வியாழன், 8 பிப்ரவரி, 2018

துளசி தேவிக்கு திருமணம்

துளசி தேவிக்கு திருமணம் 










































விஷ்ணு பூஜை  துளசி இல்லாவிட்டால்  வீண்.  எந்த நைவேத்யமும்  துளசி தளம், ஜலம்  ப்ரோக்ஷணம்  இன்றி பூர்த்தியாகாது.துளசி சர்வ பாபங்கள், ஏன்  வியாதிகளையும்  போக்கக்கூடிய  அரு மருந்து. துளசியின்  வேரிலிருந்து கிளை, இலை,அனைத்திலும்  எல்லா  தேவதைகளும் இருக்கிறார்கள்.

தேவர்களும் ,அசுரர்களும்   பாற் கடலைக் கடைந்தபோது துளசி  லக்ஷ்மியின் தங்கையாக தோன்றுகிறாள்.  விஷ்ணுவையே  அவளும்  மணக்க  விரும்புகிறாள். லக்ஷ்மி  அவளை  துளசி செடியாக மாற்றுகிறாள். விஷ்ணு அவள்  விருப்பத்தை  நிறைவேற்ற நான் சாலக்ராமமாக  இருக்கும்போதெல்லாம்  துளசி என்னோடு  இருப்பாள் என்கிறார்.

விஷ்ணு ஆலயங்களில்,  மாதவர்கள்  வீட்டில்  எல்லாம்  துளசி பிரதானமானவள். துளசி மாடம் இல்லாத  ஹிந்து வீடுகள் இல்லை. அவளை வணங்காமல்  பூஜை இல்லை,  விஷ்ணுவுக்கு  நைவேத்யம் இல்லை. காலையிலும் மாலையிலும் துளசிக்கும்  தான்  தீப நமஸ்காரம்.  ப்ரார்த்தனை .
லக்ஷ்மி  விஷ்ணு மார்பில்,  துளசி  அவர் கழுத்தில், உடலில், காலடியில் எங்குமே.


சிவபெருமான்:  ”நாரதா, துளசியின் பெருமையைப் பற்றி சொல்கிறேன் கேள்’
எவன் ஒருவன்  துளசி தேவியைப் பற்றி  அறிகிறானோ, அவனது  சகல ஜன்ம பாபங்களும் விடுபட்டு, ஸ்ரீ ராதா கிருஷ்ணனை அடைகிறான்.  எவனது  உடல்  துளசி கட்டையோடு  தகனம் செய்யப்படுகிறதோ அவனுக்கு உடலோடு  அவன் பாவங்களும் எரிந்துவிடும் எவன்  அந்திம காலத்தில் விஷ்ணுவின் நாமத்தை சொல்கிறானோ, துளசி கட்டையை  தொடுகிறானோ , அவன் மோக்ஷம் எய்துவான்.

கிருஷ்ணனே  அவனை  எதிர் கொண்டு அவன் கையைப் பிடித்து  தன்னோடு  அழைத்து செல்வார் .

எவன்  துளசி கட்டையை, சமித்துகளோடு  சேர்த்து வைத்துக்கொள்கிறானோ, அவன் ஹோமத்தில் இடும் ஒவ்வொரு  தானியத்திற்கும் ஓர் அக்னிஹோத்ர பலன் அடைவான்.
துளசி கட்டையை உபயோகித்து கிருஷ்ணனுக்கு செய்யும்  தூப  ஆராதனை,  100 அக்னி ஹோத்ர பலனையும், 100 கோ தான பலனும் கொடுக்கும்.
கிருஷ்ணனுக்கு  நைவேத்யம் பண்ணும் உணவு, துளசி கட்டை  கலந்த அக்னியில் தயாரிக்கப் பட்டிருந்தால்  மேருமலை அளவு தானியங்களை தானம் செய்த பலன் தரும்.

ஒரு சிறு துளசி குச்சியால் ஏற்றிய  தீபம்,   பல லட்ச தீபங்களை  கிருஷ்ணனுக்கு ஏற்றிய  பலன்  தரும். இப்படி விளக்கேற்றியவனைப் போல  கிருஷ்ணனுக்கு  பிடித்தவன் வேறு யாருமில்லை. 
துளசிக்கட்டையை அரைத்து சந்தனம் போல்  கிருஷ்ணனுக்கு  சாற்றியவன் ஈடில்லாத கிருஷ்ண பக்தன்.
துளசிச்செடி அடியில் உள்ள  மண்ணை கொஞ்சம் குழைத்து தனது உடலில் சாற்றிக்கொண்டவன்  100 கிருஷ்ண பூஜைகளை  செய்த பலன் பெறுவான்.
துளசியை ஆராதித்து கிருஷ்ணனுக்கு அர்ச்சிப்பவன், எல்லா புஷ்பங்களை அர்ச்சிப்பதன் பலன் பெறுவான்.   இறந்தபிறகு கிருஷ்ணனையே அடைகிறான்.

இன்னொன்று  சொல்லட்டுமா.  எவன்  வழியிலே  எங்காவது  ஒரு துளசி தோட்டம், நந்தவனத்தை  கடந்து வணங்கி போகிறானோ, அவன் சர்வ பாப, தோஷங்கள் நீங்கப் பெறுவான்.

துளசி செடி  எந்த வீட்டில்  இருக்கிறதோ, அந்த வீட்டில் வசிப்பவர்களில்  கிருஷ்ணனும் ஒருவன்.

காற்றில்  எங்கிருந்தாவது துளசி வாசனை  வந்து அதை நுகர்வதாலும் கூட ஒருவன் பரிசுத்தமாகிறான் என்றால்  பார்த்துக்கொள்ளுங்கள்.

(துளசி கட்டை  வேண்டும் என்பதற்காக  துளசி செடியின் கிளையை  ஓடிக்கவோ, வெட்டவோ வேண்டாம்.  காய்ந்த துளசி செடியிலிருந்து  அதை சேகரிக்கலாம்)

பத்மபுராணத்தில் இன்னொரு காட்சி.

முருகன்; அப்பா, எந்த தாவரத்திலிருந்து தெய்வ பக்தி பெருகுகிறது?

சிவன்    :  ”என் அன்புச் செல்வா ,ஆறுமுகா, துளசி ஒன்று தானடா அந்த தெய்வீகம் கொண்டது. கிருஷ்ணனுடன் நெருங்கியதல்லவா அது.

உலகில் வெகு காலம் முன்பு, கிருஷ்ணன்  பிருந்தா தேவியை பூலோகத்தில்  பித்ருக்களுக்கான  திருப்திகர சேவைக்காக  துளசியாக  அறிமுகப்  படுத்தினார். எதை  அளித்தாலும் சிறிது துளசி இல்லாவிட்டால், கிருஷ்ணன்  அதை ஏற்பதில்லை.

தினமும் துளசி தளத்தால் கிருஷ்ணனை  அர்ச்சிப்பவன் வேறு எந்த புண்யமும் தேடாமலே  கிடைத்தவன்.

கங்கை எப்படி  அந்த நதியில் ஸ்நானம் செய்தவர்களை  பரிசுத்தப் படுத்துகிறாளோ  அதுபோல், துளசி மூன்று உலகங்களையும் பரிசுத்தமாக்குபவள். துளசி செடி அருகே அமர்ந்து தியானிப்பவன் கிருஷ்ணனை எளிதில் அடைகிறான்.

துளசி செடி வளரும் வீட்டிலோ அருகிலோ கூட  தீய சக்திகள் நெருங்குவதில்லை.

தினமும் கிருஷ்ணனை அர்ச்சித்த  ஒரு  துண்டு  துளசி தளத்தை புசிப்பவன் நோயற்றவன், தீர்க்காயுள் கொண்டவன். பாவம் விலகியவன்.

துளசி ஒரு தளத்தையாவது கிருஷ்ணனுக்கு  அர்ச்சித்தவன்  வைஷ்ணவன் ஆகிறான்.  துளசியை நமஸ்கரித்து  கிருஷ்ணனை  ஆராதிப்பவன் மீண்டும் தாய்ப்பால்  குடிக்க நேரிடாதவன்.

துளசியால் கிருஷ்ணனுக்கு பூஜை செய்தவனின்  முன்னோர்களும்  கூட  பாவத்திலிருந்து விடுதலை பெறுவார்கள்.  மீண்டும் ஜனன மரணம் இல்லாதவர்கள்.





பத்ம புராணத்தில்  துளசி ஸ்தவ  காண்டத்தில் ஒரு சம்பாஷணை:

ஒரு பிராமணன்:   ”ஆச்சர்ய வியாச தேவா, இதுவரை  எங்களுக்கு  துளசி தேவி மகிமை சொன்னீர்கள்.  துளசியை  போற்றும் துளசி ஸ்தவம் (பிரார்த்தனை)  போதிக்க வேண்டுமென  கேட்டுக்கொள்கிறேன்’

வியாசர்: இதே கேள்வியை  ரிஷி சதானந்த முனிவரிடம் அவரது சிஷ்யன் ஒருவன் கரம் கூப்பி பவ்யமாக கேட்டான். அப்போது அந்த

சிறந்த கிருஷ்ண பக்தர் சதானந்த  முனிவர் என்ன சொன்னார் தெரியுமா? 

”துளசி நாமம் சொன்னாலே போதும். கிருஷ்ணன் உன் பாவங்களை  தொலைத்து விடுவான். துளசி செடியை கண்ணால் பார்த்தாலே போதும். கோ தான பலன்.  துளசியை பூஜித்து  ஸ்தோத்ரம் பண்ணுபவன், அவனே  ஒரு  விக்ரஹம். அவனையே மற்றவர்கள் கலியுகத்தில் வணங்க யோக்யமானவன்.

துளசி செடியை வீட்டில்  வளர்த்தவனை  யம தூதர்கள்  வாசல் அருகே கூட  வர முடியாதவர்களாக ஆக்கிவிடுவாள்.

எவனொருவன்  துளசிஸ்தவ ஸ்தோத்ரம் சொல்லி  துளசியை பறிக்கிறானோ, கிருஷ்ணனை துளசியால் அர்ச்சிக்கிறானோ அவன் புண்ய பலன்  பல லக்ஷம் மடங்கு அதிகமாகும்.

துளசி ஸ்தோத்ரம்

ஸ்ரீமத் துளசியம்மா , திருவே கல்யாணி அம்மா
வெள்ளிக் கிழமைதன்னில் விளங்குகின்ற மாதாவே
செவ்வாய்க் கிழமைதன்னில் செழிக்க வந்த செந்திருவே
தாயாரே உந்தன் தாளினை நான் பணிந்தேன்
பச்சைப் பசுமையுள்ள துளசி நமஸ்தே
பரிமளிக்கும் மூலக்கொழுந்தே நமஸ்தே
அற்பப் பிறப்பை தவிர்ப்பாய் நமஸ்தே
அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே
ஹரியுடைய தேவி அழகி நமஸ்தே
அடைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தே
வனமாலை எனும் மறுவே நமஸ்தே
வைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்தே
எவர் தன்னை பூஜை செய்கின்றனரோ அவருக்கு என்ன பலன் வந்து சேரும் என்பதை துளசியே சொல்கின்றாள்; 
அன்புடனே நல்ல அருந்துளசிக் கொண்டுவந்து மண்ணின்மேல் நட்டு மகிழ்ந்து நல் நீரூற்றி முற்றத்தில் தான் வளர்த்து முத்துப்போல் கோலமிட்டு செங்காவி சுற்றுமிட்டு திருவிளக்கும் ஏற்றிவைத்து பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில்வைத்து புஷ்பங்களை சொறிந்துப் பூஜித்தப் பேர்களுக்கு என்ன பலன் என்று ருஷிகேசர் தான் கேட்க ;
மங்களமான துளசி மகிழ்ந்துரைப்பாள் -
"மங்களமாய் எனை வைத்து மகிழ்ந்து உபாசித்தவர்கள்
தீவினையைப் போக்கி சிறந்த பலன் நானளிப்பேன் ,
அரும்பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன் ,
தரிதிரத்தை நீக்கி செல்வத்தை நான் கொடுப்பேன் ,
புத்திரன் இல்லாதவர்க்கு புத்திர பாக்கியம் அளிப்பேன் ,
கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரைக் கூட்டுவிப்பேன் ,
கிருஹஸ்தர்கள் பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழவைப்பேன் ,
மும்மூர்த்திகள் பூஜை செய்தால் மோக்ஷபதம் நான் கொடுப்பேன் ,
கோடி காராம்பசுவை கன்றுடனே கொண்டு வந்து கொம்புக்கு பொன் அமைத்து குழம்புக்கு வெள்ளிக் கட்டி கங்கைக்கரை தன்னில் , கிரகண
புண்யக் காலத்தில் வாலுருவி அந்தணர்க்கு மஹா தானம் செய்த பலன் நானளிப்பேன். சத்யம்" என்று நாயகியும் சொல்லலுமே ,
"அப்படியே ஆகுமென" திருமால் அறிக்கை இட்டார்.
இப்படியே அன்புடனே ஏற்றித் தொழுதவர்கள் அற்புதமாய் வாழ்ந்திடிவார் 
மாதேவி தன் அருளால் 

துவாதசி அன்று துளசியை பிரார்த்திப்பவனை  கிருஷ்ணன் அவன் செய்த பாவங்களை  மன்னித்து அருகிறார்.  
தினமும் முடியாதவர்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி, மஞ்சள் மற்றும் குங்குமத்தை துளசியின் தண்டில் வைத்து, பூவைத்தும் வழிபட, துளசியை எல்லா நலன்களையும் நமக்கு பூரணமாய் தருவாள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக