்களைச்
சேகரித்தார். குங்குமம் தயாரிப்பு தொடர்பான புத்தகங்களைத் தேடிக்
கண்டுபிடித்தார். பின் தயாரிப்பைத் துவக்கினார். நல்ல தரமான குண்டு மஞ்சள்,
எலுமிச்சை, படிகாரம், வெண்காரம், நல்லெண்ணெய் ஆகியவைதான்
குங்குமத் தயாரிப்புக்கான மூலப் பொருட்கள். பழந்தயாரிப்புப்படி கைகளாலேயே
 தயாரிக்கப்பட்ட குங்குமத்தைச் செய்து முடித்ததும் வேங்கட சுப்பிரமணியத்துக்கு
மகிழ்ச்சி பிடிபடவில்லை. தயாரித்த குங்குமத்தை ஒரு துணிப்பையில் போட்டு
 எடுத்துக்கொண்டு மகாபெரியவரைப் பார்க்க கும்பகோணம் விரைந்தார். குங்குமத்தை உள்ளங்கையில் இட்டுப் பார்த்தவுடன் மகாபெரியவரின் முகத்தில் மலர்ச்சி
தெரிந்தது. இந்தப் பணியை நீ தொடர வேண்டும்” என்று சைகையிலேயே
ஆணையிட்டார். வேங்கட சுப்பிர மணியம் ஸ்ரீவித்யா உபாசகர். அம்பாள்
குங்குமப் பிரியை ஆயிற்றே! ஒரு அர்ப்பணிப்போடு குங்குமத் தயாரிப்பில்
இறங்கிவிட்டார் வேங்கட சுப்பிரமணியம்.












ஸ குங்கும விலேபனாம் அளிக சும்பி கஸ்தூரிகாம்
ஸமந்த ஹஸிதேக்ஷணாம் ஸ ஸரஸாப பாசாங்குசாம்
அசேஷஜ நமோஹினீம் அருணமால்ய பூஷாம்பராம்
ஜபாகுஸூம பாசுராம் ஜப விதௌ ஸ்மரேத் அம்பிகாம்என்று லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது குங்குமப் பூவின் விழுதைப் பூசிக் கொண்டிருப்பவளும், நெற்றியை
அலங்கரிக்கும் கஸ்தூரி திலகம் இட்டவளும், புன்னகைக்கும் கண்கள் உள்ளவளும்,
வில், அம்பு, பாசம், அங்குசம் ஏந்தியவளும், எல்லா மக்களையும் தன்பால்
 ஈர்ப்பவளும், செந்நிற மாலை, ஆடைகள் அணிந்து, செம்பருத்திப் பூ போல
ஒளிமயமாக இருப்பவளுமான அம்பிகையை ஜபகாலத்தில் நினைவு கொள்கிறேன்
 என்பதுதான் இதன் பொருள். அம்பாள் உமைக்கு பல அம்சங்கள். திரிபுரசுந்தரி,
காமாட்சி, அபிராமி, பார்வதி, லலிதா என்று பல திருநாமங்கள். ஒவ்வொரு அம்சத்திலும்,
பல பாக்கியங்களை பக்தர்களுக்கு அள்ளித் தருகிறாள் அம்பாள். எப்போதும் சுமங்கலியாகவே இருப்பவள் லலிதா” என்று லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
சுமங்கலியான பெண்ணை பளிச்சென்று வெளிப்படுத்துவது, அவளது நெற்றியில்
 அலங்கரிக்கும் குங்குமம்தான். ஒரு பெண் தன் திருமணத்தின் போதுதான் குங்குமம்
வைத்துக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறாள். நெற்றியிலுள்ள குங்குமம், ஒரு
 பெண்ணின் சுமங்கலித் தன்மையை மட்டும் சொல்வதல்ல. அவளுக்குள்
 பொதிந்திருக்கும் ஞானத்தையும், ஆற்றலையும் குறியீடாக உணர்த்தும்
தன்மையும் கொண்டது. சௌந்தர்ய லஹரியும் லலிதா சகஸ்ரநாமமும்
குங்குமத்தின் பெருமைகளை எடுத்து வைக்கின்றன.


சுமார் 5,000 வருடங்களாக, குங்குமம் வைத்துக் கொள்வது என்பது நமது சம்பிரதாயமாக இருந்து வருகிறது என்கிறது ஒரு புராணத் தகவல். இரண்டு இமைகளுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் குங்குமம் வைத்துக் கொள்வதற்குப் பல காரணங்கள் உண்டு. நமது உடலில் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ஏழு சக்கரங்கள் உள்ளன. நமது செயல்கள், சாதனைகள், சாகசங்கள் என்று அனைத்துக்குமே காரணமாக அமைந்தவை இந்தச் சக்கரங்கள். இந்தச் சக்கரங்களின் செயல்பாட்டைத் தூண்டி விடுவதில், முதுகுத் தண்டுக்கு அடிப்பகுதியில் பொக்கிஷமாக இருக்கும் குண்டலினி சக்திக்கு பெரும்பங்கு உண்டு. யோகம், தியானம் போன்றவற்றின் மூலம் குண்டலினி சக்தியை எழுப்பி, இந்த ஏழு சக்கரங்களைத் தூண்டி விடலாம். இந்த ஏழு சக்கரங்களில் ஒன்றான ஆக்ஞை, நெற்றிப்பொட்டில், புருவங்களின் மத்தியில்தான் உள்ளது. ஒருவரின் ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்பட காரணமாக அமைவது இந்த ஆக்ஞா சக்கரம் தான். அதைக் குறித்துத்தான் நெற்றிப்பொட்டில் குங்குமம் வைக்கிறோம்.

தொடர்புடைய படம்நெற்றியில் குங்குமம் வைப்பதால் என்ன நன்மை?

நாகரிக மோகத்தில் நிகழும் தவறுகளில் ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வதும் ஒன்று. நெற்றியில் புருவமத்தியில் மூளையின் முன்புறமாக, பைனீயல் க்ளாண்ட் என்ற சுரப்பி அமைந்துள்ளது. இதை, யோக சாஸ்திரத்தில் ஆக்ஞா சக்ர ஸ்தானம் என குறிப்பிட்டுள்ளனர். மூன்றாவது கண், ஞானக்கண் என்றும் இதற்குப் பெயருண்டு. சிவபெருமானுக்கு ஆக்ஞா சக்கரமே நெற்றிக்கண்ணாக இருப்பதைக் காணலாம். திபெத்தில் லாமாக்கள் ஞானக்கண் திறப்பது என்றொரு சடங்கு செய்கின்றனர். இதன் சிறப்பை உணர்வதற்காகவே நெற்றியில் குங்குமம் இடுகிறோம். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் குங்குமம் வைக்க வேண்டும். உடல் முழுவதும் மின்காந்த சக்தி வெளிப்பட்டாலும், நெற்றியில் புருவமத்தியிலுள்ள நுண்ணிய பகுதியில் அதன் சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. இதன் காரணமாகத்தான், மனக்கஷ்டம் வந்தாலோ, ஏதாவது
ஒன்றை தீவிரமாக சிந்தித்தாலோ அந்த இடம் உஷ்ணமடைந்து தலைகனம்,
தலைவலி போன்ற பிரச்னை உண்டாகிறது. இதை தவிர்த்து, குளிர்ச்சியை
உண்டாக்கவே சந்தனம், குங்குமம் போன்றவற்றை நெற்றியில் இடுகிறோம்.
இதனால், உடல், மனோசக்தி வீணாகாமல் பாதுகாக்கப்படுகிறது. முகம்
களையோடு பிரகாசமாகத் திகழ்கிறது. பொட்டு வைப்பது என்பது
அலங்காரத்திற்காகவும், ஆன்மிக காரணத்திற்காகவும் மட்டுமல்ல...
 ஆரோக்கியத்திற்காகவும் நம் பெரியவர்கள் இப்பழக்கத்தை ஏற்படுத்தினர்









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக