அவரது வழிபாடும் எளிமையானது. ஆனால் ஆழ்ந்த பொருள் கொண்டது.
விநாயகர்அவதரித்த விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ''கணபதி பூஜை கைமேற் பலன்'' என்பது பழமொழி.
''ஓம்'' என்பது பிரணவம். இந்த பிரணவமே வேதத்தின் மூலம். ஓம் என்ற ஒலியின் வடிவமே விநாயகர். எனவே பிரணவப் பொருள் என்று விநாயகரை அழைக்கிறோம். விநாயகர் என்றால் அவரை விட வேறு தலைவர் இல்லை என்பது பொருள்.
ஈஸ்வரனின் மகனான விநாயகர் பூதகணங்களின் தலைவரும் ஆவார். அதனால் அவருக்கு கணபதி என்ற பெயரும் உண்டு.
மஞ்சள் பொடியிலும், களிமண்ணிலும், சாணத்திலும் விநாயகரை பிடித்து வழிபடலாம். அவரை வழிபட சாஸ்திரங்கள் தேவையில்லை. கூப்பிட்ட குரலுக்கு வந்து விடுவார்.
பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய் இவ்வாறு எல்லாமாக விளங்குபவர் விநாயகர். அவர் ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், ஆணை முகத்தினை உடையவர்.
கும்பம் ஏந்திய திருக்கரம் ஆக்கும் தொழிலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய திருக்கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர் ஐம்பெரும் தொழில்களை ஐந்து திருக்கரங்களில் புரிந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
மாதத்தில் வளர் பிறையிலும், தேய்பிறையிலும் வருகிற 4வது நாள் சதுர்த்தி ஆகும். தேய்பிறையில் வரும் சதுர்த்தி சங்கடஹரசதுர்த்தி ஆகும். ஆவணி மாதம் அமாவாசை கழிந்த நான்காம் நாள் வரும் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. இது விநாயகரின் பிறந்ததினமாகும்.
தேவர்களுக்கு துன்பம் கொடுத்த கஜமுகன் என்ற அரக்கனை அழிப்பதற்காக சிவபெருமான் அருளால் விநாயகப் பெருமான் அவதரித்தார். விநாயகர் கஜமுகனுடன் போர் புரிந்தார். அவன் ஆயுதங்களால் அழியாத வரம் பெற்றவன். விநாயகர் தனது வலக் கொம்பை ஒடித்து சிவமந்திரத்தை உச்சரித்து ஏவ, அது கஜமுகனை சாய்த்தது. அவன் பெருச்சாளி வடிவில் எதிர்த்து வந்தான். விநாயகர் அவன் மீது கருணை புரிந்தார். அவன் அறியாமை அகன்றது. விநாயகரை வணங்கி நின்றான். விநாயகர் அவனை தன் வாகனமாக்கி அருள்புரிந்தார்.
விநாயகருக்கு கொழுக்கட்டை படைக்கிறோம். மேலே மாவு மூடியிருக்க, உள்ளே வெல்லமும் தேங்காயும் கலந்த பூரணம் இருக்கும். இதன் பொருள் என்ன? மாவுதான் மாயை- அதாவது ஆசை முதலான உலகப்பற்றுகள். அந்த மாயையை விலக்கினால் உள்ளே இருப்பது பூரணம் என்னும் ஆனந்தம்.
அருணகிரியார் கந்தரனுபூதியில், “ஆசாநிகளம் (மாயை) துகள் ஆயினபின் பேசா அனுபூதி பிறந்ததுவே’ என்கிறார்.
கணபதியின் வடிவம் கூறும் பொருள் யாது?
சிறிய கண்கள்- கூர்ந்து கவனி.
பெரிய காதுகள்- நற்கருத்துகளை அகன்று, ஆழ்ந்து கேள்.
நீண்ட துதிக்கை- பரந்த மனப்பான்மையோடு தேடு.
சிறிய வாய்- பேசுவதைக் குறை.
பெரிய தலை- பரந்த அறிவு, ஞானம் தேடு.
பெரிய வயிறு- செயல்களில் சிக்கல்கள், தடைகள், தோல்விகள் வரலாம். அனைத் தையும் ஜீரணித்து முன்னேறு.
கணபதிக்கு சித்தி, புத்தி என்னும் இரு மனைவியர் உள்ளதாகச் சொல்வர். இவர்கள் பிரம்மபுத்திரிகள்- சக்திகள்.
கணபதியை வணங்கினால் புத்திக்கூர்மை அதிகரிக்கும்; எடுத்த காரியங்கள் எல்லாம் சித்திக்கும்- வெற்றியாகும் என்பதே இதன் தத்துவம்.
பல தெய்வங்களுக்குப் புராணங்கள் எழுதியவர் வியாசர். ஆனால் அவர் விநாயக புராணம் எழுதவில்லை. வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதினார் விநாயகர். வினோதம்தானே. (விநாயக புராணத்தை முத்கலர் என்ற முனிவர் இயற்றினார்.)
வியாசர் கந்தபுராணத்தை எழுதத் தொடங்கும்முன் கீழ்க்கண்ட பதினாறு பெயர்களால் கணபதியைத் துதிக்கிறார்.
ஸுமுகன்- மங்கள முகமுடையவர்.
ஏக தந்தன்- ஒற்றைத் தந்தம் கொண்டவர். (மற்றொன்றை ஒடித்துதான் மகாபாரதம் எழுதினார்.)
கபிலன்- மேக- சாம்பல் வண்ணர்.
கஜகர்ணகன்- யானைக் காதுகள் கொண்டவர்.
லம்போதரன்- பருத்த வயிறு கொண்டவர்.
விகடன்- குள்ளமாக இருப்பவர்.
விக்னராஜன்- இடையூறுகளுக்கு அதிபர்.
விநாயகன்- எல்லாருக்கும் நாயகர்; முதன்மையானவர்.
தூமகேது- அக்னியைப்போல பிரகாசிப்பவர்.
கணாத்யக்ஷன்- பூதங்களுக்குத் தலைவர்.
பாலசந்திரன்- சந்திரனை தரித்தவர்.
கஜானணன்- யானைமுகம் கொண்டவர்.
வக்ரதுண்டன்- வளைந்த துதிக்கை கொண்டவர்.
கும்பகர்ணன்- முறம்போன்ற காதுகள் கொண்டவர்.
ஹேரம்பன்- பக்தர்களுக்கு அருள்புரிபவர்.
ஸ்கந்தபூர்வஜன்- கந்தனுக்கு முன்னவர்.
இந்தப் பதினாறு பெயர்களைத் துதித்துத் தொடங்கினால் எக்காரியமும் வெற்றிபெறும்; எல்லா தடைகளும் விலகும்.
தமிழில் “கந்தபுராணம்’ செய்தவர் கச்சியப்ப சிவாச்சாரியார். அவருக்கு “திகடச் சக்கர’ என அடியெடுத்துக் கொடுத்து அருளினார் முருகன். தினமும் தான் எழுதும் பாடல்களை, காஞ்சி குமரக் கோட்டம் கந்தன் சந்நிதியில் வைத்து விடுவார் கச்சியப்பர். காலையில் அவற்றை எடுத்துப் பார்க்கும்போது முருகப் பெருமான் சில திருத்தங்கள் செய்திருப்பாராம். இவ்வாறாக கந்தபுராணம் எழுதி நிறைவடைந்ததும், அதை ஆலய மண்டபத்தில் கூடியிருந்த புலவர் சபையில் அரங்கேற்றம் செய்ய முனைந்தார் கச்சியப்பர்.
முதல் பாடலான-
“திகடச் சக்கர செம்முகம் ஐந்துளான்
சகடச் சக்கர தாமரை நாயகன்
அகடச் சக்கர விண்மணி யாவுறை
விகடச் சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்’
என்னும் விநாயகர் துதியை கச்சியப்பர் பாடியதும், அவையிலிருந்த புலவர் ஒருவர், “திகடச் சக்கர’ என்பது இலக்கணப்பிழை என்றார். அதிர்ச்சியடைந்த கச்சியப்பர் மறுநாள் விளக்கம் தருவதாகக் கூறி இல்லம் திரும்பினார். “முருகா! நீ எடுத்துக்கொடுத்த முதலடியையே இலக்கணப் பிழையென்கிறார்களே… நான் என் செய்வேன்…’ என்று மனமுருகினார். கந்தன் “யாமிருக்கப் பயமேன்’ என்றான்.
மறுநாள் சபைக்குச் சென்றார் கச்சியப்பர். அப்போது ஒரு முதிய புலவர் வடிவில் அங்கு வந்த முருகப்பெருமான், வீரசோழியம் என்ற இலக்கண நூலை ஆதாரம் காட்டி “திகடச்சக்கர’ என்பது இலக்கணப் பிழையல்ல என்பதை நிரூபித்து கச்சியப்பருக்கு தன் திருக்கோலம் காட்டியருளினார்.
“திகடச்சக்கர’ என்பது “திகழ் தசக் கர’ என்பதாகும். அதாவது பத்து கரங்களுடையவன். ஹேரம்ப கணபதிக்கு ஐந்து தலை, பத்து கரங்கள்.
மும்மூர்த்திகளும், வேதங்களும் புராண நூல்களும் போற்றி புகழும் தனி பெருந்தெய்வம் விநாயகர். அவரை வழிபட்டால் பேரும், புகழும், செல்வ செழிப்பும் உண்டாகும். தீராத நோய்கள் தீரும், கிரக தோஷங்கள் நீங்கும், நல்ல கல்வி கிடைக்கும் என்பது ஐதீகம்.
கணபதி காயத்ரி:
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹீ
தந்நோ தந்தி; ப்ரசோதயாத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக