வியாழன், 8 செப்டம்பர், 2016

தீபாவளி லக்ஷ்மிகுபேர பூஜை

தீபாவளி லக்ஷ்மி குபேர பூஜை

 

அன்பார்ந்த தோழிகளுக்கு  வணக்கம்.என் பதிவில் குபேர லக்ஷ்மி பூஜை செய்யும் முறையை சுருக்கமாக எழுதியிருந்தேன்.இந்த பதிவில் சற்று விரிவாக எல்லோரும் தீபாவளி நாளில் எப்படி குபேர லட்சுமி பூஜையை செய்யலாம்? என்பதைப்பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். 

அதிகாலை கங்காஸ்நானம், படபடவென வெடித்துச் சிதறும் பட்டாசுகள், நாவில் உமிழ்நீர் ஊறவைக்கும் பலகாரங்கள், பட்சணங்கள் – இவை மட்டுமல்ல; செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர பூஜையும் தீபாவளியின் ஸ்பெஷல் அடையாளம்! இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம்.

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம். பூஜைக்கான ஏற்பாடுகளை தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே செய்து முடித்துவிடுவது நல்லது. 

லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை 



தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும். பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.

தொடர்ந்து, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழையிலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும். அவருக்குக் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம். விநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். 

ஆனைமுகனே போற்றி.. 
விநாயகா போற்றி… 
அஷ்டலட்சுமியே போற்றி…
 குபேர லட்சுமியே போற்றி..
 தனலட்சுமியே போற்றி.. 


என, அருள் தரும் தெய்வப் போற்றிகளைச் சொல்லியும் வழிபடலாம். தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி வழிபட வேண்டும்.
ஸ்துதி தெரியாதவர்கள், குபேராய நமஹ… தனபதியே நமஹ.. என்று துதித்து, உதிரிப் பூக்களை கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயாசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும். தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு. தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும்; கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்; நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.


குபேரர் 108 போற்றி 

1. அளகாபுரி அரசே போற்றி

2. ஆனந்தம் தரும் அருளே போற்றி

3. இன்பவளம் அளிப்பாய் போற்றி

4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி

5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி

6. ஊக்கம் அளிப்பவனே போற்றி

7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி

8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி

9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி

10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி

11. ஓங்கார பக்தனே போற்றி

12. கருத்தில் நிறைந்தவனே போற்றி

13. கனகராஜனே போற்றி

14. கனகரத்தினமே போற்றி

15. காசு மாலை அணிந்தவனே போற்றி

16. கிந்நரர்கள் தலைவனே போற்றி

17. கீர்த்தி அளிப்பவனே போற்றி

18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி

19. குருவாரப் பிரியனே போற்றி

20. குணம் தரும் குபேரா போற்றி

21. குறை தீர்க்கும் குபேரா போற்றி

22. கும்பத்தில் உறைபவனே போற்றி

23. குண்டலம் அணிந்தவனே போற்றி

24. குபேர லோக நாயகனே போற்றி

25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி

26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி

27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி

28. கோடி நிதி அளிப்பவனே போற்றி

29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி

30. சங்கரர் தோழனே போற்றி

31. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி

32. சமயத்தில் அருள்பவனே போற்றி

33. சத்திய சொரூபனே போற்றி

34. சாந்த சொரூபனே போற்றி

35. சித்ரலேகா பிரியனே போற்றி

36. சித்ரலேகா மணாளனே போற்றி

37. சிந்தையில் உறைபவனே போற்றி

38. சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி

39. சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி

40. சிவபூஜை பிரியனே போற்றி

41. சிவ பக்த நாயகனே போற்றி

42. சிவ மகா பக்தனே போற்றி

43. சுந்தரர் பிரியனே போற்றி

44. சுந்தர நாயகனே போற்றி

45. சூர்பனகா சகோதரனே போற்றி

46. செந்தாமரைப் பிரியனே போற்றி

47. செல்வ வளம் அளிப்பவனே போற்றி

48. செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி

49. சொர்ணவளம் அளிப்பவனே போற்றி

50. சொக்கநாதர் பிரியனே போற்றி

51. சௌந்தர்ய ராஜனே போற்றி

52. ஞான குபேரனே போற்றி

53. தனம் அளிக்கும் தயாபரா போற்றி

54. தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி

55. திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி

56. திருவிழி அழகனே போற்றி

57. திருவுரு அழகனே போற்றி

58. திருவிளக்கில் உறைவாய் போற்றி

59. திருநீறு அணிபவனே போற்றி

60. தீயவை அகற்றுவாய் போற்றி

61. துன்பம் தீர்த்திடுவாய் போற்றி

62. தூயமனம் படைத்தவனே போற்றி

63. தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி

64. தேவராஜனே போற்றி

65. பதுமநிதி பெற்றவனே போற்றி

66. பரவச நாயகனே போற்றி

67. பச்சை நிறப் பிரியனே போற்றி

68. பவுர்ணமி நாயகனே போற்றி

69. புண்ணிய ஆத்மனே போற்றி

70. புண்ணியம் அளிப்பவனே போற்றி

71. புண்ணிய புத்திரனே போற்றி

72. பொன்னிற முடையோனே போற்றி

73. பொன் நகை அணிபவனே போற்றி

74. புன்னகை அரசே போற்றி

75. பொறுமை கொடுப்பவனே போற்றி

76. போகம்பல அளிப்பவனே போற்றி

77. மங்கல முடையோனே போற்றி

78. மங்களம் அளிப்பவனே போற்றி

79. மங்களத்தில் உறைவாய் போற்றி

80. மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி

81. முத்து மாலை அணிபவனே போற்றி

82. மோகன நாயகனே போற்றி

83. வறுமை தீர்ப்பவனே போற்றி

84. வரம் பல அருள்பவனே போற்றி

85. விஜயம் தரும் விவேகனே போற்றி

86. வேதம் போற்றும் வித்தகா போற்றி

87. வைர மாலை அணிபவனே போற்றி

88. வைகுண்டவாசப் பிரியனே போற்றி

89. நடராஜர் பிரியனே போற்றி

90. நவதான்யம் அளிப்பவனே போற்றி

91. நவரத்தினப் பிரியனே போற்றி

92. நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி

93. நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி

94. வளம் யாவும் தந்திடுவாய் போற்றி

95. ராவணன் சோதரனே போற்றி

96. வடதிசை அதிபதியே போற்றி

97. ரிஷி புத்திரனே போற்றி

98. ருத்திரப் பிரியனே போற்றி

99. இருள் நீக்கும் இன்பனே போற்றி

100. வெண்குதிரை வாகனனே போற்றி

101. கைலாயப் பிரியனே போற்றி

102. மனம் விரும்பும் மன்னவனே போற்றி

103. மணிமகுடம் தரித்தவனே போற்றி

104. மாட்சிப் பொருளோனே போற்றி

105. யந்திரத்தில் உறைந்தவனே போற்றி

106. யௌவன நாயகனே போற்றி

107. வல்லமை பெற்றவனே போற்றி



108 குபேரா போற்றி போற்றி


நாணய வழிபாடு: 


தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷம்! குபேர பகவானுக்கு உகந்த எண் 5 என்பதால், ஒரு தட்டில் நம் கை நிறைய 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதைத் தட்டில் இருந்து நம் இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அப்போது, அளகாபுரி அரசே போற்றி… என்று துவங்கும் குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபட வேண்டும். 108 போற்றிகளையும் சொல்லி முடிக்கும் வரை தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும்.


தீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை. நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் செய்து, தீப தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை அல்லது இரவு 8 மணி முதல் 9 மணி வரை புதன் ஓரையில் இந்த வழிபாட்டைச் செய்வது சிறப்பு. 

லக்ஷ்மி குபேரன் கோவில் 



தீபாவளி அன்று செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர வழிபாட்டை மேற்கொள்வதோடு, அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடுவதும் சிறப்பு. குபேர பகவான் அரிதாகச் சில கோயில்களில் தனிச் சன்னதிகளில் எழுந்தருளியிருப்பார். சென்னை வண்டலூரில் இருந்து திருப்போரூர் செல்லும் சாலையில், வண்டலூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள ரத்னமங்கலத்தில் லட்சுமி குபேரருக்குத் தனிக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தீபாவளி வெகு விசேஷம்!

லக்ஷ்மி  செல்வத்தை  தரக்கூடியவள்.லக்ஷ்மி தேவி ஒரு இடத்தில் இருப்பது இல்லை.லக்ஷ்மி தரக்கூடிய செல்வத்தை தக்க வைக்கவே குபேரனை வழிபடுகிறோம்.என்றும் நீங்காமல் செல்வம் நம் இல்லம் தேடி வர குபேர லக்ஷ்மி பூஜை செய்வது நன்மை பயக்கும்.

நாமும் இந்த எளிய முறை பூஜையை பின்பற்றி நம் இல்லத்தில் செல்வவளம் வர வழிவகுப்போம்.

என்றும் உங்கள் ஆன்மிகத் தேடலின் தோழி 
ஈஸ்வரி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக