கடன் பிரச்னை, செய்யும் தொழிலில் பிரச்னை, கொடுக்கல்- வாங்கலில் பிரச்னை, எதிரிகளால் பிரச்னை, சொத்துப் பிரச்னை... என விதவிதமாகத் தோன்றும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
‘திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை’ என்ற வாக்கின்படி, நம்முடைய பிரச்னைகள் நீங்குவதற்குத் தெய்வ வழிபாடு துணை செய்யும். அவ்வகையில் மிக அற்புதமான வழிபாடு ஒன்றை நாம் அறிந்துகொள்வோம்.
சகல வழிபாடுகளிலும் முதன்மை பெறுவது விநாயகர் வழிபாடு. பிரதான வழிபாடு எதுவாக இருந்தாலும், எந்தத் தெய்வத்துக்கு உரியதாக இருந்தாலும், அதில் முதல் வணக்கம் பெறுவது பிள்ளையாரே.
இங்கே நாம் பார்க்கப்போகும் பிரதான வழிபாடே பிள்ளையார் பெருமானுக்குரியதுதான்.விநாயகர் அகவல், விநாயகர் நான்மணி மாலை, கணேசரின் காரிய ஸித்தி மாலை உட்பட பிள்ளையாரின் பெருமைகளை எடுத்துரைக்கும் ஞான நூல்களில் - துதிப் பாடல் தொகுப்புகளில் ஒன்று ஸ்ரீபிள்ளையார் பிரசன்னம்.
அற்புதங்களும் மகத்துவங்களும் நிறைந்த இந்த அருள்கோவைப் பாடல், அகத்திய மாமுனிவரின் அருள்வாக்காகத் திகழும் ஓலைச் சுவடிகளின் பாகங்களிலிருந்து வெளி வந்தது என்பது பெரியோர் வாக்கு. அதாவது, அகத்தியர் நாடி நூலில், பிரசன்ன காண்டம் பகுதியில் உள்ளது இந்த ‘ஸ்ரீதோரண கணபதி ப்ரசன்ன ஸ்துதி’.
இந்த துதிப்பாடலை தினமும் மூன்றுமுறை படித்து, விநாயகரைத் தொழுது வழிபட்டு வந்தால், கடன், வறுமை முதலான பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். வாழ்வில் வளம் பெருகும் என்று பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.
பிள்ளையார் பிரசன்னம்
‘இறை பிரசன்னம்’ என்ற சொல்லை அறிந்திருப்போம்.
`பிரசன்னம்' என்றால் `வெளிப்படுதல்' என்று பொருள். அதாவது, பிள்ளையார் பெருமானை வெளிப்படுத்துவதற்காகப் பாடப்படும் துதி என்று சொல்லலாம்.
இந்தப் பாடலைப் பாடி வழிபட்டால், பிள்ளையார் பெருமானின் சாந்நித்தியம் வெளிப்பட்டு, அவரின் அனுக்கிரகத்தால் நமது பிரச்னைகள் தீர்த்துவைக்கப்படும் என்பது நம்பிக்கை.
அரிதுயில் கொண்டிருக்கும் திருமாலுக்காக, திருப்பள்ளி எழுச்சி பாடினார்கள் ஆழ்வார்கள். திருப்பதி திருவேங்கடவனுக்கானது சுப்ரபாதம். ‘எம்பெருமான் பள்ளி எழுந்தருள்வாயே’ என்று பாடி பரமனைத் துயிலெழுப்பி, பக்தர்களுக்கு அருள்செய்யும்படி வேண்டினார் மாணிக்கவாசகர்.
அதுபோல், தும்பிக்கையானிடம் நம்பிக்கை வைத்து, கடன், சத்ரு பயம், தீவினைகள், திருமணத் தடை, சொத்துப் பிரச்னை, தொழில் முடக்கம் முதலான சகலவிதமான பிரச்னைகளையும் தீர்த்துவைத்து அருள் செய்யும்படி அவரைப் பிரார்த்தனை செய்யும் துதி நூலே, பிள்ளையார் பிரசன்னம்.
இந்தத் துதிப்பாடலில் பிள்ளையாரின் குணாதிசயம், அவர் அமர்ந்து அருள்பாலிக்கும் இடத்தின் மகத்துவம், அவரது சாந்நித்தியம், பிரச்னைகளுக்கான தீர்வு ஆகியவை சொல்லப்பட்டுள்ளன. இதன் தோத்திர பகுதியைக் காணும்போது, பிள்ளையார் பெருமான் அலங்கரிக்கப்பட்ட தோரண வாயில் முன் அமர்ந்து, தன்னைத் தேடி வரும் அடியவர்களுக்கு அருள் வழங்குவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, இந்தத் துதிப்பாடலில் சொல்லப்படும் பிள்ளையாரின் திருநாமம் `தோரண கணபதி’ என்றே வழங்கப்படுகிறது. ஆக, பிள்ளையார் பிரசன்னம் துதிப்பாடல் ஒவ்வொன்றின் நிறைவிலும் `தோரண கணபதியே தோன்றிடுக என் முன்னே’ என்று கூறி வணங்குவ்து சிறப்பு.
இனி, துதிப்பாடல் ஒவ்வொன்றையும் அதன் மகத்துவத்தோடு அறிந்துகொள்வோம்.
1. கடன் தொல்லைகள் நீங்கும்
சக்தியின் மைந்தனாய்ச்
சித்திகள் சேர்த்திடும்
முக்தியின் பொருள் சொன்ன
மூத்தக் கரிமுகவாய்
காரணணே புகழ்ப்பொருளே
கடன்தீர் வீரனே!
தோரண கணபதியே!
தோன்றிடுக என் முன்னே
(தோரண)
கருத்து: அகிலத்தை ஆட்சிசெய்யும் ஆதிபராசக்தியின் முதல் மகனாக அவதரித்து, தம்மை வணங்கும் அடியவர்களது வாழ்வில் பல வெற்றிகளை வழங்கும் பிள்ளையாரே, மனித வாழ்வில் இறை சக்தியால் விளையும் பயன்களையும் தெய்வ ரகசியங்களையும் எடுத்துரைத்த மூத்தப் பிள்ளையே, அட்ட மங்கலங்களில் ஒன்றான யானையின் முகத்தைக் கொண்டிருக்கும் யோக வடிவினரே...
பல வெற்றிகளுக்குக் காரணகர்த்தாவாக விளங்கும் நீங்கள், வாழ்வில் நாங்கள் பட்ட கடன்கள் அனைத்தும் தீர்ந்திட அருள்செய்யும் சக்தி படைத்தவர் என்பதை அறிவோம்.
உலகம் போற்றும் வண்ணம் பெரும்புகழ் கொண்டவரே, தோரண கணபதியே... தாங்கள், ஒருமுறை எங்கள் முன் தோன்றி அருள்பாலிக்க வேண்டும்.
2. துயரங்கள் விலகும்
திருமகள் அருளிருந்தும்
திரவியங்கள் சேராமல்
திருவிருந்தும் வாழ்வுதனில்
ஒளியின்றி நிற்கின்றோம்
கடன்பட்டுக் கலங்கும்
நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே
உடன் வந்தே உபாயங்கள்
காட்டிடுவாய் கரிமுகவாய்!
கருத்து: வைகுந்த வாசனாம் மகாவிஷ்ணுவின் இதயத்தில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமிதேவியின் திருவருள் பார்வை எங்களுக்குக் கிடைத்த போதும், பதினாறு செல்வங்களும் எங்களிடம் நிலைத்திருக்காமல் நீங்குவதை நீங்கள் காணவேண்டும்.
திருவருள் பரிபூரணமாக இருந்தபோதும், எங்களது வாழ்க்கை களையிழந்து திகழ்வதை உங்களின் கடைக்கண்ணால் ஒரு கணம் நோக்கவேண்டும்.
இந்தக் கலியுகத்தில் பல ஆன்மாக்களிடம் நாங்கள் பெற்ற உதவிகளையும் கடன்களையும் நன்றியோடு திருப்பியளிக்க முடியாமல் தவிக்கிறோம். அதெபோல், எங்களிடம் பணம் பொருளைக் கடனாகப் பெற்றுச் சென்றவர்களிடம் அவற்றைத் திரும்பப் பெற இயலாமலும் கலக்கத்துடன் வாழ்கிறோம்.
தங்களின் உண்மையான பக்தர்களாகிய எங்களுக்கு, இந்தச் சோதனைகள் நீங்கும் வகையில் நீங்கள் அருள்பாலிக்கவேண்டும். அதன்பொருட்டு, தோரண கணபதியே... ஒருமுறை எங்கள் முன் தோன்றி அருள்பாலிப்பீராக!
3. வீண் விரயங்கள், வீண் பழிச்சொற்கள் விலகும்!
பொருள் பெற்ற நேசர்களும் தனம் பெற்ற மாந்தர்களும்
கருணைச் சொல்தவிர்த்துக் கடுஞ்சொல் உதிர்க்கையிலே
கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய்
விரயம் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக
கருத்து: இந்தக் கலியுகத்தில், நண்பர்களும் உறவினர்களும் எங்களிடம் பொருளை அன்போடு கேட்டுப் பெறுகிறார்கள். திருப்பிக் கேட்கும்போதோ, அன்பான வார்த்தைகளைத் தவிர்த்து கடுஞ்சொற்களால் வசைபாடுகிறார்கள்.
தரிசித்த கணமே துன்பங்களை நீக்கி ஆனந்தம் அருளும் யானைமுகக் கணபதியே, கஷ்டங்கள் நிறைந்த இந்தத் தருணத்தில், திருக்கண்களைத் திறந்து தங்களின் அருள் பார்வையை எங்கள் மீது விழச்செய்ய வேண்டும்; எங்களுடைய துயரங்களுக்குத் தீர்வு காண, நல்ல வழியை அருளவேண்டும்.
எங்களது வாழ்வில் பொருள் நஷ்டம் எதுவும் ஏற்பட்டுவிடாமலும், கையைவிட்டுச் சென்ற திரவியங்கள் மீண்டும் எங்களை வந்து அடையும்படியும் அருள்பாலிக்க வேண்டும். தோரண கணபதியே எங்கள் முன் ஒரு கணம் தோன்றி, வீண் விரயங்களும் வீண் பழிச் சொற்களும் வராதபடி எங்களைக் காப்பாற்றவேண்டும்.
4. நலன்கள் யாவும் கைகூடும்
மாதுளை மாங்கனியும் கொவ்வை
என ஐங்கனியும்
காதினிலே சேதி சொல்லி
செவ்வாய் மதிசதுர்த்தியிலும்
சேரும் இரவி காலத்திலும்
மலர்தூவிப் படைத்திட்டோம்
தோரணணே! செவ்வேளின்
மூத்தவனே! செவி சாய்ப்பாய்!
கருத்து: பிள்ளையாரப்பா! உமக்கு மிகவும் பிடித்தமான கனிகளாகிய மாதுளை, மா, கொவ்வைப் பழம், சாத்துக்குடி, திராட்சை ஆகிய ஐவகைக் கனிகளைச் சமர்ப்பிக்கிறோம்.
மங்கள வாரமாகிய செவ்வாய்க்கிழமையிலும், வளர்பிறை சதுர்த்தி தினத்திலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும், உமது திருச்சந்நிதியில் நறுமணம் கமழும் மலர்களைச் சமர்ப்பித்து, மூன்று தீபங்களை ஏற்றிவைத்து வணங்குகிறோம்.
முறம் போன்ற பெரிய செவிகளுக்குக் கேட்கும் படியாக எங்களுடைய கஷ்டங்களைச் சொல்லி, எங்களது வாழ்வில் ஒளி தரும்படி வேண்டு கிறோம். தோரண கணபதியே, முருகனுக்கு மூத்தோனே... எங்களுடைய கஷ்டங்களைக் காது கொடுத்துக் கேட்டு, அவற்றை தீர்த்தருள்வீராக.
5. அச்சம் நீங்கும்
அல்லல்கள் அகலும்
பூரணியின் மைந்தனாகப்
புவனமதில் தோன்றியவா
தோரண வாயில் அமர்ந்து
துவள்வோரைக் காப்பவரே
சக்தியின் மேகலையில்
புத்தி தரும் புகழ்மகவே
எத்திக்கும் கடன்பட்டோர்
எதிர்வந்து நிற்கையிலே!
கருத்து: உலக உயிர்களுக்கெல்லாம் பசி தீர அன்னம் பரிபாலிக்கும் அன்னபூரணியின் மைந்தனே, தோரண வாயிலில் அமர்ந்து, தேடி வரும் பக்தர்களின் துன்பங்களை நீக்கிக் காத்தருளும் கருணா மூர்த்தியே, அன்னையின் ஆலய முகப்பில் - மேகலைப் பகுதியில், தாமரைப் பீடத்தில் அமர்ந்து, அடியார்களின் வாழ்க்கைச் சிறக்க வழிகாட்டும் புகழ்பெற்ற பிள்ளையாரே, எங்களின் அச்சங்கள் யாவற்றையும் தாங்கள் போக்கியருள வேண்டும்.
வாழ்க்கைச் சூழல் காரணமாக எட்டுத் திசைகளிலும் எங்களைச் சூழ்ந்து நிற்கும் கடன் பிரச்னைகளிலிருந்து காப்பாற்றுவீராக. பொன்- பொருளையும், இழந்துவிட்ட நல்வாழ்க்கையையும் மீட்க முடியாமல் போராடித் தவிக்கும் நாங்கள், தங்களின் திருமுன்னே கலங்கி நிற்கிறோம். எங்களது பிரார்த்தனையை ஏற்று திருவருள் புரியவேண்டும். அச்சம் நீங்கி நாங்கள் நல்வாழ்வு பெற்றிட வழிகாட்ட வேண்டும்.
6. ஆனந்தம் பெருகும்
சந்திரன் ஒளிகரைத்துச் சரித்திரம் படைத்தது போல்
இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே!
குன்றத்தூர் சக்திபீடமதில் கடன்தீர்க் கணநாதனாய்க்
கன்றுமுன் பசுபோலக் கனிமுகம் காட்டி நிற்பாய்
கருத்து: கலைகளில் நாயகன் என்று சந்திரனைப் போற்றுவார்கள். வான் வழியே உலகைச் சுற்றும் அந்தச் சந்திரனையே ஒளியிழக்கச் செய்து, அவருக்குப் புத்தி கொடுத்து, புகழ் வரலாறு படைத்தவரே! உலக நீதியை எடுத்துரைத்த பெருமானே!
தங்களை வழிபடாமல் ஆணவத்துடன் சென்று விட்ட தேவர் தலைவனான இந்திரனுக்குப் புத்தி புகட்டும்விதம் தேரின் அச்சை முறியச் செய்து, வழிபாட்டின் தத்துவம் சொன்ன முழுமுதற் தெய்வமே... உம்மை வணங்குகிறோம்.
தங்களைப் போற்றி பிரார்த்தனை செய்ய வந்திருக்கும் எங்களின் முன் தோன்றி... பசுவானது தான் ஈன்றெடுத்த கன்றினைக் கண்டதும் எவ்வாறு மகிழ்ச்சியோடும் கனிவோடும் இன்முகம் காட்டிப் பாலூட்டுகிறதோ, அதுபோல் தாங்களும் எங்களுக்கு இன்முகம் காட்டி, மனநிறைவான தீர்வுகளைத் தந்தருள வேண்டுகிறோம். அதன்பொருட்டு, தோரணப் பிள்ளையாரே... காலம் தாழ்த்தாமல் எங்கள் முன் தோன்றி அருள் பாலிக்கவேண்டும்.
`பிள்ளையார் பிரசன்னம்' வழிபாடும் மகத்துவமும்!
`கணபதி பூசை கைமேல் பலன்’ என்று ஔவைப் பிராட்டியார் அருளியிருக்கிறார். அவரது திருவாக்குப்படி, அடியார்களின் எளிமை யான வழிபாடுகளை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு வரம் வாரி வழங்கும் கற்பகத் தருவாகத் திகழ்பவர் கணபதி.
கடன், நிலம்-மனையில் பிரச்னை, குடும்பப் பிரிவினைகள், வேலையின்மை, திருமணத் தடை, குழந்தைப் பேறின்மை, தீவினைகள் முதலான சகல பிரச்னை களுக்கும் காப்பாகத் திகழ்வது, கணபதி பிரசன்ன துதி வழிபாடு.
வழிபடும் முறை:
சக்தி வாய்ந்த இந்தத் துதிப்பாடல் ஒவ்வொன்றையும் மூன்றுமுறை படித்து, ஒவ்வொரு துதிக்கும் ஒரு நமஸ்காரம் வீதம் (3x6) 18 நமஸ்காரங்கள் செய்யவேண்டும்.
கடன் தீர்ந்து மனநிம்மதி பெறுவதற்கு, ஆறு செவ்வாய் அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் பிள்ளையாருக்குத் தீபமிட்டு பாராயணம் செய்ய வேண்டும்.
ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமத்துச் சனி கண்டச்சனி, சனி தசை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளால் இடர்களைச் சந்தித்து வரும் அன்பர்கள், சனிக்கிழமை காலையில் ராகு நேரத்தில் இந்தத் துதியைக் கூறி பிள்ளையாரை வழிபட்டால், தோஷங்கள் அனைத்தும் அகன்று நல்வாழ்வை அடைவார்கள்.
பெண்களில் சிலருக்கு, திருமணமான பிறகு, நவ கோள்களின் நகர்வால் கணவனைப் பிரிந்து வாடும் நிலை ஏற்படலாம். இவர்கள், சனிக் கிழமைகளில் காலை வேளையில் பிள்ளையாருக்கு ஒன்பது தேங்காய்களைச் சமர்ப்பித்து, அவரின் சந்நிதிக்குப் பின்புறமாக மூன்று தீபங்கள் இட்டு வழிபடவேண்டும். இப்படி ஒன்பது வாரங்கள் தோரண விநாயகரை வழிபட்டு வந்தால், பிரிந்த தம்பதி விரைவில் ஒன்று சேர்வார்கள். ஊரும் உறவுகளும் மெச்சும்படி கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து குடும்பம் நடத்துவார்கள்.
வளர்பிறை சதுர்த்தி தினத்தில், பிள்ளையாரின் திருமுன்பாக பிரசன்ன துதியைப் பாராயணம் செய்து வழிபட்டால், தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவரும் கடன் பிரச்னைகள் நீங்கும். எதிர்பாராத வகையில் லாபம் பெருகும். தொழிலில் விரைவில் வெற்றி உண்டாகும்.
அதேபோல், உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள அம்பாள் ஆலயத்தில், தோரண கணபதியாய் (நுழை வாயிலின் அருகில்) அருளும் பிள்ளையாரைத் அனுதினமும் தரிசித்து வழிபட்டால், சகலவிதமான தடங்கல்களும் நீங்கி காரிய வெற்றி உண்டாகும்.
தோரண கணபதி தரிசனமும் வழிபாடும்!
சக்தி தேவியர் தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத்தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகைக்கு வலப் புறமாக சந்நிதி கொண்டிருப்பார், அருள்மிகு தோரண கணபதி.
ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச- பாசமும், கீழ் இரு கரங் களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், தோரண கணபதி.
இவர், தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள `ருணம்' எனும் கடன்களைத் தீர்த்து அருளும் தெய்வம் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன.
சக்தி மேகல்வாசம்
சகல கல்யாண மூர்த்திம்
அங்குச பாச ஹஸ்தம்
கிரீட மகுட தாத்ரீம்
அஷ்ட லக்ஷ்மீ சகிதம்
தோரண கோபுர நேத்ரம்
ருணமோசன கணேசம்
நௌமி ஸதா ப்ரசன்னம்!
எனப் போற்றுகிறது ஒரு துதிப்பாடல்.
மூல ஆலயத்திலிருந்து பார்க்கும்போது, இவர் அமர்ந்திருக்கும் இடம் பிரம்ம ஸ்தானமாக அமைவதால், கடனைத் தீர்ப்பதில் இவர் வல்லவராகத் திகழ்கிறார்.
தாமரை பீடத்தில் அமர்ந்தவராக, தம்மைத் தேடிவந்து வழிபடும் பக்தர்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமிகடாட்சத்தைக் கொடுக்கிறார்!
மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும். இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ்ரீதோரண கணபதி வழிபாடு கை கொடுக்கும்.
செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம்.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம்.
இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள்... குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீதோரண விநாயகரைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். அத்துடன் கணபதியின் மேகலை - பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும்.
ஸ்ரீதோரண கணபதி மந்திரம்:
‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.
அத்துடன் மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.
கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தில், ஸ்ரீசாரதாம்பா ளின் திருச்சந்நிதியில், காப்பு கணபதியாக அருள்கிறார் ஸ்ரீதோரண கணபதி. தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வடதேசத்தில் வாரணாசி ஆகிய தலங்களில் தோரண கணபதி வழிபாடு உண்டு.
குன்றத்தூரில் தோரண கணபதி
சென்னையில் குன்றத்தூர் அருள்மிகு முருகன் கோயில் (மலைக்கு) அருகில், திருநீர் மலை சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீசக்தி கார்த்தியாயினி ஆலயம்.
இங்கே, பல்லவர் காலத்துக் கட்டடக் கலை அமைப்பில், நகர்ந்து வரும் தேர் போன்று அமைக்கப் பட்டுள்ளது சக்திதேவியின் சந்நிதி. சக்தி தேவியின் கருவறையைச் சுற்றிலும் அஷ்டலட்சுமிகள் நின்ற கோலத்தில் அருள் தருகின்றனர். நம்முடைய கஷ்டங்கள் அனைத் தையும் நீக்கி, இந்தத் திருக்கோயிலில், கோபுரத்தின் அருகிலுள்ள தோரண வாயிலில் காப்பு தெய்வமாக அருள்கிறார் வ்தோரணகணபதி.
இங்கே அம்பிகையைத் தரிசிக்க வரும் பக்தர்கள், ஸ்ரீதோரண கணபதியையும் வழிபட்டு வரம் பெற்றுச் செல்கிறார்கள்.
வளர்பிறை சதுர்த்தி, செவ்வாய்க் கிழமைகளில் தோரண கணபதிக்கு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, `ஸ்வர்ண தீப வழிபாடு' மூன்று முறை செய்து வர வேண்டும். இதன் பலனாக கடன் தொல்லைகள் நீங்கும். கடனாகக் கொடுத்த பணமும் பொருளும் விரைவில் மீளும். வழக்குகளில் வெற்றி உண்டாகும்.
சாஸ்திரங்கள் மூவகை எதிரிகள் குறித்து சொல்லப்பட்டுள்ளது. அதாவது பணி நிமித்தமான எதிரிகள், வெளிப்படையான பகைவர்கள், மறைமுகப் பகைவர்கள் ஆகியோரால் ஏற்படும் தொல்லை களிலிருந்து விடுபடவும் தோரண கணபதியைத் தரிசித்து அருள்பெறலாம்.
சனிக்கிழமை- காலை வேளையில், இத்தலத்தின் பிள்ளையார் சாந்த சொரூபியாக - வித்யா கணபதியாகக் காட்சி தருவார். அப்போது நிகழும் பூஜை-வழிபாடுகளில் கலந்து கொண்டு பிள்ளையாரைத் தரிசித்து வழிபட்டால், படிப்பில் மந்தமாக உள்ள பிள்ளைகள் நன்கு படிக்கத் தொடங்குவார்கள்; தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள்.
நன்கு படித்தும் வெகு நாள்களாக நல்லதொரு வேலை கிடைக்காமல் அல்லல் படும் இளைஞர்கள், சனிக்கிழமை காலையில், குன்றத்தூர் ஸ்ரீசக்தி கார்த்தியாயினி கோயிலில் அருளும் தோரண கணபதியைத் தரிசித்து வழிபட்டுச் சென்றால், விரைவில் நல்ல வேலை அமையும் என்பது நம்பிக்கை.
`வளர் பிறை சதுர்த்தியில் பிள்ளையாரை வழிபட்டால், சுகங்கள் தொடரும்' எனும் ஞானநூல்களின் அறிவுரைப்படி, இந்தக் கோயிலில் வளர்பிறை சதுர்த்தி தினங்களில், கூட்டு வழிபாடும் வேள்வியும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சதுர்த்தித் திருநாளில், மாலை 6 முதல் 8 மணி வரை, அன்பர்கள் (பலன் பெற்றோரும், பலன் பெற விரும்பும் அன்பர்களும்) ஒன்றிணைந்து, `ருண விமோசன கணபதி' வேள்வி நடத்தி, வலம்புரிச் சங்கு மூலம் பிள்ளையாருக்குப் பாலபிஷேகம் செய்து வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள்.
நீங்களும், `பிள்ளையார் பிரசன்னம்' வெளியான தலமாகக் கருதப்படும் குன்றத்தூருக்குச் சென்று தோரணரை வழிபட்டு நலம் பெற்று வாருங்கள்.