புதன், 21 செப்டம்பர், 2016

புரட்டாசி சனிக்கிழமை மகிமை

புரட்டாசி சனிக்கிழமை மகிமை 


பொதுவாக,இந்துக்கள் எல்லா சனிக்கிழமைகளிலும் விரதம் இருப்பார்கள்.அப்படி இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளிலும் ஒரு சிலர்,அந்த மாதம் முழுவதும் விரதம் இருப்பார்கள்.எல்லா நாட்களிலும் விரதம் இருக்கமுடியாத பட்சத்தில், புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது நல்ல பலனைத் தரும்.எனவேதான்,புரட்டாசி மாதம் விரத மாதமாகக்  கருதப்படுகிறது.

புரட்டாசி மாதம் பெருமாளை வழிபட, ஏற்ற மாதமாகும்.பெருமாளின்  மகிமையை   விளக்கும் கதைகள் புராணங்களில் உண்டு.

புராண கதை  

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அருகில் பீமன் என்ற ஏழை குயவர் வாழ்ந்து வந்தார்.அவர் தீவிர பெருமாள் பக்தர்.வாழ்நாள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்து கொண்டார்.இவருக்கு சாஸ்திர,சம்பிரதாயம்,பூஜை வழிமுறை எதுவும் தெரியாது.


தொழில் மற்றும் ஏழ்மைநிலை காரணமாக கோவிலுக்கு போகவும் நேரம் இருக்காது.அப்படியே சென்றாலும் "பெருமாளே!நீயே எல்லாம் என்று மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார்.ஒருநாள் ஓர்  எண்ணம் தோன்றியது.கோவிலுக்கு போக நேரமில்லை.ஆகையால் பெருமாளை இங்கே வரவழைத்தால் என்ன?என்று நினைத்து களிமண்ணால் பெருமாள் சிலையையும் ,பூ  வாங்க பணம் இல்லாததால் சிறு பூக்களாக  உருட்டி மாலையாக தொடுத்து அணிவித்து வணங்கினார்.

அவ்வூர் அரசர் தொண்டைமானும்  திருப்பதி பெருமாளின் பக்தர்.அவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு தங்க பூமாலை அணிவித்து வழிபடுவார்.ஒருதடவை மாலை அணிவித்துவிட்டு, மறுவாரம் வந்து பார்த்தபோது  பெருமாள் கழுத்தில் மண்ணால் செய்த பூமாலை தொங்கியது.அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. அர்ச்சகர்கள் ஏதாவது தவறு செய்கிறார்களோ என்ற குழப்பத்திலேயே அரண்மனைக்கு சென்று படுத்தார்.அன்று அரசன் கனவில் தோன்றிய பெருமாள்,பீமனின் பக்தியையும்,தாம் அதனால் மகிழ்வுற்றதையும் விளக்கினார்.உடனே,மன்னர் தொண்டைமான் அந்த குயவரின் இல்லத்துக்கு நேரில் சென்று அவருக்கு வேண்டிய உதவிகளையும்,பொன்னையும்,பொருளையும் அள்ளி கொடுத்தார்.ஆனால்,அதைக் கண்டு சிறிதும் மயங்காத குயவர் இறுதிவரை தன்  விருப்பப்படி பெருமாள் விரதம் இருந்து வைகுண்டபதவி அடைந்தார்.  அந்த பக்தரின் நினைவாக இன்றும் ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம் பிரசாதமாக வைக்கப்படுகிறது.

பரந்தாமன், பீமய்யாவின் கனவில் தோன்றி, "உன் பக்தியின் பெருமையை என்று பிறர் கூற அறிகின்றாயோ அன்றே! உனக்கு முக்தி அளித்து,வைகுண்டத்தில்  அழைத்து கொள்வேன்" என்று கூறியிருந்தார்.அதன்படியே தொண்டைமான்,பீமய்யாவின் பக்தியை பாராட்டியதை கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது.


 பெருமாளுக்கு அக்காரவடிசல் நைவேத்யமாக வைக்க காரணமான கதை   

புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அக்காரவடிசல் செய்து வணங்குதல் சிறப்பு.நாம் கேட்கும் வரம் கிடைக்கும்.

திருமாலிருஞ் சோலை அழகரிடம் ஆண்டாள்,"மாதவா! என்  மனதுக்கு பிடித்த அரங்கனே !எனக்கு மணவாளனாக வந்தால் 100 அண்டா வெண்ணையும்  ,100அண்டா அக்காரவடிசலும்  உனக்கு நைவேத்யமாக தருகிறேன்" என்று வேண்டிக் கொண்டாள் .அவள் மனம் போலவே அரங்கன் அவளுக்கு மாலை சூட்டி தன்னுடன் ஐக்கியமாக்கி கொண்டார்.

ஆண்டாள் தான் வேண்டி கொண்டதுபோல் வெண்ணையும்,அக்காரவடிசலும் பகவானுக்கு கொடுத்தாரா? என்ற சந்தேகம் 300ஆண்டுகளுக்கு பிறகு யதிராஜரான ராமானுஜருக்கு வந்தது.உடனே,மகான் 100அண்டா வெண்ணையும்,100அண்டா அக்காரவடிசலும் நைவேத்யம் செய்து அழகரை ஆராதித்து,ஆண்டாள் வேண்டுதலை தானே நிறைவேற்றினார்.அதனால் ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு அவர் வந்தபோது,வாசலுக்கே ஓடிவந்து, "வாருங்கள் !அண்ணா! நம் கோவிலுக்கு"  என்று  கூப்பிட்டாளாம் ஆண்டாள்.ஆண்டாளைவிட  ராமானுஜர் வயதில் குறைந்தவராக    இருந்தாலும் ,ஆண்டாள் அண்ணா! என்று அவரைக்கூப்பிட காரணம், ஒரு  தங்கைக்கு செய்யவேண்டிய கடமையை  அண்ணன் ஸ்தானத்தில் இருந்து  தனக்கு செய்ததால்தான்.

இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடத்திற்கு ஒருமுறை இந்த சம்பவம் மிகச்சிறப்பாக அக்காரவடிசல் பிரசாதத்துடன்  கொண்டாடப்படுகிறது.  


பக்தி என்பது குளித்து முடித்து நாமம் இட்டு, மந்திரம் சொல்லி,பூஜை செய்து சாமி கும்பிடுவதோடு முடிந்து விடுவதில்லை.நாளின் ஒவ்வொரு நொடியும் உங்களை பெருமாள் பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு,மனம்,மெய் ,வாக்கு  ஆகிய மூன்றாலும் தவறேதும் செய்யாதிருப்பதே பக்தியாகும்.

அனைத்து  ஜீவராசிகளிடம் அன்பு வைத்தால், பகவானின் அனுக்கிரகத்தை எளிதில் அடையலாம். 

நீங்களும் சந்தோஷமாக  இருங்கள்.உங்களை சுற்றியுள்ளவர்களையும் சந்தோஷப்படுத்துங்கள். 




























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக