support,like and subscribe my you tube channel Tamilnattu samayal.comments and share your friends.
ஞாயிறு முதல் சனி வரை தினமும் சொல்ல வேண்டிய பாடல்கள்
அன்பார்ந்த ஆன்மீகத் தோழிகளுக்கு வணக்கம்.
இறைவனைப் பற்றி எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். என் பதிவு பயனுடையதாக தாங்கள் கருதினால் என்னை ஊக்குவிக்கும் விதமாக உங்கள் கருத்தை தெரிவிக்க பணிவுடன் வேண்டுகிறேன்.
என் போன்ற சக தோழிகளும் பார்த்து,படித்து பயன் பெறுவதே நான் ஆண்டவனுக்கு செய்கின்ற சேவையாக கருதுகிறேன்
ஞாயிற்றுக் கிழமை:
வினாயகர் வழிபாடு:
ஐந்து கரத்தனை யானைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்திமகன் தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
சிவன் வழிபாடு:
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசந்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை யல்லாள் இனியாரை நினைக்கேனே
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கில வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே
அம்மன் வழிபாடு:
பூத்தவளே, புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே; கறைகண்டவனுக்கு
மூத்தவளே; என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே
முருகன் வழிபாடு:
வருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
பெருமாள் வழிபாடு:
பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி இன்மையின் படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின் உள்ளே படர் உலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா! பண் புரைக்க மாட்டேனே!
சூரியன் வழிபாடு:
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்.
கேது வழிபாடு:
கேதுத்தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷி
திங்கட் கிழமை:
வினாயகர்:
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத்தமிழ் மூன்றும் தா.
சிவன் வழிபாடு:
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே
அம்மன் வழிபாடு:
துணையும் தொழுந் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பனையும் கொடுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர் பூங்
கனையும் கரும்பும் சிலையும் மென் பாசாங்குசமும் வகையில்
அனையுந் திரிபுர சுந்தரியாவது அறிந்தனமே
முருகன் வழிபாடு:
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரிக் கனக சபைக்கோ ரரசே!
மயில் நடமிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவணபவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்
திருமால் வழிபாடு;
வாராய் நாக்கே! கேசவனை ஸ்தோத்திரம் செய்!
நெஞ்சே! முராசுரனைக் கொன்ற கண்ணனைத் தியானம்செய்!
கைகளே! திருமாலை ஆராதியுங்கள்!
காதுகளே! தன்னை யடைந்தவர்களை ஒருகாலும் நழுவ
விடாதவனான கண்ணனுடைய கதைகளைக் கேளுங்கள்!
கண்களே! எம்பெருமான் திருக்கோயிலுக்குச் செல்லுங்கள்!
மூக்கே! முகுந்தனுடைய திருவடிகளில் ஸமர்ப்பித்த துளசியை நுகரு!
தலையே! எம்பெருமானை வணங்கு!
சந்திரன் வழிபாடு:
எங்கள் குறைகள் எல்லாந் தீர்க்கும்
திங்களே போற்றி, திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சற்குணா போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி
செவ்வாய்க் கிழமை:
வினாயகர் வழிபாடு:
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு
சிவன் வழிபாடு:
நல்லவை பெருகவேண்டும் நாடெல்லாம் வாழவேண்டும்
அல்லவை ஒழியவேண்டும் அனைத்துயிர் வாழவேண்டும்
பொல்லவைக் கலியும் நீங்கிப் புதுயுகம் பூக்கவேண்டும்
செல்வமிக் கோங்கும் அண்ணா மலைவளர் தேவதேவ!
முருகன் வழிபாடு:
அஞ்சு முகந்தோன்றில் ஆறு முகந்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் எனவேல் தோன்றும் நெஞ்சில்
ஒருக்கால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகா என்றோதுவார் முன்
சக்தி வழிபாடு:
தனந்தரும் கல்விதரும் , ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும், தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும், நல்லன எல்லாந்தரும், அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
அனுமன் வழிபாடு:
வானரரில் முதலோனை மற அரக்கர் குலத்தோர்கள்
ஆனவராம் குமுதவனம் அழிகிரண ஆதவனை
தீனர்களின் துயர்திடைக்கத் திடவிரதம் கொண்டவனை
மானவளி தவமகனை மனக்கண்முன் கண்டேனே
செவ்வாய் வழிபாடு:
சிறப்புறு மணியே செவ்வாய் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு
புதன் கிழமை:
வினாயகர் வழிபாடு:
திகடசக்கரச் செம் முகம் ஐந்துளான்
சகடச் சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியா உறை
விகடச் சக்கரன் மெய்பதம் போற்றுவோம்
சிவன் வழிபாடு:
பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
பிள்ளையைப்பெறுந் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரே மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகங் கலைமறந் தாலும்
கண்கள்நின்றிமைப் பதுமறந்தாலும்
நற்த வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே
அம்மன் வழிபாடு:
மங்கள ரூபிணி மதியணி சூலினி
மன்மத பாணியளே!
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே!
கங்கண பாணியன் கரிமுகங் கண்டநல்
கற்பகக் காமினியே!
ஜயஜய சங்கரி கௌரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி
முருகன் வழிபாடு:
ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியானைச் சகோதரனே.
நாளென் செய்யும்வினை தானென் செயுமென நாடிவந்த
கோளென் செயும் கொடுங் கூற்றென் செய்யுங் குமரே சரிரு
தாளுஞ் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
ராமன் வழிபாடு:
கண்ணிரண்டும் ராமனைக் காணவே
காதிரண்டும் ராமனக் கேட்கவே
பண்ணிசை ராமனை பாடவே
பாதமிரண்டும் ராமனை நாடவே
எண்ணி எண்ணி ராமனை நேசிப்போம்
இதயப் பூவால் ராமனைப் பூசிப்போம்
புதன் வழிபாடு:
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந்தந் தாள்வாய் பண்ணொலியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி
வியாழக்கிழமை:
விநாயகர்:
வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து
சிவன்:
தோடுடைய செவியன் விடைஏறி
ஓர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி
என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள்
பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய
பெம்மான் இவன் அன்றே
அம்மன்:
நின்றும் இருந்தும் கிடந்தும்
நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன்மலர்த்
தால் எழு தாமரையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே
உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா
முத்தி ஆனந்தமே
முருகன்:
மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி - காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
மலரடி போற்றி - அன்னான்
சேவலும் மயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி போற்றி
பெருமாள்:
பச்சைமாமலை போல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம்
கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே.
வியாழன்:
குணமிகு வியாழக் குரு பகவானே
மனமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்
ப்ருஹஸ்பதி வியாழப் பரதகுரு நேசா
கிரகதோஷ மின்றிக் கடாக்ஷித்தருள்வாய்
வெள்ளிக் கிழமை:
விநாயகர்:
அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றிற் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியக் கைதொழுதக் கால்
சிவன்:
சிவனோடொக்குந் தெய்வந் தேடினுமில்லை
அவனோ டொப்பாரிங்கு யாவருமில்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.
அன்புஞ் சிவமு மிரண்டென்பரறிவிலார்
அன்பே சிவமாவ தாரு மறிகிலார்
அன்பே சிவமாவ தாரு மறிந்தபின்
அன்பே சிவமா யமர்ந்திருந்தாரே
அம்மன்:
நாயகி நான்முகி நாராயணிகை நளினபஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண்நமக்கே
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத் தாளை புவிஅடங்கக்
காத்தாளை அங்குச பாசாங் குசமும் கரும்பும்அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒருதீங்கில்லையே
முருகன்:
ஆறிரு தடந்தோள் வாழ்க
அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியாரெல்லாம்
விஷ்ணு:
அச்சுதன் அமலன் என்கோ
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மாமருந்தும் என்கோ
நலங்கடல் அமுதம் என்கோ
அச்சுவைக்கட்டி என்கோ
அறுசுவை அடிசில் என்கோ
நெய்ச்சுவை தேறல் என்கோ
கனிஎன்கோ பால் என்கேனோ
சுக்கிரன்:
சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே
சனிக்கிழமை:
விநாயகர்:
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் யானை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை
சிவன்:
வேண்டத் தக்க தறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற் கரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உந்தன் விருப்பன்றே
அம்மன்:
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்தபின்னே
பயிரவி பஞ்சமி பாசாங் குசைபஞ்ச பாணிவஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வாராகி யென்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே
முருகன்:
சங்கரன் மகனே சரவண பவனே
ஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனே
செங்கண்மால் மருகனே தெய்வானை கேள்வனே
பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே
பழனிமா மலையுறும் பன்னிரு கரத்தனே
அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்
பெருமாள்:
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்விதிருக்காப்பு
அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் ஜோதி வலத்துறையும் சுடர்
ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே!
சனி
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா
ராகு:
அரவெனும் இராகு அய்யனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கு
ஆகவருள்புரி அனைத்திலும் வெற்றி
இராகுக் கனியே ரம்மியா போற்றி
என்றென்றும் இறைவன்,இறைவி அருள் அனைவருக்கும் எப்போதும் கிடைக்க நான் வேண்டுகின்றேன்.
நன்றி! வணக்கம்!