வியாழன், 1 செப்டம்பர், 2016

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி பூக்கள் க்கான பட முடிவு


 நாம் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்றாலும் முதலில்  முழுமுதல் கடவுளான விநாயகரை வழிபட்டபிறகுதான் வணங்கவேண்டும்.எந்த காரியத்தை தொடங்குவதற்குமுன்,விநாயகப் பூஜையைத்தான் முதலில் செய்யவேண்டும்.அப்போதுதான் செய்யவிருக்கும் காரியம் தங்குதடையின்றி நிறைவேறும்.  


 விநாயகரை  யார்  கூப்பிட்டாலும் ,கூப்பிட்ட குரலுக்கு வந்து அருள்வார்.மஞ்சளாலும், களி  மண்ணாலும்,சாணியாலும்கூட பிள்ளையாரை பிடித்து வைத்து பூஜை செய்யலாம்.அவர் எளிதில் சந்தோஷப்படுகிறவர்.எங்கே,எப்படி,எதில்  கூப்பிட்டாலும் உடனே வந்து அருள்பாவிக்கிறவர்.அவரை வழிபட சாஸ்திரம் படிக்க வேண்டும் என்பதில்லை
.


விநாயகர் பிறந்தநாளையே நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடிக்கிறோம்.ஆவணித்திங்கள் சுக்ல பட்ஷத்தில் நான்காம் நாளன்று விநாயக சதுர்த்தி வருகிறது.வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி 10நாட்கள் கொண்டாடப்படுகிறது.


விநாயக சதுர்த்தி அன்று  களிமண்ணால் செய்த பிள்ளையாரை வணங்குவது விஷேசம்.பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்ப போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார்.களிமண் பிள்ளையார் என்றில்லாமல் உலோகம்,கற்சிலை விக்ரங்களையும் வைத்து வணங்கலாம்.


 விக்னங்களை  தீர்த்துவைப்பதால் விக்னேஷ்வரர் என்றும்,யானை முகம் அமையப் பெற்றதால் கஜேந்திரன் என்றும்,கணப்பொழுதில் அவர் பிள்ளையாக காட்சி கொடுத்ததால் கணபதி என்றும் பெயர் பெற்றார்.


பிள்ளையாருக்கு மோதகம் எனப்படும் கொழுக்கட்டை மிகவும் விருப்பமாகும்.முதல் முதலில் பிள்ளையாருக்கு மோதகம்
 நிவேதியமாக செய்து வழிபட்டவர் வசிஷ்ட முனிவரின் பத்தினியான அருந்ததி தேவியார் என்று புராணம் கூறுகிறது.vinayagar chaturthi 2017 mothagam க்கான பட முடிவு

 தேங்காய் பூரணம் வைத்த கொழுக்கட்டை  தத்துவம்  

மேலே இருக்கும் மாவு அண்டத்தை குறிக்கும்.உள்ளே இருக்கும் வெல்லபூரணம் பிரம்மம்.அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது.இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவை உடைத்தால்,உள்ளே இனிய குணமான வெள்ளப்பூரணம் நமக்கு கிடைக்கும்.


அவல்,பொரி ,வெல்லம்,கடலை, பழம்,தேங்காய்,எள்ளுருண்டை,கரும்பு முதலியன அவருக்கு விருப்பமான பிரசாதமாகும். 


விநாயக சதுர்த்தி கொண்டாடும் விதம் 

வீட்டை சுத்தம் செய்து,கோலம் போட்டு ,வாழைமரம்,மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.பூஜையறையில் சுத்தமான பலகையில் கோலம் போட வேண்டும்.அதன்மீது தலைவாழை இலையைப் போடவேண்டும்.நுனி பாகம் வடக்கு முகமாக இருக்க வேண்டும்.அந்த இலை மீது பச்சரிசியைப் பரப்ப வேண்டும்.அந்த அரிசியின் மீது களிமண்ணினால் செய்த விநாயகர் விக்கிரகத்தை எழுந்தருள செய்ய  வேண்டும்.அருகம்புல்,சாமந்தி,எருக்கம்பூ,மல்லி மற்றும் வாசனை உள்ள மலர்களை சாற்றவேண்டும்.


Ganesh chaturthi celebration at home

 


பிறகு ஸ்ரீ கணேசருக்கு உரிய பாடல்கள்,மந்திரங்கள் சொல்லி ,பூஜை செய்து மா,பலா,வாழை பழங்கள் ,கொழுக்கட்டை,அப்பம்,அவல் ,பொரி,கரும்பு,சுண்டல்,வடை நிவேதித்து [அவரவர்களுக்கு என்னவெல்லாம் நைவேத்தியம்  வைத்து பூஜிக்கமுடியுமோ பூஜிக்கலாம்] மங்கள ஹாரத்தி எடுக்க வேண்டும்.


முதல்நாள் காலையில் பூஜையை முடித்து மாலையில் விநாயகர் புராணம் படித்து,கற்பூர தீபம் காண்பித்து,ஆரத்தி எடுக்க வேண்டும்.
மறுநாள் புனர்பூஜையைக் கொண்டாட வேண்டும்.தயிர் நைவேத்தியம் செய்ய வேண்டும்.அதன்பிறகு குளத்திலோ,கிணற்றிலோ பிள்ளையாரை கரைத்துவிடலாம்.


விநாயகசதுர்த்தி  விரதம் இருப்பவர்களுக்கு விநாயகரின் அருள் கிடைப்பதுடன்,அனைத்து நலங்களும்,சுகங்களும் கிடைக்கும்.வாழ்க்கையில் துன்பங்கள்,இன்னல்கள் இன்றி வாழலாம்.


விநாயக சதுர்த்தியன்று நிறைய பிள்ளையாரைத் தரிசிப்பது நமக்கு நல்ல பலனைத் தரும். 


விநாயகர் துதி  

"மூஷிக வாஹன மோதகஹஸ்த சாமரகர்ண விளம்பிதஸீத்ர!வாமனரூப மஹேஸ்வரபுத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே!"

பொருள் 

விநாயக பெருமானே!எலியை வாகனமாக கொண்டவரே!கையில் கொழுக்கட்டையுடன் நீண்ட தும்பிக்கை மற்றும் அகன்ற காதுகளுடன் சிறிய உருவத்தில் காட்சியளிப்பவரே !சிவபெருமானின் மைந்தனே!எல்லா விக்னங்களையும் நீக்குபவரே! உனது திருப்பாதங்களை நான் வணங்குகின்றேன்.

வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தியை அனைவரும் சந்தோசமாக கொண்டாடுங்கள் 

எல்லோருக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக