Abirami Pattar |
அபிராமி பட்டர் வரலாறு
பொன்னி நன்னதி பொய்யாது பாயும் சோழர் பெருநாடு எவ்வகை வளமும் பெற்று விளங்குவதோடு பல்வகைக்கலைகளும் இயல்பாக வளர்ந்து புகழ்பெற்ற நாடு. சைவம் தழைக்க தழைத்தோங்கிய ஞானசம்பந்தப் பெருமையை எடுத்துரைக்க மொழி போதுமோ? கல்வி நீர் பாய்ச்சி அறிவு எருவிட்டுப் பத்திப் பயிர் வளர்க்கும் பொன்னான இந்நாட்டின்கண் ஏறத்தாழ 300 ஆண்டுகட்குமுன் தோன்றினார் இந்நூல் ஆசிரியராகிய அபிராமி பட்டர்.
மாயூரத்தினின்றும் காவிரிப்பூம்பட்டினம் செல்லும் வழியில் காலனைக் காலால் கடிந்த எம்பெருமான் நெஞ்சுகந்து கோயில் கொண்டிருக்கும் திருத்தலமாகிய திருக்கடவூர் இயற்கை எழிலும் தெய்வத் திருவருட் பெருக்கமும் பெற்று விளங்குகின்றது. அவ்வூரின்கண் ஆன்ற ஒழுக்கமும் நிறைந்த கல்வியும் பரந்த அறிவும் சிறந்த ஆற்றலும் கனிந்த பத்தியும் பொருந்திய அந்தணர் மரபில் ஞானக்கொழுந்தேபோல் தோன்றினார் அபிராமி பட்டர்.
இவருக்குக் குழந்தைப் பருவத்தில் பெற்றோர் இட்ட பெயர் இன்னதெனத் தெரியவில்லை. ஆயினும், கருவிலே திருவுடையராய்த் தலைமுறைத் தலைமுறையாக வந்த இசைக் கலையிலே வல்லவராய் அம்பிகையின் அருளானந்தக் கடலில் மூழ்கிச் சக்தி வணக்கத்தில் கருத்தொன்றி நின்ற இவரை அத்திருத்தலத்தில்வாழ் அம்பிகையின் திருநாமத்தைச் சேர்த்து அபிராமிபட்டர் என வழங்கியது சாலப் பொருந்துவதாகும். ஸ்ரீ அபிராமி அம்மையின்மீது இவர் கீர்த்தனம் ஒன்றும் பதிகம் ஒன்றும் பாடியிருப்பதாகத் தெரியவருகிறது.
இப்பெரியார் சக்தி பூஜையும் யோக நெறியும் செவ்வனே பயின்று வந்தார். அதனால் யோகசித்தி எய்தி என்றும் சிதா காசத்தே அம்பிகையை ஒளிவடிவமாகக் கண்டு பேரின்பத்து
ஆழ்ந்திருந்தார். இவ்வாறு பத்தி நிறைந்து முத்தி நெறியில் பித்தர்போலவும் பேதையர்போலவும் உலகப் பற்றற்று அனுபூதிச் செல்வராய் விளங்கிய பட்டரை மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை, ஏதோ ஒரு துர்த்தேவதையை ஆராதித்து வாமா சாரத்தைக் கைக்கொண்டு மனம் பேதலித்து அலைபவர் என்றே அவர்கள் எண்ணினார்கள்; தூற்றவும் செய்தார்கள்.
சத்தியமான நித்தியத்தில் நிலைத்த மனமுடையார் மற்றவர் ஏச்சையும் பேச்சையும் ஒரு பொருளாகக் கருதுவரோ? ஆகையால் பட்டரும் உண்மை இன்னதென்று உணராத மக்களை மாக்கள் என்றே உன்னி வாழ்ந்திருந்தார்.
அக்காலத்தில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார். அவர் மஹாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்தவர்; தெய்வ பக்தியும் மதப்பற்றும் மிகுந்தவர். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்திலே நீராட எண்ணித் தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் உள்ளகிடக்கையை நிறைவு செய்துகொண்டார்;
திரும்புங்கால் ஸ்ரீ அமுத கடேசரையும் ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்துகொள்ளவேண்டும் என்ற அவா மிகுதியால் திருக்கடவூரை அடைந்தார். பின்னர், அரசர் தமது நித்தி யானுஷ்டானங்களை முடித்துக்கொண்டு திருக்கோயிலுக்குச் சென்றார்.
அப்போது அபிராமி பட்டர் அம்பிகையின் ஆலயத்துச் சந்நிதியில் இவ்வுலக நினைவு ஏதுமின்றி தியான நிலையில் அமர்ந்திருந்தார். அவரது பரையற்ற தோற்றமும் புத்தொளி வீசும் முக நலமும் தியான நிலையில் சிறிதே முகிழ்ந்திருந்த இரு விழிகளும் அரசர் பெருமானின் அகத்தைக் கவர்ந்தன. சரபோஜி மன்னர் பத்தியிற் சிறந்தவராதலின் பட்டரின் தன்மையை ஒருவாறு உணர்ந்து அருகில் இருந்தோரை நோக்கி, “இவர் யார்?” என்று வினவினார்.
அப்போது அருகில் இருந்தவர்கள், “இவர் ஒரு பித்தர்; வேத விருத்தமான வாமாசாரங்களில் ஈடுபடுபவர்; ஏதோ ஒரு துர்த்தேவதையை வழிபடுகின்றவர்” என்று கூறினார்கள். அதைக் கேட்ட அரசர் ஒன்றும் கூறாது உட்சென்று அம்பிகையைத் தரிசனம் செய்தார். ஆனால், அரசருடைய மனத்தில் பட்டருடைய தோற்றம் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருந்தது. ஆகையால் திரும்பி வரும்போது அரசர் பட்டரோடு ஏதேனும் ஒரு முகாந்திரத்தை ஏற்படுத்திக்கொண்டு பேச வேண்டும் என்ற எண்ணம் உடையவராய் அவரை நோக்கி, “பட்டரே, இன்று என்ன திதி?” என்று கேட்டார்.
காலத்தொடு கற்பனை கடந்து துவாதசாந்தப் பெருவெளியில் துரியாதீதமாய்ப் பரநாத மூலத்தலத்திலே முளைத்தெழுந்த முழு மதியாக அம்பிகையைக் கண்டு அக்காட்சிக் களியிலே மதர்ந்து நின்ற அபிராமி பட்டருடைய செவியில் அரசர் சொன்ன சொற்கள் அரைகுரையாக விழுந்தன; முழுமதியின் ஒளி வட்டத்திடையே அம்பிகையின் அருள்தோற்றத்தை ஆனந்தமாய்க் கண்டு பரவசமுற்றிருந்த நிலையில் வாய் குழறி, “இன்று பௌர்ணமி” என்று விடையிறுத்தார்.
அருகிலிருந்த பெரியார்கள் இது கேட்டு ஒன்றும் தோன்றாது நின்றனர். பட்டரைப்பற்றி இல்லனவும் பொல்லனவும் சொல்லி வந்தவர்கள் அரசரே பட்டரின் உன்மத்த நிலையை உணர்ந்து கொண்டார் என எண்ணி இறுமாந்தனர். அரசரும் ‘அவர்கள் கூறியது உண்மையே போலும்’ என எண்ணித் தம் இருப்பிடத்திற்கு ஏகினார்.
அரசரும் அவருடைய பரிவாரமும் அகன்ற பின்னர், தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். தம்மை இதுகாறும் ஏசியும் பேசியும் பல்லாற்றானும் இடையூறு புரிந்தும் வந்த மாந்தரை விலங்கென்று எண்ணி மாதவம் செய்து வந்த அம்பிகை அடியார், பொய்யரின் மொழிகள் மெய்யெனத் தோன்றுமாறு நிகழ்ந்த நிகழ்ச்சியை எண்ணி மறுகினார். உடனே பட்டர், தமக்கென்று ஒன்றேனும் இன்றி யாவற்றையும் அம்பிகைக்கே அர்ப்பணம் செய்துவிட்ட வைராக்யம் உடையவர் ஆதலின், அம்மையே அப்பழியினின்றும் தம்மை மீட்க வேண்டும் என்று உறுதி பூண்டார். அம்பிகையின் சந்நிதியில் ஆழ்ந்தவொரு குழி வெட்டி அதில் பெருநெருப்பு மூட்டி அதன் மேலே ஒரு விட்டத்தினின்றும் நூறு ஆரம் கொண்ட ஓர் உறியைக் கட்டித் தொங்கவிட்டார். பிறகு அதன் மீதேறி அமர்ந்து அம்பிகையை மனத்தால் நினைத்துத் தலையால் வணங்கி, “சோர்வினால் வந்த மாபெரும் பழியைத் துடைத்துத் தாரணி போற்றும் தலைமையைத் தாராளெனின் என் உடலை இவ்வெரிக்கு இட்டு உயிர் துறப்பேன்” எனக்கடுஞ்சூள் உரைத்து, “உதிக்கின்ற” எனத் தொடங்கும் இந்த அந்தாதியைப் பாடத் தொடங்கினார். ஒவ்வொரு பாடலும் முடிந்த உடனே உறியின் ஒவ்வொரு கயிற்றை அரிந்து கொண்டே வந்தார். இவ்வாறாகக் கதிரவனும் மேலைக் கடலை நண்ணினான். அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய,
“விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே”
என்ற பாடல் முடிந்தது, உடனே ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள்! தன் தாடங்கம் ஒன்றைத் தனியே எடுத்துவான வீதியில் தவழ விட்டாள். அத்தாடங்கம் வட்ட மதியின் உருவாய்ப் பலகோடி நிலவின் ஒளிபொழிந்து நீலவானக் கடலிலே மின்வண்ண அன்னம் போல ஊர்ந்து வந்தது. ஆனந்த சொரூபிணியாய் ஞானப் பிழம்பாய்க் காட்சியளித்த அப்பிராட்டி பட்டரை நோக்கி, “வாய் சோர்ந்து மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிறுவினோம்; தொடங்கிய அவ்வந்தாதியைத் தொடர்ந்து முடிப்பாயாக” என ஆணையிட்டு மறைந்தாள்.
'சொல்லும் பொருளும்' என நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியாகிய அம்பிகையின் தரிசனத்தாலும் அமுத மாரியென அவள் கூறிய மொழியாலும் பரவசமுற்று,
”கூட்டிய வாஎன்னைத் தன்னடி யாரில் கொடியவினை
ஓட்டிய வாஎன்கண் ஓடிய வாதன்னை உள்ளவண்ணம்
காட்டிய வாகண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டிய வாநடம் ஆடகத் தாமரை ஆரணங்கே”
எனத் தம் அனுபவ நிலையைத் தெளிவுறப் பாடினார், மேலும் இருபது செந்தமிழ்ச் செய்யுட்களை இயற்றி அந்தாதியை முடித்தருளினார்.
திருத்தாடங்கத் திகழொளி புவனமெங்கும் விளங்கி நிற்க அந்த அதிசயத்தைக் கண்ட யாவரும் “அற்புதம்! அற்புதம்!” என ஆரவாரம் செய்தார்கள். சரபோஜி மன்னரும் அது கண்டு வியந்து அம்பிகையின் அடியாரைப் பிழைத்த செயலுக்கு வருந்தி அவரடி பணிந்து தாம் செய்த பிழையைப் பொறுக்குமாறு வேண்டினர். நீர்கிழிய எய்த வடுப்போலச் சான்றோர் கொண்ட
சினம் மாறுமன்றோ? அதனால் பட்டரும் உவந்திருந்தார். அரசர் பட்டருக்கு ஏராளமான மானியம் கொடுத்துத் தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்துக் கொள்ளும்படி வேண்டினார்.
அடியார் அறியாதிழைத்தது தவறாயினும் தாமே வருந்தித் தன் சரனே அரணென்று புகுவாராயின் அடியார்க்குப் பழிவராது அருள் புரியும் பெருந்தகைமை எம்பிராட்டி அபிராமிக்கே உளதாகும். இவ்வந்தாதியை முழுவதும் இடை விடாது ஓதி வருபவர் இம்மையில் எல்லா நலன்களும் பெற்று மறுமையில் முக்திப் பேறும் அடைவர் என்பது திண்ணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக