யார் கடவுள்? எப்படி கடவுளை வணங்க வேண்டும்? எப்படி கடவுளை எளிதில் அடைய முடியும்? இப்படி பல கேள்விகள் மனிதனின் மனதில் புகுந்து மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான இடைவெளியை அதிகப்படுத்துகின்றன. உண்மையில் இக்கேள்விகள் கடவுளை அடைய வழி வகுக்குமேயானால் எவ்வழியும் சம்மதமே என்று அறிந்து கொள்ளலாம். அவ்வாறு அறிந்து கொண்டவராயின் கடவுளையும் அறிந்து கொண்டார்கள் என்று புரிந்து கொள்ளலாம். மனிதன் கடவுளிடம் பக்தி கொண்டவனாய் இருந்தாலும் கடவுளை அடையலாம். கடவுள் மீது அன்பு கொண்டவனாய் இருந்தாலும் கடவுளை அடையலாம். கடவுள் இல்லை என்று கூறுவானேயானாலும் எல்லா உயிர்களும் ஒன்றென கருதி வாழ்பவனும் கடவுளை அடையலாம்.
பக்தியும் அன்பும் ஒன்றென கூற முடியுமா?
உண்மையில் பக்தியின் ஒரு வெளிப்பாடு தான் அன்பு. அன்பினை காட்டும் விதம் தான் பக்தி. பக்தியில் சிறு மரியாதை கலந்திருப்பதால் கடவுளை ஒரு அரியாசனத்தில் அமர்த்தி சற்று மதிப்புடனே காண்பர். அன்பு கொண்டவர்கள் தன்னுள் ஒருவனாய் கடவுளை காண்பர். உண்மை அறியாத மனிதனுக்கு தான் அது மாறுபட்டு தெரியும். ஆனால் கடவுளுக்கு எல்லாம் ஒன்றே.
பக்தியின் மகத்துவத்தினை உணர்த்த மார்கண்டேயனுக்காக யமனை காலால் உதைத்த அதே ஈசன் தானே அன்பின் வெளிப்பாடாய் தன் மீதே கால் வைத்த கண்ணப்பனையும் ஏற்றுக்கொண்டான். கடவுளைக் காட்டிலும் கடவுள் மேல் கொண்டுள்ள பக்திக்கு சக்தி அதிகம். அவ்வளவு ஏன்? உலகிலுள்ள அனைத்து சக்தியின் திருவுருவமாய் விளங்கும் அந்த ஆதி பராசக்தியினைக் காட்டிலும் பக்தி பெரியது. கஷ்டம் வந்த பின் தான் நாம் கடவுளை நினைக்கின்றோம். நல்லது ஒன்று வாழ்வில் நடக்கும் போது அவனை சீண்ட கூட மாட்டோம் என்று எண்ணி வருந்துபவர்கள் அதிகம்.உண்மை தான். நாம் நமக்கு கஷ்டம் நேரும் போது தான் கடவுள் என்று ஒருவன் இருப்பதை உணர்கின்றோம். உணர்ந்து கொள்வதில் தப்பில்லையே!
நோய் என்று ஒன்று வந்த பின் தானே மருத்துவரைப் பற்றி நாம் எண்ணுகிறோம். கஷ்டம் என்பது அவன் நம்மை சோதிக்கும் நேரமல்லவா. அவனுக்குத் தானே வினை எனும் நோய் ஆற்றும் மகத்துவம் தெரியும். ஆக, சங்கடம் நேரும் பொழுது அவனைப் பற்றிக்கொண்டீர்கள் என்றால், நீங்கள் சரியான மருத்துவரை கண்டு கொண்டுவிட்டீர்கள் என்று எண்ணி நிம்மதி கொள்ளுங்கள்.
மனித வாழ்வானது கர்மத்தினை அடிப்படையாக கொண்டது. கர்மத்தின் பயனாய் பலன்களை அனுபவிக்கும் நேரம் மனம் ஆனந்தம் கொள்கின்றது. அதே நேரம்,செய்த வினையின் விளைவாய் அனுபவிக்க வேண்டிய சங்கடங்களை ஏற்றுக் கொள்ளும் மனவலிமையும் நாம் பெற்றிருக்க வேண்டும். கடவுளின் விருப்பமும் அதுவே! கர்மத்தின் வழி நடக்கும் சம்பவங்களையே மனிதன் விதி என்று கூறுகிறான். காற்றில் நறுமணத்தை சில நேரம் நுகர்வோம், சில நேரம் துர்நாற்றத்தை நுகர்வோம். அது காற்றின் வாசனை அல்ல. காற்று கடந்து வரும் பொருளின் மனம். அது போலவே மனிதப் பிறவியும். இங்கு காற்று ஆன்மா எடுக்கும் பிறவிகள். பொருள், நாம் செய்த கர்மங்கள். நறுமணமும் துர்நாற்றமும் ஆற்றும் செயல்கள் பொருத்து மாறுபடும். வாழ்வில் சுகமும் துக்கமும் அவ்வாறே. நல்லவை செய்ததால் வாழ்வில் நறுமணம் நிறைந்த சுகமும், தவறு செய்ததால் துர்நாற்றம் என மனம் நினைக்கும் துக்கமும் நிகழ்கின்றன. ஆனால், மனித மனமானது ஆற்றும் செயல்கள் அனைத்திலும் பயன் மற்றும் லாபம் பற்றி மட்டுமே எண்ணுகின்றது. அதன் விளைவாகவே மனிதனின் வாழ்வினில் மனக்குறை என்று ஒன்று நிறைந்து காணப்படுகிறது. மனக்குறை ஏமாற்றத்தின் வெளிப்பாடு. எண்ணியவை எண்ணியவாறு நடக்காமல் போவதால், திட்டமிட்டபடி செயல்கள் நடக்காமல் போவதால், ஆசைகளின் விளைவாய் காணும் கனவுகள் தகர்ந்து போவதால், பிறர் மீது எதிர்பார்ப்பு இருப்பதால், சமுதாயத்தின் முன்னும் உறவினர்களின் முன்னும் அவமானப்பட்டு நிற்கும் நிலை என்று கருதுவதால் மனிதனின் வாழ்வில் மனக்குறை நிறைந்துள்ளது. வாழ்வின் சில தருணங்களில் இன்பம் நிறைந்து இருப்பது எப்படியோ அப்படியே சில தருணங்களில் வலி ஏற்படுவதும் விதிப்பயனே. உண்மையில், சங்கடம் நிறைந்த தருணங்களில் நாம் கடவுளை எண்ணுகின்றோம். சங்கடம் நேரும் பொழுது இறைவன் நம்மை சோதிக்கின்றான் என்பதே உண்மை. நம் அருகில் நின்று நாம் எடுக்கும் முடிவுகளை பார்த்துக் கொண்டிருக்கின்றான். தர்மசங்கடமான தருணங்களிலும் இறைவனிடம் வேண்டுதல் வைக்கும் மனம், அவனை பிராத்திக்க மறந்து விட்டது என்பதே அவன் வருத்தம்.
வாழ்வில் சங்கடம் நேரும் பொழுது இறைவனிடம் நாம், அச்சங்கடம் தீர வழி கேட்கின்றோம். தீர்ந்தால் போதும் என்றா வேண்டுகின்றோம்!? நமக்கு சாதகமாய்,நமக்கு பயனளிக்கும் விதமாய், நாம் நம் உறவினர்கள் மற்றும் சமுதாயத்தின் முன் பெருமையாய் நிற்கும் விதமாய் அப்பிரச்சனை முடிய வேண்டுகின்றோம்! மீண்டும் அது போல் ஒன்று நமக்கு நிகழாமல் இருக்க வேண்டுகின்றோம். நடப்பவை அனைத்தும் கர்மத்தின் பயன் என்பதை உணர மறந்து விட்டோம். இறைவனை வேண்டும் பொழுது நமக்கு வேண்டியவற்றை வேண்டுகின்றோம். மனித வாழ்வில் நிகழும் அனைத்திற்கும் காரணம் அவனவன் ஆற்றும் கர்மங்களே என்பதை உணர மறுக்கின்றோம். ஆன்மா செய்த பாவத்தின் வினையை அனுபவித்தே ஆகவேண்டும். அதுவே தர்மம். என்றால், பரிகாரம் செய்வதால் செய்த பாவம் இல்லை என்று ஆகிவிடுமா? இல்லை, அவ்வினைப் பயனை அனுபவிக்க தேவை இல்லாமல் போய் விடுமா?? உண்மையில்,பரிகாரம் என்பது செய்த பாவத்தினை உணர்ந்து அக்கர்ம வினையினை ஏற்கும் மனபலத்தினை ஆண்டவனிடம் வேண்டி, இனியோரு முறை மறந்தும் அப்பாவத்தினை புரியாமல் இருக்க அவனிடம் சரணடைவதே ஆகும். ஆனால் மனித மனம் வேண்டுவது சமுதாயத்தின் முன் நிமிர்ந்து நிற்க அந்தஸ்தும், செயல்கள் புரிய பலமும், செய்யும் செயல்களின் பலன் மட்டுமே.
செல்வம், சுற்றம், அறிவு, உடல் பலம் என நாம் கேட்கும் இவை அனைத்தும் இப்பூவுலகில் நம்மை காத்துக்கொள்ள என்றாலே,"நம்மை காப்பவன் இறைவன்" என்ற எண்ணம் மனதில் புதைந்து, மறைந்தும் போய்,"நான்" என்கிற எண்ணம், அகங்காரம் முன்னிற்பதாக தானே அர்த்தமாகின்றது! உண்மையில் பிராத்தனை என்பது நம் மனதில் குடி கொண்டுள்ள அனைத்து கவலைகளையும், பாரத்தையும், ஐயத்தினையும், ஆசைகளையும் இறைவனின் பாதங்களில் சமர்பிப்பதே அல்லவா! அவனே கதி என்று செல்வதல்லவா! இறைவனே கதி என்று செல்லும் போது அவன் ஆணையை ஏற்க வேண்டுமல்லவா! அவன் ஆணையானது ஆத்மா அதன் கர்மத்தின் வினைகளையும் பயன்களையும் இப்பூவுலகில் முடித்து விட்டு விரைந்து அவனடி சேர உதவி புரியும் விதமாகத் தானே இருக்கும்! மனிதன் மனிதனின் திறமையை அறிந்துகொள்ள பரிட்சிப்பதைப் போல் இறைவனும் நம் பக்தியினை அறிந்துகொள்ள பரிட்சிக்கின்றான். என்றால்,சங்கடம் நேரும் போது இறைவனை உருகி உருகி வேண்டுவது நாம் தவறான வழியில் கடவுளை நோக்கி செல்வதாய் அர்த்தப்படுமா??
"அழிவு நெருங்கும் போது அறிவீனமும் பற்றிக்கொள்ளும். அப்பொழுது என்னை நினைக்கவும் கூட மனிதன் மறந்து போவான். அப்படி என்றால் அவ்வாத்மா மீண்டும் பூமியில் பிறப்பெடுத்து விதியின் வலையில் சிக்கும் நிலை ஏற்படும். என்னை மனிதன் நினைக்காவிடிலும் அவன் நலனையே எண்ணிக் கொண்டிருக்கும் நான் அதற்கு தீர்வு காண வேண்டும். மனிதன் பலம் கொண்டிருந்தாலும் என்னை நினைக்க ஒரே வழி, சங்கடம். தர்மசங்கடம் நேரும் நேரத்தில் அவன் நடந்து கொள்ளும் விதம் தான். உண்மை நிலை அறிந்து என்னை அப்பொழுது நினைப்பவன் தன் இறுதி நாளில் என்னை நினைக்காவிடினும் அவனை நான் இரட்சிப்பேன்.",என்பதே கடவுளின் கருணையுள்ளம். அதை அறிந்து கொள்ளாத மனிதர்கள் கஷ்ட காலங்களில் கடவுள் இல்லை என்பர். ஆனால்,சங்கடம் நேரும் பொழுது அவனை பற்றுபவர்களை அவன் அனைத்துக் கொள்கிறான்.
"என்னை சேரும் வழி எதுவாகினும் பரவாயில்லை. என்னை சேர வேண்டும் என்று மட்டும் எண்ணம் கொண்டு, நானே பரமாத்மா என்றுணர்ந்து என்னிடம் நீ சரணடைந்து விட்டால் உன்னை தர்ம வழியில் நடத்திச் சென்று முக்தி தருவது என் கடமை.", என்கிறார் பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணன். என்றால் இறைவனைப் பற்றி சிந்திக்காத ஆத்மாவின் நிலை? அதற்கும் ஒரு திட்டம் வைத்திருப்பான் மாயவன். இக்கருத்தையே "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா", என்ற வரிகளின் மூலம் நமக்கு உணர்த்துகிறார் ஆண்டாள். மலர்களில் தேனை வைக்க அவன் மறக்கவில்லை. கனிகளில் சுவையை வைக்க அவன் மறக்கவில்லை. இப்படி உலகின் அனைத்து உயிர்களிடத்திலும் வேறுபாடில்லாமல் அன்பு வைத்திருப்பவன் நம்மை எப்படி சங்கட காலங்களில் மறந்துவிட்டான் என்று மனம் எண்ணலாம்?
கடவுள் ஒன்றே உண்மை. மற்றவை அனைத்தும் மாயை. இதையே மதங்கள் போதிக்கின்றன. என்னிடம் என்னுடையது என்று மனிதனுக்கு எதுவும் இல்லை. "எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?", என்று அவ்வுண்மையை நம்மிடம் ஸ்ரீ கிருஷ்ணன் கீதை மூலம் கேட்டு உணர்த்துகிறான். "ஏழையாகவே நீர் இறைவனைச் சந்திக்க வேண்டும். செல்வந்தனாக சந்திக்காதீர்.",என்று கூறுகிறார் நபிகள் நாயகம். வாழ்க்கை என்று ஒன்று இருக்கும் வரை மாயை என்று ஒன்று இருந்து கொண்டே இருக்கும். இதிலிருந்து விடுபட இறைவனைச் சரணடைய வேண்டும். பலனை எதிர்ப்பார்த்து மரம் நிழலும் பழமும் தருவதில்லை. பலனை எதிர்ப்பார்த்து காற்று வீசுவதில்லை. பலனை எதிர்ப்பார்த்து மேகம் மழை பொழிவதில்லை. பலனை எதிர்ப்பார்த்து நிலம் நம்மை தாங்குவதில்லை. அத்தகைய வாழ்வை மனிதன் வாழ வேண்டும், பலனை எதிர்ப்பார்த்து எக்காரியமும் செய்யக்கூடாது என்பதை மனிதன் எக்காலத்திலும் மறக்கக் கூடாது என்பதற்காகவே நம் முன்னோர்கள், "மனிதன் வாழ நிலம், நீர், காற்று, உணவு இன்றியமையாதது" என்றார்கள். பலனை எதிர்ப்பார்க்காது தர்ம வழியில் செல்லும் மனமானது நல்வழியில் மனிதனை கொண்டு செல்லும். இறைவனிடம் சரணாகதி அடையும் மனம் இதை உணரும். சுகம் கிடைக்கும்.
இனியொரு சங்கடம் வாழ்வில் நிகழும் பொழுது, இறைவனிடம் வேண்டாமல், அவன் நம் அருகில் இருக்கின்றான் என்பதை உணருங்கள். அவன் அருகில் இருந்தால் சங்கடமும் சுகமல்லவா! அவன் அருகிலேயே இருப்பான் என்றால் சங்கடம் தான் நேருமா? "நீ அருகினில் இருக்க எனக்கென்ன மனக்குழப்பம்? சர்வமும் உன் பாதத்தில் வைத்துவிட்டேன்", என்று சரணடையுங்கள். மனம் மகிழும் இறைவன், வாழ்வின் போராட்ட காலங்களில் நம் கரம் பிடித்து நம்மை தர்மவழியில் கொண்டு செல்வான், நாம் கலைத்து போய் இருக்கும் நேரத்தில் நம் தலை சாய்க்க தன் தோள் கொடுப்பான்.
"தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா!
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே!" - பகவத்கீதை 7.14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக