வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

ஸ்ரீ பாலாம்பிகாஷ்டகம்[தமிழில்]

ஸ்ரீ பாலாம்பிகாஷ்டகம்[தமிழில்]

balambika images க்கான பட முடிவு

அன்பார்ந்த ஆன்மீக நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள்.எல்லோரும் நலமாக வாழ அம்பாளை பிராத்திக்கிறேன். எனக்கு பாலாம்பிகை என்றால் நிறைய பிடிக்கும்.அம்பாளே சிறுமியாக உருவெடுத்து வந்து நமக்கெல்லாம் வேண்டிய வரத்தை அருள்பாவிக்கிறாள். பாலாம்பிகை 9வயது சிறுமியாக இருப்பதால் சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும்.ஆதலால் பாலாம்பிகைக்கு நம் வீட்டு குழந்தைகள் தேர்வு எழுத செல்லும் போது  ஸ்ரீ பாலாம்பிகைக்கு சாக்லேட் வைத்து வேண்டி சென்றால் தேர்வில் வெற்றி பெறலாம்.என் குழந்தையும் இந்த முறையில் தான் வணங்குவாள்.  

நான் படித்த இந்த பாலாம்பிகை அஷ்டகத்தை இங்கே  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.மனம் உருகி  உங்கள் நியாயமான கோரிக்கைகளை அம்பாளிடம் வைத்து வேண்டுங்கள்.இந்த பாடலையும் சொல்லுங்கள் 

நான் மறைகள் தொழுதேத்தும் அரவிந்த மலரடிகள்
வானவரும் தானவரும் போற்றிடும் செம் மலரடிகள்
முழுமுதலாய் நின்றொளிரும் அழகு நிறை மலரடிகள்
செயலதனில் வென்றிடவே பணிந்திடுவேன் தேவி நான்!! .1.


வேதங்கள் தொழும் தேவி பிரபஞ்சத்தின் அன்னை நீ!!
விரும்பும் நற்குண நிறை அழகொளிரும் தேவி நீ!!
வணங்குகின்ற பக்தர்க் கெல்லாம் வரமருளும் செல்வம் நீ!!
வளருமொரு இளம்பிறையே பாலாம்பிகையே பணிகின்றேன். ..2.

விதவிதமாய் அணிமணிகள் அணிந்திருக்கும் கௌரியளே!
விடமுண்ட கண்டன் மனம் உகக்கும் பொன்னிறத்தவளே!!
வண்ணமிகு தாமரைகள் கருங்கூந்தல் அலங்கரிக்க,
வளருமொரு இளம்பிறையே பாலாம்பிகையே பணிகின்றேன். ..3.

தங்க நிற மேனியிலே சிறந்தொளிரும் பட்டாடை
தங்கத்திலே ஒட்டியாணம் பதிந்தொளிரும் சிற்றிடை
வேப்ப வனந் தனிலுறையும் ஈசன் மனதில் உன் நடை
வளருமொரு இளம்பிறையே பாலாம்பிகையே பணிகின்றேன். ..4.

வாசமிகு சந்தனமல ங்கரிக்கும் திருவுருவே
பூசிய மஞ்சளுடன் ஒளிர்கின்ற எழிலுருவே
விசித்திர கிரீடமது துலங்குகின்ற நல்லுருவே
வளருமொரு இளம்பிறையே பாலாம்பிகையே பணிகின்றேன். ..5.

அணிமுத்து பவள மாலை அலங்கரிக்கும் தேவியளே
அழகொளிரும் தங்க நிறத் திருமேனி கொண்டவளே
ஈரிரண்டு கரங்களுடன் விளங்கி நிற்கும் சுந்தரியே
இளம்பிறையே பாலாம்பிகை அடி தொழுது பணிகின்றேன். ..6.

நூபரங்கள் இசையொலிக்க நடனமிடும் பொற்பாதம்
உயிரினங்கள் இதயந்தனில் வீற்றிருக்கும் பொற்பாதம்
வைத்தியத்தின் நாயகியே வைத்தீசன் தேவியளே
வளருமொரு இளம்பிறையே பாலாம்பிகையே பணிகின்றேன் ..7.

பிரம்ம விஷ்ணு இந்திரரும் பூஜிக்கும் திவ்ய ரூபம்
ஜோதி உருவான தொரு ஞானமய மான தேஹம்
சூரியரும் சந்திரரும் தாள் பணிந்தே தொழுது நிற்பர்
சுடர்கின்ற இளம்பிறையே பாலாம்பிகையே பணிகின்றேன். ..8.

பாலையின் ஸ்துதி அதி காலையில் படித்திட
பக்தர்கள் வேண்டுவது யாவையும் நடந்திடும்
புண்ணியம் நிறைந்திடும் சித்திகள் கிடைத்திடும்
பாலையின் மலரடி இணை தொழுதேத் துவோம் ..9.

பாடலின் விளக்கம் 

1. தேவி, நான் மேற்கொண்டுள்ள காரியம் சித்தி அடைவதற்காக, எப்போதும் தேவர்கள் மற்றும் அசுரர்கள் தலைவனாலும் வணங்கப்படுவதும், மேலானவற்றிற்கும் மேலானதும், எல்லாவற்றையும் விட அழகு நிறைந்ததும் மங்களம் தரக்கூடியதும் வேதங்களின் முடிவில் அறியப்படுவதுமான உனது பாதகமலங்களை தேவியே, நான் வணங்குகிறேன்.

2. வேதத்தில் போற்றித் துதிக்கப்படும் புவனங்களுக்கெல்லாம் அன்னை, அனைத்து கல்யாண குணங்களும் ஒருங்கே அமைந்த பேரேழில் வடிவினள், பக்தர்கள் வேண்டுவதைத் தருபவள், பக்த ஜனங்களால் வணங்கப்படுபவள். அப்படிப்பட்ட இளம்பிறையான பாலாம்பிகையை வணங்குகிறேன்.

3. தங்க நிறத்தில் விதவித ஆபரணங்களாலும் அன்றலர்ந்த செந்தாமரை மலர்களாலும், அலங்கரிக்கப்பட்ட குமரியாய், கருத்த கூந்தலை உடையவளும், விடமுண்ட நீலகண்டனுக்குப் பிரியமானவளுமான, இளம்பிறையான பாலாம்பிகையை வணங்குகிறேன்.

4. பொன் நிற மேனியில் தெய்வீக ஆடை அணிந்தவள், பொன்னும் மணிகளும் பதிந்த ஒட்டியாணம் அணிந்தவள், வேப்ப வனத்திலுறை ஈசனின் மனம் கவர்ந்தவளுமான, இளம்பிறையான பாலாம்பிகையை வணங்குகிறேன்.

5. சந்தனத் தண்டுகளால் உருவாக்கப்பட்ட எழிலார்ந்த மேனி உடையவளும், நறுமணமிக்க நற்சந்தனப் பொடிகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிர்பவளும், விசித்திரமான கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவளுமான இளம்பிறையான பாலாம்பிகையை வணங்குகிறேன்.

6. விசித்ரமான முத்து, மணி, பவளம் இவற்றால் தொகுப்பட்ட மாலைகளால் எப்போதும் அலங்கரிக்கப்படும் வெள்ளை நிறத்தவளும், நான்கு கரங்களுடன் அழகிய வடிவம் உடையவளுமான, இளம்பிறையான பாலாம்பிகையை வணங்குகிறேன்.

7. கால்களில் இனிமையான இசை எழுப்பும் நூபுரங்களை உடையவளும், அனைத்து உயிர்களின் இதயக் கமலத்தில் வீற்றிருப்பவளும், மருத்துவத்திற்கு நாயகியும், வைத்தியநாதனுக்கு இனிய தையல்நாயகியும் ஆன இளம்பிறையான பாலாம்பிகையை வணங்குகிறேன்.

8. பிரம்மா, இந்திரன், விஷ்ணு, சூரியன், சந்திரன் போன்ற தெய்வங்கள் அனைவராலும் அர்ச்சிக்கப்படும் தெய்வீகத் திருமேனி கொண்டவளாக, கற்பனைக் கெட்டா ஒளிமயமாக விளங்குபவளும், ஞானத்தை வாரி வழங்கும் தெய்வீக உருவாம் பாலாம்பிகையை வணங்குகிறேன்.

9. அளவற்ற புண்ணியம் நிறைந்ததும், பக்தர்கள் விரும்பியதைத் தரக்கூடியதுமான இந்த பாலாம்பிகா ஸ்தோத்திரத்தை அதிகாலையில் பக்தி சிரத்தையுடன் படிப்பவர்கள் அளவிட முடியாத சித்திகளையும், தாங்கள் விரும்பும் எல்லா நன்மைகளையும் அடைவர்.

உங்கள்  வீட்டு குழந்தைகளிடமும் தேர்வுக்கு செல்லும்முன் பாலாம்பிகையை  வேண்ட  சொல்லுங்கள்.நிச்சயம் அம்பாள்  நமக்கு என்றென்றும் உறுதுணையாக இருந்து, நமக்கு தேவையானவற்றை கொடுத்து அருளுவாள்.நம்பிக்கை மிகவும் முக்கியம்.எது நடந்தாலும் அதை அம்பாள் பார்த்துக்கொள்வாள்  என சாஷ்டாங்கமாக சரண் அடைந்திருங்கள்.

tamil nandri images க்கான பட முடிவுஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்தை சொல்லுங்கள்.உங்களுக்கும் இதைப்பற்றி மேலும் தெரிந்திருந்தால் பகிரவும்

வாழ்க வளமுடன் 

ஈஸ்வரி சரவணன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக