புதன், 1 மார்ச், 2017

கணபதி பஞ்சாயதனம்

ஐந்து சுவாமி பூஜை:


பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து தெய்வங்களுக்கும் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.

எங்கும் இவரது அருளாட்சி:


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முதலில் வழிபாடு செய்வது விநாயகரைத் தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், பரீட்சை என்று வந்து விட்டால், “”பிள்ளையாரப்பா! எனக்கு அருள் செய்வாய்,” என்று இவரிடம் போய் நிற்பார்கள். நம் மனதில் மட்டுமல்ல, நாம் செல்லுகின்ற வழியெல்லாம் நமக்குத் துணையாக இருப்பவரும் இவரே. ஆற்றங்கரை, அரசமரம், முச்சந்தி, தெருக்கோடி, முட்டுச்சந்து, ஊர்ப் பொது இடம் என்று எல்லா இடங்களிலும் இவருடைய அருளாட்சிதான் நடக்கிறது.

இழந்த பொருளை தரும் விநாயகர்:



தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான சுந்தரர், தன் நண்பரான சேரமான் பெருமாள் நாயனாரிடம் பொன்னும் பொருளும் ஏராளமாகப் பெற்றுக் கொண்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். சுந்தரருடன் திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார் சிவன். சிவகணங்களை வேடர் வடிவில் அவரிடம் அனுப்பி, அவரிடமிருந்த பொன்னையும், பொருளையும் பறித்து மறைத்து வைக்கும்படி ஆணையிட்டார். திருமுருகன்பூண்டி என்ற தலத்துக்கு சுந்தரர் சென்றபோது, பொருள்களை வேடர்களிடம் இழந்தார். இதுபற்றி இறைவனிடம் முறையிட்டார். அங்கிருந்த விநாயகர் சுந்தரரை பெயர் சொல்லி கூப்பிட்டு, பொருளை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டி அருளினார். அதனால் இவ்விநாயகருக்கு “கூப்பிடு விநாயகர்’ என்ற சிறப்புப் பெயர் உண்டானது. கையில் இருக்கும் பொருள்களை தவறுதலாகவோ அல்லது தீயவர்களாலோ இழந்தவர்கள் கூப்பிடு விநாயகரை வழிபட்டால் அவர் அருளால் தொலைந்த பொருள் மீண்டும் வந்து சேரும்.

நிவேதன பொருட்கள்: 

கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு,நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன்,பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலிய பொருட்களை விநாயகருக்கு நிவேதனம் செய்யலாம். இந்நிவேதனப் பொருட்களை அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிடுகிறார்.
* விநாயகருக்கு பூஜை செய்ய அருகம் புல்  சிறந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக