புதன், 22 மார்ச், 2017

நந்தித் திருமணம்


நந்தித் திருமணம்

சிலாதர் கண்டெடுத்த சிவக்குழந்தை


வீதஹவ்யர் என்ற பெயர் கொண்ட முனிவர், தம் சிறு வயதில் சிவனடியார் ஒருவரின் அன்னப் பாத்திரத்தில் விளையாட்டாக கல்லைப் போட்ட தீவினையால், இறந்த பிறகு பெரும் பாறை ஒன்றைத் தின்று தீர்க்க வேண்டும் என்ற தண்டனை இருப்பதை யமதூதர்கள் மூலம் முன்னரே அறிந்து, இறப்பதற்கு முன்னரே பாறையைத் தின்று தன் பாவம் போக்கிக்கொண்டவர். ஆதலால்தான் இவருக்கு “சிலாத முனிவர்’ என்ற பெயர் வந்தது.

திருமணம் முடிந்து பிள்ளை பெற்று பிதுர்க்கடனை நிறைவேற்ற சிலாத முனிவர் தவறியதால், அவரின் முன்னோர் நரகத்தில் உழன்று கொண்டிருந்தனர். இதனால் வருந்திய சிலாத முனிவர் சித்திரவதி என்ற பெண்ணை மணம் செய்து கொண்டும் பிள்ளைப் பேறு கிடைக்கவில்லை. கலக்கமுற்ற சிலாத முனிவர் இந்திரனின் ஆலோசனைப்படி ஸ்ரீ சைலமலை சென்று புத்திர காமேஷ்டி யாகம் செய்ய முற்பட்டபோது, தங்கப் பெட்டியில் சிவரூப சுந்தரனாக குழந்தையொன்றைக் கண்டெடுத்தார். அந்தக் குழந்தையே நந்தியெம் பெருமானாவார். நந்தி என்றால் மகிழ்ச்சி என்று பொருள். சிலாதரின் கவலையைப் போக்கி மகிழ்ச்சி உண்டாக்கும் விதம் கிடைத்தவர் ஆதலால் நந்தி என்று அவருக்குப் பெயரிட்டார் சிலாதர்.

நந்தியின் தவமும் ஈசன் தந்த பட்டமும்


சிறு வயதிலேயே அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார் நந்தி. இந்நிலையில் சிலாதரின் இல்லத்துக்கு வருகை தந்த மித்ரன், வருணன் போன்றோர் நந்தியின் ஆயுள் இன்னும் ஒரு வருடமே என்று சிலாதரிடம் எடுத்துச் சொல்ல, மிக வருத்தம் கொண்டார் சிலாத முனிவர். நந்தி தன் தந்தைக்கு ஆறுதல் கூறிவிட்டு, சிவதவம் செய்யக் கிளம்பினார். முந்நூறு வருடங்கள் கடும் தவம் செய்தார் நந்தி. இறுதியாக அவரின் தவத்தினால் மகிழ்ந்த ஈசன், நந்தியைத் தன் அம்சமாகவே மாற்றி, தன் சிரசிலிருந்து மாலை எடுத்து நந்திக்கு அணிவித்து, அதிகார நந்தி என்ற பட்டத்தையும் அளித்து கயிலாயத்தில் அமர்த்தினார்.

நந்தியை சிவபெருமான் தன் மகனாகவே ஏற்றுக்கொண் டார். உரிய வயதில் அவனுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணிய சிவன், வசிஷ்ட முனிவரின் பேத்தியை மணமகளாகத் தேர்ந்தெடுத்து, பங்குனி மாத பூச நட்சத்திர நாளில் சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சி திருமழபாடியில் மேற்சொன்ன நாளில் கோலாகலமாக நடைபெறும். பார்வதியும் பரமேஸ்வரனும் திருவையாறிலிருந்து பல்லக்கில் வருவர். நந்தி மாப்பிள்ளை கோலத்தில், வெள்ளியாலான தலைப்பாகை அணிந்து, கையில் செங்கோல் ஏந்தி, குதிரை வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க வைத்தியநாதன்பேட்டை வழியாகத் திருமழபாடி வருவார். திருமண விழா முடிந்ததும் புனல்வாசல் வழியாக திருவையாறு திரும்பிச் செல்வர். இதைத்தான் "வருவது வைத்தியநாதன்பேட்டை; போவது புனல்வாசல்' என்பர்.

நந்தி திருமணத்தின்போது பல தலங்களிலிருந்து பல பொருட்கள் வந்தன. திருவேதிக்குடியிலிருந்து வேதியர்கள் வந்தனர். திருப்பழனத்திலிருந்து பழ வகைகள் வந்தன. திருப்பூந்துருத்தியிலிருந்து மலர் மாலைகள் வந்தன. திருநெய்த் தானத்திலிருந்து யாகத் திற்கும் சமையலுக் குமான நெய் வந்தது. திருச்சோற்றுத் துறை யிலிருந்து அறுசுவை அன்ன வகைகள் வந் தன. இந்தத் தலங்களெல்லாம் திருமழ பாடியைச் சுற்றி அமைந்துள்ளன.



நந்தியின் திருமணம் காணும்  திருமணமாகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் விரைவில் திருமணம் கூடி வரும் என்பர். "நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்' என்பது சொல் வழக்கு. இவ்விழாவைக் காண்போர் இல்லத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும்;சுபகாரியங்களும் நடை பெறும் என்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக