வியாழன், 9 மார்ச், 2017

அன்னதானத்தின் பலனை விளக்கும் கதை

அன்னதானத்தின் பலனை விளக்கும் கதை 

முன்னொரு காலத்தில் அந்தணர் குடும்பத்தை சேர்ந்த சோமேஸ்வரன், சுசீலா தம்பதியர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஒரு சத்தியத்தை ஏற்று தினமும் ஒருவருக்காவது அன்னதானம் செய்த பின்னர் நாம் உணவு உண்ணவேண்டும் என்ற சத்தியத்தை ஏற்றனர். புரோகிதம் செய்த வருமானத்திலேயே அடியார்களுக்கு அந்த தம்பதியர் அன்னதானம் செய்து வந்தனர், திருமணம் ஆகி 15 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த பிராமணர் தம்பதியருக்கு ஈசனின் அனுகிரகத்தால் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை 16 வயது பாலகனாக சர்வேஸ்வரன் என்ற திருநாமத்தோடு இளம் பருவத்தை அடையும்போது அவன் தந்தை சோமேஸ்வரன் ஐயர் இறைவன் அடி சேர்ந்தார். இளமை பருவத்தில் வறுமை பலவாறாக ஆட்டிப்படைத்தது. அவன் தாய் சுசீலா வீட்டு வேலை செய்து அதில் வரும் வருமானத்தில் தன் கணவர் விட்டு சென்ற அன்னதானத்தை தொடர்ந்து செய்து வந்தாள். இதைக்கண்டு சர்வேஸ்வரன் மிகுந்த கோபம் அடைந்தான். தன் தாயிடம் சர்வேஸ்வரன் தாயே அன்னதானம் செய்வதால் என்ன பலன், இவ்வளவு கஷ்டமான நிலையிலும் அன்னதானம் செய்யவேண்டுமா ? தந்தை இறந்துவிட்டார், வசதி வாய்ப்பு இல்லை. இத்தனை வருடங்களாக கடுமையாக வீட்டுவேலை செய்து உழைத்து அன்னதானம் செய்கின்றாயே. இந்த அன்னதானம் செய்வதால் என்ன பலன் என்று கூறுங்களேன் என்று கேட்டான். அதற்கு அவன் தாய் தனக்கு தெரியாது என்றாள். திருமணம் ஆன நாள் முதல் நானும் உன் தந்தையும் இந்த அன்னதானத்தை எந்த பிரதிபலன் பாராமல் செய்து வருகிறோம். என்ன பலன் என்று எனக்கு தெரியாது. ஊரில் உள்ள பெரியவர்களை கேட்டுத் தெரிந்துக்கொள் என்றாள் அவன் தாய்.


 சர்வேஸ்வரன் ஊரில் உள்ள பெரியோர், சான்றோரிடம் அன்னதானம் செய்வதின் பலன் யாது என்று கேட்கின்றான். அனைவரும் அது பற்றி தெரியாது என்கின்றனர். அப்போது அவனுடைய ஊருக்கு விஜயம் செய்த தவயோகியிடம் அன்னதானம் பற்றி கேட்டான். தவயோகியும் தனக்கு தெரியாது மகனே என்கிறார். இதற்கு விடை பரமேஸ்வரனுக்கு மட்டும் தெரியும். கானகம் சென்று ஈசனைக் குறித்து தவம் செய்து தரிசனம் பெறுவாய். அன்னதானம் பற்றிய கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று மந்திரம் உபதேசம் செய்து அனுப்பினார் தவயோகி.
 சர்வேஸ்வரன் என்ற அந்தணச் சிறுவன். தன் தாயிடம் ஆசீர் பெற்று கானகம் சென்றான். அப்போது கானகத்தில் நடந்து செல்லும்போது இருட்டாகிவிட்டது. அடர்ந்த வனத்தில் திக்கற்றவனாக குக்குரல் இடுகிறான். அப்போது வனத்தில் அந்தண இளைஞனை கண்டான் வேடன். வேடன் அன்னதானம் கொடுத்து இரவு தங்க அடைக்கலமும் தந்தான். வேடன் மனைவி அந்த சிறுவனைக் கண்டு மிகவும் கோபம் அடைந்தாள். இந்த குடிசையில் தங்க இருவருக்கு மட்டுமே இடம் உள்ளது, இருவர் சாப்பிட மட்டுமே உணவு உள்ளது. இந்த அந்தண சிறுவனையும் அழைத்து வந்து தொல்லை கொடுக்கிறார் என்று தன் கணவனிடம் சண்டையிடுகிறாள் வேடன் மனைவி. அதற்கு அந்த வேடன் என்னுடைய தினை, கிழங்கு இவற்றை உண்ண கொடுத்து இந்த இரவு பொழுது தங்க இடத்தையும் சிறுவனக்கு தருவேன். உன்னுடைய உணவை நீயே சாப்பிடு என்றான் வேடன்.
 வேடன் மனைவி கோபம் கொண்டு தன் உணவை உண்டு உறங்கினாள். அந்தண சிறுவன் தனக்கு கிடைத்த தினை கிழங்கை உண்டு குடிலில் ஓரமாக உறங்குகின்றான். வேடன் குடிலின் வெளியில் மரத்தடியின் ஓரமாக உறங்கினான். மறுநாள் காலையில் கண்விழித்த அந்த அந்தண சிறுவன் குடிலை விட்டு வெளியே வந்தான். சிங்கம் ஒன்று தாக்கிய நிலையில் வேடன் மரணம் அடைந்து இருந்தான். இதைக் கண்ட வேடன் மனைவி கூச்சலிட்டு கதறி அழுது அவளும் தன் உயிரை துறக்கிறாள். அந்தண சிறுவன் மனம் கலங்கி துக்கத்தால் வேதனை அடைந்தான். இருந்தாலும் ஈசனிடம் வரம் பெறுவதே (அன்னதானம் சிறப்பை அறிந்து கொள்வது) தன் லட்சியம் என்று கருதி இமயமலை அடிவாரம் சென்று தவமிருக்கின்றான். பல ஆண்டுகள் தவம் செய்கின்றான். தவத்தை மெச்சிய ஈசன் நந்தி வாகனத்தில் சர்வேஸ்வரனுக்கு காட்சி அளிக்கிறார். அந்தண சிறுவனே உனக்கு வேண்டிய வரத்தை கேள் என்றார் சிவன்.


 ஈசனைக் கண்டு அகம் மகிழ்ந்தான் சர்வேஸ்வரன். ஈசனை வணங்கினான். கயிலைநாதனே, கருணாகரனே, பரமேஸ்வரா அன்னதானத்தின் பலன் என்னவென்று நான் தெரிந்துக் கொள்ளவேண்டும் என்று இறைவனிடம் வேண்டினான். அதற்கு ஈசன் உன்னுடைய தேசத்தை ஆளும் மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். புத்திர சோகத்தால் மகாராஜாவும், மகாராணியும் என்னைக் குறித்து அனுதினமும் பூஜை செய்து வருகின்றனர். நான் தரும் இந்த விசேஷ கனியை எடுத்து சென்று மகாராணிக்கு கொடு, இந்த தெய்வீகக்கனியை மகாராணி முழுவதுமாக சாப்பிட்டால் ஒரு மகன் பிறப்பான். குழந்தை பிறந்ததும் அரசபை கூட்டி தங்கத்தாம்பலத் தட்டில் வாழை இலை விரித்து அதில் பச்சிளம் குழந்தையை வைத்து அரசபைக்கு எடுத்து வரச்சொல். அந்தக் குழந்தை அன்னதானத்தின் மகிமை பற்றி கூறும் என்று சிவபெருமான் வரமருளினார்.

 சர்வேஸ்வரன் நாடு திரும்பினான். நாட்டு அரசனைக் கண்டு ஈசன் கொடுத்த வரத்தையும் கூறினான். தெய்வீக மாங்கனியை நாட்டு மன்னனிடம் கொடுத்தான். மகாராணி மாங்கனியை பக்தியோடு உண்டு ஈசனை பக்தியுடன் வழிபட்டு வந்தால் ஈசன் அருளால் மகாராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் நீராட்டி, சீராட்டி தங்கத் தாம்பலம் தட்டில் வாழை இலையில் குழந்தையை அரசபைக்கு எடுத்து வருகின்றனர். அந்த பச்சிளம் குழந்தை செம்பவள வாய் திறந்து பேசுகிறது. அரசபையில் வீற்றிருப்போர் அனைவரும் வியப்புடன் பார்க்கின்றனர். ஓ... அந்தண சிறுவனே, ஓ... சர்வேஸ்வரா நீ தவம் செய்ய கானகம் வந்தபோது உன் பசியை ஆற்றிய வேடவன் நான்தான். உனக்கு முற்பிறவியில் பசிக்கு அன்னதானம் வழங்கினேன். அந்த அன்னதானம் பலனாக இப்பிறவியில் இளவரசனாக நான் பிறந்துள்ளேன். முற்பிறவியில் அன்னதானத்தை தடுத்த என் மனைவி இந்த ராஜ்ஜியத்தில் பன்றிகுட்டியாக பிறந்துள்ளாள். அன்னதானம் செய்வதால் கர்மங்கள் நீங்கும். ஒரு உன்னதமான பிறவி கிடைக்கும். மேலும், மகத்துவமான வாழ்வும் பெறுவோம் என்று கூறி குழந்தை தன் இயல்பான நிலையை அடைந்தது. 

நாமும் அன்னதானம் செய்து இறையருள் பெறுவோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக