அன்பார்ந்த தோழிகள்,நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்.நான் எழுதிய பதிவு பல தோழிகளுக்கு பயனுடையதாக உள்ளது என நினைக்கும் போது சந்தோஷத்தை கொடுக்கிறது.அதன் வரிசையில் என் அன்பு சகோதரி காயத்ரி துரைராஜ் லக்ஷ்மி பூஜையைப் பற்றி சொல்லுங்கள் என்று என்னிடம் கேட்டு இருந்தார்.அவர்களுக்காக இந்த பதிவை போடுகிறேன்.நான் எப்படி லக்ஷ்மி பூஜையை வீட்டில் செய்கிறேன் என்பதை இங்கு சொல்கிறேன்.
வீட்டில் லக்ஷ்மி பூஜை செய்வது எப்படி?
லக்ஷ்மி பூஜை செய்வதற்கு முன்னால் லக்ஷ்மி தேவியைப்பற்றி சொல்ல வேண்டியது என்னுடைய கடமை.
ஸ்ரீ மகா லக்ஷ்மி ஸ்ரீமன் நாராயணனின் துணைவி ஆவார்.நாராயணன் காத்தல் தொழிலை செய்பவர்.லக்ஷ்மி தேவி பாற்கடலில் அவதரித்தவர்.நாராயணனுக்கு மிகவும் பிடித்தமானவர்.ஒரு நொடி கூட லக்ஷ்மியை விட்டு பிரியாதவர்.ஆதலால் தான் லக்ஷ்மியை பூஜை செய்தாலே நாராயணின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் எள்ளளவில் கூட சந்தேகம் இல்லை.
தேவர்களும்,அசுரர்களும் சாகா வரம் பெற அமிர்தம் வேண்டி பாற்கடலை கடந்த போது பலவிதமான தெய்வீக பொருட்கள் தோன்றின.அதிலிருந்து வலம்புரி சங்கும்,லக்ஷ்மி தேவியும் தோன்றினார்கள்.ஸ்ரீமன் நாராயணன் சங்கையும்,தேவியையும் தன் இடப்புறம் சேர்த்துக் கொண்டார்.
லக்ஷ்மி தேவிக்குள் 8லக்ஷ்மிகள் அடங்குவர்.
8 வகை செல்வம் தருபவள் :
லட்சுமிகள் எட்டு, அதனையே ‘அஷ்ட லட்சுமிகள்’ எனறு அழைக்கின்றோம். செல்வம், ஞானம், உணவு, மனவுறுதி, புகழ், வீரம், நல்ல புதல்வர்கள், விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் இவையே அந்த அஷ்ட ஐஸ்வரியங்களாகும். இந்த அஷ்ட ஐஸ்வரியங்களையும் ஒருவனால் பெற முடியும். அதற்கு அந்தத் திருமகளின் அருட்கடாட்சம் இருக்க வேண்டும்.
அஷ்ட லக்ஷ்மிகளுள் வரத்தை வாரி வழங்கும்9ஆவது லக்ஷ்மியாக வரலக்ஷ்மி திகழ்கிறாள்.வளையல்,சீப்பு, கண்ணாடி, கண்மை, மஞ்சள், குங்குமம், இவற்றை தேங்காயோடு முறத்தில் வைத்து தானம் அளிப்பவருக்கு லட்சுமி விரும்பிய வரங்களை அளிக்கிறாள்.
இனி வீட்டில் லக்ஷ்மி பூஜை நான் எப்படி எளிய முறையில் செய்கிறேன் என்பதை பார்ப்போம்.
லக்ஷ்மி பூஜை செய்வதற்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமை ஆகும்.முதல் நாள் வியாழக்கிழமையே பூஜை ரூமையும்,வீட்டையும் கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.பூஜைக்கு தேவையான பொருட்களை கழுவி துடைத்து சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும்.லக்ஷ்மி சிலை என்றால் கழுவுங்கள்.லக்ஷ்மி படம் வைத்து இருந்தால் துடைத்துக்கொள்ளுங்கள்.சுவாமியை துடைப்பதற்கு என தனியாக துணி வைத்துக் கொள்ள வேண்டும்.டிஸ்யூ பேப்பர் இருந்தால் அதை பயன்படுத்தலாம். குத்துவிளக்கு,காமாட்சி விளக்கு போன்றவைகளுக்கு மஞ்சள் குங்குமம் வையுங்கள்.மஞ்சளுடன் சந்தனம் கலந்து
சேர்த்து வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.இவ்வளவுதான் முதல் நாள் வேலை.
மறுநாள் வெள்ளிக்கிழமை விடியற் காலையில், எழுந்து, குளித்து வாசலில் தண்ணீருடன் மஞ்சள் தூள் கலந்து தெளித்து கோலம் போட வேண்டும்.கோலம் கோலப்பொடியில் போடாதீர்கள்.பச்சரிசி மாவில் கோலம் போடவேண்டும்.செம்மண் பட்டை வாசலில் இடுவதால் லக்ஷ்மி தேவி நம் இல்லம் தேடி வருவாள்.துளசி செடி வீட்டில் வளர்த்து பூஜை செய்வது மிகவும் நல்லது.வீட்டு வாசலில் தினமும் துளசி செடிக்கு கோலம் போட்டு ஒரு சிறு அகலில் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.வெள்ளிக்கிழமை பூஜை செய்வதால் நமக்கு எல்லா வளங்களையும் தருவாள் துளசி மாதா.
வீட்டு பூஜை அறையில் லக்ஷ்மி படம் அல்லது சிலை வைத்து சந்தனம்,குங்குமம் வைத்து வாசனை மிக்க மலர்களை(மல்லிகை ) போட வேண்டும்.வாசனை திரவியமான பன்னீரை வீடு முழுவதும் சிறிது தெளிக்க வேண்டும். சந்தனம் திருமகளோடு அவதரித்த ஐந்து மரங்களில் ஒன்றாகும். அவரை யானை துதிக்கையால் நீராட்டுவதை பன்னீர் தெளிக்கும் நியதி குறிக்கிறது.
பூஜைக்கு ஐந்து முக குத்து விளக்கே சிறந்தது.பூஜை அறையிலும் தாமரைக்கோலம் போட வேண்டும்.கோலத்தின் மேல் குத்து விளக்கை வைத்து அம்பாளாக எண்ணி தாலி சரடு, பூ சுற்றி பாதத்தில் மலர் வைக்க வேண்டும்.பூஜை தங்கு தடையின்றி நடைபெற முழுமுதல் கடவுளான விநாயகரை மஞ்சளினால் பிடித்து வைத்து பூ போட்டு தனியாக வெற்றிலை பாக்கு வைக்க வேண்டும்.லக்ஷ்மி தேவிக்கும் வெற்றிலை,பாக்கு,ஒரு ரூபாய் நாணயம் தட்சணையாக வைக்க வேண்டும். எந்த பழம் வேண்டுமானாலும் வைக்கலாம்.நெல்லிக்காய் பெருமாளுக்கு உகந்தது. அதையும் வைத்து நெய்வேத்தியம் செய்யலாம்.முதலில்நம்முடைய குலதெய்வத்தையும்,விநாயகரையும்,லக்ஷ்மி தேவியையும் வணங்க வேண்டும்.குல தெய்வத்தை வழிபாட்டால் தான் மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்கும்.ஆதலால் நம் குலத்தைக் காக்கும் குல தெய்வம் எதுவோ அதை வழிபடுங்கள்.விநாயகருக்கு உரிய 16நாமங்களை சொல்லுதல் மிகவும் நல்லது.
லக்ஷ்மி தேவிக்கு நெய் என்றால் மிகவும் பிடிக்கும்.ஆதலால் நெய் தீபம் ஏற்றவேண்டும்.குத்து விளக்கிற்கும் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.குத்து விளக்கில் இருந்து வரும் சுடரிலிலிருந்து சூடம் ஏற்றக் கூடாது.தனியாக அகல் விளக்கு ஏற்றி வைத்து கொள்ள வேண்டும்.நெய்யால் செய்த பலகாரங்கள்,சர்க்கரை பொங்கல்,பால் பாயாசம்,லட்டு ,இவைகளை நைவேத்தியமாக வைக்கலாம்.அதுவும் முடியாத பட்சத்தில் கல்கண்டு,பேரீச்சம் பழம்,கிஸ்மிஸ் பழம்,தேங்காய், பழங்கள் போன்றவற்றை நைவேத்தியமாக வைக்கலாம்.அன்போடு எதை வைத்தாலும் லக்ஷ்மி தேவி ஏற்பாள்.நெய்வேத்தியம் அருகில் சிறு பாத்திரத்தில் தண்ணீர் வைக்க வேண்டும்.ஊதுவர்த்தி சூடம்,சாம்பிராணி,தீபம் போன்றவற்றை நம் அருகில் வைத்து கொள்ள வேண்டும்.பூஜை ஆரம்பித்தவுடன் இடையில் எழுந்திருக்கக்கூடாது.
ஐந்து முக குத்து விளக்கில் 5தீபம் ஏற்றி தீபச் சுடரையே மகாலட்சுமியாகக் கருதி ஸ்ரீசூக்தம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி 108 அஷ்டோத்திரம் என துதிப் பாடல்களை பாடியும் தியானித்து அன்னை மகாலட்சுமியை வணங்கி வழிபடலாம். எதுவும் சொல்லத்தெரியாது எனில் ஓம் லக்ஷ்மியே போற்றி என நம்மால் எத்தனை தடவை சொல்ல முடியுமோ சொல்லலாம்.நம் கோரிக்கைகளை சொல்லி வழிபடவேண்டும்.பிறகு தூப தீபம் காட்டி நெய்வேத்தியற்கு தண்ணீர் கொண்டு மூன்று முறை சுற்ற வேண்டும்.பூஜையில் குற்றம் இருந்தால் அதைப்பொறுத்து எல்லா வளங்களையும் தா லக்ஷ்மி அம்மா என சொல்லி சுற்ற இடம் இருந்தால் மூன்று முறை சுற்றவும்.இடம் இல்லாத பட்சத்தில் தன்னை தானே சுற்றி கொள்ள வேண்டும்.இறுதியில் சாஷ்டாங்கமாக தேவியின் பாதத்தில் விழுந்து வணங்க வேண்டும்.16தடவை நமஸ்கார பாடல் பாடி நமஸ்காரம் பண்ணலாம்.சூடம் அணைந்த உடன் காக்கைக்கு,நாய்களுக்கு நெய்வேத்தியதை வைத்து விட்டு நம் வீட்டு பக்கத்தில் உள்ளவர்களுக்கும்,நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.இதன்மூலம் அம்பாளின் அனுக்கிரகம் அனைவருக்கும் கிடைக்கும்.இவ்வாறு பூஜையை மிக எளிமையாக செய்து முடிக்கலாம்.
பூஜை எல்லாம் முடிந்தவுடன் சுவாமிக்கு குங்குமம் மஞ்சள் கலந்த தண்ணீரால் 3முறை ஆரத்தி காட்ட வேண்டும்.இவ்வாறு காட்டுவது பூஜை இனிதே முடிந்தது என்பதை குறிக்கும்.பூஜை அன்று 3அல்லது 5சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுக்க வேண்டும்.முடிந்தால் ஒரு சுமங்கலிக்காவது தாம்பூலம் கொடுங்கள்.தாம்பூலம் கொடுப்பதும்,பெறுவதும் நல்ல பலனை கொடுக்கும்.நாம் எண்ணிய காரியங்கள் ஈடேறும்.
ஸ்ரீ மகாலட்சுமி பூஜை மேற்கொள்பவர்களுக்கும், அதில் கலந்து கொள்பவர்களுக்கும் செல்வம் பெருகும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கை கூடும்.
இந்த பதிவை காண வந்த கண்களுக்கு நன்றிகள் பல.ஏதேனும் தகவல்கள் இதைப்பற்றி உங்களுக்கு தெரிந்து இருந்தால் சொல்லுங்கள்.எனக்கும் அது பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி சரவணன்
Thanks alot for posting ma'am..
பதிலளிநீக்குEvening poojai seiyalama maam...
பதிலளிநீக்குevening vilakku vaikkum neraththil seiyalaam.
நீக்குHey admin!! i am very glad to read this article. Thank you so much for sharing with us.
பதிலளிநீக்குDurga Aarti
videos poduga pls
பதிலளிநீக்குsee my channel Tamilnattu Samayal .subscribe
நீக்கு