வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

டெண்டுல்கர் அத்தியாயம் படித்தல்


டெண்டுல்கர் அத்தியாயம் படித்தல்தொடர்புடைய படம்


பாந்த்ராவில் டெண்டுல்கர் என்னும் குடும்பம் ஒன்று இருந்தது.  அதன் உறுப்பினர்கள் எல்லோரும் பாபாவிடம் பக்தி பூண்டவர்களாக வாழ்ந்து வந்தனர்.  'ஸ்ரீ சாயிநாத் பஜன்மாலா' என்னும் 800 செய்யுட்கள் கொண்ட ஒரு நூலை திருமதி சாவித்ரிபாயி டெண்டுல்கர் பதிப்பித்திருக்கிறார்.  அது பாபாவின் லீலைகள் எல்லாம் விளக்குகிறது.  பாபாவைப்பற்றி ஆர்வம் கொண்டோர் எல்லோரும் படிக்க உகந்த நூல் அது.  

பாபு டெண்டுல்கர் என்னும் அவர்களது புதல்வன் இரவும், பகலும் அரும்பாடுபட்டு படித்துக்கொண்டிருந்தான்.  அவன் மருத்துவப் பரீட்சைக்குச் செல்லவேண்டும்.  சில ஜோசியர்களைக் கலந்தாலோசித்தான்.  அவனது ஜாதகத்தைப் பரிசீலித்துவிட்டு கிரஹங்கள் அவனுக்கு இவ்வருடம் சாதகமில்லை என்றும், எனவே அடுத்த வருடம் அவன் பரீட்சைக்குச் சென்றால் நிச்சயம் வெற்றிபெறுவான் என்றும் அவர்கள் கூறினர்.  இது அவனைக் கவலைக்குள்ளாக்கி, நிலைகொள்ளாமலிருக்கச் செய்தது.  சில நாட்களுக்குப்பின் அவனது தாயார் ஷீர்டி சென்று பாபாவைக் கண்டாள்.

பல விஷயங்களுடன், சில நாட்களில் பரீட்சை எழுதவிருந்த தன் மகனின் கவலைக்கிடமான நிலைமைகளையும் அவள் பாபாவுக்குக் கூறினாள்.  இதைக்கேட்டுவிட்டு பாபா கூறினார், "உனது மகனிடம் என்னை நம்பும்படி சொல்.  ஜாதகம், கைரேகைக்காரர்களின் ஜோசியம் ஆகிய முன்னோடி உரைகளைத் தூக்கியெறிந்துவிட்டு அவன் பாட்டுக்குப் படித்துக்கொண்டிருக்கட்டும்.  பரீட்சையை அமைதியாக எழுதட்டும்.  அவன் இவ்வாண்டு தேறுவது உறுதி.  என்னை நம்பும்படியும் ஏமாற்றமடைய வேண்டாம் என்றும் சொல்".

தாய் வீட்டுக்குத் திரும்பி இச்செய்தியை மகனுக்குத் தெரிவித்தாள்.  பின்னர் அவன் கஷ்டப்பட்டுப் படித்து உரிய காலத்தில் பரீட்சையும் எழுதினான்.  எழுதும் பேப்பர்களை (written-exam) அவன் நன்றாகச் செய்திருந்தான்.  ஆனால் சந்தேகத்தால் பீடிக்கப்பட்டு பாஸ் செய்வதற்குப் போதுமான மார்க்குகள் தான் பெறப்போவதில்லை என்று எண்ணினான்.  எனவே வாய்மொழிப் பரீட்சைக்கு (oral) போவதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை.  ஆனால் பரீட்சை அதிகாரி அவனை விடுவதாக இல்லை. 


அவன் எழுதிய பேப்பர்களில் பாஸ் செய்துவிட்டதாகவும், வாய்மொழிப் பரீட்சைக்கு அவன் வரவேண்டும் என்றும் சகமாணவன் ஒருவன் மூலம் செய்தியனுப்பினார்.  இவ்வாறாக அவன் அப்பரீட்சையில் தேறுவதற்கு ஊக்குவிக்கப்பட்டு, இரண்டிலுமே வெற்றியடைந்தான்.  கிரஹங்கள் அவனுக்கு எதிராக இருந்தபோதிலும், பாபாவின் அருளால் அவன் இவ்வாறாக வெற்றிபெற்றான்.  ஐயங்களும், கஷ்டங்களும் நம்மை சற்றே அசைத்து நம்பிக்கையை உறுதிப்படுத்தவே சூழ்கின்றன என்பதை இங்கே அறியவேண்டும்.  நாம் வாழ்க்கையில் சோதனைக்குள்ளாக்கப்படுகிறோம்.  முழு நம்பிக்கையுடன் பாபாவைப் பற்றிக்கொண்டு நமது முயற்சிகளைத் தொடர்ந்து செய்வோமேயானால் நமது முயற்சிகள் அனைத்தும் முடிவாக வெற்றிமுடி சூடப்பெறும். 

இப்பையனின் தந்தையாரான ரகுநாத்ராவ் பம்பாயில் உள்ள வெளிநாட்டு வாணிபக் கம்பெனி  ஒன்றில் பணியாற்றி வந்தார்.  வயதாகிவிட்டபடியால் அவரால் வேலையைச் சரியாகச் செய்ய இயலவில்லை.  எனவே அவர் ஓய்விற்காக விடுப்பு எடுக்க வேண்டியதாயிற்று.  விடுமுறையின்போது அவர் தேகநிலை முன்னேறாததால் லீவை அதிகப்படுத்துவதோ அல்லது வேலையினின்று ஓய்வு பெறுவதோ தவிர்க்க முடியாததாகிவிட்டது.  அவர் முதுமையும், நம்பிக்கையும் வாய்ந்த பணியாளராக இருப்பதால் அந்த ஸ்தாபனத்தின் முக்கிய மேனேஜர் அவருக்கு ஒரு பென்ஷனுடன் ஓய்வு கொடுக்கத் தீர்மானித்தார்.

எவ்வளவு பென்ஷன் கொடுப்பது என்ற பிரச்சனை இத்தகைய தீர்மானத்திலிருந்து வந்தது.  அவர் மாதம் ரூ.150 பெற்று வந்தார். பென்ஷன் தொகையான ரூ.75 வீட்டுச் செலவுகளைப் பராமரிக்கப் போதுமானவை அன்று.  எனவே அவர்களெல்லாம் இவ்விஷயத்தில் கவலையுள்ளவர்களாக இருந்தனர்.  முடிவான ஏற்பாட்டுக்குப் பதினைந்து தினங்களுக்கு  முன்பாக பாபா, திருமதி டெண்டுல்கரின் கனவில் தோன்றி, "பென்ஷன் நூறு ரூபாயாக அளிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்.  இது உனக்குத் திருப்திதானே?" என்று கேட்டார்.  "பாபா இம்மாதிரி ஏன் என்னைக் கேட்கவேண்டும்?  நாங்கள் உங்களையே முழுவதும் நம்புகிறோம்" என்று திருமதி டெண்டுல்கர் பதிலளித்தார்.  பாபா ரூ.100 என்று கூறியபோதும், ரூ.10 இன்னும் அதிகமாகவே கொடுக்கப்பட்டது.  இது ஒரு விசேஷ நியதியாக, தமது பக்தர்களுக்கு அத்தகைய அற்புதமான அன்பையும், பாதுகாப்பையும் பாபா நிச்சயமாகவே காண்பிக்கிறார் என்பதை உணர்த்துகிறது.


 அந்த அத்தியாத்தை படித்து விட்டு கல்கண்டு நைவேத்யம் செய்து பரீட்சை எழுதும் மாணவ மாணவியருக்கு அதை பிரசாதமாக அளித்தால், அவர்கள் தேர்வுகளில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். திருமணத் தடை உள்ளவர்கள் தாமரை மாலையை அவர்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்று பாபாவிற்கு சாத்தி 108 நெல் பொரி உருண்டைகளை 108 எளியவர்களுக்கு தானமாக அளித்தால் பாபாவின் திருவருளால் அவர்களுக்கு உடனே திருமணம் நிச்சயமாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக