செவ்வாய், 7 மார்ச், 2017

அனுமன் கொண்டுவந்த காசிலிங்கம்

அனுமன் கொண்டுவந்த காசிலிங்கம்








உடம்பால் பிறருக்குத் தீமை செய்ததற்கு சாட்சி இருந்தால் அதற்கு தண்டனை கிடைத்துவிடும். பேச்சால் தீங்கிழைத்து, சாட்சி இருக்குமானால் அதற்கும் தண்டனை உண்டு. ஆனால் மனம், தீமையை நினைத்தால் அதற்கு சாட்சியும் இல்லை; தண்டனையும் இல்லை. அதனால் மனதின் தீய எண்ணங்களை நீக்குவதற்கு வழி உண்டா என்று பெரியோர்கள் தேடினார்கள்.
எங்கும் எக்காலத்தும் உள்ள இறைவனை, கடவுளை, பரம்பொருளை மனதில் சாட்சியாக வைத்தால் மனம் தவறான எண்ணங்களில் ஈடுபடாது என்று உறுதி பூண்டனர். தெய்வ நம்பிக்கை மனதைத் திருத்தச் சரியான வழியாகவும், ஒரே வழியாகவும் அமைந்தது.
ராமபிரான் தனது பிராட்டியான சீதையை இலங்கையிலிருந்து மீட்டெடுக்க ராவணனுடன் போரிட்டார். பல வீரர்களைக் கொன்று குவித்து சீதையை மீட்டுகொண்டு அயோத்தி நோக்கிப் புறப்பட்டார். ராமன், சீதை, லட்சுமணன், அனுமன் ஆகியோர் ராமேஸ்வரத்திலிருந்து அயோத்தி நோக்கி வந்துகொண்டிருந்த போது காவிரிக் கரையில் ஆழகிய தென்னஞ்சோலையும் நீர் வளமும் நிறைந்த பகுதியில் சற்றே இளைப்பாறினார்கள். அப்போது ராமபிரான் தன்னை ஏதோ ஒன்று பின்தொடர்கிறதே என சீதையிடம் சொன்னார். ராவணனின் தங்கை சூர்ப்பனகையுடன் பாதுகாவலர்களும் அரக்கர்களுமான ஹரன், தூஷன் ஆகியோரை சம்ஹாரம் செய்ததை நினைவுகூர்ந்து அத்தோஷமே தங்களைப் பின்தொடர்ந்து வருகிறது என்பதை சீதை, ராமனுக்கு உணர்த்தினார்.

சீதை செய்த சிவலிங்கங்கள்

அவர்கள் ஒரு வில்வ மரத்தடியில் இளைப்பாறியபோது, அந்த தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கு சிவலிங்க பூஜை செய்வதே உத்தமம் எனத் தீர்மானித்தனர். உடனே சீதை அனுமனைக் காசிக்குச் சென்று விரைவாக சிவலிங்கம் ஒன்றை கொண்டு வருவதற்குப் பணித்தார். காசிக்குச் சென்ற அனுமன், திரும்பும்வரை காவிரி ஆற்றின் துணை ஆறான குடமுருட்டி ஆற்றிலிருந்து ஈர மணலை எடுத்து வரிசையாகச் சிவலிங்கங்களைச் செய்து வந்தனர்.
ராமபிரான், லட்சுமணன் ஆகியோரது பெருமுயற்சியால் சீதாப்பிராட்டி தமது கரங்களாலேயே 106 மணல் லிங்கங்களை உருவாக்கினார். அனுமன் காசியிலிருந்து திரும்பும் முன்பே வில்வ மரத்தடியில் பக்திப் பரவசமுற்று சிவலிங்க பூஜையைத் தொடங்கிவிட்டனர். தான் காசியிலிருந்து வருவதற்குள் சிவலிங்க பூஜை தொடங்கப்பட்டு, பூர்த்தியடையும் தறுவாயில் இருப்பதைக் கண்ட அனுமன் சினம்கொண்டார். மூலவராக ராமபிரான் பிரதிஷ்டை செய்த ராமலிங்கத்தைப் பெயர்த்தெடுத்துவிட்டு, காசி லிங்கத்தை மூலவராகப் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்ற நோக்குடன் ராமலிங்கத்தினைத் தன் வாலால் கட்டி இழுக்கும்போது வாலறுந்து வடக்கே சென்று அனுமன் விழுந்தார். ஒரு கணம் சினம் கொண்டதற்குத் தக்க தண்டனை பெற்ற அனுமன், ராமபிரானிடம் சரணடைந்தார்.

அனுமன் கொண்ட கோபத்திலும் நியாயம் இருப்பதை உணர்ந்தார் ராமபிரான். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 107 சிவலிங்கங்களை வழிபட்டாலும், 108-வது சிவலிங்கமான ஹனுமந்த லிங்கத்தை வழிபட்ட பின்னர், அம்பாளை வழிபட்டால்தான் முழுப் பலன் கிட்டும்; தோஷம் நீங்கப்பெறும் என்றார்.

ராமபிரான் தான் பிரதிஷ்டை செய்த சிவலிங்கங்களையும், மூலவரான ராமலிங்கத்தையும், ஹனுமந்த லிங்கத்தையும் மனமுருக வேண்டிய பின்னர் அவருக்கு நிம்மதி கிட்டியது என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் அவ்வூர் பாபவிநாசம் எனப் பெயர்பெற்றது. இக்கோயிலை வெளிப்பிராகாரத்தோடு 108 முறை வலம் வந்தால் நினைத்த காரியம் கைகூடும், பாவங்கள் அனைத்தும் மறைந்து நன்மைகள் பல கிட்டும் என்றும் கூறப்படுகிறது.

அனுமன் காசியிலிருந்து சுமந்துகொண்டு வந்த இந்த லிங்கத்தை வணங்கினால் காசிக்குச் சென்று வணங்கிய பலன் கிட்டும். மூலவரான ராமலிங்க சுவாமிக்கு ஈடு இணையாக இருந்து காத்தருளும் பர்வதவர்த்தினி அம்பாள் தெற்கு நோக்கி அருள் பாலித்துவருகிறார்.

இக்கோயிலில் மஹாசிவராத்திரி விழா வெகு சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம், இரவு முழுவதும் 108 சிவலிங்கங்களுக்கும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும். பக்தர்கள் 108 முறை வெளிப்பிராகாரங்களைச் சுற்றி வலம் வரும்போது சிவபெருமானே நேரில் தோன்றி பக்தர்களின் குறைகளைப் போக்கியருளுவார் என்பது நம்பிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக