ஞாயிறு, 12 மார்ச், 2017

காரைக்கால் அம்மையார்


காரைக்கால் அம்மையார் 


அருள்மிகு காரைக்கால் அம்மையார் திருக்கோயில், காரைக்கால்
சிலர் பிறக்கும்பொழுதே தெய்வாம்சத்துடன் பிறந்து, பின்னர் இறைவன் புகழ்பாடி, அவரின் பெருமைகளை உலகுக்கு எடுத்துரைத்து, இறைவனின் திருவடிகளை அடைகின்றனர். அந்த வரிசையில் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை அமைந்துள்ளது.
இந்த திருத்தலம் காரைக்கால் நகரில் இருந்து 1 கிலோ மீட்டர் செலவில் உள்ளது. இந்த தலம் வந்து இங்கு ஆனி மாத பௌர்ணமி திருவிழாவின் போது தரப்படும் மாம்பழத்தை, குழந்தை பேறு வேண்டுவர்கள் சேலையில் தாங்கி பிடித்துக் கொள்கின்றனர். இதனால் குழந்தை பேறு கிட்டும் என்பதும் இல்வாழ்க்கை மிக சிறப்பாக அமையும் என்பதும் ஐதீகம்.

காரைக்கால் அம்மையார் கதை 


தேவர் குல வீணை வித்வானாகிய தும்புருவின் புத்திரியான சுமதி, சிறந்த சிவபக்தை. ஒரு நாள் அவர்கள் இல்லம் வந்த துர்வாச முனிவரை, சிவ வழிபாட்டில் மூழ்கியிருந்த சுமதி கவனிக்காததால், கோபம் கொண்டு சுமதியை மானிடப்பிறப்பு எடுக்க சாபமிட்டார். இதனல்  பூவுலகில் அவதரித்தார்.
இந்த காரைக்கால் அந்த சமயம் காரை வனமாக இருந்தது. இங்கு சிறந்த வைசிய குடும்பத்தில், தனதத்தன் – தர்மவதி தம்பதியருக்கு மகளாக அவதரித்தாள். மிகச் சிறந்த அழகிய பெண்ணாக வளர்ந்தாள். அவருக்கு புனிதவதி எனப் பெயரிட்டனர். புனிதமான தெய்வீக குணம் கொண்டு சிவனை வணங்கும் பக்தையாகவே இருந்தாள்.
திருமண வயது அடைந்தவுடன், நாகபட்டினத்தில், பொன் ஆபரண வியாபாரியான பரமதத்தனை மண முடித்து  வைத்தனர். கணவனுக்கு தொண்டு செய்து இறைவனைப் பாடியபடியே திருமண வாழ்க்கையை தொடர்ந்தார்.


ஒருநாள் பரம தந்தனிடம் ஒரு வியாபாரி 2 மாம்பழங்களை கொடுத்தார். அதனை வீட்டிற்கு கொடுத்து அனுப்பினார். அப்பொழுது ஒரு சிவனடியார் உணவு வேண்டி வீட்டிற்கு வந்தார். அவருக்கு உணவு படைத்து ஒரு மாங்கனியும் அளித்து, அவரை வணங்கி வழி அனுப்பி வைத்தார்.

பின்னர் மதிய உணவிற்கு வீடு வந்த பரமபத்தன், மாங்கனியை தரும்படி கேட்டார். ஒருமாங்கனியை தந்தார். அது மிகவும் ருசியாக இருந்ததால், இன்னொரு மாங்கனியையும் கேட்டார். புனிதவதி சமையல் அறை சென்று, சிவபெருமானை வேண்டினார்.


“மெய் மறந்து நினைந்து, உற்ற இடத்து உதவும் விடையவர்தான் தம்மனம் கொண்டு உணர்தலுமே” என்றதும், அவரது கையில் ஒரு மாம்பழம் வந்தது. அம்மையார் அதனை தன் கணவனுக்கு கொடுத்தார். இது மிகவும் அதீதமான சுவையுடன் இருந்தது. அதனால் புனிதவதி அம்மையாரிடம்  கேட்க, நடந்தவற்றை கூறினார். ஆனால் அதை நம்பாத பரமதத்தன், புனிதவதி அம்மையாரிடம், இது உண்மையெனில், மற்றுமொரு மாம்பழத்தை வரவழைக்க ஆணையிட, அது போலவே சிவ பெருமானை வேண்டினார். அப்பொழுது மறுபடியும் அவரது கையில் மாம்பழம் வந்தது. இதைக்கண்ட பரமதத்தான், புனிதவதி ஒரு தெய்வப் பிறவி என்பதை அறிந்து, அவருடன் தாம்பத்தியம் கொள்வது கூடாது என்று தீர்மானித்தான். 


தன் பொருட்கள் அனைத்தையும் சேகரித்து கப்பலில் ஏற்றி கடல் மீது பயணித்து சென்றான். பாண்டிய நாடான  மதுரைக்கு  வந்து , வேறு ஒரு பெண்ணை மணந்து, ஒரு பெண் குழந்தையும் பிறந்து தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தான்.

இதனை கேள்விப்பட்ட புனிதவதி மதுரை வந்து கணவனைக் காண வந்தார்.
அது சமயம் பரமதத்தன், தனது மனைவி குழந்தையுடன், புனிதவதியின் காலில் வீழ்ந்து வணங்கி நீங்கள் தெய்வத்தன்மை பெற்றவர்கள். எங்களை காத்தருள வேண்டுமென வணங்கினார். மேலும் தன் சுற்றத்தாரிடம் இத்தாயை வணங்கி ஆசி பெற்று செல்லுங்கள் என்று கூறினான்.

புனிதவதி காரைக்கால் திரும்பி சிவபெருமானிடம், கணவருக்காக இந்த இளமையும்  ஆடை அணி கலன்களையும் களைந்து சிவபூதகன வடிவு பெற்றார்.


பின்னர் கயிலாயம் சென்றார்.
கயிலாயத்தில், இறைவன் இருக்கும் புனித இடம் என்பதால் கால்களைப்பதிக்காமல், கையால் ஊன்றி தலைகீழாக நடந்து, சிவபெருமானை அடைந்தார். சிவபெருமானும், அம்மையே வருக! என அழைத்துக்கொண்டார். என்ன வேண்டும்? என்று கேட்க, “பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்பு உண்டெனில் உன்னை மறவாமை வேண்டும். இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி, அறவா நீ ஆடும் பொழுது, உன் அடியின் கீழ் இருக்க” என்று வேண்டினார். அவருக்கு சிவ பெருமான் தன் திருத்தாண்டவம் காட்டி, திருவாலங்காட்டிற்கு வந்து தன் திருவடிக் கீழ் இருக்க அருளினார்.

காரைக்கால் அம்மையாரை மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவராக கூறுகின்றனர். இசைத்தமிழால் இறைவனைப் பாடியவர்களில் முதலாமவர் ஆகும். இவர் இயற்றிய “அற்புதத் திருவந்தாதி” “திருவாலங்காட்டு சிவப்பதிகம்” “திரு இரட்டை மணிமாலை” போன்ற நூல்களை இயற்றி தமிழக்கு பெருமை சேர்த்தார். ஒருபாட்டின் கடைசி வார்த்தையும் அடுத்தபாட்டிற்கு முதலாவதாக இருக்கும் (அந்தம்+ஆதி) அந்தாதி பாடியவர் இவர்தான் என்கின்றனர்.

ஆனிமாதத்தில் பௌர்ணமி தினத்தன்று மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது.
சிவன் பிச்சாண்டவர் வேடத்தில் உலாவரும்பொழுது பக்தர்கள் உயரமான இடத்திலிருந்து அவரது சிலையை நோக்கி மாங்கனிகளை வீசுகின்றனர். மறு நாள் காலை 5 மணிக்கு அம்மையார் எலும்புக்கூடு வடிவில் கைலாயம் சென்ற வைபவம் நடைபெறுகிறது. சிவபெருமான் கோவிலுக்கு வெளியில் இருப்பார். அது சமயம் அவர் பாடிய பாடல்களைப் பாடி, ஊரில் உள்ள விளக்குகள் அனைத்தையும் அணைத்து, ஒரு தீப்பந்தம் சிவன் அருகில் கொளுத்தி, மற்றுமொரு பந்தம், அம்மையார் கோவில் உள்ள தீப்பந்தம் எரியும்படி செய்து பின்னர் இரண்டையும் ஒன்று சேர்த்து, இறைவனிடம் ஜோதியில் கலந்து ஐக்கியமான காட்சியை நினைவூட்டுகின்றனர்.
காரைக்கால் அம்மையாருக்கு உள்ள ஒரே கோவில் இங்குதான் உள்ளது. தினமும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து உள்ளது. இங்கு அம்மையார்தான் கருவறையில் உள்ளார். இங்கு வீற்றிருக்கும் சிவபெருமான் சோமநாதர் ஆக பெயரிடப்பட்டுள்ளார். சம்பந்த விநாயகர் உள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக